Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.2.45 லட்சம்... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி!

அறுவடையான செம்பருத்திப் பூக்களுடன் சாந்தி சுப்புலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான செம்பருத்திப் பூக்களுடன் சாந்தி சுப்புலெட்சுமி

மகசூல்

ஒரு ஏக்கர்... ரூ.2.45 லட்சம்... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி!

மகசூல்

Published:Updated:
அறுவடையான செம்பருத்திப் பூக்களுடன் சாந்தி சுப்புலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான செம்பருத்திப் பூக்களுடன் சாந்தி சுப்புலெட்சுமி

விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நள்ளி என்ற கிராமம். இக்கிராமத்தின் தொடக்கத்திலேயே செழிப்பாகக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது, சாந்தி சுப்புலெட்சுமியின் செம்பருத்தித் தோட்டம்.

ஒரு பகல்பொழுதில் இத்தோட்டத்துக்குச் சென்றோம். காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த செம்பருத்திப் பூக்களின் அழகும் மணமும், நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தியது. பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த சாந்தி சுப்புலெட்சுமி, மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று, வெயிலுக்கு இதமாக நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்து உபசரித்தார். பூக்களைப் பறித்துக்கொண்டே நம்மிடம் பேசியவர், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிதான் என்னோட சொந்த ஊரு. பி.எஸ்ஸி வனவியல் முடிச்சிருக்கேன். வனவியல் விரிவாக்க அலுவலகத்துல தற்காலிக ஊழியராக 10 வருஷம் வேலை பார்த்தேன்.

அறுவடையான செம்பருத்திப் பூக்களுடன் சாந்தி சுப்புலெட்சுமி
அறுவடையான செம்பருத்திப் பூக்களுடன் சாந்தி சுப்புலெட்சுமி

2005-ம் வருஷம் இயற்கை விவசாயப் பயிற்சிக்காக ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நம்மாழ்வார் ஐயாவை அழைச்சிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு... மூலிகை சாகுபடியிலயும், அதை மதிப்புக்கூட்டுறதுலயும் அனுபவம் கொண்ட கருப்பையாவும் வந்திருந்தார். அவர்தான் செம்பருத்தி சாகுபடி செஞ்சிப் பாருங்கனு எனக்கு யோசனை சொன்னாரு. ஆனா, எனக்குப் போதிய நேரம் இல்லாததுனால அப்போதைக்கு செம்பருத்தி சாகுபடியில இறங்க முடியலை. எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்துல, 2015-ம் வருஷம் வரைக்கும் என்னோட அம்மா அப்பா ரசாயன முறையில மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தாங்க. நான் பசுமை விகடனோட வாசகர். இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு எங்க அப்பா அம்மாவை வற்புறுத்திக்கிட்டே இருந்தேன். 2016-ம் வருஷம் இயற்கை விவசாயத்துக்கு மாறினாங்க. ஆனா, வழக்கமா சாகுபடி செஞ்சுகிட்டு இருந்த அதே மக்காச்சோளம், பருத்தி, மிளகாய்தான் பயிர் பண்ணிகிட்டு இருந்தாங்க. வேற ஏதாவது புதுசா பயிர் பண்ணிப் பார்க்கணும்னு நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இந்தச் சூழ்நிலையிலதான் 2018-ம் வருஷம் பசுமை விகடன்ல வெளியான செம்பருத்தி சாகுபடி பத்தின கட்டுரை என் மனசுல ஈர்ப்பை ஏற்படுத்திச்சு. அந்தக் கட்டுரையில தன்னோட செம்பருத்தி சாகுபடி அனுபவத்தைப் பத்தி பார்த்தசாரதிங்கற விவசாயி விரிவா பேசியிருந்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பக்கத்துல குளத்துள்வாய்பட்டி கிராமத்துல உள்ள பார்த்தசாரதியோட செம்பருத்தி தோட்டத்தை நேர்ல போயி பார்த்தேன். செம்பருத்தி சாகுபடி செய்றதுக்கான தொழிநுட்பம், இதுக்கான விற்பனை வாய்ப்புகள்னு விவசாயி பார்த்தசாரதி எனக்கு நிறைய யோசனைகள் சொன்னாரு. செம்பருத்தி சாகுபடி மூலம் உத்தரவாதமான லாபம் கிடைக்குங்கற நம்பிக்கை வந்துச்சு. உடனடியா இதுல இறங்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா சில சொந்த காரணங்களால தள்ளிப்போயிக்கிட்டே இருந்துச்சு. போன வருஷம்தான் என்னோட விருப்பத்தை நிறைவேத்த வாய்ப்பு அமைஞ்சது. எங்களோட நிலத்துல பல தானிய விதைப்பு செஞ்சு மண்ணை நல்லா வளப்படுத்திக் கடந்த ஆகஸ்ட் மாசம் செம்பருத்தி பயிர் பண்ணினேன். இப்ப முழுநேர விவசாயியா மாறிட்டேன்.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

எங்க குடும்பத்துக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர் பரப்புல செம்பருத்தி பயிர் பண்ணினேன்.

கடந்த 6 மாசமா, தொடர்ச்சியா வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. மீதி மூணு ஏக்கர்ல மருதாணி, துளசி, ஆடாதொடை சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன சாந்தி சுப்புலெட்சுமி, செம்பருத்தி சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து விவரித்தார்.

“ஒரு ஏக்கர் பரப்புல மொத்தம் 1,800 செம்பருத்தி செடிகள் இருக்கு. கடந்த 6 மாசமா பூ பறிச்சுகிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 1,700 கிலோ பூ கிடைச்சிருக்கு. அதை நிழல்ல உலர வச்சி பதப்படுத்தியது மூலமா, 340 கிலோ உலர்ந்த பூ கிடைச்சிருக்கு. ஒரு கிலோவுக்குச் சராசரியா 500 ரூபாய் வீதம் மொத்தம் 1,70,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சிருக்கு. இன்னும் மூணு மாசம் வரைக்கும் பூ பறிக்கலாம். இன்னும் 150 கிலோ உலர்பூ கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அந்த வகையில 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் 2,45,000 ரூபாய் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன். இந்த 6 மாசத்துக்கான பராமரிப்பு, பறிப்பு கூலி எல்லாம் சேர்த்து 44,000 ரூபாய் செலவாயிருக்கு. அதுபோக 2,01,000 லாபமா கிடைக்கும். அதுக்குப் பிறகு கவாத்து பண்ணணும். அடுத்த மூணு மாசம் கழிச்சி மறுபடியும் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியா 9 மாசம் வருமானம் பார்க்கலாம்.

உலர வைத்த பூக்கள்
உலர வைத்த பூக்கள்

உலர் பூவை கோயம்புத்தூர். சென்னை, டெல்லியில இருக்கக்கூடிய சித்த மருத்துவக் கம்பெனிகளுக்கும், ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி நிலையங்களுக்கும் நானே நேரடியாக விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதுபோக, உள்ளூர்ல உள்ள ஒரு சில சித்த மருத்துவர்களும் என்கிட்ட இருந்து உலர் செம்பருத்திப் பூவை வாங்குறாங்க. மூலிகை தேநீர் பொடி, இயற்கை கூந்தலுக்கான இயற்கை பொடி, செம்பருத்தி பானம், செம்பருத்தி ஜாம்னு மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுக்கும் முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன். அதிக பராமரிப்பு இல்லாமலே, நிறைவான வருமானத்தைக் கொடுக்கக்கூடியது செம்பருத்தி” என்றபடியே செம்பருத்திப் பூக்களைக் கைநிறைய அள்ளிக்காட்டினார்.


தொடர்புக்கு,

சாந்தி சுப்புலெட்சுமி,

செல்போன்: 94428 35932

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் பரப்பில் செம்பருத்தி சாகுபடி செய்ய சாந்தி சுப்புலெட்சுமி சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

செம்பருத்தித் தோட்டம்
செம்பருத்தித் தோட்டம்

செம்பருத்தி சாகுபடி செய்ய கரிசல் மண் ஏற்றது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகப் பயிர் செய்தால் கன்றுகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 4 அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி விட்டு, 1 அடி ஆழம், 1 அடி சுற்றளவு கொண்ட குழி எடுக்க வேண்டும். குழி எடுத்த பிறகு சொட்டுநீர் பாசனம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ தொழுவுரத்துடன் 500 கிராம் மண்புழுவுரம், 50 கிராம் வேப்பம்பிண்ணாக்கு கலந்து அடியுரமாக இட வேண்டும். குழியைப் பாதி அளவுக்கு மண்ணால் நிரப்பி 2 நாள்கள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 3-ம் நாள் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 2-3 மாத வயதுடைய கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

உலர வைக்கும் கூடம்
உலர வைக்கும் கூடம்

3-ம் மாதம் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்து விட வேண்டும். அடுத்த 15 நாள்கள் கழித்து, 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் வேஸ்ட் டி கம்போஸர் கரைசல், 2 கிலோ நாட்டுச்சர்க்கரை கலந்து 2 நாள்கள் வரை வைத்திருந்து பாசனநீருடன் கலந்து விட வேண்டும். அடுத்த 15 நாள்கள் கழித்து 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசனநீருடன் கலந்து விட வேண்டும். இது போல் 15 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இக்கரைசல்களைச் சொட்டுநீர் பாசனம் மூலம் கொடுக்கும் குழாய்களில் அடைப்பு ஏற்படாத வகையில் நன்கு வடிகட்டி கொடுக்க வேண்டும். பொதுவாக மழைக்காலத்தில் செம்பருத்திச் செடிகளின் இலை, தண்டுகளில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

4-ம் மாதம் களை எடுக்க வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்கள் தென்பட்டால் 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தெளிக்க வேண்டும். செடிகள் சற்றுச் சுணக்கமாக இருந்தால் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை.

செம்பருத்திப் பூக்கள்
செம்பருத்திப் பூக்கள்

கன்று நடவு செய்ததிலிருந்து 4-ம் மாதம், செடிகளில் ஆங்காங்கே பூக்கள் தென்படும். 6-ம் மாதத்திலிருந்து மகசூல் கிடைக்கும். தொடர்ச்சியாக 9 மாதங்கள் வரை பூ பறிக்கலாம். காலையில் அதிகபட்சமாக 10 மணிக்குள் பூக்களைப் பறித்துவிடுவது நல்லது. ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் நெருங்கும்போது, செடிகளைக் கவாத்து செய்ய வேண்டும். 1 அடி உயரம் வரை விட்டுவிட்டு செடிகளைக் கவாத்துச் செய்ய வேண்டும். அடுத்த மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் பூக்கள் கிடைக்கத் தொடங்கும்.

கவாத்து செய்வது மிகவும் அவசியம்

ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக மகசூல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவாத்து செய்யாமல் இருந்தால், பலவிதமான பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். செடிகள் அடர்த்தியாக வளரும்போது, காற்றோட்டம், சூரிய வெளிச்சம் தடைபடும். இதனால் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூக்களின் மகசூலும் வேகமாகக் குறையத் தொடங்கும். செம்பருத்திச் செடிகளை கவாத்து செய்தும், களை எடுத்தும், இடு்பொருள்கள் கொடுத்தும் முறையாகப் பராமரித்து வந்தால் 10 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.

உலர வைத்த பூக்கள்
உலர வைத்த பூக்கள்

நிழல் காய்ச்சல்

செடிகளில் இருந்து பறித்த செம்பருத்திப் பூக்களை, பிளாஸ்டிக் தாளில் பரப்பி சோலார் டிரையரில் 3 மணி நேரம் உலர்த்த வேண்டும். பின்னர், நிழலான பகுதியிலோ தனி அறையிலோ ஒரு நாள் முழுவதும் காய வைக்க வேண்டும். சோலார் டிரையர் இல்லாதவர்கள் செம்பருத்திப் பூக்களை 2-3 நாள்கள் வரை நிழலில் உலர்த்தி, அவற்றில் உள்ள ஈரப்பதத்தைக் காய வைக்கலாம். சூரிய ஒளி நேரடியாகப் படுமாறு காய வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பூக்களில் உள்ள சத்துகள் குறைந்துவிடும். ஏற்கெனவே சொன்னது போல் முறையாக நிழலில் உலர்த்திக் காய வைக்கப்பட்ட செம்பருத்தி பூக்கள் பீட்ரூட் காய் நிறத்துக்கு மாறிவிடும். இவற்றை பிளாஸ்டிக் சாக்குப் பைகளுக்குள் போட்டு வைக்கலாம். பிளாஸ்டிக் பைகளில் உலர் பூக்களை இறுக்கமாக அமுக்கி வைக்காமல், உதிரியாக இருப்பது போல் வைத்து காற்று புகாத வகையில் சாக்கு பையின் வாய் பகுதியைக் கட்டி வைக்க வேண்டும். உலர வைக்கப்பட்ட செம்பருத்தி பூக்களை 8 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். பூஞ்சணம் பரவுவதைத் தவிர்க்க தண்ணீர், குளிர்ந்த காற்றுப் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பூஞ்சை பரவினால் அந்தப் பூக்கள், விற்பனைக்குப் பயன்படாது.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்

கரைசல் தயாரிப்பு


இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைத் தலா 500 கிராம் எடுத்து அவற்றை உரலில் இடித்து 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 5 நாள்கள் வரை ஊற வைத்து வடிகட்டினால் கரைசல் தயார்.

முருகேசன்
முருகேசன்

உலர் செம்பருத்தி கிலோ ரூ.500

உலர் செம்பருத்திப் பூக்களை கோவையிலுள்ள ‘ஜனனி ஹெர்பல்ஸ்’ என்ற நிறுவனத்தினர் வாங்கி வருகிறார்கள். இதன் உரிமையாளரான முருகேசனிடம் பேசியபோது, ‘‘உலர் செம்பருத்திப் பூக்களுக்கு... ஒரு கிலோவுக்கு 500-750 ரூபாய் விலை தருகிறோம். மழைக்காலங்களில் தட்டுப்பாடாக இருக்கும்போது ஒரு கிலோவுக்கு 700- 750 ரூபாய் கொடுப்போம். ரசாயன முறையில் சாகுபடி செய்யும் பூக்களை விட, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் செம்பருத்திப் பூக்கள் தரமானதாக உள்ளது. உலர் செம்பருத்தியை மூலப்பொருளாகவும் உப பொருளாகவும் கொண்டு... டீ தூள், மருந்துப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், கூந்தல் தைலம், ஜாம், உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தற்போது செம்பருத்திக்கான தேவை அதிகரித்துள்ளது” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 89032 05684.