Published:Updated:

அரை ஏக்கர்... ரூ.42,000 குத்துக் கடலையில் குஷியான லாபம்!

நிலக்கடலை வயலில் முருகானந்தம்
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலை வயலில் முருகானந்தம்

மகசூல்

அரை ஏக்கர்... ரூ.42,000 குத்துக் கடலையில் குஷியான லாபம்!

மகசூல்

Published:Updated:
நிலக்கடலை வயலில் முருகானந்தம்
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலை வயலில் முருகானந்தம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சிலர், நிலக்கடலை சாகுபடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். மற்ற பயிர்களை ஒப்பிடும்போது, குறைவான முதலீடு மற்றும் எளிதான பராமரிப்பில் சாகுபடி செய்யக்கூடிய பயிர். குறிப்பாக இதை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பல வகைகளிலும் கூடுதல் பலன் அடைகிறார்கள். அதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிலுள்ள பொய்யுண்டார்கோட்டையைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம்.

ஒரு காலைப் பொழுதில் அவருடைய நிலக்கடலைத் தோட்டத்துக்குச் சென்றோம். பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சி அளித்த நிலக்கடலைச் செடிகளில் படர்ந்திருந்த பனி, நம் மனதைப் பரவசப்படுத்தியது. மகிழ்ச்சியோடு வரவேற்ற முருகானந்தம், ‘‘அரை ஏக்கர்ல குஜராத் ரக குத்துக்கடலை சாகுபடி செஞ்சிருக்கேன். இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுனால, பயிரோட வளர்ச்சி ரொம்பவே அற்புதமா இருக்கு. எல்லாச் செடிகளும் ஒரே சீரா வளர்ச்சி அடைஞ்சிருக்கு. வேர் முழுக்கக் காய்கள் நிறைஞ்சிருக்கு’’ எனச் சொல்லிக்கொண்டே, செடிகளைப் பிடுங்கிக் காட்டினார்.

நிலக்கடலை வயலில் முருகானந்தம்
நிலக்கடலை வயலில் முருகானந்தம்

‘‘காய்கள் நல்லா திரட்சியா இருக்கு. எதுவுமே சோடை போகல, பருப்பு நல்லா பெருசா பார்வையா இருக்கு. இதுல சுவையும் அதிகம்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல் களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்களுக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. குடும்பச் சூழ்நிலை காரணமா, பள்ளிப் படிப்பைப் பாதியிலயே நிறுத்திட்டு, விவசாயத்துல இறங்கிட்டேன். பல வருஷமா ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். பசுமை விகடன் படிக்கப் படிக்க உண்டான ஈர்ப்புனால, 2010-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்.

தஞ்சாவூர் குட்டை, கிர் உட்பட 10 மாடு களும், 20 ஆடுகளும் இருக்கு. இதனால எங்க நிலத்துக்கு அடியுரமா அதிக அளவு எரு கொடுக்குறோம். அதனால, மண்ணு நல்லா வளமாகி, பயிர்கள் நல்லா ஊக்கமா வளருது. 3 ஏக்கர்ல நெல்லும் ஒரு ஏக்கர்ல நிலக்கடலை, உளுந்து, எள்ளு சாகுபடி செய்வோம். இந்த வருஷம் மார்கழிப் பட்டத்துல அரை ஏக்கர்ல நிலக்கடலை சாகுபடி செஞ்சிருக்கேன். விதைச்சு, 70 நாள்கள் ஆகுது. 90 - 100 நாள்கள்ல அறுவடைக்கு வந்துடும்.

மாடுகள்
மாடுகள்


என்னோட கடலைச் செடிகளப் பார்த்து, எங்க பகுதி விவசாயிகள், ஆச்சர்யப்படுறாங்க. என்ன விஷயம்னா, செடிகள்ல ஒரு சில இலைகள்கூடப் பட்டுப் போகல. எல்லாமே பசுமையா இருக்கு. எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும் நிலக்கடலை சாகுபடியில, வேர்ப்பூச்சித்தாக்குதலை சமாளிக்குறதுங்கறது ரொம்பவே சவாலான விஷயம். இதைக் கட்டுப்படுத்த, மத்த விவசாயிக விதைப்புக்கு முன்னாடி, ரசாயன குருணை மருந்து தெளிப்பாங்க. அதனால வேர்ப்பூச்சி கட்டுப்படும். ஆனா, அதோட பக்க விளைவுகள் கண்கூடாத் தெரியும். அதாவது, செடிகள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, பட்டுப்போக ஆரம்பிக்கும். அதனால மகசூல் இழப்பு ஏற்படும்.

ஆனா, நான் வேர்ப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, எரு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாணம் கலந்து போடுறேன். இதனால வேர்ப்பூச்சிகள் முழுமையா கட்டுப்படுது. இலைப்பேன், இலைப்புழுத் தாக்குதலும் கடலைச் செடிகள்ல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆனா, என்னோட கடலைச் செடிகள்ல இந்த மாதிரியான பாதிப்புகள் இல்ல. ஆனாலும்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, மீன் அமிலமும், வேப்ப எண்ணெயும் கலந்து தெளிப்போம். மூலிகைப் பூச்சிவிரட்டியும் கொடுப்போம். இதனால பூச்சி, நோய்த் தாக்குதல் தவிர்க்கப்படுறதோடு, பயிர் வளர்ச்சியூக்கியாகவும் பலன் கொடுக்குது. பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், கன ஜீவாமிர்தமும் பயன்படுத்துறோம். இதனால செடிகள் நல்லா ஊக்கமா வளருது.

அட்டவணை
அட்டவணை

வருமானம்

ஏற்கெனவே கிடைச்ச வருமானத்தை வைச்சு செல்றேன். இந்த அரை ஏக்கர்ல, குறைந்தபட்சம் 17 மூட்டை (40 கிலோ தோலுடன் கூடியது) மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டைக் கடலையைக் காய வச்சு தோல் நீக்கினா, 28 கிலோ பருப்பு கிடைக்கும். இதை ரோட்டரியில கொடுத்து ஆட்டினா, 13 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். இயற்கை முறையில் உற்பத்தி செஞ்ச கடலை எண்ணெய்ங் கறதுனால, லிட்டருக்கு 250 ரூபாய் வீதம், 13 லிட்டருக்கு 3,250 ரூபாய் விலை கிடைக்கும். 15 கிலோ கடலைப் புண்ணாக்கோட விலைமதிப்பு 675 ரூபாய். ஆக, ஒரு மூட்டைக் கடலையில இருந்து, மொத்தம் 3,925 வருமானம் கிடைக்கும். அரை ஏக்கர் கடலைச் சாகுபடி மூலம் 66,725 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுல சாகுபடி செலவு, எண்ணெய் ஆட்டும் கூலி, 24,250 ரூபாய் போக, மீதி 42,475 ரூபாய் லாபமாக் கையில கிடைக்கும். கடலை ஆயிஞ்ச பிறகு, கொடியைக் காய வச்சு, உலர் தீவனமா ஆடு, மாடுகளுக்குக் கொடுப்போம். இது சத்தான தீவனம், இதை விரும்பிச் சாப்பிடும்’’ என்றார்.

தொடர்புக்கு, முருகானந்தம்,

செல்போன்: 97873 50099.

இப்படித்தான் நிலக்கடலை சாகுபடி

அரை ஏக்கரில் குத்துக்கடலை சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து முருகானந்தம் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக...

நிலக்கடலை சாகுபடி வயல்
நிலக்கடலை சாகுபடி வயல்

நிலக்கடலை சாகுபடி செய்ய வடிகால் வசதி மிகவும் அவசியம். 200 செம்மறி ஆடுகளைக் கொண்டு இரண்டு நாள்கள் கிடை அமைக்க வேண்டும். லேசான ஈரத்தில் நன்கு ஆழமாகப் புழுதி உழவு ஓட்ட வேண்டும். 3 டன் எருவுடன் தலா 2 கிலோ சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, 1 லிட்டர் வேம் (vam) உயிர்பூஞ்சணத்தை கலந்து இட வேண்டும். மீண்டும் உழவு ஓட்டி மண்ணைச் சமப்படுத்தி, குத்துக்குக் குத்து தலா அரையடி இடைவெளியில் ஒரு விதைக்கடலை ஊன்ற வேண்டும். இதற்கு 15 கிலோ விதைக்கடலைத் தேவைப்படும். 15-ம் நாள் 50 லிட்டர் தண்ணீரில் 1.5 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள், 50 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மீன் அமிலம், 500 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

25-ம் நாள் களையெடுத்து, பாசனநீரில் அமுதக்கரைசல் கலந்து விட வேண்டும். 30 நாள்களில் 100 கிலோ கனஜீவாமிர்தம் தூவ வேண்டும். 35-ம் நாள் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். 40-ம் நாள், 50 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டிக் கலந்து தெளிக்க வேண்டும். பத்து நாள்களுக்கு ஒரு முறை பாசன நீரில் 200 லிட்டர் அமுதக்கரைசல் கொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism