Published:Updated:

காய்கறிகள், கால்நடை வளர்ப்பு... 6 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் லாபம்!

காய்கறிகள், கால்நடை வளர்ப்பு...
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள், கால்நடை வளர்ப்பு... ( நா.ராஜமுருகன் )

மகசூல்

காய்கறிகள், கால்நடை வளர்ப்பு... 6 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் லாபம்!

மகசூல்

Published:Updated:
காய்கறிகள், கால்நடை வளர்ப்பு...
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள், கால்நடை வளர்ப்பு... ( நா.ராஜமுருகன் )

'ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று சிலாகிக்கும் அளவுக்கு, 6 ஏக்கர் நிலத்தில் வருடம் முழுக்கக் காய்கறி, மரவள்ளி, நிலக்கடலை, சோளம், மஞ்சள் என்று விவசாயம் செய்வதுடன் ஆடு, மாடு, வாத்து போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்.

ஒரு காலைவேளையில் அவரது பண்ணையைப் பார்வையிடுவதற்காகச் சென்றோம். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில் இருக்கிறது, சரவணனின் ஒருங்கிணைந்த பண்ணையம். மொத்தமுள்ள ஆறரை ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கரில் வீடு மற்றும் அது தொடர் பானவை இருக்கின்றன. மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் சுழற்சி முறையில் வருடம் முழுக்கக் காய்கறி அறுவடை செய்து வருகிறார். அதோடு, நிலத்தைச் சுற்றி செவ்வரளி உயிர்வேலி அமைத்துப் பண்ணையைச் சிறப்பாகக் கட்டமைத்திருக்கிறார்.

மஞ்சள் வயலில் பராமரிப்பு பணியில் இருந்த சரவணன், புன்சிரிப்புடன் வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

வயலில் சரவணன்
வயலில் சரவணன்


இயற்கைக்கு மாற்றிய மண் பரிசோதனை

“எங்களுக்கு பூர்வீகத் தொழில் விவசாயம் தான். பத்தாவது வரை படிச்சிட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். வாழை, மஞ்சள்னு ரசாயன விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தேன். 2007-ம் வருஷம் கடுமையான வறட்சி. மண் பரிசோதனை செஞ்சு, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்னு, கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்குப் போனேன். அவங்க மண்ணைச் சோதனை பண்ணி பார்த்துட்டு, ‘மண்ணுல பி.ஹெச் அளவும், தண்ணியில உப்போட அளவும் அதிகமா இருக்கு’னு சொன்னாங்க. ரசாயன உரங்களோட பாதிப்பை அப்பத்தான் உணர்ந்தேன். இனிமேல் இயற்கை விவசாயத்துக்கு மாறலாம்னு முடிவுக்கு வந்தேன்.

பாதை காட்டிய அமைப்புகள்

2008-ம் வருஷம், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல பயிற்சி எடுத்துக்கிட்டு, வேளாண்மைத்துறை உதவியோடு, மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். மண்ணோட தன்மையை மாத்துறதுக்காக, 20 அடி நீளம், 10 அடி அகலம், 6 அடி ஆழத்துல ஒரு குட்டை வெட்டினேன். மாடுகள் கட்டியிருக்கிற கட்டுத்தறியிலிருந்து போற கழிவுநீரை அந்தக் குட்டையில தேக்கி வெச்சேன். கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாறினாலும் முழுமையா மாறினது 2014-ம் வருஷம்தான்.இந்த விஷயத்துல திருச்சி வானொலி, பசுமை விகடன், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், நாமக்கல் கே.வி.கே, தோட்டக்கலைத்துறைனு பலதரப்பும் எனக்கு உறுதுணையாக இருந்தாங்க’’ என்றவர் தன்னிடமுள்ள கால்நடைகள் பட்டியலைப் பகிர்ந்துகொண்டார்.

நிலக்கடலை வயலில் சரவணன்
நிலக்கடலை வயலில் சரவணன்


9 மாடுகள்... 31 ஆடுகள்

‘‘நாமக்கல் கே.வி.கே-யைப் பின்பற்றி, 2011-ம் வருஷம் பரண்மேல் ஆடு வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட 3 கிர், 2 காங்கிரேஜ், 4 தார்பார்க்கர் மாடுகள்னு மொத்தம் 9 இருக்குது. நாட்டு ஆடுகள் 10, அதுகளோட குட்டிகள் 20, 1 தலைச்சேரி கிடானு மொத்தம் 31 ஆடுகள் இருக்கு. தவிர, நாட்டுக்கோழிகள் 10, சேவல் 1, குஞ்சுகள் 30-னு மொத்தம் 41 கோழிகள் இருக்குது. அதோட, 10 மணிலா வாத்துகள், 1 வெடை வாத்துனு 11 வாத்துகள் இருக்குது.

மாடுகளுக்குத் தீவனமா கொடுக்க, வேலிமசால், கோ.எஃப்.எஸ்.29 தீவனத்தட்டுகள பயிர் செஞ்சேன். ஆரம்பத்துல ஆடுகளுக்கும் அந்தத் தீவனங்களைத்தான் உணவாகக் கொடுத்தேன். பிறகு, நிலக்கடலைக் கொடியை ஆடுகளுக்கும், சோளத்தட்டுகளை மாடுகளுக்கும், தவிடு, பிண்ணாக்கை ரெண்டுக்கும் தீவனமா கொடுக்க ஆரம்பிச்சேன். இதோட ‘ஹைட்ரோபோனிக்’ முறையில மக்காச்சோளத்தை விளைய வெச்சு, கால்நடைகளுக்குக் கொடுத்த ஆரம்பிச்சேன்’’ என்றவர் தற்போதைய சாகுபடி விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘நிலம் சும்மா கிடக்குற நேரத்துல சணப்பை, நரிப்பயறு பயிரிட்டு, 45 நாள்கள்ல மண்ணோடு சேர்த்து உழுதுடுவேன்.’’


சுழற்சி முறையில் பந்தல் சாகுபடி

‘‘புடலை, பீர்க்கன், பாகல் விதைகளை ஒரே தடவை ஊன்றாம, தலா 20 சென்ட் நிலமா பிரிச்சுகிட்டு, 45 நாள்கள் இடைவெளியில ஒவ்வொரு 20 சென்ட் நிலத்துலயும் சுழற்சி முறையில நடவு செய்றேன். இதனால, வருஷம் முழுக்கக் காய்கறி அறுவடை பண்ண முடியுது. இந்த முறை நல்லா கைகொடுத்ததால, கூடுதலாக ஒரு ஏக்கர் நிலத்தில பந்தல் காய்கறிகளை நடவு செஞ்சிருக்கேன். காய்கறிகளுக்குப் பந்தல் அமைக்கத் தோட்டக்கலைத்துறை மூலமாக மானியம் கிடைச்சது. தேவையான உயிர் உரங்களை நாமக்கல் கே.வி.கே வாங்கிக் கொடுத்துச்சு.

2 ஏக்கர் பந்தல் காய்கறிகளுக்குக் கீழே ஒரு ஏக்கர்ல நிலக்கடலை, அரை ஏக்கர்ல உளுந்து, கொண்டைக்கடலைனு சுழற்சி முறையில பயிர் செய்வேன். வாய்ப்பு கிடைக்கும்போது, எள் சாகுபடி செய்வேன். பந்தல் காய்கறிகள் இருக்கிற நிலத்துல, நாலு பக்கமும் 3 அடி அகலத்துக்கு இடம் காலியாக இருக்குற மாதிரி விட்டிருவேன். அந்த இடத்தில், காடைக்கண்ணி, கொள்ளு, சோளம்னு விதைப்பேன். இதனால, அங்கே களைச்செடிகள், புல் வளராது.

மரவள்ளித் தோட்டத்தில் சரவணன்
மரவள்ளித் தோட்டத்தில் சரவணன்


பந்தலுக்குக் கீழே நிலக்கடலை

மீதியிருக்க 4 ஏக்கர்ல சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஒண்ணு இல்லைன்னா ரெண்டு ஏக்கர்ல நிலக்கடலை விதைப்பேன். எல்லாமே சொட்டுநீர்ப்பாசனம்தான்.

வரப்பு ஓரமாகக் கத்திரி, தக்காளி

இந்த 4 ஏக்கர் நிலத்தில நிலக்கடலைச் சாகுபடி நிலத்தைத் தவிர, மீதமுள்ள இடத்தில் மே மாசம் தொடங்கி பிப்ரவரி மாசம் வரைக்கும் மஞ்சள் பயிரிடுவேன். அதை அறுவடை செஞ்சதுக்குப் பிறகு, பிப்ரவரி கடைசியில மரவள்ளி ஊன்றுவேன். மஞ்சள், மரவள்ளி பயிடும்போது, ஊடுபயிராக வரப்பு ஓரமாகக் கத்திரி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, மிளகாய்னு காய்கறிச் செடிகளைப் பயிரிடுவேன். இந்த நிலங்கள்ல பயிர் இல்லாம இருக்கும்போது ஒன்றரை ஏக்கர் நிலத்தில், எள்ளு போடுவேன். தவிர, நிலம் சும்மா கிடக்குற நேரத்துல சணப்பை, நரிப்பயறு பயிரிட்டு, 45 நாள்கள்ல மண்ணோடு சேர்த்து உழுதுடுவேன். இதுதான் என்னோட சாகுபடி முறை’’ என்றவர், தற்போது நிலத்தில் இருக்கும் பயிர்கள் பற்றிப் பேசினார்.

‘‘இப்ப பீர்க்கன், புடலை அறுவடை செய்யுற நிலையில தலா 20 சென்ட்ல இருக்கு. இதைத் தவிர, இன்னும் 20 சென்ட்ல பீர்க்கங்காய் விதைகளை ஊன்றி, 15 நாள்கள் ஆகுது. 4 ஏக்கர் நிலத்துல ஒன்றரை ஏக்கர்ல மஞ்சள், ஒன்றரை ஏக்கர்ல மரவள்ளி, மீதியுள்ள ஒரு ஏக்கர்ல நிலக்கடையை மானாவாரியா விதைச்சிருக்கேன்’’ என்றவர் வரவு, செலவு, லாபக் கணக்குகளை விவரித்தார்.

மாடுகள்
மாடுகள்


காய்கறிகள் மூலம் ரூ.4 லட்சம்

“போன வருஷ கணக்கை வெச்சு, ஒரு வருஷத்துக்கான லாபக் கணக்கைச் சொல்றேன். போன வருஷம் பீர்க்கன் 2,553 கிலோ கிடைச்சது. கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை போச்சு. அந்த வகையில ரூ.79,805 வரை கிடைச்சது. புடலை 4,932 கிலோ மகசூல். கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாச்சு. அந்த வகையில 1,25,043 கிடைச்சது. மரவள்ளி ஒரு ஏக்கர்ல 140 மூட்டைகள் கிடைச்சது. மூட்டை ரூ.500 வீதம், 70,000 கிடைச்சது. நிலக்கடலை 37 மூட்டைகள். அது மூலமா 69,200 ரூபாய் கிடைச்சது. எள்ளு 318 கிலோ கிடைச்சது. கிலோ 125 ரூபாய் விலையில கொடுத்தேன். அது மூலமா 39,750 ரூபாய் கிடைச்சது. 1 ஏக்கர் 24 சென்ட் இடத்தில் மஞ்சள் சாகுபடி செஞ்சதுல, 30 மூட்டைகள் வரை மஞ்சள் கிடைச்சது. அதை, ரூ.2,55,500 ரூபாய்க்கு வித்தேன். பச்சை மிளகாய் மூலம் 4,810 ரூபாய், வரமிளகாய் மூலம் 5,050 ரூபாய் கத்திரி, வெண்டை, தக்காளியில 10,000 ரூபாய் கிடைச்சது. போன வருஷம் காய்கறிச் சாகுபடி மூலமா எனக்கு மொத்தம் 6,59,158 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 2,40,652 ரூபாய் செலவு போக மீதமுள்ள 4,18,506 ரூபாய் லாபமா நின்னுச்சு.

கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு


கால்நடைகள் மூலம் ரூ.78,000

ஆடுகளை கிலோ ரூ.350 இருந்து 400 வரை விற்பனை செஞ்சேன். 12 ஆடுகளை விற்பனை செஞ்சதுல ரூ.57,000 கிடைச்சது. அதுல செலவு ரூ.22,000 போக ரூ.35,000 லாபமாக் கிடைச்சது. மாட்டுப் பால் வருமானம் செலவுக்கே சரியாகிடுது. கிலோ ரூ.350 வீதம் 100 கோழிகளை விற்பனை செஞ்சதுல ரூ.35,000 வரை கிடைச்சது. அதுல செலவு ரூ. 10,000 போக மீதி ரூ. 25,000 லாபம். 35 மணிலா வாத்துகளை கிலோ ரூ.350 விலையில விற்பனை செஞ்சேன். அதுமூலமா ரூ.24,000 வரை கிடைச்சது. அதுல செலவு ரூ.6,000 போக, மீதி 18,000 ரூபாய் லாபம். ஆக, பயிர்கள் மூலமா 4,18,506 ரூபாய், கால்நடை மூலமா 78,000 ரூபாய். மொத்தம் ரூ. 4,96,506 ரூபாய் லாபமாகக் கிடைச்சது’’ என்றவர், நிறைவாக,

“நான் அங்ககச் சான்று வாங்கிட்டேன். இயற்கை முறையில் காய்கறிகளை விளைய வெச்சாலும் அதற்குரிய மதிப்பும் விலையும் கிடைக்கிறதில்ல. அரசு, மக்களிடம் இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தணும்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சரவணன்,

செல்போன்: 94866 92137

பூச்சி, நோய் மேலாண்மை

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து சரவணன் சொல்லியவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.பந்தல் காய்கறிச் செடிகளுக்கு மண்புழு உரத்தை அதிகம் பயன்படுத்தலாம். மண்புழு உரம், எரு, பிண்ணாக்கு ஆகியவற்றைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகக் கொடுக்க வேண்டும். இதற்கு மாடுகளின் சிறுநீரைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். மாதம் 500 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 30 கிலோ சாணியைக் கரைத்து, 5 நாள்கள் ஊற வைக்க வேண்டும். அந்தக் கரைசலைச் சொட்டுநீர் முறையில் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மரவள்ளி, மஞ்சள் பயிர்களுக்குத் தழை, மணிச் சத்துகள் கிடைக்கும். கடலைப் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கைச் சேர்த்து தூளாக்கி, அதை மஞ்சளுக்கு உரமாகத் தூவ வேண்டும். பந்தல் காய்கறிகளுக்கு, 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கை, 200 லிட்டர் தண்ணீரில் 3 நாள்கள் ஊற வைத்து, அதை 15 நாள்களுக்கு ஒருமுறை ஒரு பயிர் வளர்ச்சியூக்கியாக ஊற்ற வேண்டும். தவிர, மஞ்சள், மரவள்ளி, காய்கறிச் செடிகளுக்குச் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மாவிரிடி உயிர் உரங்களைப் பனைவெல்லத்தில் கலந்து, ஆண்டுக்கு 2 முறை சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யாவையும் பயிர்களுக்கு வளர்ச்சியூக்கியாகக் கொடுக்க வேண்டும்.

மஞ்சள்
மஞ்சள்இஞ்சி, மிளகாய், பூண்டு கரைசலைப் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம். வேர்ப்புழு, தண்டுப்புழுக்களை அழிக்க, பவேரியா பேசியானாவையும், காய்ப்புழுக்களை அழிக்க, மெட்ரோசிலியத்தையும் பயன்படுத்த வேண்டும். மரவள்ளி, மஞ்சள், சோளத்தில் பேன், செம்பேன், பூச்சித் தொல்லைகளைக் கட்டுப்படுத்த, வெர்டிசிலியம் லக்கானியைப் பயன்படுத்த வேண்டும்.

குடற்புழுவைத் தடுக்கும் அகத்திக்கீரை

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்குதல், அதற்குக் கொடுக்கும் மருந்துகள் குறித்துப் பேசிய சரவணன், “கால்நடைகளைக் கட்டுற இடத்தைச் சுத்தமாக வெச்சிருக்கணும். அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒருமுறை ஆடு, மாடுகளுக்குக் கொடுப்பேன். இதனால், அதுங்களுக்குக் குடற்புழுப் பிரச்னை வராது. சளி தொந்தரவு வராம இருக்க, வாரத்துக்கு ரெண்டு தடவை சாம்பிராணி புகை போடுவேன். ஆடு, மாடுகளுக்கு ஜீரணக் கோளாறு வந்தா, ஓமத்தையும் சுக்கையும் கலந்து அரைச்சு தண்ணியில கலந்து கொடுப்பேன். மாடுகளுக்கு மடிவீக்கப் பிரச்னை வந்தா, எலுமிச்சைப்பழச் சாறு, மஞ்சள்தூள், வேப்பிலை மூன்றையும் சேர்த்து அரைச்சு, மடிக்காம்புல பூசுவேன். சரியாயிரும்.

ஆடுகள்
ஆடுகள்

மாடுகளுக்கு வெளியேயும் உள்ளேயும் புண் இருந்தா, கற்றாழையைப் பயன்படுத்துவேன். வெயில் காலத்தில் மாடுகளுக்குக் கோமாரி நோயைப் போக்கவும், கோழி, மாடுகளுக்கு வெயில்காலக் கொப்புளம் ஏற்படுறதைத் தடுக்கவும், பன்றியோட நெய்யை (பன்றிக் கொழுப்பை உருக்கி எடுக்கப்படும் பன்றி நெய், கோமாரி நோய்க்குப் பாரம்பர்ய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி வருவதற்கு முன்பு இதைத்தான் அதிகமாக பயன்படுத்தினார்கள். முன்பெல்லாம் மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் பன்றி நெய் கட்டாயம் இருக்கும்) மொந்தன் பழத்தில் வெச்சு சாப்பிடக் கொடுப்பேன். அதற்கும் சரியாகாத பிரச்னை இருந்தால், கால்நடை மருத்துவரை அழைச்சுட்டு வருவேன். ஆனால், ‘கால்நடை மருத்துவர்கள் வராத பண்ணைதான், சிறந்த இயற்கை பண்ணை’னு சொல்வாங்க. என்னோட பண்ணையைப் பெரும்பாலும் அப்படித்தான் வெச்சிருக்கேன்’’ என்றார்.

செவ்வரளி உயிர்வேலி

தனது பண்ணையில் உயிர்வேலியாகச் செவ்வரளி நடவு செய்துள்ளார் சரவணன். அதுபற்றிப் பேசியவர், “நான் 6 ஏக்கர் நிலத்தைச் சுற்றி செவ்வரளி உயிர்வேலியை உருவாக்கிட்டேன். பக்கத்து காடுகள்ல விவசாயிகள் தெளிக்கிற ரசாயன உரங்கள் காற்று, தண்ணீர் மூலமா என்னோட பண்ணையத்துக்குள்ள வராம, இந்த உயிர்வேலி தடுக்குது. 6 மாசத்துக்கு ஒருதடவை செவ்வரளிச் செடிகளைக் கவாத்து பண்ணி விடுவேன்’’ என்றார்.

தீவனப் பயிர்
தீவனப் பயிர்
தீவனப் பயிர்
தீவனப் பயிர்

கலப்பு விதைகளைத் தடுக்க சாண எரிவாயு

‘‘நம்ம வயல்/தோட்டத்துல கலப்பு விதைகள் பரவாம இருக்கறதையும் நாம தொடர்ந்து உறுதிப்படுத்திக்கிட்டே இருக்கணும். குறிப்பா, மாட்டுச்சாணம் மூலமா இப்படி கலப்பு விதைகள் பரவ நிறையவே வாய்ப்பு இருக்கு. அதாவது மாடுகளுக்கு கொடுக்குற வைக்கோல்ல சில நெல் மணிகள் ஒட்டியிருக்கலாம். அது செரிக்காம சாணத்துல அப்படியே வந்துவிடும். மாடும் மேயும்போது புல் விதைகள், சீமைக்கருவேல் விதைகளையும்கூட தின்னுடும். இந்த விதைகளும் மாட்டுச் சாணம் வழியா பரவும். இப்படி பரவுர விதைகள் வேகமாவும் வீரியமாவும் முளைக்கும். அதனால, நம்ம வயல்/தோட்டத்துல நமக்குத் தெரியாம மாட்டுச்சாணம் வர்றதை அனுமதிக்கக்கூடாது.

மாட்டுச் சிறுநீர் சேகரிப்பு
மாட்டுச் சிறுநீர் சேகரிப்பு


எங்க பண்ணையில கிடைக்கிற மாட்டுச்சாணத்தை ரொம்ப கவனமா கையாளுறேன். அதுக்காகவே வீட்டுல சாண எரிவாயு அடுப்பைப் பயன்படுத்துறேன். மாட்டுச் சாணியைக் கரைச்சு எரிவாயு தயாரிக்குற தொட்டிக்குள்ள ஊத்தினா, அதன்மூலமா கேஸ் உருவாகி அடுப்புக்குப் போகும். இன்னொருபுறம், கேஸ் தயாரிக்க பயன்படுத்தின சாணி வெளியில வரும்போது, அதுல இருக்கும் விதைகள் அழுகி, முளைப்புத்தன்மையை இழந்து வெளியே வரும். அந்தச் சாணியை அப்படியே வயலுக்கு நேரடியாகவும், மண்புழு உரம் தயாரிக்கவும் பயன்படுத்துறேன். ஆட்டுப்புழுக்கையையும், மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்துகிறேன். மாசத்துக்கு ஒரு டன் வரை மண்புழு உரம் தயார் செய்றேன். அதை முழுக்கத் தோட்டத்துக்குப் பயன்படுத்திக்கிறேன்’’ என்கிறார் சரவணன்.

விவசாய விருதுகள்

‘‘2018-ம் வருஷம் நாமக்கல் மாவட்ட நிர்வாகம், ‘சிறந்த குடிமகன்’ விருதைக் கொடுத்தது. அதே வருஷம், ஹைதராபாத் ஏ.டி.ஏ.ஆர்.ஐ ‘இனோவேட்டிவ் ஃபார்மர்’ங்கிற விருது கொடுத்தாங்க. 2019-ம் வருஷம் கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகம், விதைப்புக்கு இயந்திரம் பயன்படுத்துறதுக்காக விருது கொடுத்தாங்க. நான் இயற்கை முறையில பண்ணையம் பண்றதுக்காக 2019-ம் வருஷம் ஐ.ஏ.ஆர்.ஐ டெல்லியில விருது கொடுத்தாங்க. அதே வருஷம் ஐ.சி.ஏ.ஆர் அமைப்பு இந்திய அளவுல ‘சிறந்த இயற்கை பந்தல் காய்கறி விவசாயி’னு விருது கொடுத்தாங்க’’ என்கிறார் சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism