Published:Updated:

இயற்கை கொய்யா... ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.4,81,000... நேரடி விற்பனையில் அசத்தல் லாபம்!

கொய்யா
பிரீமியம் ஸ்டோரி
கொய்யா

மகசூல்

இயற்கை கொய்யா... ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.4,81,000... நேரடி விற்பனையில் அசத்தல் லாபம்!

மகசூல்

Published:Updated:
கொய்யா
பிரீமியம் ஸ்டோரி
கொய்யா

தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்தப் பழத் தோட்டம். கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சப்போட்டா எனப் பல வகையான மரங்கள், தனித் தனித் தொகுப்பாகப் பயிர் செய்யப் பட்டுள்ளன. இங்கு ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்யா தற்போது காய்ப்பில் உள்ளது. இத்தோட்டத்தின் உரிமையாளரான இளம் விவசாயி இனிகோ, இங்கு இயற்கை முறையில் கொய்யா உற்பத்தி செய்வதாலும், விளையும் காய்களை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்வதாலும், அபரிமிதமான லாபம் பார்த்து வருகிறார்.

கொய்யாவுடன் இனிகோ
கொய்யாவுடன் இனிகோ

ஒரு பகல்பொழுதில் இவரின் தோட்டத் துக்குச் சென்றோம். இடு்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இனிகோ, மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்று தோட்டத் துக்குள் அழைத்துச் சென்றார். கொய்யா மரங்களில் இலைகள் பசுமையாகக் காட்சி அளித்தன. ஏராளமான காய்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன. இவற்றை நாம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘‘15 - 20 நாளுக்கு ஒரு தடவைதான் தண்ணி கொடுக்குறேன். என்னதான் வெயில் வாட்டி யெடுத்தாலும், என்னோட கொய்யா மரங்கள்ல, கொஞ்சம்கூட வாட்டமே தெரியாது. குறிப்பா, இலைகள்ல எப்பவும் பசுமை நிலைச்சிருக்கு. காய்களும் நிறைஞ் சிருக்கு. கடல் மீன்கள்ல செஞ்ச மீன் அமிலம், தசகவ்யா, குணபம் பயன்படுத்துறதுனால, இங்கவுள்ள கொய்யா மரங்கள் நல்லா ஊக்கமா வளர்ந்து, வெற்றிகரமான விளைச்சல் கொடுக்குது’’ என்றவர்,

மாடுகளுடன்
மாடுகளுடன்

ஒரு பழத்தைப் பறித்து, ‘‘இதைச் சாப்பிட்டுப் பாருங்க. இதோட சுவையே தனி. கடைகள்ல நீங்க வாங்கிச் சாப்பிடக்கூடிய கொய்யாவுல எல்லாம் இந்தளவுக்குச் சுவை இருக்காது. இதனாலதான் என்னோட கொய்யாவுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சந்தை விலை குறைவா இருந்தாலும், அதிகமா இருந்தாலும் அதைக் கணக்குல எடுத்துக் குறதில்லை. என்னோட கொய்யாவுக்கு எப்பவும் ஒரே விலைதான். கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். நானே ஒரு விற்பனை நிலையம் நடத்துறேன். அங்க வந்து என்னோட வாடிக்கையாளர்கள் வாங்கிக்கிட்டு போவாங்க. போன் பண்ணி கேட்கக்கூடியங்களுக்கு அவங்க வீட்டுக்கே போய் கொய்யா கொடுத்துட்டு வருவேன். என்னோட கொய்யாவுல இனிப்புச்சுவை அதிகமா இருக்குறதோடு மட்டுமல்லாம, சாப்பிடுறதுக்குக் கொஞ்சம் மென்மையாவும் இருக்கும். இதனால் குழந்தைங்களும்கூட விரும்பி சாப்பிடுறாங்க’’ என உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

கொய்யாத் தோட்டத்தில் இனிகோ
கொய்யாத் தோட்டத்தில் இனிகோ

‘‘என்னோட அப்பா ராணுவத்துல வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நான் பி.இ. முடிச் சிட்டு, ஒரு தனியார் நிறுவனத்துல சில வருஷங்கள் வேலை பார்த்தேன். பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்தால, விவசாயியா மாறி, 2015-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். என் அப்பா ராணுவத்துல இருந்து ஓய்வுபெற்ற பிறகு, இந்த நிலத்தை வாங்கிப்போட்டாரு. ஆனால், இங்க தண்ணீர் வசதி இல்லாததால பல வருஷங்களா, இந்த நிலம் தரிசாவே கிடந்துச்சு.

எலுமிச்சை
எலுமிச்சை

இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்து, 2014-ம் வருஷம் ஆழ்துளைக் கிணறு அமைச்சு, தர்பூசணி, காய்கறிகள் சாகுபடி செஞ்சேன். இலவச மின்சாரம் கிடைக்காததால, தண்ணீருக்கு நிறைய செலவு செய்ய வேண்டியதா இருந்துச்சு. இது வறட்சியான பூமி. தர்பூசணி, காய்கறிகள் மாதிரியான பயிர்களுக்கு 2 நாள்களுக்கு ஒரு தடவை தண்ணி கொடுக்கலைனா, பயிர்களைக் காப்பாத்த முடியாது. களை யெடுக்க, காய்கள் பறிக்க, வேலையாள்களுக்கும் தட்டுப்பாடா இருந்துச்சு. இந்தச் சூழ்நிலையில தான், 2016-ம் வருஷம் பழ மரங்கள் சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். இதுக்குத் தண்ணி அதிகம் தேவைப்படாது. வேலையாள்களும் அதிகமா தேவைப்பட மாட்டாங்க. ஒரு ஏக்கர்ல கொய்யா, மீதி பரப்புல நெல்லி, எலுமிச்சை, மா, சப்போட்டா மரங்கள்... அதைத் தவிர மாட்டுக் கொட்டகை, கோழிக் கொடாப்பு, இயற்கை இடுபொருள்கள் தயாரிக்குறதுக்கான அறை இருக்கு’’ என்றவர், கொய்யா சாகுபடி அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

நெல்லி
நெல்லி

அதிக இடைவெளி... அதிக மகசூல்!

‘‘லக்னோ-49, அலகாபாத், பனாரஸ்... இந்த மூன்று ரகங்களும் இங்க சாகுபடி செஞ்சிருக் கேன். இந்த ஒரு ஏக்கர்ல மொத்தம் 170 மரங்கள் இருக்கு. தலா 15 அடி இடைவெளி விட்டு, கன்று நடவு செஞ்சேன். வழக்கமா கொய்யா சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் 8 - 10 அடிதான் இடைவெளி விடுவாங்க. ஆனா, நான் அதிகமா இடைவெளி விட்டிருக்கிறதுனால, சூரிய வெளிச்சம், காற்றோட்டம் நல்லா கிடைக்குது. இதனால் இங்கவுள்ள கொய்யா மரங்கள் நல்லா வளர்ந்து, அதிக எண்ணிக்கையில காய்கள் கொடுக்குது. டிராக்டர் மூலம் உழவு ஓட்டவும் வசதியா இருக்கு. ஆள்கள் மூலம் களைகள் பறிக்கவும் வசதியா இருக்கு.

கடல் மீன்களில் மீன் அமிலம்

20 நாள்களுக்கு ஒரு தடவை, 150 லிட்டர் தண்ணில, தலா 750 மி.லி தசகவ்யா, மீன் அமிலம், குணபம், மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்கிறேன். இதுக்குக் கண்கூடான பலன்கள் தெரியும். மரங்கள் நல்லா செழிப்பா வளர்ந்து, அதிக எண்ணிக்கையில கிளைகள் பரப்பி, நிறைவான மகசூல் கொடுக்குது. குறிப்பா, மீன் அமிலம் கொடுக்குறதுனால, இலைகள்ல எப்பவும் பசுமை படலம் படர்ந் திருக்கு. மீன் அமிலம் தயாரிக்க, வழக்கமா எல்லாரும் மீன் மார்க்கெட்ல கிடைக்கக் கூடிய மீன் கழிவுகளைத்தான் வாங்கிக்கிட்டு வந்து பயன்படுத்துவாங்க. ஆரம்பத்துல நானும் அது மாதிரிதான் செஞ்சுகிட்டு இருந்தேன். மீன் மார்க்கெட்ல பெரும்பாலும் வளர்ப்பு மீன்களோட கழிவுகள்தான் கிடைக்கும். அதுமட்டுமல்லாம, அந்த மீன்களோட கழிவுகளை மட்டுமே பயன் படுத்தி, மீன் அமிலம் தயாரிக்குறப்ப, அதோட வீரியம் குறைவா இருக்கிறதா என் அனுபவத்துல உணர்ந்திருக்கேன். அதனால தான், நான், மலிவான விலையில கிடைக்கக் கூடிய கடல்மீன்களை முழுசாவே வாங்கிக் கிட்டு வந்து மீன் அமிலம் தயாரிக்கப் பயன்படுத்துறேன். பொதுவாகவே, வளர்ப்பு மீன்களைவிட, கடல்மீன்கள்ல தன்மை வேறு மாதிரி இருக்கும். அதுவும் நான் முழு மீன்களா பயன்படுத்துறதுனால, வீரியம் அதிகமா இருக்கு, அடிபட்ட மீன்கள், நாலஞ்சு நாள்கள் பழசான மீன்கள், ஒரு கிலோ 30 ரூபாய்னு கிடைக்குது.

கோழிகள்
கோழிகள்

களைகளைக் கட்டுப்படுத்தும் நாட்டுக்கோழி எச்சம்

மரத்துக்கு மரம் அதிக இடைவெளி விட்டுருக்குறதுனால, இங்க அதிகமா களைகளை மண்டிக்கிட்டே இருக்கும். இதைக் கட்டுப்படுத்தினால்தான், கொய்யா வோட வளர்ச்சி நல்லா இருக்கும். களை யெடுக்குற செலவை குறைக்க, என்னோட நாட்டுக்கோழிகள் ரொம்பவே ஒத்தாசையா இருக்கு. 100 நாட்டுக்கோழிகள் வளர்க்குறேன். பகல் நேரங்கள்ல தோட்டத்துல மேய விடுறேன். இதோட எச்சங்கள் விழுந்து, அடுத்த சில வாரங்கள்ல களைகள் பட்டுப் போயிடுது. கோழிக் கொடாப்புல கிடைக்கக் கூடிய எச்சங்களை ரெண்டு நாள்களுக்கு ஒரு தடவை கூட்டி எடுத்துக்கிட்டு வந்து, கொய்யா மரத்தை சுத்தியும் போடுவேன். களைகள் கட்டுப்படுத்தப்படுறதோடு, அந்த எச்சங்கள் மட்கி, மண்ணுக்கு உரமாயிடுது. கோழி எச்சத்தால, கொய்யா மரங்களுக்கு எந்த ஒரு சின்ன பாதிப்பும் ஏற்படுறதில்லை, இன்னும் சொல்லப்போனா, கொய்யாவோட வளர்ச்சிக்கு இதுவும் உறுதுணையா இருக்கு.

மாடுகள்
மாடுகள்

வருமானம்

கொய்யா நட்டு 6 வருஷம் ஆகுது. நட்ட 6 மாசத்துலயே காய்ப்புக்கு வர ஆரம்பிச்சிடுச்சு. அடுத்த ஒரு வருஷம் வரைக்கும் பிஞ்சுகளைக் கிள்ளி, உதிர்த்து விட்டுக்கிட்டே இருந்தேன். அதுக்கு பிறகுதான் காய்கள் பறிக்க ஆரம்பிச் சேன். மூணாவது வருஷத்துல இருந்துதான் விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது. வழக்கமா ஜனவரி, பிப்ரவரி மாசங்கள்ல காய்ப்பு அதிகமா இருக்கும். அதுக்கு பிறகு படிப்படியா மகசூல் குறைய ஆரம்பிக்கும். ஜனவரியில இருந்து மே மாசம் வரைக்கும் ஒரு மரத்துக்கு 40 கிலோ வீதம் காய்கள் கிடைக்கும். ஜூன் மாசம் மறுபடியும் மகசூல் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாசம் 15-ம் தேதி வரைக்கும் ஒரு மரத்துக்கு 30 கிலோ காய்கள் கிடைக்கும். அதுக்குப் பிறகு, காய்கள் ஓய ஆரம்பிச்சிடும். எந்தெந்த கிளைகள்ல காய்கள் ஓய்ஞ்சிருக்கோ, அந்தக் கிளைகளோட நுனிப்பகுதியை 1 அடி நீளத்துக்கு வெட்டி கவாத்து பண்ணிடுவோம். அதுக்குப் பிறகு, மகசூல் கிடைக்காது. டிசம்பர்ல கடைசியில மறுபடியும் பிஞ்சு விட ஆரம்பிக்கும். ஒரு வருஷத்துக்கு ஒரு மரத்துல இருந்து குறைந்தபட்சம் 70 கிலோ காய்கள் மகசூல் கிடைக்குது. 170 மரங்கள்ல இருந்து, 11,900 கிலோ மகசூல் கிடைக்குது. இந்தப் பகுதிகள்ல கிளிகள் அதிகமா இருக்கு. அதுங்க கடிச்சதுனால சுமார் 30 சதவிகித காய்கள் சேதமடைஞ்சிருக்கும். அந்தக் காய்களை விற்பனை செய்ய முடியாது. அதைத் துண்டுகளா நறுக்கி, கோழிகளுக்குப் போட்டுடுவோம். 9,000 கிலோ காய்கள் விற்பனைக்கு உகந்ததா இருக்கும்.

அறுவடையான கொய்யாவுடன் இனிகோ
அறுவடையான கொய்யாவுடன் இனிகோ

ஒரு கிலோ 60 ரூபாய்னு நேரடியா வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி பண்ணிடுறேன். இப்படி விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 5,40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லாச் செலவும் போக, 4,81,000 ரூபாய் நிகர லாபமா கையில நிக்குது. என்னோட தோட்டத்துல விளையக்கூடிய கொய்யாவை நானே நேரடியா மக்கள்கிட்ட விற்பனை செய்ற துனாலதான் இந்தளவுக்கு லாபம் பார்க்க முடியுது. வியாபாரிகளையோ, இடைத் தரகர்களையோ நான் சார்ந்திருந்தா, இதுல பெரும்பகுதி தொகை, அவங்களுக்குப் போயிடும். கடுமையா உழைச்சு, நிறைவா லாபம் பார்க்குறது, மனசுக்கு சந்தோஷமா இருக்கு’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு, இனிகோ,

செல்போன்: 96004 62036.

இப்படித்தான் இயற்கை கொய்யா சாகுபடி

ஒரு ஏக்கரில் கொய்யா சாகுபடி குறித்து இனிகோ சொன்னவை இங்கே பாடமாக...

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 2 சால் உழவு ஓட்டி, தலா 15 அடி இடைவெளியில் 3 அடி ஆழம், 3 அடி சுற்றளவு கொண்ட குழி எடுக்க வேண்டும். நிலத்தின் மேல் மண்ணைக் கொண்டு, குழியை நிரப்ப வேண்டும். அதனுடன் 20 கிலோ மாட்டு எரு கலந்துகொள்ள வேண்டும். குழியில் தண்ணீர் ஊற்றி, கன்று நடவு செய்ய வேண்டும். 6 மாத வயதுடைய கன்றுகளை நடவு செய்தால், வேகமான வளர்ச்சி இருக்கும். 4 - 6 மாதங்களில் பிஞ்சு விடத் தொடங்கும். அடுத்த ஒரு வருடம் வரை பிஞ்சுகளைக் கிள்ளி விட வேண்டும்.

கொய்யாவுடன் இனிகோ
கொய்யாவுடன் இனிகோ

20 நாள்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில் தலா 250 மி.லி தசகவ்யா, மீன் அமிலம், குணபம், மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 20 கிலோ ஊட்டமேற்றிய எரு போட்டு, மண்வெட்டியால், கொத்திவிட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மரத்துக்கு 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் ஜீவார்மிதம் கலந்து ஊற்ற வேண்டும். மண்ணைப் பொலபொலப்பாக்கவும், களைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும், ஆண்டுக்கு இரண்டு முறை டிராக்டர் மூலம் உழவு ஓட்ட வேண்டும். அவ்வப்போது கைகளாலும் களைகளைப் பிடுங்கி, மரத்தைச் சுற்றிலும் போட வேண்டும். காய்ப்பு ஓய்ந்த பிறகு, கிளைகளின் நுனிப்பகுதியை ஓர் அடி நீளத்துக்கு வெட்டி கவாத்துச் செய்ய வேண்டும்.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

மாவுப்பூச்சித் தாக்குதல்

‘‘மாவுப்பூச்சித்தாக்குதலை கட்டுப் படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்குறோம். இதைத் தனியா தெளிச்சா, கூடுதல் செலவாகும். அதனால, 20 நாள்களுக்கு ஒரு தசகவ்யா, மீன் அமிலம், குணபத் தோடு... மூலிகை பூச்சிவிரட்டியை சேர்த்து தெளிக்குறோம். இது மாவுப்பூச்சி மட்டுமல்லாம, மற்ற பூச்சி, நோய்த் தாக்குதல்களையும் கட்டுப்படுத்துது’’ என்கிறார் இனிகோ.