Published:Updated:

மாதம் ரூ.4 லட்சம் லாபம்!வெள்ளாட்டுப்பால் விற்பனையில் அசத்தும் விவசாயி!

பண்ணையில் ஶ்ரீனிவாஸாச்சார்யா
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் ஶ்ரீனிவாஸாச்சார்யா

தீர்வு

மாதம் ரூ.4 லட்சம் லாபம்!வெள்ளாட்டுப்பால் விற்பனையில் அசத்தும் விவசாயி!

தீர்வு

Published:Updated:
பண்ணையில் ஶ்ரீனிவாஸாச்சார்யா
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் ஶ்ரீனிவாஸாச்சார்யா

சாகுபடி, தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டல், விற்பனை என்று ஈடுபடும் பலர், முதலில் பல தவறுகளைச் செய்தாலும் அவற்றையெல்லாம் திருத்திக்கொண்டு, பின்னர் வெற்றிநடை போடுவார்கள். அத்தகையோரின் அனுபவங்களைப் பேசும் தொடர்தான் இது. அந்த வரிசையில், வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கர்நாடக மாநில விவசாயி னிவாஸாச்சார்யாவின் அனுபவத்தை இந்த இதழில் பார்ப்போம். இவருடைய பண்ணை மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, எட்டஅள்ளியில் உள்ளது. மிக அழகாகத் தமிழிலேயே அனுபவங்களை எடுத்து வைத்தார் ஶ்ரீனிவாஸாச்சார்யா.

“இயற்கை விவசாயம் செய்யவதற்காக 2009-ம் ஆண்டு, 48 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். விவசாயம், கால்நடைகள் எல்லாம் இருப்பது மாதிரி பண்ணையை நடத்த திட்டமிட்டேன். தூர்தர்ஷன்ல வர்ற விவசாயச் செய்திகளைப் பார்த்ததைத் தவிர எனக்குப் பெருசா விவசாய அனுபவம் இல்ல. அதனால என் பண்ணைக்கு ஆலோசகர் ஒருத்தரை நியமிச்சேன். முதல்ல விவசாயமும், மாடு வளர்ப்பும் ஆரம்பிச்சேன். ஆள் பற்றாக்குறை, சரியான பயிர்கள் தேர்வு இருந்தும் விவசாயத்தை சரியா முன்னெடுக்க முடியல. சரி... மாடு வளர்ப்பையாவது தொடரலாம்னு முடிவெடுத்தோம். நாங்க நினைச்ச அளவுக்கு மாடுகள் பால் கறக்கல, அதோட நோய் பிரச்னைகள். அதைச் சரியா செய்ய முடியல. பால் கறக்கிற மாடு சினையாகிட்டா அது கன்னு போடுற வரை காத்திருக்கணும். அதுவரைக்கும் வெறுமனே அதுக்குத் தீவனம் போட்டு கட்டுப்படியாகல. வேறென்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்பவே பண்ணையில ஆடுகள் இருந்துச்சு. அதனால, ஆடு வளர்ப்பை முன்னெடுக்கலாம்னு திட்டமிட்டு, இந்தியாவுல இருக்கிற ஒவ்வொரு ரகத்துலயும் சில ஆடுகள வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். இதுக்காகவே பரண்களை அமைச்சு அதுல வளர்க்க ஆரம்பிச்சேன். வாங்கிட்டு வந்த சில மாசத்துலயே நோய் தாக்கி பாதி ஆடுக இறந்து போயிடுச்சு. மீதியும் நோஞ்சான் மாதிரி ஆயிடுச்சு. அதனால வந்த விலைக்கு வித்துட்டேன். வல்லுநர்கிட்ட போய்ச் சொன்னா, ‘ஆடுகளுக்கு நம்ம பகுதியோட சீதோஷ்ண நிலை ஒத்துக்கல. அதனால இறந்து போயிருக்கும்’ என்று சொன்னாங்க. நானும் அப்படியே நம்பிட்டேன்.

பண்ணையில் ஶ்ரீனிவாஸாச்சார்யா
பண்ணையில் ஶ்ரீனிவாஸாச்சார்யா

வாங்கிட்டு வர்ற ஆடுகள சரியா பராமரிக்காம விட்டதுதான் நான் செஞ்ச தவறு. இது புரிஞ்சதுக்குப் பிறகு, ஆடுகளைத் தனிமைப்படுத்திப் பராமரிக்க விசாலமான கொட்டில் அமைச்சோம். அது காலாற நடக்கிறதுக்குக் கொட்டிலுக்கு முன்னாடியே காலி இடங்களை ஏற்படுத்தினோம். அதுக்குச் சரிவிகித தீவனம் என்னன்னு தெரிஞ்சுகிட்டோம். அதைக் கொடுக்க ஆரம்பிச்சோம். தீவனப்புல்லுல மண்ணோ, ஆட்டோட சிறுநீரோ பட்டுடுச்சுனா, ஆடுகள் அதைச் சாப்பிடாது. இந்த விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டு, அதைத் தவிர்க்க ஆரம்பிச்சோம். இதே மாதிரி தண்ணி வைக்கிறது, வெயில்ல விடுறது, தடுப்பூசி போடுறதுனு பல விஷயங்களையும் கவனமா செஞ்சோம். இங்க, 25 ஏக்கருக்கும் மேல பல வகையான தீவனப்புல்லை சாகுபடி செய்றோம். அதை ஆடுகள் எடுத்துக்கிறதுக்கு ஏத்த மாதிரி நறுக்கி, தீவனத் தொட்டியில கொடுத்தோம். இதுனால 50 சதவிகிதத்துக்கும் மேல இருந்த ஆடுகள் இறப்பு, 5 சதவிகிதம் அளவுக்கு குறைஞ்சிடுச்சு” என்றவர் தொடர்ந்தார்.

பரணில் தனித்தனி அறைகளில் வெள்ளாடுகள்
பரணில் தனித்தனி அறைகளில் வெள்ளாடுகள்

“ஆடுகளை மேய்ச்சல் முறையில வளர்த்தா பிரச்னையில்ல. மேய்க்க ஆளுங்க இருந்தா போதும். மத்த பிரச்னைகளை சுலபமா சமாளிச்சிடலாம்.

30 ஆடுகளுக்கு 1 ஏக்கர்ங்கற விகிதத்துல தீவனப்புல் வளர்க்கணும். 30 ஆடுகள் மூலம் ரெண்டு வருஷத்துக்கு சராசரியா 85 குட்டிகள் கிடைக்கும். இதை வளர்த்தா, ஒரு ஆடு சராசரியா 15 கிலோ எடை இருக்கும். அந்த வகையில மொத்தம் 1,275 கிலோ. ஒரு கிலோ உயிர் எடை 350 ரூபாய்க்கு விலை போகும். அதன்படி பார்த்தா... 4,46,250 ரூபாய் வருமானமா கிடைக்கும். 30 ஆடுகளை மேய்ச்சலுக்குப் பராமரிக்கிறதுக்கு ஒரு ஆள் போதும். அவருக்குச் சம்பளம், மத்த செலவு எல்லாம் சேர்த்து ரெண்டு வருஷத்துக்கு ரெண்டரை லட்சம் செலவானாலும் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் லாபம்.

ஆனா, கொட்டில்முறை வளர்ப்புல அப்படியில்ல. ஆளுங்களே இருந்தாலும் இப்படித்தான் பராமரிக்கணும்னு சில வழிமுறைகள் இருக்கு. அதை அவசியம் கடைப்பிடிக்கணும். கூடவே இருந்து கண்காணிக்கணும். ஆடுகள பராமரிக்க ஒருத்தர், தீவனம், தீவனப்புல், நோய் மேலாண்மைனு மூன்றரை லட்சம் செலவாகும். ஒரு லட்ச ரூபாய் லாபமா கிடைக்கும். வருஷத்துக்குனு பார்த்தா 50,000 ரூபாய்தான் லாபம். இந்த லாபம்கூட நிச்சயம்னு சொல்ல முடியாது. கொட்டில் முறையில நல்ல லாபம் சம்பாதிக்க முடியாதுங்கறதுதான் என்னோட அனுபவத்துல தெரிஞ்சுகிட்டது. இது தெரியாமத்தான் என்னை மாதிரி கொட்டிலுக்காக லட்சக்கணக்குல பலரும் முதலீடு பண்றாங்க. தொடங்குன சில வருஷங்கள்லயே நடத்த முடியாம ஆட்டுப்பண்ணையையே மூடிடுறாங்க.

தீவனச் சாகுபடி
தீவனச் சாகுபடி

நடந்தது நடந்துபோச்சு. இனி லாபத்தை அதிகரிக்கிறது எப்படினு யோசிச்சேன். இணையத்துல தேடினப்ப வெள்ளாட்டுப்பால் சம்பந்தமான தகவல் கிடைச்சது. வெளிநாடுகள்ல இருந்துதான் ஆட்டுப்பால் இந்தியாவுக்கு வருதுங்கிற தகவலும் கிடைச்சது. ஒரு லிட்டர் 800 ரூபாய்க்கு அந்த நேரத்துல விலை போய்க்கிட்டிருந்துச்சு.

நாமும் ஆட்டுப்பால் விஷயத்தைக் கையில எடுக்கலாம்னு அதுல இறங்கினேன். வெள்ளாட்டுக் குட்டிக்கு ஒரு வேளைக்கு 100 - 200 மில்லி பால் அவசியம். வெள்ளாட்டுக்கு 400 - 500 மில்லி வரைக்கும் பால் சுரக்கும். குட்டி குடிச்சது போக மீதி 200 மில்லி பாலைத்தான் விற்பனை செய்யுறோம்.

தனி தனி அறைகளில் ஆடுகள்
தனி தனி அறைகளில் ஆடுகள்
பன்னூர் செம்மறியாடுகள்
பன்னூர் செம்மறியாடுகள்

பெங்களூருல வெள்ளாட்டுப்பால் விழிப்பு உணர்வுக்காக 5,000 லிட்டர் பாலை பொது மக்களுக்கு இலவசமா கொடுத்தேன். முதலமைச்சரா இருந்த சித்தராமையாவைப் போய் பார்த்து, வெள்ளாட்டுப்பால் விற்பனைக்கு அரசாங்கம் உதவணும்னு கோரிக்கை வெச்சேன். ஆலோசனை பண்ணுங்கனு அதிகாரிங்களுக்கு அவர் உத்தரவுபோட்டார். ஆலோசனையோட முடிவுல, ‘வெள்ளாட்டுப்பால் விற்பனையை ஊக்கப்படுத்தினா, மாட்டுப்பால் விற்பனை பாதிக்கப்படும். அதோட ஆட்டுப்பால் விலையும் அதிகம்’னு சொல்லிட்டாங்க.

புதுசா ஆட்டுப்பாலை அறிமுகப்படுத்தினா, ஏற்கெனவே களத்துல மாட்டுப்பால் விற்பனை செய்துகிட்டிருக்கிற தனியார் பால் நிறுவனங்கள் நம்மள விடாது. அரசாங்கத்தை நம்பியும் பயனில்லைனு புரிஞ்சது. அதனால, ஆட்டுப்பாலுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்துவோம்னு பல இடங்களுக்கு நானே பாலை அனுப்பினேன்.

பரணில் வெள்ளாடுகள்
பரணில் வெள்ளாடுகள்
வெள்ளாட்டுப்பால்
வெள்ளாட்டுப்பால்

2016-ம் வருஷம் ஒரு லிட்டர் பால் 300 ரூபாய்னு மைசூரு, பெங்களுரு, சென்னைக்கு அனுப்பினேன். விளம்பரம் செஞ்சேன். வெள்ளாட்டுப்பால் சம்பந்தமா டிவியில விவாத நிகழ்ச்சி நடத்துனேன். ஆயுர்வேத மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர்கள் எல்லாம் அதுல பங்கெடுத்தாங்க. மக்கள் மத்தியில கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு உருவாச்சு. அதனால பால் விற்பனை உயர ஆரம்பிச்சது” என்றவர், அடுத்து ஏற்பட்ட தோல்வியைப் பற்றியும் பகிர்ந்தார்.

“பண்ணையைப் பார்த்துக்கிட்டு இருந்த எங்க மாமனாரை ஏதோ பூச்சி கடிச்சிடுச்சு. அவர் வேலை செய்ய முடியாத நிலைமை. அதனால, அவரும் மாமியாரும் ஊருக்குப் போயிட்டாங்க. தினமும் 350 லிட்டரா இருந்த பால் உற்பத்தி, 50 லிட்டரா குறைஞ்சுப் போச்சு. புதுசா ஆளுங்களைப் போட்டும் பயனில்ல. திருச்சியில இருந்து நாலு இளைஞர்களை வேலைக்குக் கூட்டி வந்தேன். திரும்பவும் பால் உற்பத்தி பெருகின சில மாசத்துலயே கொரோனா. போட்ட முதலீடு அத்தனையும் தேங்கிடுச்சு. அந்த நேரத்துல மாட்டுப்பால் விலைக்குத்தான் வெள்ளாட்டுப்பாலைக் கொடுத்தேன். மீதியிருந்த பாலை நெய்யாக்கி விற்பனை செஞ்சோம். ரெண்டாவது ஊரடங்கு முடிஞ்ச பிறகு, மறுபடியும் பால் விற்பனை சூடு பிடுக்க ஆரம்பிச்சது. கொரோனாவுக்குப் பிறகு, சத்துள்ள உணவு சாப்பிடணுங்கற நோக்கத்துல நிறைய பேரு இப்ப ஆட்டுப்பால் வாங்குறாங்க” என்று சொன்ன ஶ்ரீனிவாஸாச்சார்யா, வருமானம் குறித்தும் பேசினார்.

ஆடுகளுக்கு தீவனம்
ஆடுகளுக்கு தீவனம்
ஆடுகளுக்கு தீவனம்
ஆடுகளுக்கு தீவனம்

“எங்கிட்ட இப்போ மொத்தம் 600 தாய் ஆடுகள் இருக்குது. அதுங்க மூலமா ஒரு நாளைக்கு, சராசரியா 250 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் பால் 400 ரூபாய்னு மைசூரு, பெங்களூரு, சென்னைனு அனுப்பிக்கிட்டு இருக்கேன். பண்ணை விலையா லிட்டர் 250 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். அந்த வகையில ஒரு நாளைக்கு 62,500 ரூபாய். மாசம் 18,75,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. பண்ணையில 10 பேர் வேலை செய்றாங்க. அவங்களுக்கான சம்பளம், ஆடுகளுக்கான மருத்துவம், போக்குவரத்து, இதரச் செலவு, முதலீட்டுக்கான வட்டினு மாசம் 14 லட்சம் செலவாகுது. 4,75,000 ரூபாய் லாபம்.

இது ஒருநாள்ல கிடைச்சது இல்ல. இந்த இடத்துக்கு வர்றதுக்கு 5 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கேன். 5,000 ஆடுகளை இழந்திருக்கேன். நிறைய தவறுகள் செஞ்சிருக்கேன். அதைத் திருத்திக்கிட்டு தொடர்ந்ததாலதான் இன்னைக்கு வெற்றிகரமா பண்ணையை நடத்த முடியுது.

வெள்ளாட்டு நெய்
வெள்ளாட்டு நெய்
பதப்படுத்தப்படும் பால்
பதப்படுத்தப்படும் பால்

வெள்ளாட்டுப்பாலிருந்து நெய், சோப் தயாரிக்குற முயற்சியில இறங்கியிருக்கேன். என் அனுபவத்தைப் பயிற்சி மூலமா சொல்லிக் கொடுத்துக்கிட்டு வர்றேன். என்னை மாதிரியே பெரிய அளவுல செய்ய வேண்டிய அவசியம் இல்ல. 30 ஆடுகள்ல இருந்தே தொடங்கலாம். அதுக்கான ஆலோசனையும் கொடுக்கிறேன். ஆடுகளுக்கு வெளியில இருந்து தீவனம் வாங்கக் கூடாது. ஆடுகளோட குணாதிசயங்களை நல்லா புரிஞ்சு வெச்சுக்கணும். ஆடுகளோட இயல்பு தெரியாம ஆடு வளர்ப்புல இறங்கக் கூடாது” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னவர், அன்புடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

ஶ்ரீனிவாஸாச்சார்யா

செல்போன் 96205 90777

(மாலை 6 மணிக்கு மேல் பேசவும்)

Yashodavana Goat Farm

Yedahalli, Nanjangud Taluk, Mysore District, Karnataka 570008.

வெள்ளாட்டுப்பால்
வெள்ளாட்டுப்பால்

200 மி.லி 100 ரூபாய் வெள்ளாட்டுப்பால் விற்பனை!

சென்னை, மாம்பலத்தில் வெள்ளாட்டுப்பாலை விற்பனை செய்து வரும் செந்தூர்பாண்டியனிடம் பேசினோம். “வெள்ளாட்டுப்பால், ஒட்டகப்பால்னு அதிகம் மக்கள்கிட்ட பரவாத பால் வகைகளை விற்பனை செஞ்சிகிட்டு வர்றேன். வெள்ளாட்டுப்பாலை ஶ்ரீனிவாச்சார்யாகிட்டதான் 3 வருஷமா வாங்கிட்டு வர்றேன். ஒரு லிட்டர் 300 ரூபாய்னு வாங்குறேன். இங்க 200 மில்லி, 500 மில்லினுதான் வாங்குறாங்க. அதனால பாட்டில்ல அடைச்சு 200 மில்லி 100 ரூபாய்னு விற்பனை செய்யுறோம். மருத்துவப் பயன்பாடு, ஆரோக்கியமான உணவுனுதான் இதை வாங்குறாங்க. வெள்ளாட்டுப்பால் சம்பந்தமான விழிப்புணர்வு பெருகணும்னு முயற்சி செய்றோம். இதைக் குடிக்கிறவங்க இந்தப் பாலோட நன்மைகளை வெளிப்படையா பேசினா... ரொம்ப நல்லாருக்கும். அதற்கான முயற்சியில இருக்கோம்” என்றார்.

பேக்கிங் செய்யப்பட்ட பால்
பேக்கிங் செய்யப்பட்ட பால்
வெள்ளாட்டு நெய்
வெள்ளாட்டு நெய்

வெள்ளாட்டுப்பால் பயன்படுத்திவரும் சென்னையைச் சேர்ந்த நாகராஜிடம் பேசினோம். “எனக்கு டெங்குக் காய்ச்சல் வந்துச்சு. அந்தச் சமயத்துலதான் வெள்ளாட்டுப்பால் குடிச்சுப் பழகினேன். சோர்ந்து போயிருந்த உடம்பை மீட்டெடுக்க அது உதவுச்சு. எனக்கு ‘ஜிம்’முக்கு போற பழக்கம் உண்டு. உடலைக் கட்டுகோப்பா வெச்சுக்க விரும்புவேன். அந்த வகையில விலை அதிகமா இருந்தாலும் வெள்ளாட்டுப்பாலை, உடலை வலிமையா வெச்சுக்கணுங்கறதுக்கா குடிச்சுக்கிட்டு வர்றேன்” என்றார்.

செந்தூர் பாண்டியன், நாகராஜ், சத்யாராயணா பட்
செந்தூர் பாண்டியன், நாகராஜ், சத்யாராயணா பட்
பதப்படுத்தும் நிலையம்
பதப்படுத்தும் நிலையம்
பதப்படுத்தும் நிலையம்
பதப்படுத்தும் நிலையம்

தாய்ப்பாலுக்கு இணையானது வெள்ளாட்டுப்பால்

வெள்ளாட்டுப்பாலில் உள்ள நன்மை குறித்து மைசூரு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ஆயுர்வேத மருத்துவருமான சத்தியநாராயணா பட் என்பவரிடம் கேட்டோம்.

“மகாத்மா காந்தி, ‘ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படும் அனைவரும் வெள்ளாட்டுப்பாலை உணவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். வெள்ளாட்டுப்பாலில் அவ்வளவு சத்துகள் இருப்பதுதான் காரணம். ‘காஸ்யப் சம்ஹிதே’ என்று ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்வார்கள். தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில் வெள்ளாட்டுப்பால் முதன்மையானது. இயற்கையாகவே வெள்ளாட்டுப்பாலில் ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’ இருக்கிறது. அதனால்தான் இதை ஆயுர்வேதத்தில் ‘அஜம்ருதா’ என்று சொல்கிறார்கள். ஆஸ்துமா, இருமல், காசநோய் பிரச்னைகளுக்கு வெள்ளாட்டுப்பால் மிகவும் ஏற்றது.

பதப்படுத்தும் பணி
பதப்படுத்தும் பணி

ஆயுர்வேத மருந்துகளை வெள்ளாட்டுப்பாலில் கலந்துகொடுப்பது வழக்கம். காரணம், வெள்ளாட்டுப்பால் மருத்துவத்தன்மை வாய்ந்தது என்பதால்தான். குறிப்பாக, குழந்தையின்மை பிரச்னை உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுர்வேத, சித்த மருந்துகளில் வெள்ளாட்டுப்பால் பயன்படுத்தப்படுகிறது. பெண்ணின் கருமுட்டை உற்பத்தி, ஆணின் விந்தணு உற்பத்தியில் இது முக்கியப் பங்காற்றுகிறது. பெண்களின் ‘ஹார்மோன்’களை சமநிலையில் வைக்கும் தன்மையும் ஆட்டுப்பாலுக்கு உண்டு. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மையும் ஆட்டுப்பாலுக்கு உண்டு.

சிறுநீர் பிரச்னை உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளான சோமநாதரசா, மூளையின் செயல்திறனுக்கு கொடுக்கப்படும் சாரஸ்வத்ருத், வலி நிவாரணி பிண்டைலா, அழகு சாதனப் பொருளான குங்குமாடில்லா போன்ற பொருள்களில் எல்லாம் வெள்ளாட்டுப்பால் சேர்க்கப்படுகிறது. உலக அளவில் மொத்த பால் உற்பத்தியில் வெள்ளாட்டுப்பால் 2 சதவிகிதம்தான். அதனால் வெள்ளாட்டுப்பால் உற்பத்தி இன்னும் பெருக வேண்டும்” என்றார்.

மதிப்புக்கூட்டப்பட்ட வெள்ளாட்டுப்பால்
மதிப்புக்கூட்டப்பட்ட வெள்ளாட்டுப்பால்
பதப்படுத்தும் நிலையம்
பதப்படுத்தும் நிலையம்

பால் உற்பத்திக்கு ஏற்ற
ஆடு எது?

பால் உற்பத்துக்கு ஏற்ற ஆடுகள் பற்றிப் பேசும் னிவாச்சார்யா, “எப்போதுமே ஆடு வளர்க்கிறதுல ஆடுகளோட தேர்வு ரொம்ப முக்கியம். குட்டி வளர்க்குற திறன், பால் கொடுக்குற திறன், பராமரிப்புக்கு உகந்ததானு பல விஷயங்களைப் பார்த்து வாங்கணும். இந்தியாவுல அங்கீகரிக்கப்பட்ட வெள்ளாட்டு இனங்கள் 34 இருக்கு. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த உஸ்மனப்பாடி, தமிழகத்தைச் சேர்ந்த கன்னி ஆடு, கேரளாவைச் சேர்ந்த தலைச்சேரி, ராஜஸ்தானைச் சேர்ந்த சிரோஹி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜமுனாபாரி, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போயர், குஜராத்தை சேர்ந்த ஜலவாடி, பார்பாரினு பல ரகங்கள் இருக்கு. இதுல எல்லா ரகங்களையும் வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கேன். அந்த வகையில பால் உற்பத்திக்கும், குட்டி வளர்க்கிறதுக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பீட்டல் ரகம்தான் சிறந்தது. பிறந்த குட்டியே நாலரை கிலோ எடை இருக்கும். மூணு மாசத்துல 15 கிலோ வந்துடும். ஒரு ஆட்டுல இருந்து ஒருவேளைக்கு 400 - 500 மில்லி கிடைக்கும். ஒருநாளைக்கு 900 முதல் 1,000 மி.லி வரை கிடைக்கும். குட்டிக்கு குடிக்க கொடுத்தது போக 500 மில்லி கிடைச்சிடும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism