Published:Updated:

8.5 ஏக்கர், ரூ.5,20,000 லாபம்!ஒப்பில்லா வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பண்ணை ( DIXITH )

இயற்கை

8.5 ஏக்கர், ரூ.5,20,000 லாபம்!ஒப்பில்லா வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

இயற்கை

Published:Updated:
பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பண்ணை ( DIXITH )

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குரும்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியரும் இயற்கை விவசாயியுமான மணி (82) பாரம்பர்ய நெல் ரகங்களை விதைத்து வருவதோடு பல விவசாயிகளைப் பாரம்பர்ய நெல் விவசாயத்துக்கும் திருப்பிவிட்டிருக்கிறார். மனைவி விக்டோரியாவுடன் சேர்ந்து தனது 5 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக உருவாக்கி இருக்கிறார். அதோடு, குடும்பத்தினர் தோட்டத்தின் அருகிலேயே இயற்கை அங்காடியை உருவாக்கி இயற்கையில் விளைவித்த பாரம்பர்ய விதைநெல், காய்கறிகள், பழங்கள், மரக்கன்றுகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை-அறந்தாங்கி நெடுஞ்சாலையில் குரும்பூரிலிருக்கிறது மணியின் பெத்தானிப் பண்ணை. நாம் சென்றபோது ‘வீல் சேரி’ல் அமர்ந்தவாறு விவசாயக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘‘பண்ணை முழுக்க நான்தான் பராமரிச்சுட்டு இருந்தேன். சில நாள்களுக்கு முன்ன உடம்பு சரியில்லாமப் போச்சு. எந்திரிச்சு நடக்க முடியல. வீல்சேர்ல உக்காந்து மனைவி விக்டோரியாவுக்கு ஆலோசனை சொல்றேன். அவங்க தான் பண்ணையைப் பார்த்துகிறாங்க. எங்க ரெண்டு பசங்களும் அம்மாவுக்கு உதவியா இருக்காங்க’’ என்றவர், மற்ற தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மணி-விக்டோரியா மணி
மணி-விக்டோரியா மணி


“பிறந்தது இலங்கை, வளர்ந்ததெல்லாம் குரும்பூர்லதான். அறந்தாங்கியில 21 வருஷம், சிலட்டூர், மறமடக்கின்னு மொத்தம் 37 வருஷ ஆசிரியர் அனுபவம். பாரம்பர்ய விவசாயக் குடும்பம். 1967-ம் வருஷம்தான் விவசாயத்துக்குள்ள வந்தேன். ஆசிரியர் பணியோடு விவசாயத்தையும் சேர்த்துப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ரசாயன உரம், பூச்சிக்கொல்லியெல்லாம் வேகமா நம்ம நாட்டுக்குள்ள நுழைய ஆரம்பிச்சுது அந்த நேரத்துல ஐ.ஆர்-8 ரகத்தை அறிமுகப்படுத்தினாங்க. அப்ப புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துல இருந்துச்சு. தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த விதையைக் கொடுத்தாங்க. அதுல என்னையும் சேர்த்துக்கிட்டாங்க. உரங்கள், பூச்சி மருந்து எல்லாம் அவங்களே கொடுத்து அதற்கான அளவுகளையும் ‘டைம் டேபிள்’ போட்டு கொடுத்திட்டாங்க.

1969-ம் வருஷம், ஆடிப்பட்டத்துல ஒன்றரை ஏக்கர்ல நடவு செஞ்சேன். 108 மூட்டை விளைச்சல் கெடச்சது. அதுக்காக எனக்கு விருது கொடுத்தாங்க. அதற்கப்புறம் தொடர்ச்சியா, நெல், கடலை, கரும்பு, வாழைன்னு பல பயிர்களைப் போட ஆரம்பிச்சேன். நல்ல லாபம் கிடைச்சது. ஆனாலும், ஆசிரியர் பணியில கிடைச்ச திருப்தி, விவசாயத்துல கிடைக்கல. பணி ஓய்வுக்குப் பிறகு, அதிகமாகப் புத்தகங்கள் வாசிக்க வாய்ப்புக் கிடைச்சது. அப்பத்தான் பசுமை விகடனுக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாச்சு.

சம்பங்கி வயல்
சம்பங்கி வயல்


பசுமை விகடன்ல வர்ற எல்லா கட்டுரைகளையும் படிச்சிடுவேன். ஒருகட்டத்துல பசுமை விகடன் எனக்கு ‘பைபிள்’ மாதிரி மாறிடுச்சு. ரசாயன விவசாயத்தைவிட, இயற்கை விவசாயத்தில் பெருசா சாதிக்கலாம்ங்கிற சிந்தனையைத் தூண்டுச்சு. பசுமை விகடனால்தான் இயற்கை விவசாயத்துக்குள்ளேயே வந்தேன். இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து படிச்சு தெரிஞ்சிக்கிட்டு ஏராளமான விவசாயிகளுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன். இனி கண்டிப்பா நஞ்சில்லா உணவுப் பொருள்களைத்தான் மக்களுக்குக் கொடுக்கணும்ங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்தேன். அதுக்காகத் தோட்டத்து பக்கத்துலயே இயற்கை அங்காடியை ஆரம்பிச்சோம்.

இயற்கை விவசாயத்தில் விளைஞ்ச காய்கறிகளை அங்காடியில் வெச்சு குறைஞ்ச விலைக்குக் கொடுக்குறோம். வெளி மாவட்டங்கள்ல இருந்தும் தேடி வந்து காய்கறிகளை வாங்கிட்டுப் போறாங்க. பாரம்பர்ய நெல்லை சாகுபடி செய்யணும்னு ஆர்வம். ஆனா, எங்க பகுதிகள்ல விதை களுக்குத் தட்டுப்பாடு இருந்துச்சு. அதனால பாரம்பர்ய நெல்லை விதைக்காகவாவது சாகுபடி செய்யணும்னு முடிவுபண்ணிணேன்’’ என்றவர் பேச்சை நிறுத்தித் தண்ணீர் குடித்தார். அந்த இடைவெளியில் பேசத் தொடங்கினார் மனைவி விக்டோரியா மணி.

பந்தல் காய்கறிகள்
பந்தல் காய்கறிகள்


“இது மொத்தம் 5 ஏக்கர். அதுல 2 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் சாகுபடி செய்வோம். ஒரு ஏக்கர்ல சம்பங்கிச் சாகுபடி இருக்கு. ஒரு ஏக்கர்ல காய்கறிச் சாகுபடி செய்வோம். அதுல கத்திரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை நடுவோம். பந்தல் காய்கறிகள்ல புடல், பாகல், பீர்க்கன் நடுவோம். சீஸன்ல எப்பவாவது தர்பூசணி போடுவோம்.

ஒரு ஏக்கர் சும்மாதான் இருக்கு. அதுல தென்னை நடவு செய்யலாம்னு இருக்கோம். காய் கறிகளை எங்க அங்காடிக்குத் தேவையான அளவுக்குத்தான் நடுவோம். இது இல்லாம பக்கத்துலயே மூன்றரை ஏக்கர்ல குட்டை ஒண்ணு இருக்கு.

இந்த வருஷம் ஒரு ஏக்கர்ல தூயமல்லி போடுறதுக்கு நவதானிய விதைப்பு செஞ்சிருக்கோம். பெரும்பாலும், ஒரு போகம் தான் பண்ணுறோம். போன வருஷம் ஆடிப்பட்டத்துல ஒரு ஏக்கர்ல தூயமல்லி போட்டிருந்தோம். 30 மூட்டை நெல் கிடைச்சது. சாப்பாட்டுக்கு எடுத்துக்கிட்டது போக, மீதமுள்ள நெல்லை விதை நெல்லாகவும் அரிசியாகவும் மாத்தி விற்பனை செஞ்சோம். 60,000 ரூபாய் வரையிலும் வருமானம் கிடைச்சது. இயற்கை இடுபொருள், கூலி எல்லாம் சேர்த்து 13,000 ரூபாய் செலவு ஆச்சு. ஏக்கருக்கு 47,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சது’’ என்றவர் இயற்கை அங்காடிக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்


விற்பனைக்கு உதவிய பசுமை விகடன்

‘‘இப்போ எங்ககிட்ட தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா, பூங்கார், கருங்குறுவை, கவுனி, தங்கச் சம்பா, சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பானு 8 ரகங்கள் இருக்கு. எங்களோட இயற்கை அங்காடியில பாக்கெட் போட்டு விற்பனை செய்றோம். எங்க நெல்லை சந்தைப்படுத்திக் கொடுத்ததுல பசுமை விகடனோட பங்கு அதிகம். அதுல வர்ற பசுமை சந்தை வாங்க, விற்க பகுதியில நெல்லை அறிமுகப்படுத்தினது மூலமாகத்தான் வியாபாரிகள் பலரோட தொடர்பு கிடைச்சிருக்கு. இயற்கை முறையில் காய்கறிகளை விளைய வெச்சு எங்களோட இயற்கை அங்காடியில் விற்பனை செஞ்சிக் கிட்டு இருக்கோம். பஞ்சகவ்யா, மீன் அமிலம் தயார் செஞ்சு தேவைப்படுற விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம்’’ என்றவர், தற்போது பண்ணையில் உள்ள பயிர்களைப் பற்றிப் பேசினார்.

‘‘ஒரு ஏக்கர்ல சம்பங்கி போட்டிருக்கிறோம். உழவு, கிழங்கு செலவுன்னு மொத்தமா 25,000 ரூபாய் முதலீடு. மாசத்துக்கு 500 கிலோவுக்கும் குறையாம பூ கிடைக்குது. சராசரியா கிலோ ரூ.70 வரை விற்பனையாகுது. அது மூலமா மாசத்துக்கு 35,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக மாசம் 25,000 ரூபாய் லாபமாகக் கையில நிக்கும்.

அங்காடியில் காய்கறிகள்
அங்காடியில் காய்கறிகள்
பாரம்பர்ய அரிசி வகைகள்
பாரம்பர்ய அரிசி வகைகள்


நோனி மூலம் மாதம் 5,000 ரூபாய்

சம்பங்கி வரப்பில 25 நோனி மரங்கள் இருக்கு. இதுலயிருந்து கிடைக்கிற பழத்தைப் பிழிஞ்சு அதோட கருப்பட்டி சேர்த்துப் பக்குவப்படுத்தி, ‘நோனி ஜூஸ்’ விற்பனை செய்றோம். அது மூலமா மாசம் 5,000 ரூபாய் வருமானம் கிடைச்சிடும். வருஷத்துக்கு 60,000 ரூபாய். நோனி மரத்துக்குன்னு பெருசா எந்தச் செலவும் இல்லை. கருப்பட்டி சேர்ப்பு மட்டும்தான். இது இல்லாம காய்கறிகள் மூலமா செலவுபோக வருஷத்துக்கு 20,000 ரூபாய் கிடைக்கும்’’ என்றவர் மீன் குளத்துக்கு அழைத்துச் சென்றார்.

‘‘இந்த மூன்றரை ஏக்கர்ல இருக்க பெரிய குட்டையில, புல் கொண்டை, கட்லா, ரோகுனு எல்லாம் கலந்து 4,000 மீன்கள் வளர்க்குறோம். குஞ்சுகளா இருக்கும்போது ஒரு மாசத்துக்குத் தவுடு, முட்டைக்கோஸ் கொடுப்போம். பிறகு, அசோலா போடுவோம். மொத்த செலவுன்னு பார்த்தால் 10,000 ரூபாய்தான். நாம மெனக்கெடணும்ங்கிற அவசியம் இல்லை. வருஷத்துக்கு 3 தடவை பிடிச்சு விற்பனை செய்வோம். அரைக் கிலோ வந்திட்டாலே பிடிக்கலாம். சந்தைக்குக் கொண்டு போறதில்ல. மீன் பிடிக்கப் போறோம்னு தெரிஞ்சாலே ஊர்க்காரங்க வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க.

காய்கறி வயல்
காய்கறி வயல்
பண்ணையில்
பண்ணையில்


மீன் மூலமா வருஷத்துக்கு 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 10,000 ரூபாய் கழிச்சுட்டா 90,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழி வளர்க்கிறோம். 50 கோழிகள் இருக்குது. கோழி முட்டைகள்ல இருந்தும் 3,000 ரூபாய் லாபம் கிடைக்குது. கோழிகளும் விற்பனை செய்றோம். முயல் வளர்ப்பு, புறா வளர்ப்பை இப்பதான் ஆரம்பிச்சு இருக்கோம்’’ என்றார்.

நிறைவாகப் பேசிய மணி, ‘‘விவசாயம், மீன், கோழி, இயற்கை அங்காடி மூலமா வருஷத்துக்கு 5,20,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இந்த லாபத்தைவிட மக்களுக்கு விஷமில்லாத உணவுகளைக் கொடுக்குற திருப்திதாங்க பெருசு’’ என்றபடி விடைகொடுத்தார்.

குடும்பத்தினருடன் விக்டோரியா மணி
குடும்பத்தினருடன் விக்டோரியா மணி

இயற்கையில் கலந்த மணி!

புதுக்கோட்டை வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன விவசாயிகளை, இயற்கை விவசாயத்துக்கு மடைமாற்றிய மணி, சில தினங்களுக்கு முன் இயற்கையில் கலந்துவிட்டார். அவருக்கு பசுமை விகடன் அஞ்சலி செலுத்துகிறது.

இயற்கை விவசாயம் குறித்து ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்கிற உந்துதல் காரணமாக, தொடர்ந்து தன்னுடைய அனுபவங்களை எழுதிவந்திருக்கிறார் மணி. அதில், ஒரு பக்கத்துக்கு பசுமை விகடன் குறித்தும் எழுதி வைத்துள்ளார். அந்தப் பக்கத்தை நம்மிடம் காட்டினர் அவருடைய குடும்பத்தினர். அதில், ‘நான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை நேரில் கண்டதில்லை. ஜீரோ பட்ஜெட் வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரை நேரில் பார்த்ததில்லை. பஞ்சகவ்யா டாக்டர் நடராஜனைக் கண்டதில்லை. அதனைச் செறிவூட்டிய பஞ்சகவ்யாவாக மாற்றிய கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், வடிவேலு ஆகியோரையும் நேரில் சந்தித்ததில்லை. இவர்கள் மட்டுமல்லாது, இயற்கை விவசாயிகள் பலரையும் என் பண்ணைக்கே அழைத்து வந்து பேச வைத்தவர் பசுமை விகடன்தான்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மையை அறிமுகம் செய்தவர், என்னை மாற்றியவரும், எனக்கு வழிகாட்டியவரும் பசுமை விகடன்தான். ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதியும், 25-ம் தேதியும் என் வீட்டுக்கு வருபவர் பசுமை விகடன். இவை என் உள்ளத்திலிருந்து வெளிவந்தவை. இந்த நூலை எழுதத் தூண்டியதும், என்னை மாற்றியமைத்ததும் பசுமை விகடன்தான். தமிழகமெங்கும் உள்ள இயற்கை உழவர்களை அலைபேசியில் தொடர்புகொள்ள வைத்ததும் பசுமை விகடன்தான்’ என்று எழுதியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism