நாட்டு நடப்பு
Published:Updated:

5 ஏக்கர்... ஆண்டுக்கு 6 லட்சம்... நிறைவான லாபம் கொடுக்கும் மீன் குஞ்சு வளர்ப்பு!

மீன் அறுவடையில் பணியாளர்களுடன் முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
மீன் அறுவடையில் பணியாளர்களுடன் முருகேசன்

மகசூல்

மீன் வளர்ப்பில் உத்தரவாதமான லாபம் கிடைப்பதால், டெல்டா விவசாயிகள் பலர் உப தொழிலாக இதில் ஈடுபட்டு வருகிறார்கள். முதன்மைத் தொழிலான பயிர் சாகுபடியைவிட, இதில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எளிமையான பராமரிப்பு... நிரந்தரமான விற்பனை வாய்ப்பு... இது போன்ற காரணங்களால் மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த மன நிறைவு அடைகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ் கிறார், தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை யைச் சேர்ந்த விவசாயி முருகேசன். 5 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இவர், 27 ஆண்டுகளுக்கு மேல் இத்தொழிலில் அனுபவம் பெற்றவர். எளிமையான பராமரிப்பு மற்றும் சிக்கனமான தீவன மேலாண்மை மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

ஒரு பகல்பொழுதில் இவருடைய மீன் பண்ணைக்குச் சென்றோம். மீன் குஞ்சுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருந்த முருகேசன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். ‘‘மீன் வளர்ப்புல ஈடுபடக்கூடிய விவசாயிங்க பெரும்பாலும் பராமரிப் புக்கும் தீவனத்துக்கும் அதிகமா செலவு செய்றாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இது ரொம்ப எளிமையா செய்யக்கூடிய தொழில். குஞ்சு தீவனம்கூடக் கடையில வாங்குறதில்லை. கடலைப் புண் ணாக்கை மெஷின்ல கொடுத்து அரைச்சு, அதை எண்ணெய் நீக்கப் பட்ட தவிட்டுல கலந்து தீவனமா கொடுக்குறோம்.

மீன் குஞ்சுகளுடன் முருகேசன்
மீன் குஞ்சுகளுடன் முருகேசன்

இது நல்ல சத்தான தீவனம். மீன்குஞ்சுகள், மீன்கள் எல்லாமே இதை விரும்பி சாப்பிடும். 20 சத விகிதம் கடலைப்புண்ணாக்குத் தூள், 80 சதவிகிதம் தவிடு கலந்து கொடுக்குறோம். ஒரு கிலோ தீவனத்துக்கு அதிகபட்சம் 25 ரூபாய்தான் செலவாகுது. இது ரொம்ப சிக்கனமானது. கலப்படம் இல்லாதது. பொதுவா மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யக் கூடிய பண்ணைகள்ல சிறு சிறு குளங்களா அமைச்சு, அந்த ஒவ்வொரு குளத்துலயுமே எல்லாப் பக்கமும் வலை கட்டி இருப்பாங்க. ஆனா, நான் அந்த மாதிரி எல்லாம் செய்யலை. பறவைகளால இதுவரைக்கும் பெருசா சொல்லிக்குற மாதிரி எல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றியும் மீன் வளர்ப்பு அனுபவம் குறித்தும் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனால எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதுமே விவசாயத்துக்கே வந்துட்டேன். 10 ஏக்கர்ல நெல், உளுந்து நிலக்கடலை சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன். இதோட, உபரி வருமானத்துக்காக, எங்க பகுதியில உள்ள பொதுக்குளங்களை ஏலம் எடுத்து மீன் வளர்த்துக்கிட்டு இருந்தேன்.

மீன் குளம்
மீன் குளம்

இந்த நிலையிலதான் 1996-ம் வருஷம் எங்க பகுதியில உள்ள கனரா வங்கியில வேலை பார்த்த விவசாயப் பிரிவு அதிகாரி, எனக்கு ஒரு முக்கியமான ஆலோசனை சொன்னதோடு, சில உதவிகளையும் செஞ்சு கொடுத்தார். ‘உங்களுக்கு மீன் வளர்ப்புல நல்ல அனுபவம் இருக்கு. பொதுக் குளங்கள்ல மீன் வளர்க்குறதைவிட, உங்க பண்ணையில குளம் வெட்டி மீன் வளர்த்தா, அதிக லாபம் ஈட்டலாம். அஞ்சு ஏக்கர்ல குளம் வெட்டுறதுக்கும், தண்ணீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்குறதுக்கும் சேர்ந்து, 2.18 லட்சம் ரூபாய் லோன் வாங்கிக்கலாம்’னு சொன்னாரு. அவர் சொன்ன யோசனை எனக்கும் சரினு பட்டுச்சு. பொதுக் குளங்கள்ல மீன் வளர்க்குறதுல ஏகப்பட்ட இடைஞ்சல்களைச் சந்திச்சாகணும். அதுல வருமானமும் குறைவாத்தான் கிடைக்கும். சொந்த குளம்னா பல விதங்கள்லயும் வசதியா இருக்கும்னு முடிவெடுத்தேன். பயிர் சாகுபடிக்கான பரப்பு குறையுதேனு நான் கொஞ்சம்கூடக் கவலைப்படலை. அதைவிட மீன் வளர்ப்புல அதிக வருமானம் எடுத்துடலாம்னு நான் உறுதியா நம்பினேன்.

மீன் அறுவடையில்
மீன் அறுவடையில்

கனரா வங்கியில கிடைச்ச கடன் மூலம் 1996-ம் வருஷம் 5 ஏக்கர்ல இந்த மீன் பண்ணையை ஆரம்பிச்சேன். மீன் வளர்ப்பு, மீன் குஞ்சுகள் உற்பத்தி மூலம் நிறைவான லாபம் பார்த்துக்கிட்டு இருக்கேன். கரைகள்ல உள்ள தென்னை மரங்கள் மூலமும் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. குளங்கள்ல எப்பவும் தண்ணி நிக்கிறதுனால, தென்னை செழிப்பா விளைஞ்சு நல்ல மகசூல் கொடுக்குது’’ என்று சொன்னவர் மீன் பண்ணையின் அமைப்பு, வளர்ப்பு முறை, வருமானம் குறித்த விவரங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

“இந்த மீன் பண்ணையோட மொத்தப் பரப்பு 5 ஏக்கர். இதுல ஒரு ஏக்கர்ல மட்டும் மீன் வளர்ப்புக் குளம் அமைச்சிருக்கேன். மீதி 4 ஏக்கர்ல மீன் குஞ்சுகள் உற்பத்தி பண்ணி விற்பனை செஞ்சிட்டு இருக்கேன். குஞ்சுகள் உற்பத்திக்கான பொரிப்பகம். சிமென்ட் தொட்டி உள்ளிட்ட கட்டமைப்பு களும் இங்க இருக்கு.

மீன் அறுவடையில் பணியாளர்களுடன் முருகேசன்
மீன் அறுவடையில் பணியாளர்களுடன் முருகேசன்

1 ஏக்கர் பரப்பில் மீன் குளம்

குளத்தோட ஆழம் 5 அடி. 2 அடி உயரத்துக்குக் கரைகள் அமைச்சிருக்கேன். குளத்தோட தரைமட்டத்துல இருந்து 4 அடி உயரத்துக்குத் தண்ணி நிறுத்தி பராமரிக்குறேன். தலா 100 கிராம் எடை கொண்ட 1,500 இருப்புக் குஞ்சுகள் விடுவோம். ரோகு 60 சதவிகிதம், கட்லா, மிர்கால், புல் கெண்டை இந்த மூணும் சேர்த்து 40 சதவிகிதம் குஞ்சுகள் விடுவோம். மற்ற ரகங்களைவிட ரோகு மீன்களோட வளர்ச்சி வேகமா இருக்கும். தண்ணீரோட மேல் மட்டம், நடுமட்டம், தரைமட்டம்னு எல்லாப் பகுதிகள்லயும் ரோகு மீன்கள் நல்லா நீந்தி தீவனம் எடுத்துக் கும். குஞ்சுகள் விட்ட முதல் நாள்ல இருந்து ஒரு மாசம் வரைக்கும் தினமும் 2 கிலோ தீவனம் கொடுப்போம். இரண்டாம் மாசம் தினமும் 4 கிலோ தீவனம் கொடுப்போம். மூணாவது மாசம் ஒவ்வொரு மீனும் சராசரியா 300 கிராம் எடை இருக்கும். மூணாவது மாசத்துல இருந்து மீன்களோட எடையில 2 சதவிகிதம் தீவனம் கொடுப்போம். அடுத்தடுத்த மாசங்கள்ல மீன்களோட எடையைப் பொறுத்து தீவனத்தோட அளவை அதிகப்படுத்துவோம். 6 மாசத்துக்குப் பிறகு, மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்ய ஆரம்பிப்போம். அடுத்த ரெண்டு, மூணு மாசத்துக்குள்ள முழுமையா எல்லா மீன்களையும் பிடிச்சு விற்பனை செஞ்சு முடிச்சிடுவோம். குறைந்தபட்சம் 1 டன் மீன்கள் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு டன் மீன் உற்பத்தி செய்ய 1,200 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் தீவனத்துக்கு 30,000 ரூபாய் செலவாகும். மீன்குஞ்சுகளுக்கான விலை மீன்பிடிப்புக் கூலி இதெல்லம் போக, 1 லட்சம் ரூபாய் நிகர லாபமா கிடைக்கும்.

மீன் குஞ்சுகள்
மீன் குஞ்சுகள்

மீன் குஞ்சுகள் உற்பத்தி

4 ஏக்கர்ல, மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கான குளம் அமைச்சிருக்கேன். தலா 33-40 சென்ட் பரப்புல 10 குளங்கள் இருக்கு. ஒவ்வொரு குளத்துலயும் ஒரு லட்சம் நுண் மீன் குஞ்சுகள் (5 நாள்கள் வயதுடைய குஞ்சுகள்) விடுவோம். ஒரு லட்சம் குஞ்சுகளுக்கு 200 கிராம் வீதம் கடலைப் பிண்ணாக்கை தண்ணியில நல்லா ஊற வச்சு, அந்தக் கரைசலை குளத்துல ஊத்துவோம். ஒரு வாரம் வரைக்கும் இது மாதிரி தினமும் கடலைப்புண்ணாக்கு கரைசல் ஊத்துவோம். அதுக்குப் பிறகு, தினமும் ஒரு லட்சம் குஞ்சுகளுக்கு 200 கிராம் வீதம் போடுவோம். ஒரு மாசத்துக்குப் பிறகு தினமும் 300 கிராம் தீவனம் கொடுப்போம். குளத்துல நுண்மீன் குஞ்சுகள் விட்டதுல இருந்து, 45 நாள்களுக்குப் பிறகு விரலி குஞ்சுகளா வளர்ந்த நிலையில விற்பனை செய்ய ஆரம்பிப்போம். ஒரு குஞ்சுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை கிடைக்கும். எல்லாக் குஞ்சுகளையும் ஒரே சமயத்துல வித்துட முடியாது. விற்பனை செஞ்சது போக மீதியுள்ள குஞ்சுகளை, 3 - 6 மாசம் வரைக்கும் வளர்த்து இருப்பு குஞ்சுகளாவும் விற்பனை செய்வேன். இருப்புக் குஞ்சுக்கு அதோட வளர்ச்சியைப் பொறுத்து, 7 - 12 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். பெரும்பாலும் விரலி குஞ்சுகளாதான் விற்பனை செய்றேன். ஒரு வருஷத்துக்கு சுமார் 5 லட்சம் குஞ்சுகள் உற்பத்தி செஞ்சு விற்பனை செய்றது மூலம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது.

‘‘ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை தண்ணியை வெளியேத்தி, நல்லா வெயில்ல காஞ்ச பிறகு, உழவு ஓட்டி ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, தண்ணீர் நிரப்பி, 500 கிலோ ஈர சாணத்தைக் கரைச்சி விடுவேன்.’’

200 தென்னை மரங்கள்

குளத்தோட கரைகள்ல மொத்தம் 200 தென்னை மரங்கள் இருக்கு. இதுல இருந்து வருஷத்துக்கு 15,000 தேங்காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு குறைந்தபட்சம் 9 ரூபாய் வீதம் மொத்தம் 1,35,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல வெட்டுக்கூலி போக, 1,00,000 ரூபாய் லாபம் கிடைக்குது. தென்னைக்கு நான் எந்த ஒரு பராமரிப்பும் செய்றதில்லை.

மொத்த வருமானம்

ஒரு ஏக்கர் மீன் வளர்ப்பு மூலம் 1,00,000 ரூபாய், நாலு ஏக்கர்ல மீன் குஞ்சுகள் உற்பத்தி மூலம் 4,00,000 ரூபாய், 200 தென்னை மரங்கள் மூலம் 1,00,000 ரூபாய்... ஆக மொத்தம் இந்த 5 ஏக்கர் மீன் பண்ணையில இருந்து எனக்கு வருஷத்துக்கு 6,00,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இது எனக்கு நிறைவான லாபம்.

தொட்டிகள்
தொட்டிகள்

விற்பனை யூகம்

சூரக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகள்ல இப்ப ஏகப்பட்ட மீன் பண்ணைகள் வந்துடுச்சு. இங்கவுள்ள பெரும்பாலான மீன் பண்ணைகள்ல, மீன் வளர்ப்போடு, மீன் குஞ்சுகளும் உற்பத்தி செஞ்சு விற்பனை செஞ்சுகிட்டு இருக்காங்க. அதனால ஏகப் பட்ட போட்டி. இருந்தாலும்கூட, இந்தத் தொழில்ல ஈடுபடக்கூடிய எல்லாருக்குமே நியாயமான லாபம் கிடைச்சிடுது. அதே சமயம் செலவுகளை முடிஞ்ச வரைக்கும் குறைக்குறது மூலமாவும், எந்தளவுக்கு விற்பனை வாய்ப்பு இருக்குனு முன்கூட்டியே யூகம் பண்ணி, அதுக்கு ஏத்த எண்ணிக்கையில குஞ்சுகளை உற்பத்தி செய்றது மூலமாவும் இந்தத் தொழிலை வெற்றிகரமா செய்ய முடியும்.

நான் வருஷத்துக்கு அஞ்சு லட்சம் குஞ்சுகள்தான் உற்பத்தி செய்றேன். ஆனா, என்னால இன்னும் கூடுதலான எண்ணிக் கையில குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். அப்படி செஞ்சா விற்பனை செய்றது ரொம்ப சிரமம். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைக்குறதில்லை’’ எனச் சொல்லி விடை கொடுத்தார்.தொடர்புக்கு, முருகேசன்.

செல்போன்: 98653 98579

மீன் குளம்
மீன் குளம்

மீன் குளம் தயாரிப்பு

‘‘ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை தண்ணியை வெளியேத்தி, நல்லா வெயில்ல காஞ்ச பிறகு, உழவு ஓட்டி ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, தண்ணீர் நிரப்பி, 500 கிலோ ஈர சாணத்தைக் கரைச்சி விடுவேன். அடுத்த ஒரு வாரத்துல நிறைய பிளான்டன் (தாவர மற்றும் விலங்கு நுண்ணூயிரிகள்) உருவாகியிருக்கும். அதுக்கு பிறகு மீன் குஞ்சுகளை விடுவேன். தண்ணி எப்போதும் நல்ல பச்சை நிறத்துல இருந்தாதான், மீன்கள் நல்லா ஆரோக்கியமா வளர்றதுக்கான சூழல் இருக்குனு அர்த்தம். தண்ணி நிறம் மாறிடுச்சுனா, உடனடியா சாணம் கரைக்கணும். அதேசமயம் தண்ணியோட நிறம் கரும் பச்சை நிறத்துக்கு மாறிடக்கூடாது. ஒருவேளை அப்படி மாறியிருந்தா, ரெண்டு மூணு நாள்களுக்குத் தீவனம் கொடுக்குறதைத் தவிர்க்கணும்.

மீன் தீவனம்
மீன் தீவனம்

நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் முறை

3 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய பெண் மீன்களையும், ஆண் மீன்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். செதில் பகுதி சுரசுரப்பாக இருந்தால் அது ஆண் மீன். வழவழப்பாக இருந்தால் அது பெண் மீன். ஒரு பெண் மீனுக்கு இரண்டு ஆண் மீன்கள் வீதம் தேர்ந்தெடுத்து, இனச் சேர்க்கைக்கு பொரிப்பகத்தில் விட வேண்டும். மாலை 5 மணிக்கு பொரிப்பகத்தில் இவற்றை விட்டால், இனச் சேர்க்கை நடைபெற்று, நள்ளிரவு 2 - 3 மணி அளவில் பெண் மீனிடமிருந்து முட்டைகள் வெளிவரும். மறுநாள் மதியம் 4 மணியளவில் மூட்டைகளிலிருந்து நுண்மீன் குஞ்சுகள் வெளியில் வரும். 5 - 8 கிலோ எடை கொண்ட தாய் மீன் மூலம் ஒரு முறைக்கு 50 லிட்டர் முட்டைகள் வெளிவரும். 1 லிட்டர் முட்டைகள் மூலம் 20,000 - 25,000 நுண்மீன் குஞ்சுகள் கிடைக்கும். இதைக் குளத்தில் விட்டு பெரிய மீன்களாக உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.