Published:Updated:

மண்புழு உரம், இயற்கை விவசாயம், தென்னை, நாட்டுக்கோழி! ஆண்டுக்கு ரூ.7,50,000 லாபம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஒருங்கிணைந்த பண்ணையம் ( நா.ராஜமுருகன் )

ஒருங்கிணைந்த பண்ணையம்

மண்புழு உரம், இயற்கை விவசாயம், தென்னை, நாட்டுக்கோழி! ஆண்டுக்கு ரூ.7,50,000 லாபம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்

Published:Updated:
ஒருங்கிணைந்த பண்ணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஒருங்கிணைந்த பண்ணையம் ( நா.ராஜமுருகன் )

விவசாயத்தைப் பிரதான தொழிலாகப் பார்த்தவர்களே மாற்றுத் தொழிலுக்கு மாறிய காலம் ஒன்று உண்டு. ஆனால், வருமானத்துக்கு மாற்றுத் தொழிலிருந்தாலும், மனத் திருப்திக்காக இப்போது பலரும் விவசாயம் பார்க்க வருகிறார்கள். நாமக்கல் நகரில் உள்ள ஏ.எஸ் பேட்டையைச் சேர்ந்த மாதேஸ்வரன், அந்த ரகம்தான். தன்னுடைய தந்தை தொடங்கிய லாரி போக்குவரத்து தொழிலைப் பிரதானமாகப் பார்த்தாலும், தன்னுடைய ஆசைக்காகத் தாத்தா காலத்தில் செய்து வந்த விவசாயத்தை, இயற்கை முறையில் செய்து வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நாட்டுக்கோழி, நாட்டுமாடு, மண்புழு உரம் தயாரிப்பு, பாரம்பர்ய நெல் சாகுபடி, இயற்கை இடுபொருள்கள் தயாரித்து நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

தனது வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொட்டி ரெட்டிப் பட்டி, கெஜகோம்பையில் 3 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். லாரித் தொழில் நடந்து வரும், நாமக்கல், இ.பி காலனி என்ற இடத்தில், மண்புழு உரம் தயாரிப்பு, மாடு, கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் செய்து வருகிறார். மண்புழு உரம் தயாராகும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாதேஸ்வரனை சந்தித்துப் பேசினோம்.

நாட்டுக் கோழிகளுடன் மாதேஸ்வரன்
நாட்டுக் கோழிகளுடன் மாதேஸ்வரன்

“நாமக்கல் நகரம்தான் பூர்வீகம். இ.பி காலனியில் இருக்கும் இந்த இடம் எங்க தாத்தா காலத்தில விவசாயப் பூமியா இருந்தது. விவசாயம் எங்க தாத்தாவோடு முடிஞ்சுப் போச்சு. அப்பா லாரித் தொழில்ல இறங்கிட்டாரு. இந்த நிலையில, பி.காம் படிப்பை முடிச்சுட்டு, நானும் அப்பா தொழிலுக்கு வந்தேன். 2010-ம் வருஷம் வரைக்கும் அந்தத் தொழிலை மட்டுமே பார்த்தேன். அதுக்குப் பிறகு, இயற்கை விவசாயம் செய்யுற ஆர்வம் வந்துச்சு. அதுக்குத் தோதா இடம் வாங்க முயற்சி பண்ணினேன். நான் நினைச்சபடி, கெஜகோம்பையில 3 ஏக்கர் நிலம் கிடைச்சது. 2014-ம் வருஷம் வாங்கினேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர் தொடர்ந்து பேசினார்.

‘‘சின்ன வெங்காயம், எள்ளு, நிலக்கடலை, சோளம், நெல்னு சாகுபடி பண்ண நினைச்சேன். 2015-ம் வருஷம் தொழுவுரத்தை மட்டும் போட்டு, நிலக்கடலையும், நெல்லும் பயிரிட்டேன். ஆனா, சரியான வழிகாட்டுதல், போதிய அனுபவம் இல்லாம ஏக்கருக்கு 10 மூட்டை நெல்லுதான் மகசூலா கிடைச்சது. 2 ஏக்கர்ல போட்ட நிலக்கடலை ஓரளவு விளைஞ்சது. அதனால, இயற்கை விவசாய அறிவை வளர்த்துக்க முயற்சி பண்ணுனேன்.

இடுபொருளுடன்
இடுபொருளுடன்

2014-ம் வருஷத்துல இருந்து பசுமை விகடனை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதனால, நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது. பஞ்சகவ்யா மாதிரியான இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க, நாட்டு மாடுகள் தேவைனு உணர்ந்து, 6 காங்கேயம் மாடுகள், 6 கன்றுக்குட்டிகளை வாங்குனேன். ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மண்புழு உரம், பொன்னீம் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சி பூண்டு கரைசல், ஐந்திலை கஷாயம், பத்திலை கஷாயம் செய்ய கத்துக்கிட்டேன். தொடர்ந்து இயற்கை விவசாயம் செஞ்சதால 2021-ம் வருஷம் அங்ககச் சான்றிதழை வாங்க முடிஞ்சது’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘போன வருஷம் சீரகச் சம்பா ஒரு ஏக்கர், சோளம் அரை ஏக்கர், நிலக்கடலை அரை ஏக்கர், சேனைக்கிழங்கு அரை ஏக்கர், சின்ன வெங்காயம் அரை ஏக்கர் சாகுபடி பண்ணுனேன். நெல் 18 மூட்டை, நிலக்கடலை 9 மூட்டைக் கிடைச்சது. விலை இல்லாததால, சேனைக்கிழங்குல நஷ்டம்தான் வந்துச்சு. சின்ன வெங்காயமும் கைகொடுக்கல. நெல், கடலையை மதிப்புக்கூட்டி வித்தேன்.

விவசாயம்
விவசாயம்

நெல்

சீரகச் சம்பா 18 மூட்டையைப் பாரம்பர்ய முறையில் கொப்பரை வெச்சு அவிச்சு, காய வெச்சு அரிசியா அரைச்சேன். 700 கிலோ அரிசி கிடைச்சது. கிலோ 80 ரூபாய் விலை வெச்சு விற்பனை பண்ணினேன். பல ‘வாட்ஸ்அப்’ குழுக்கள் இருக்குறதால, விற்பனை செய்றதுல எனக்கு சிக்கல் வரல. விற்பனை மூலமா 56,000 ரூபாய் கிடைச்சது. இதுல, 20,300 ரூபாய் செலவாச்சு. இதை கழிச்சா, 35,700 ரூபாய் கிடைச்சது. வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்றேன். அதுமூலமா வருஷத்துக்கு 71,400 ரூபாய் லாபம் கிடைக்கும்.

நிலக்கடலை

9 மூட்டைக் கடலையை உடைச்சு ஆட்டுனதுல, 100 லிட்டர் கடலை எண்ணெய் கிடைச்சது. 10 லிட்டர் எண்ணெயை வீட்டு உபயோகத்துக்கு எடுத்துக்கிட்டு, மீதி இருந்த 90 லிட்டர் எண்ணெயையும் லிட்டர் 240 ரூபாய்னு விலை வெச்சு விற்பனை பண்ணினேன். அந்த வகையில, 21,600 ரூபாய் கிடைச்சது. இதுல, செலவுத் தொகையான 7,500 ரூபாயை கழிச்சா, 14,100 ரூபாய் கிடைச்சது. இதையும் 2 தடவை சாகுபடி செய்வேன். அது மூலமா வருஷ லாபம் 28,200 ரூபாய்.

சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கு

சோளம்

சேனைக்கிழங்கை கடந்த 4 வருஷமா பயிர் பண்ணிக்கிட்டு வர்றேன். ஆனா, கிலோ 5 ரூபாய்னு போறதால, அதுல நஷ்டம்தான். சோளத்தை, வருஷத்துக்கு 3 போகம் போடுவோம். ரெண்டு போகத்தில சோளம் பால்பூட்ட வரும்போது, அறுத்து மாட்டுக்கு வெச்சுக்குவோம். ஒரு போகச் சோளத்தை மட்டும் விதைக்காக விட்டு அறுவடை பண்ணுவோம். சோளத்தைப் பொறுத்தவரை மாட்டுக்குத் தீவனமாக மட்டும் பயன் படுத்துறோம்.

தென்னை

3 ஏக்கர் நிலத்தைச் சுத்தியும், நிலத்தை வாங்கினப்பவே வரப்பு ஓரங்கள்ல 70 தென்னை மரங்கள் இருந்துச்சு. வருஷத்துக்கு 3 வெட்டுகள் வரை வெட்டுவோம். அதையும் தேங்காயா விற்பனை செய்யாம கொப்பரை இல்லைன்னா, எண்ணெயா ஆட்டி விற்பனை செய்றோம். அந்த வகையில வருஷத்துக்கு 70,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். இதுல, செலவுனு பெருசா ஒண்ணும் இருக்காது. காய் பறிக்குற ஆளுங்களுக்குக் கூலியாக பன்னாடை, மட்டை விற்பனை மூலமாக் கிடைக்குற தொகை ஈடாயிரும்” என்றவர், மண்புழு உரம் தயாரிப்பில் உள்ள வரவுச் செலவுக் கணக்கை விவரித்தார்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

மண்புழு உரம்

“தொட்டிகள்ல மண்புழு உரம் உற்பத்தி செய்றேன். மாசம் 4 டன் வரை மண்புழு உரம் கிடைக்குது. வருஷத்துக்கு 48 டன் கிடைக்குது. கிலோ 10 ரூபாய்னு விலை வெச்சு விற்பனை செய்றேன். அந்த 10 ரூபாயில மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப் பட்ட கட்டமைப்புக்கு மூலதனமா போட்ட செலவு, வேலையாள் செலவு, பேக்கிங் செலவுனு கிலோவுக்கு 6 ரூபாய் வரை செலவாயிரும். ஒவ்வொரு கிலோவுக்கும் 4 ரூபாய்தான் லாபம். அந்த வகையில, 48 டன்னுக்கு 1,92,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது.

மாடுகளுடன்
மாடுகளுடன்


மாடு

பஞ்சகவ்யா, மீன் அமிலம் தயாரிக்கிறேன். இ.எம் பண்றோம். இது மூணுலயும் சொந்தப் பயன்பாட்டுக்குப் போக, மீதியை விற்பனை செய்றோம். அந்த வகையில், மாசம் 5,000 ரூபாய் வரை கிடைக்குது. வருஷ கணக்குப் பார்த்தா 60,000 ரூபாய் லாபம். அதேபோல, வருஷம் 8 மாடுகள் கன்று போடும். அதுல 6 கன்றுக்குட்டிகளை வளர்த்து விற்பனை பண்றேன். ஒரு கன்றுக்குட்டி சராசரியாக 20,000 ரூபாய்னு விலைபோகும். அந்த வகையில, வருஷத்துக்கு 1,20,000 ரூபாய் வரை கிடைக்கும்.

மஞ்சள்
மஞ்சள்

அழகுக்கோழி

அழகுக் கோழிகள், கிளிமூக்கு சேவலை வளர்க்கிறேன். சராசரியா சேவல் 4, பெட்டைகள் 15 இருக்கிற மாதிரி பார்த்துக் குவேன். மாசத்துக்கு 4 கோழிகள் வீதம் வருஷத்துக்கு 48 கோழிகள் விற்பனை ஆகுது. ஒரு கோழி 5,000 ரூபாய் விலைபோகும். அதுமூலமா 2,40,000 ரூபாய் கிடைக்குது. இதுல செலவுனு பார்த்தா, கம்பு, நெல் கருக்கா வாங்க 18,000 ரூபாய், மருந்துக்கு 6,000 ரூபாய்னு மொத்தம் 24,000 ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா, 2,16,000 ரூபாய் லாபம்.

ஆகமொத்தம், அரிசியில 71,400 ரூபாய், கடலை எண்ணெயில 28,200 ரூபாய், தென்னையில 70,000 ரூபாய், மண்புழு உரம் மூலம் 1,92,000 ரூபாய், பஞ்சகவ்யா, மீன் அமிலம் மூலம் 60,000 ரூபாய், கன்னுக்குட்டி மூலம் 1,20,000, அழகுக்கோழிகள் மூலம் 2,16,000 ரூபாய் லாபமாக் கிடைக்குது. எல்லாத்தையும் சேர்த்து பார்த்தா, வருஷத்துக்கு 7,57,600 ரூபாய் வரை லாபம் வருது’’ என்றவர் நிறைவாக,

‘‘ஆடு வளர்க்க முடிவு பண்ணி, ஒரு குட்டி, 3 பெட்டை, ஒரு கிடானு 4 உருப்படிகளை வாங்கியிருக்கிறேன். இன்னும் அதிக நிலம் வாங்கி, 30 சதவிகித இடத்துல மரப்பயிரையும், 70 சதவிகித இடத்தில இயற்கை விவசாயமும் செய்யணும்னு நினைச்சுருக்கிறேன். என் மனைவி தனபாக்கியம் எனக்கு ஒத்தாசையா இருக்காங்க” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, மாதேஸ்வரன்,

செல்போன்: 90039 23659

இடுபொருள்களுடன்
இடுபொருள்களுடன்

தென்னையில் ஊடுபயிர் வாழை

‘‘இ.பி காலனியில் இருக்க ஒருங்கிணைந்த பண்ணையில வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் போட்டிருக்கேன். மாடியிலும் காய்கறித் தோட்டம் அமைச்சிருக்கேன். தென்னைக்கு இடையில ஊடுபயிரா வாழை போட்டிருக்கேன். நிலக்கடலை, வெங்காயம், நெல், சோளம், சேனைக்கிழங்கு, எள்ளுனு வருஷத்துக்கு 3 போகம் வெள்ளாமை பண்றேன். இப்ப, வயல்ல அரை ஏக்கர்ல சீரகச் சம்பா போட்டிருக்கேன். 80 நாள் பயிரா இருக்கு. முதல்முறையா ஒரு ஏக்கர்ல மஞ்சள் போட்டிருக்கேன். அதோட, சேனைக்கிழங்கு அரை ஏக்கர்ல போட்டிருக்கேன். சரியான விலை இல்லாததால, அறுவடை நாள் நெருங்கியும் அறுவடை பண்ணாம வெச்சுருக்கிறேன். மீதியுள்ள ஒரு ஏக்கர்ல சோளம் இருக்கு.

மீன் அமிலம்
மீன் அமிலம்

இனக்கவர்ச்சிப் பொறி

பூச்சி மேலாண்மை பற்றிப் பேசிய மாதேஸ்வரன், “நெல் பயிர் போட்டிருக்கிற நிலத்துக்கு வரப்பு பயிரா உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, நரிப்பயறு போடுவேன். அந்தப் பயிர்களைப் பூச்சி அரிக்க ஆரம்பிச்சதுமே, நான் உஷாராகி, பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துவேன். இதைத் தவிர, பூச்சிகளைப் பிடிக்க, பசை தடவிய மஞ்சள், நீல அட்டைகளை வயல்ல நட்டிருக்கேன். நெல்லுக்கு ஏக்கருக்கு தலா 3 அட்டைகள்னு 6 அட்டைகளை நட்டிருக்கேன். புனல் வடிவ இனக் கவர்ச்சிப் பொறியை, ஏக்கருக்கு 6 வெச்சுருக்கேன். அதன்மூலம் ஆண் பூச்சிகள் கவர்ந்திழுக்கப்படுது. அதனால, பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுப்படும். இதைத் தவிர, சோலார் விளக்குப் பொறி ஏக்கருக்கு 2 வாங்கி, தானியங்கி முறையில சாயங்காலம் 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் இயங்குற வகையில அமைச்சுருக்கேன். பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் தென்பட்டால், அதுக்குத் தகுந்த மாதிரி, பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துறேன். பெரும்பாலும், வேம்பு, புங்கமர எண்ணெய் கலந்த பொன்னீம் கரைசலை பயன்படுத்துறேன்” என்றார்.

கருவிகள் வடிவமைப்பு

விவசாயத்துக்காகச் சில கருவிகளை வடிவமைத்துப் பயன்படுத்தும் மாதேஸ்வரன், அதைப் பற்றிப் பேசினார். “விவசாயத்துல ஜெயிக்கணும்னா, வேலையாட்கள் பயன்பாட்டைக் குறைக்கணும். அதுக்கு மாற்றா, தேவையான சின்னச் சின்ன விவசாயக் கருவிகளை நாமே வடிவமைக்கக் கத்துக்கணும். அந்த வகையில, எள்ளு, உளுந்து, நிலக்கடலை விதைக்க, பழைய சைக்கிள்ல ஒரு விதைப்பொட்டியை இணைச்சு, அதை நானே தள்ளிக்கிட்டுப் போய், இடைவெளிக்குத் தகுந்த மாதிரி விதைப்பேன். கடலைச் செடியில இருந்து கடலையைப் பிரிக்க, ‘கிரைண்டர்’ல இருக்குற கால் ஹெச்.பி பழைய மோட்டாரை வெச்சு, ஒரு கருவியை வடிவமைச்சிருக்கிறேன். நெல் வயல்ல களை எடுக்க, ஒரு ‘பவர் கோனோ வீடர்’ நானே வடிவமைச்சு, பயன்படுத்துறேன். மீன் அமிலம் பிழிய, ‘ஹைட்ராலிக்’ மூலமா பிழிஞ்சு எடுக்குற அமைப்பை உருவாக்கியிருக்கேன். இதன்மூலம், கைகள்ல மீன் முள் குத்தாது. அதிகமான மீன் அமிலம் எடுக்க முடியுது. மண்புழு உரத்தைச் சளிக்க, ஒரு கருவியை வடிவமைச்சுருக்கேன். அதன்மூலம், வேலையாள் எண்ணிக்கை குறையுறதோடு நமக்கு அதிகமான உரம் கிடைக்கும். மண்புழுக்களையும் சரியா பிரிக்க முடியுது” என்றார்.

இடுபொருள்
இடுபொருள்

பேனை விரட்டும் எருக்கு இலை

“கோழிகளுக்குப் பேன் தொல்லை அதிகமா வரும். வசம்பு குச்சியைத் தண்ணியில ஊற வெச்சு, கோழிக மேல தெளிச்சா, பேன்தொல்லை கட்டுப்படும். கோழிகள் அடைகாக்குற இடத்துல இரவு நேரத்துல மட்டும், எருக்கு இலையை வெச்சா, பேன் அதுல ஒட்டிக்கும். 120 முட்டைகள் வரை பொரிக்குற ‘இன்குபேட்டர்’ என்கிட்ட இருக்கு. கோழிகளுக்குச் சளிப்பிரச்னை வந்தா, சின்ன வெங்காயம், மிளகு, துளசியை இடிச்சு, உருண்டையாக்கி தீவனத்துல கலந்து கொடுத்திருவேன். பூண்டு அப்பப்போ கொடுத்தாலும், சளித்தொல்லை வராது. கோழிகளை வெள்ளைக்கழிசல் அப்பப்ப வந்து பாடாய்படுத்தும். அதுக்கு, வெயில் காலத்துல மோர் கொடுப்பேன். சுடுதண்ணியில மஞ்சள்பொடி கலந்து காலை நேரத்துல கொடுத்தாலும், கோழிகளுக்குச் சளி நீங்கும்” என்கிறார் மாதேஸ்வரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism