Published:Updated:

மாதம் ரூ.1 லட்சம் லாபம்! கொடை கொடுக்கும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆடுகளுக்கான கொட்டில்
ஆடுகளுக்கான கொட்டில் ( நா.ராஜமுருகன் )

கால்நடை

பிரீமியம் ஸ்டோரி

பி.டெக் முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்பாமல், சொந்த இடத்தில் கொட்டில் முறையில் பரண் அமைத்து, கலப்பின ஆடுகள் வளர்ப்பில் சாதித்து வருகிறார், இளைஞர் அரவிந்த் பாலகிருஷ்ணன்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் இருக்கும் கட்டநாச்சம்பட்டியில் இருக்கிறது இவரது ஆட்டுப்பண்ணை. தென்னை மரங்களுக்கு இடையில் கொட்டில்களை அமைத்து, ஆடுகளை வளர்த்து வருகிறார்.

ஒரு காலை வேளையில், ஆடுகளுக்குப் பசுந்தீவனம் அறுவடை செய்யும் பணியாள் களுடன் பேசிக்கொண்டிருந்த அரவிந்த் பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். மகிழ்ச்சியாக வரவேற்றவர், தனது ஆட்டுப்பண்ணையைச் சுற்றிக்காட்டியபடியே பேசத் தொடங்கினார்.

ஆட்டுக் குட்டிகளுடன் அரவிந்த் பாலகிருஷ்ணன்
ஆட்டுக் குட்டிகளுடன் அரவிந்த் பாலகிருஷ்ணன்

“பூர்வீக விவசாயக் குடும்பம். எங்களுக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, மூணு ஏக்கர்ல தென்னை விவசாயம். ரெண்டு ஏக்கர் நிலத்துல நெல், கரும்பு, மஞ்சள்னு பயிர் செய்வோம். சின்ன வயசுல இருந்தே, படிச்சுட்டு வேலைக்குப் போகணும்ங்கிற எண்ணமெல்லாம் இல்ல. சொந்தமா ஏதாச்சும் தொழில் பண்ணணும்னு நினைச்சிருந்தேன்.

2017-ம் வருஷம் பி.டெக் கடைசி வருஷம் படிச்சுட்டு இருந்தப்ப, திடீர்னு ஆடு வளர்க்கணும்னு எண்ணம் வந்துச்சு. உடனே, சேலம் கறுப்பு, கன்னி ரகங்கள்ல 5 நாட்டு ஆடுகளை வாங்கி வளர்த்தேன். ‘ஒழுங்கா படிச்சு வேலைக்குப் போ. ஏன் இந்த வேண்டாத வேலை’னு வீட்டுல சொன்னாங்க. ஆனால், நான் ஆடு வளர்ப்புத் தொழில்ல இறங்குறதுல உறுதியா இருந்தேன். மழைக்காலத்தில ஆடுகளைப் பாதுகாக்க, 25 அடி அகலம், 30 அடி நீளத்துல ஒரு கொட்டகை அமைச்சேன்.

அதோட, ஆடுகளைப் பத்தின தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாடு, இந்திய அளவுல எந்த ஆடுகள் சிறப்பா இருக்குது? நம்ம சூழலுக்கு எந்த வகை ஆடுகளை வளர்க்கலாம்? சந்தைப்படுத்த எந்த ஆடு சிறந்தது?னு பல விஷயங்களை நுணுக்கமா ஆராய்ஞ்சு தெரிஞ்சுகிட்டேன். கடைசியா நாட்டு ஆடு, தலைச்சேரி ஆடு கலந்த கலப்பின ஆடுகள்தான் லாபகரமா இருக்கும்னு முடிவுக்கு வந்தேன். அந்த ரகத்தில 10 ஆடுகளை உள்ளூர் விவசாயிககிட்ட வாங்கினேன். ஆனால், குட்டிகள் இறப்பு, வளர்ச்சி இல்லாததுனு பல பிரச்னைகள் வந்துச்சு. அதனால, ‘இந்த வகை ஆடுகளைக் கொட்டில் முறையில வளர்க்குறது சரி வராது, மேய்ச்சல் முறைதான் சரி’னு புரிஞ்சது.

ஆடுகளுக்கான கொட்டில்
ஆடுகளுக்கான கொட்டில்

‘கொட்டில் முறையில் வளர்க்க எந்த வகை ஆடுகள் சரியானவை’னு தேட ஆரம்பிச்சேன். தலைச்சேரி, போயர் ரெண்டும் கலந்த கலப்பின ஆடு, நல்லா வரும்னு தெரிஞ்சது.

ஓர் ஆடு 4,50,000 ரூபாய்

மகாராஷ்டிராவிலிருந்து 2019-ம் வருஷம், 5 போயர் ரக ஆடுகளை வாங்கினேன். அதைத் தலைச்சேரி ஆடுகளோட, இனச்சேர்க்கை பண்ணினேன். அதே வருஷம், ஒரிஜினல் போயர் ஆடு வேணும்னு, தென் ஆப்பிரிக்காவுல இருந்து ஒரு போயர் ஆட்டை இறக்குமதி பண்ணினேன். அதோட விலை நாலரை லட்சம் ரூபாய். அதை வெச்சு, இனப்பெருக்கம் பண்ணி, ஆடுகளைப் பெருக்கினேன்.

ஆடுகளை வளர்க்க 45 லட்சம் ரூபாய் வங்கியில கடன் வாங்கினேன். ஒரு கொட்டில் 2,500 சதுர அடி வீதம் 3 கொட்டில்களை, தென்னை மரங்களுக்கு இடையில அமைச்சேன். 2018-ம் வருஷத்துல இருந்து ஆடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். உள்ளூர் வியாபாரிக, ஆடுகளா வாங்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. இதுபோக, ஆடுகள் பெருக ஆரம்பிச்சதுனால, 2019-ம் வருஷத்துல இருந்து, இனப் பெருக்கத்துக்காகக் கிடாக்களையும், என் தேவைக்குப் போக மீதமுள்ள தாய் ஆடுகளையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

முதல்ல சேலம், ஈரோடு மாவட்ட விவசாயிகள் வந்து என்கிட்ட ஆடுகளை வாங்கினாங்க. பிறகு, கொஞ்சம் கொஞ்சமா எல்லை விரிவடைஞ்சு, இப்ப தமிழ்நாடு முழுக்க என்கிட்ட ஆடுகள் வாங்குறாங்க. என்கிட்ட மொத்தம் 130 தாய் ஆடுகளும், 40 குட்டி ஆடுகளும் இருக்கு” என்றவர், ஆடுகளுக்கான தீவனம் குறித்துப் பேசினார்.

வேலிமசால்
வேலிமசால்

5 ஏக்கர் தீவனப்பயிர்

“முதல்ல 5 ஆடுகள் வாங்கினப்பவே, 10 சென்ட் இடத்துல தீவனப் பயிர்கள சாகுபடி பண்ண ஆரம்பிச்சிட்டேன். வேலிமசால், சூபாபுல், சூப்பர் நேப்பியர், அகத்தி, மல்பெரினு வளர்க்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து, ஆடுகள் பெருகுன பிறகு, பசுந்தீவனத்தோட தேவையும் அதிகமாச்சு. அதனால, என்கிட்ட இருந்த 5 ஏக்கர் நிலத்திலும் மேலே சொன்ன தீவனங்களைப் பயிர் செய்ய ஆரம்பிச்சேன். சொட்டு நீர்ப் பாசனம் அமைச்சேன். இதைத் தவிர, மக்காச்சோளம், தவிடு, கடலைப் புண்ணாக்கு, துவரம் பொட்டு வாங்கி அரைச்சு, அதை அடர்தீவனமா ஆடுகளுக்குக் கொடுத்துட்டு வர்றோம்’’ என்றவர் வருமானக் கணக்கை விவரித்தார்.

சூப்பர் நேப்பியர்
சூப்பர் நேப்பியர்


கலப்பின இனப்பெருக்க ஆடு 50,000 ரூபாய்

“கறிக்குக் கொடுத்தா ஓர் ஆடு 10,000 ரூபாய் வரைக்கும் விலைபோகுது. மாசத்துக்கு 5 ஆடுகள கறிக்கு விற்பனை செய்றேன். அது மூலமா 50,000 ரூபாய் கிடைக்குது. வளர்ப்புக்காக மாசம் 5 ஆடுகளை விற்பனை செய்றேன். கலப்பின போயர் ஆடுகள தரத்துக்குத் தகுந்தமாதிரி கிலோ 500 ரூபாயிலிருந்து அதிகபட்சமா கிலோ 1,500 ரூபாய் வரைக்கும் விலை வச்சு விற்பனை செய்றேன். அந்த வகையில, உயிர் ஆடு ஒண்ணு குறைஞ்சது 15,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமா 50,000 ரூபாய் வரைக்கும் விலைபோகுது. இந்த விலை அதிகம்னு தோணலாம். ஆனா, கலப்பின போயர் ஆடுகளுக்கு இந்த விற்பனை வாய்ப்பு இருக்கு. வளர்ப்புக்காக விக்குறது மூலமா சராசரியா ஓர் ஆட்டுக்கு 30,000 ரூபாய் வரை கிடைக்கும். அப்படிப் பார்த்தால், 5 ஆட்டுக்கும் சேர்த்து மாசம் ஒன்றரை லட்சம் கிடைக்கும். ஆகமொத்தம் ஆடுகளைக் கறிக்காகவும் வளர்ப்புக்காகவும் விற்பனை செய்யுற வகையில மொத்தம் 2 லட்சம் ரூபாய் கிடைக்குது.

தீவனம் எடுக்கும் ஆடுகள்
தீவனம் எடுக்கும் ஆடுகள்

இதுல, செலவுன்னு பார்த்தா, நாலு ஆளுங்களை வேலைக்கு வெச்சிருக்கேன். ஓர் ஆளுக்கு மாசம் 11,000 ரூபாய்னு 4 பேருக்கும் மாசம் 44,000 ரூபாய் சம்பளம் தர்றேன். அடர்தீவனம் வாங்க மாசம் 50,000 ரூபாய் வரை செலவாகுது. இதைத் தவிர, ஆடுகளுக்கு மருத்துவச் செலவுனு மாசம் 6,000 ரூபாய் வரை செலவாகுது. அந்த வகையில, 1 லட்சம் செலவு போக, மாசம் 1 லட்சம் ரூபாய் லாபமாக் கிடைக்குது. ஆடுகளோட எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தும்போது, வருமானமும் பலமடங்கு அதிகரிக்கும்” என்றார்.


தொடர்புக்கு,

அரவிந்த் பாலகிருஷ்ணன்,

செல்போன்: 95003 00061

தேங்காயைத் திரட்சியாக்கும்
ஆட்டு எரு!

தென்னை வருமானம் பற்றிப் பேசிய அரவிந்த், “மொத்தம் 3 ஏக்கர்ல நாட்டுரகத் தென்னை மரங்கள் இருக்கு. இப்போதைக்கு 120 மரங்கள் இருக்கு. வருஷத்துக்கு மூணு தடவைதான் தேங்காய்கள வெட்டுவோம். இதுல, எல்லாச் செலவுகளும் போக, மாசம் 7,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆட்டு எருவை தென்னை மரங்களுக்கு உரமாகக் கொடுக்குறதால, தென்னை நல்லா வளர்ந்து, காய்களும் திரட்சியாக இருக்கு” என்றார்.

போயர் கிடா
போயர் கிடா

பரண்களைச் சுத்தமாக வைக்கவும்

ஆடுகளுக்கான நோய் மேலாண்மை குறித்துப் பேசிய அரவிந்த், “வருஷத்துக்கு ஒரு தடவை எல்லா ஆடுகளுக்கும் ஆட்டுக் கொல்லி நோய்க்கான தடுப்பூசியைப் போட்டுருவோம். அதேபோல, வருஷம் ஒருமுறை கோமாரி நோய், தடுப்பூசியையும் போடுவோம். 3 மாசத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்க மருந்தை, ஆடுகளோட வாய் வழியாக் கொடுப்போம். பருவநிலை மாறும்போது, ஆடுகளுக்குச் சளித்தொல்லை வரும். அதைச் சரிபண்ண, கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைபடி, வைத்தியம் பார்ப்பேன். மத்தபடி, பரண்களைச் சுத்தமா வைத்திருந்தாலே போதும். பெரிய அளவுல ஆடுகளுக்கு நோய்த்தாக்குதல் ஏற்படாது” என்றார்.

6 மாதத்தில் 25 கிலோ

“நாட்டு இனங்களான கன்னியாடு, கொடியாடு, கறுப்பு ஆடுகள் மேய்ச்சல் முறையில் நல்ல எடை வர்றதுக்கு ஒரு வருஷம் ஆகும். ஆனா, போயர், தலைச்சேரி கலப்பின ஆடுகள் 6 மாசத்துல 25 கிலோ எடை வந்திடும். இந்த ரக ஆடுகளோட கறியை மக்கள் விரும்பிச் சாப்பிடுறாங்க. அதனால, இதுக்கு சந்தையில நல்ல விலை கிடைக்குது” என்கிறார் அரவிந்த்.

கொட்டில் முறை ஆடு வளர்ப்பில் வெற்றி பெறுவது எப்படி?

கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு குறித்து, தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கி.ஜெகதீசனிடம் பேசினோம்.

கி.ஜெகதீசன்
கி.ஜெகதீசன்

“கொட்டில் முறை ஆடு வளர்ப்பை, இடப்பற்றாக்குறை மற்றும் ஆள்பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக விவசாயிகள் செய்கிறார்கள். அந்த முறையில் ஆடு வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், ஆடுகள் குறைந்தது 2 மணிநேரமாவது காலாற நடந்து சென்று வெளியில் மேய வேண்டும். அப்போதுதான், ஆடுகள் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருக்கும். சூழ்நிலையால் கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பவர்கள், ஒரு நுட்பத்தை பின்பற்ற வேண்டும். அதாவது, கொட்டிலில் நான்கு பக்கமும், ஆடுகள் நடக்க போதுமான அளவு இடம் விட்டு, சுற்றி வேலியோ, தடுப்போ ஏற்படுத்த வேண்டும். ஆடுகளை அந்த இடத்தில் காலாற நடக்கவிட முடியும். மேலும். போயர், தலைச்சேரி கலப்பின ஆடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும்போது, மற்ற ஆட்டு இறைச்சி விலைக்குத்தான் விற்பனை செய்ய முடியும். ஆனால், வளர்ப்பதற்காக வாங்கும்போது, ஆட்டின் விலை ஒன்று ரூ.30,000 விற்பனை ஆக வாய்ப்புள்ளது. காரணம், மாடுகளுக்குச் சினை ஊசி மூலம் எடுத்துப் போய், இனப்பெருக்கம் செய்ய வைப்பதுபோல், ஆடுகளில் செய்வதற்கு இன்னும் வசதிகள் வரவில்லை. அதனால், இனப்பெருக்கத்துக்கு உயிர் ஆடுகளை வாங்கிபோய்தான் இனச்சேர்க்கை செய்ய வைக்க முடியும். அதனால், போயர், தலைச்சேரி கலப்பின ஆட்டை, இனப்பெருக்கத்துக்காக விற்பனை செய்யும்போது, உடல் எடை, வளர்ப்பவரின் திறமை, எத்தனை மாதங்கள் ஆன ஆடு என்பதை எல்லாம் கணக்கில் கொண்டு, நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு