Published:Updated:

கரும்பு, ஆடு, மாடு, கோழி, மீன்... 7 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6,59,000 லாபம்...!

நல்லசிவம்
பிரீமியம் ஸ்டோரி
நல்லசிவம்

ஒருங்கிணைந்த பண்ணையம்

கரும்பு, ஆடு, மாடு, கோழி, மீன்... 7 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6,59,000 லாபம்...!

ஒருங்கிணைந்த பண்ணையம்

Published:Updated:
நல்லசிவம்
பிரீமியம் ஸ்டோரி
நல்லசிவம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நல்லசிவம், கரும்பு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார். கரும்புத் தோட்டத்தில் இருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“எங்க பூர்வீகம் இதே கிராமம்தான். 7 ஏக்கர் நிலமிருக்கு. இங்கிருந்து காவிரியாறு கூப்பிடுற தூரத்துல ஓடினாலும், கிணறு, போர்வெல் மூலமாத்தான் விவசாயம் செய்றோம். எனக்கு இப்போ 57 வயசு. பத்தாவது முடிச்ச கையோடு விவசாயத்துக்கு வந்துட்டேன். கடந்த 20 வருஷமா ஆலைக் கரும்பு சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். அதேபோல, 10 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இயற்கை விவசாயத்தைப் பத்தி எந்தச் சிந்தனையும் இல்லாம ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். இந்த நிலையிலதான், 15 வருஷத்துக்கு முன்ன, ஈரோட்டுல பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் சம்பந்தமா பயிற்சி நடந்துச்சு. நண்பர் மூலமா கேள்விப்பட்டு அதுல கலந்துகிட்டேன். அப்போதிருந்துதான், இயற்கை விவசாயம் மேல பிடிப்பு உண்டாச்சு. தொடர்ந்து, ‘யூடியூப்’ல நம்மாழ்வார் ‘வீடியோ’க்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பல வழிகளிலும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். நம்மாழ்வார் மூலம் கிடைச்ச படிப்பினைகளுக்குப் பிறகு, ‘இயற்கை விவசாயம் சாத்தியம்தான்’னு எனக்கு நம்பிக்கை உண்டாச்சு. அஞ்சு வருஷத்துக்கு முன்ன முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். ஆனா, வீட்டுல, ‘இயற்கை விவசாயத்துல சாதிக்க முடியுமா? இது வேண்டாத வேலை’னு பயமுறுத்துனாங்க. அதனால, முதல்ல அரை ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில கரும்பை விளைவிச்சேன். இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை வர்ற அளவுக்கு மகசூல் கிடைச்சுச்சு. 2 வருஷத்துக்கு முன்னாடி நாமக்கல் கே.வி.கே, மாவட்ட அளவுல 20 விவசாயி களுக்கு 25 நாள்கள் பயிற்சி கொடுத்தாங்க.

கரும்புத் தோட்டத்தின் அருகே நல்லசிவம்
கரும்புத் தோட்டத்தின் அருகே நல்லசிவம்

அதுல கலந்துகிட்டேன். வெறுமனே மேலோட்டமா இல்லாம ரொம்ப ஈடுபாட்டோடு அங்க பயிற்சி கொடுத்தாங்க. அப்பதான், எனக்கு முழுமையா இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. கரும்பு மட்டுமல்லாம, ஒருங்கிணைந்த பண்ணையமா பண்ணணும்னு 5 வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணியிருந்ததால, ஒருங்கிணைந்த பண்ணையமா என்னோட விவசாயத்தைக் கட்டமைச்சேன். இப்போ என் மனைவி கிருஷ்ணவேணியும் ஆர்வமாகி, என்னோட சேர்ந்து இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தைக் கவனிச்சுக்கிறாங்க’’ என்றவர், தனது விவசாய முறைகளைப் பற்றிப் பேசினார்.

‘‘6 ஏக்கர் நிலத்துல ‘சி.ஓ.சி 86032’ ரகக் கரும்பை நட்டேன். கரணையா வாங்கி நடாம, நாத்தா வாங்கிட்டு வந்து நட்டேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வெட்டி அழிச்சுட்டுப் புதுசா பயிரிட்ட கரும்புதான், இப்போ மூணாவது வெட்டுக்கு தயாராகிட்டு இருக்கு. ஏழு மாச பயிரா வளர்ந்து நிக்குது. சாணத்தோடு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், அசோஸ்பைரில்லம் கரும்புக்குக் கலந்து தூவுறோம். 4 வருஷத்துக்கு முன்னாடியே காங்கேயம், ஜெர்சி, ஹெச்.எஃப்னு 10 மாடுகளை வாங்கினேன். அடுத்து, கோழி வளர்க்கணும்னு முடிவு பண்ணி, பெருவிடை கோழி, கிரிராஜா, வான்கோழி களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ 30 கோழிகள் இருக்கு. 4 வருஷத்துக்கு முன்னாடி 20 சென்ட் இடத்துல குட்டை வெட்டி, மீன் வளர்த்துக்கிட்டு வர்றேன். கட்லா, ரோகு, மிர்கால்னு 3,000 மீன்குஞ்சுகளை விட்டிருக்கிறேன். 4 தலைச்சேரி ஆடுகளை வளர்த்துக்கிட்டு வர்றேன். அதுங்களுக்கு, உணவா கொடுக்க வேலிமசால், சூபாபுல்லை வளர்க்குறேன். ‘ஒன்றோட கழிவு மற்றதின் உணவு’ங்கிற அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தைக் கட்டமைச்சு இருக்கேன்’’ என்றவர், பண்ணையைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்தார்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

‘‘கரும்பை வெட்டி முடிச்சதும், அதைத் தீ வெச்சு எரிக்க மாட்டேன். அப்படியே வயல்ல மூடாக்குப் போட்டு, உரமாக மாத்திடுவேன். மாடுகளோட சிறுநீரை ஒரு தொட்டிமூலம் சேகரிச்சு, ‘மோட்டார்’ மூலம் வயலுக்குப் பாசனத் தண்ணியில கலந்து கொடுக்கிறேன். மாடுங்க கட்டியிருக்கிற கட்டுத்தரையைத் தினமும் தண்ணீர் விட்டுக் கழுவிடுவோம். அந்தக் கழிவுத் தண்ணி நேரா மீன்குட்டைக்குப் போகும்படி செஞ்சுருக்கோம். அதேபோல, மீன்குட்டை தண்ணியை ‘மோட்டார்’ மூலம் வயலுக்குப் பாய்ச்சுறேன். ஆட்டுப்புழுக்கை, சாணத்தை வயலுக்கு உரமா பயன்படுத்துறேன். மாட்டுச்சாணம், சிறுநீரை பஞ்சகவ்யா உள்ளிட்ட இடுபொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமுதக் கரைசல், பத்திலைக் கரைசல்கள நானே தயாரிச்சுக்கிறேன்.

6 ஏக்கர்ல கரும்பு பயிரிடுறதால, மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செஞ்சுக்கிறேன். இப்ப சூப்பர் நேப்பியர், கோ.5 ரகப் புல்லையும் போட்டிருக்கிறேன். தவிர, உலர் தீவனமா சோளத்தட்டை, வைக்கோலை வெளியில் வாங்கி, கால்நடை களுக்கு உணவாகக் கொடுத்துக்கிட்டு வர்றேன். அடர்தீவனமா மக்காசோளம், தவிடு, பயறு வகைகளோட தோல் கழிவுகளை வாங்கி, அதை அரைச்சுத் தீவனமாக் கொடுக்கிறேன். கலப்புத் தீவனத்தை நான் பயன்படுத்துறதில்ல” என்றவர், வரவு செலவுக் கணக்கை விவரித்தார்.

மனைவியுடன்
மனைவியுடன்


கரும்பு

“கரும்பைப் பொறுத்தமட்டில, வருஷத் துக்கு ஒரு வெட்டு. ஏக்கருக்கு 50 டன் வரை மகசூல் கிடைக்கும். 6 ஏக்கருக்கும் சேர்த்து, 300 டன் மகசூல் கிடைக்கும். ஒரு டன் கரும்பு 2,813.50 ரூபாய்க்கு விலை போகுது. 6 ஏக்கருக்கும் சேர்த்து 8,44,050 ரூபாய் கிடைக்கும். இதுல, செலவுனு பார்த்தா, கரும்புத் தோகையை வச்சு மூடாக்குப் போட 24,000 ரூபாய்ச் செலவாகும். களை எடுக்க 48,000 ரூபாய், கரும்புத் தோகை உரிக்க, 6 ஏக்கருக்கும் 36,000 ரூபாய், தொழுவுரம், புண்ணாக்கு கொடுக்க 42,000 ரூபாய், கரும்பு வெட்டுக்கூலியா 2,40,000 ரூபாய் வரை செலவாகும். மொத்தம் 3,90,000 வரை செலவாகும். மொத்த வருமானமான 8,44,050 ரூபாய்ல செலவுத்தொகை 3,90,000 ரூபாயைக் கழிச்சா கிடைக்குற 4,54,050 ரூபாய்தான் கரும்பு மூலம் கிடைக்குற லாபம்.

மீன்களுடன்
மீன்களுடன்

மீன்

மீன் வளர்ப்பில, வருஷம் 250 கிலோ வரை மீன் பிடிப்போம். ஒரு கிலோ மீனை 140 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். ஒரு மீன் குஞ்சை 30 காசுனு வாங்குறோம். 3,000 மீன்குஞ்சுகள் வாங்க, 900 ரூபாய்ச் செலவாகும். இயற்கையா வளர்க்கிறோம், தீவனச் செலவு இல்ல. மீன் பிடிக்க ஆள் கூலியா 10,000 ரூபாய் வரை செலவாகும். மீன் விற்பனைமூலம் கிடைக்குற 35,000 ரூபாய்ல செலவுத் தொகையான 10,900 ரூபாயை கழிச்சா கிடைக்குற 24,100 ரூபாய் தான் மீன் வளர்ப்பு மூலம் கிடைக்குற லாபத்தொகை.

கோழி

கோழி வளர்க்க பெருசா எந்தச் செலவும் இல்ல. ஒருங்கிணைந்த பண்ணையில் இருக்க இயற்கை உணவையே அதுங்க எடுத்துக்கும். முட்டைகளை விற்பனை செய்றதில்ல. குஞ்சு பொரிக்க வெச்சிக்குறேன். வருஷத்துக்கு 30 கிலோ வரை கோழிகளை விற்பனை செய்றேன். ஒரு கிலோ 450 ரூபாய். அதுமூலமா கிடைக்குற 13,500 ரூபாயும் லாபம்தான்.

கோழிகள்
கோழிகள்

ஆடு

ஆடுகளுக்கும் பெருசா தீவனச் செலவில்ல. வருஷத்துக்கு 4 குட்டிகள்வரை விற்பனை செய்றேன். ஒரு குட்டி 4,000 ரூபாய் வரை விலைபோகும். ஆடுகள் விற்பனைமூலம் கிடைக்குற 16,000 ரூபாய் லாபமா கிடைக்கும்.

மாடுகள்

மாடுங்க மூலம் தினமும் 40 லிட்டர் பால் கிடைக்குது. அதுல 20 லிட்டர் பாலை ஆவினுக்கு விற்பனை செய்றேன். அவங்க லிட்டர் 28 ரூபாய்னு எடுத்துக்குறாங்க. அந்த வகையில 365 நாளுக்கும் சேர்த்து, 2,04,400 ரூபாய் கிடைக்கும். இதைத் தவிர, மீதியுள்ள 20 லிட்டர் பாலை நேரடியா விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் 40 ரூபாய் வரை விலைபோகுது. அந்த வகையில், வருஷத்துக்கு 2,92,000 ரூபாய் கிடைக்கும். ரெண்டையும் சேர்த்தா, வருஷத்துக்கு 4,96,400 ரூபாய் வரை கிடைக்கும். இதைதவிர, வருஷத்துக்கு 5 கன்றுக்குட்டிகள் வரை விற்பனை செய்வேன். ஒரு கன்றுக்குட்டி 5,000 ரூபாய்னு 5 கன்றுகளும் 25,000 ரூபாய் விலைபோகும். வருஷத்துக்கு 5 வயசான மாடுகளை விற்பனை செய்வேன். ஒரு மாடு 30,000 ரூபாய் வரை விலை போகும். அந்த வகையில, வருஷத்துக்கு 1,50,000 ரூபாய் கிடைக்கும்.

பால்
பால்

மாடுகளோட கழிவுகளை எருவா விற்பனை செய்றேன். வருஷத்துக்கு 10 லோடு வரை விற்பனை செய்ய முடியுது. ஒரு லோடு 1,500 ரூபாய்னு 10 லோடு எருவுக்கு 15,000 ரூபாய் கிடைக்கும். இதன்மூலம் வருஷத்துக்கு 6,86,400 ரூபாய் வருமானம் வரும். இதுல, அடர்தீவனத்துக்குத் தினமும் 1,000 ரூபாய் வீதம், வருஷத்துக்கு 3,65,000 ரூபாய் வரை செலவாகும். பராமரிக்க ஆள்கூலி தினமும் 450 ரூபாய். அது, வருஷத்துக்கு 1,64,250 ரூபாய். மருத்துவத்துக்கு வருஷம் 5,000 ரூபாய்ச் செலவாகும். மொத்தமாக மாடுங்க மூலம் கிடைக்கும் வருமானமான 6,86,400 ரூபாயில் 5,34,250 ரூபாயைக் கழிச்சா கிடைக்கும் 1,52,150 ரூபாய் லாபம்தான்’’ என்றவர் நிறைவாக,

அட்டவணை
அட்டவணை

‘‘கரும்பு, மீன், ஆடு, மாடு, கோழி மூலமா வருஷத்துக்கு 6,59,800 லாபம் கிடைக்குது. நான் இயற்கை முறையில் கரும்பை விளைவிச்சாலும், அது ஆலைக்குதான் போகுது. அடுத்து நான் விளைவிக்குற கரும்பை மதிப்புக்கூட்டி நாட்டுச்சர்க்கரையா மாத்தி விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, நல்லசிவம்,

செல்போன்: 98426 12838.

மீன் குளத்துக்குள் செல்லும் சாணக்கரைசல்
மீன் குளத்துக்குள் செல்லும் சாணக்கரைசல்

சுகாதாரம் முக்கியம்

“கட்டுத்தறியைச் சுத்தமா வச்சுக்குறதால, மாடுகளுக்குப் பெருசா நோய் எதுவும் தாக்காது. இருந்தாலும், கோமாரி நோய் தடுக்க, அரசு மருத்துவரை வச்சு தடுப்பூசி போட வைப்பேன். மடிநோய் பிரச்னை வந்தா, சுண்ணாம்பு, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் தூள் கலந்து பூசுவேன். சரியாயிரும். அதேபோல், குடற்புழுப் பிரச்னை வந்தா, சோத்துக்கத்தாழையை உள்ளுக்குக் கொடுப்பேன். அதுவும் சரியாயிரும். கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் இயற்கை தீவனம் கொடுக்கிறதால, அதுங்களுக்கும் நோய்த் தாக்குதல் எதுவும் வராது” என்கிறார் நல்லசிவம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism