Published:Updated:

ஆண்டுக்கு... ரூ.8,43,000 லாபம்... 4 ஏக்கர் தென்னை... ஊடுபயிராக வாழை!

தென்னை+வாழை கலந்த பசுமைச் சோலைக்குள் சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
தென்னை+வாழை கலந்த பசுமைச் சோலைக்குள் சிதம்பரம்

மகசூல்

ஆண்டுக்கு... ரூ.8,43,000 லாபம்... 4 ஏக்கர் தென்னை... ஊடுபயிராக வாழை!

மகசூல்

Published:Updated:
தென்னை+வாழை கலந்த பசுமைச் சோலைக்குள் சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
தென்னை+வாழை கலந்த பசுமைச் சோலைக்குள் சிதம்பரம்

கடும் உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே லாபம் கிடைத்துவிடாது. சில தனித்துவமான தொழில்நுட்பங்களையும், ஊடுபயிர் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், நேரடி விற்பனை போன்ற வற்றையும் மேற்கொள்ளும்போதுதான் உத்தர வாதமான லாபம் பார்க்க முடியும். இது காலத்தின் கட்டாயம். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர், கொடிக்காலூர் அருகே உள்ள அம்மா தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிதம்பரம்.

கடந்த பத்தாண்டுகளாக, இயற்கை முறையில் 4 ஏக்கரில் தென்னைச் சாகுபடி செய்து வருவ தோடு, ஊடுபயிராக வாழையும் பயிர்செய்து வருகிறார். ஒரு பகல்பொழுதில் அவருடைய தென்னந்தோட்டத்துக்குச் சென்றோம். வெளியில் வெயில் வாட்டியெடுத்துக் கொண்டிருக்க, தோட்டத்துக்குள் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பசுமையாகக் காட்சி அளித்த தென்னை மரங்களும், வாழை மரங்களும் நம்மைப் பரவசப் படுத்தின.

தென்னை+வாழை கலந்த பசுமைச் சோலைக்குள் சிதம்பரம்
தென்னை+வாழை கலந்த பசுமைச் சோலைக்குள் சிதம்பரம்

அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று, ‘‘தென்னை, வாழை... இந்த ரெண்டுமே எவ்வளவு தெளிவா இருக்குப் பாருங்க. இந்தக் கடுமையான வெயில் காலத்துலகூட செழிப்பு குறையவே இல்ல. நாளுக்கு நாள் மண்ணு நல்லா வளமாகிக்கிட்டே இருக்குறதுனால, பூச்சி, நோய்த்தாக்குதலே இல்ல. எங்களோட தேங்காயைச் சாப்பிட்டு பார்த்தவங்க எல்லாருமே ஆச்சர்யப்படுறாங்க. அந்தளவுக்குத் தனிச்சுவையோட இருக்கு. இளநீரும் ரொம்ப அருமையா இருக்கும். நீங்க சாப்பிட்டுப் பாருங்க’’ என நம்மிடம் அன்புக் கட்டளை இட்டவர், பணியாளரிடம் சொல்லி, இளநீர் பறித்து வரச் சொன்னார். அவர் சொன்னது போலவே இளநீர் நல்ல சுவையுடன் இருந்தது.

‘‘இங்க விளையக்கூடிய வாழைப்பழங் களும் சுவையா, திரட்சியா இருக்கும். என்னோட தோட்டத்துல 10 வருஷமா, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துறது இல்ல. அதோட, நாட்டு மாட்டுக் கழிவுகள்ல தயார் செய்யக்கூடிய இடுபொருளை பயன் படுத்துறதுனால மண்ணு நல்லா வளமாகி, தென்னையும் வாழையும் நல்லா ஆரோக்கி யமா விளைஞ்சு, சுவையான விளைபொருளைக் கொடுக்குது’’ என நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

ஊடுபயிராக வாழை
ஊடுபயிராக வாழை

‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத் துல ஆர்வம் அதிகம். பள்ளிப்படிப்பை முடிச்சதுமே, விவசாயத்துல இறங்கிட்டேன். அப்பா உயிரோட இருந்தவரைக்கும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமதான் விவசாயம் செஞக்சுகிட்டு இருந்தார். ஆனா, அப்பெல்லாம் அதை இயற்கை விவசாயம்னு சொல்ல மாட்டாங்க. வீட்டுல நிறைய மாடுகள் இருந்துச்சு. கொட்டகை பக்கத் துலயே குப்பைக்குழி இருந்துச்சு. அதுல, சாணம், காய்கறிக் கழிவுகள், இலைதழை களைப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்தக் குழி நிரம்பினதும், அதுல இருக்கக் குப்பைகளை வயலுக்குக் கொண்டு போவாங்க.

அங்க, 50 அடி நீளம், 30 அடி அகலம், 10 அடி ஆழத்துல மிகப்பெரிய குப்பைக் குழி இருக்கும். வீட்டுல இருக்கக் குப்பைக் குழியில சேர்ந்த குப்பைகளை வயல்ல இருக்கப் பெரிய குப்பைக் குழியிலக் கொண்டு போயி போட்டுக்கிட்டே இருப்பாங்க. வருஷத்துக்கு ஒரு தடவை அந்தக் குப்பைக் குழியில இருக்கிற மட்கிய எருவை, தென்னந்தோப்புக்கும், நெல் வயலுக்கும் போடுவாங்க. இதைத் தவிர, வருஷத்துக்கு ஒரு தடவை ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை கட்டுவாங்க. வேறு எதுவும் நிலத்துக்கும் கொடுக்கிறதில்ல. ஆனாலும், செழிப்பான விளைச்சல் கிடைச்சது” என்றவர் சற்று இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

மாடுகள்
மாடுகள்

“அப்பாவோட மரணத்துக்குப் பிறகு, நான் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். அதனால செலவுகள் அதிகரிச்சதோட, பயிர்கள்ல பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமாச்சு. எங்க அப்பா செஞ்ச ஒரே தவறு, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியைத் தவிர்க்கணும்ங்கறதை என்கிட்ட வலியுறுத்திச் சொல்லாம போனதுதான். ஆனா, நான் என்னோட பிள்ளைகள்கிட்ட இதை வலியுறுத்திச் சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் செஞ்ச தவறை, எனக்குப் பிறகு என் பிள்ளைங்க செஞ்சிடக் கூடாது’’ என்று எச்சரிக்கை உணர்வோடு சொன்னவர், தற்போதைய விவசாயம் பற்றிப் பேசினார்.

ஊடுப்பயிர் சாகுபடியால் ஏற்படும் நன்மை

‘‘எனக்கு 4 ஏக்கர் புஞ்சை, 3 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. நான் விவசாயத்தைக் கையில எடுத்தப்ப, புஞ்சை நிலத்துல தென்னை மரங்க மட்டும்தான் இருந்துச்சு. நாக்கரிச்சான்ங்கற களைப்புல் அதிகமா மண்டும். அதைக் கட்டுப்படுத்துறது ரொம்பவே சிரமமா இருந்துச்சு. அது ரொம்பச் சுனையோட இருக்கும். அதை நாட்டு மாடுங்க விரும்பிச் சாப்பிடும். எங்க அப்பா உயிரோட இருந்தவரைக்கும், மாடுக வளர்த்ததுனால, தென்னந்தோட்டத்துல அதுங்களை மேயவிட்டு, எளிதா கட்டுப் படுத்திடுவார்.

நான் ரசாயன விவசாயம் செஞ்சதுனாலயும், வேலையாள்கள் தட்டுப்பாட்டுனாலயும், மாடுகளை வித்துடேன். அதனால, களையைக் கட்டுப்படுத்த ரொம்பச் சிரமப்பட்டேன். ‘ஊடுபயிரா வாழைச் சாகுபடி செஞ்சா, களைகளை எளிதா கட்டுப்படுத்திடலாம்’னு சிலர் சொன்னாங்க. அதனால தென்னந் தோட்டத்துல ஊடுபயிரா வாழைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். களை கட்டுப் படுத்தப்பட்டதோடு, கூடுதல் வருமானமும் கிடைச்சிக்கிட்டு இருக்கு’’ என்று சொன்னவர், இயற்கை விவசாய அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

ஊடுபயிராக வாழை
ஊடுபயிராக வாழை

‘‘ரசாயன உரங்கள் பயன்படுத்திக்கிட்டு இருந்தவரைக்கும் தென்னையில் காய்ப்பு ரொம்பக் குறைவா இருந்துச்சு. பூச்சி, நோய்த்தாக்குதலும் அதிகமா இருந்துச்சு, வாழையிலயும் நிறைய பிரச்னைகள். ஆனாலும், அதை நான் பெருசா கண்டுக்காம தான் இருந்தேன். 10 வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு ஒரு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுச்சு. இயற்கை மருத்துவர் சித்தர்கிட்ட சிகிச்சைக்குப் போனேன். அவர்கிட்ட, விவசாயத்தைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டு இருந்தேன். அவர்தான் இயற்கை விவசாயத் தோட அவசியத்தை எனக்கு உணர வச்சார். பாரம்பர்ய நெல் ரகங்களோட மகத்துவத் தையும் என் மனசுல பதிய வச்சார். அதுக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்துல இறங்கினேன். இதுக்காகவே நாட்டு மாடுக வளர்க்க ஆரம்பிச்சேன். இப்ப என்கிட்ட 6 உம்பளச்சேரி நாட்டு மாடுகள் இருக்கு’’ என்று சொன்னவர், வருமானக் கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.

வருமானம்

‘‘4 ஏக்கர்ல இருக்க 300 தென்னை மரங்கள்ல இருந்து, ஒரு வெட்டுக்கு 5,000 காய்கள் வீதம் ஒரு வருஷத்துக்கு 7 வெட்டு மூலமா, 35,000 காய்கள் கிடைக்குது. என் தோட்டத்துல விளையக்கூடிய தேங்காயை, நானே என்னோட கடையில வெச்சு நேரடியா விக்கிறதுனாலயும், இயற்கை முறையில உற்பத்தி செஞ்சதுனாலயும் ஒரு காய்க்கு 15 ரூபாய் வீதம் 5,25,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

அட்டவணை
அட்டவணை

ஊடுபயிரான 2,000 வாழையில இருந்து வருஷத்துக்கு 1,550 தரமான வாழைத்தார்கள் கிடைக்குது. தார்கள், மரத்துலயே பழுக்க ஆரம்பிச்ச பிறகுதான், அறுவடை செய்வோம். ஒரு தார்ல ஏதாவது ஒரு சில காய்கள் பழுக்க ஆரம்பிச்சிருந்தாலே போதும். அறுவடை செஞ்ச ரெண்டு மூணு நாள்லயே அந்தத் தார் முழுமையா பழுத்துடும். செயற்கை முறையில பழுக்க வைக்காம, மரத்துலயே பழுக்க ஆரம்பிச்ச பிறகு, அறுவடை செய்றதுனால பழம் கூடுதல் சுவையோடு இருக்குது. வாழைத்தாரை சீப்பு போட்டு, என் கடையில வச்சு விற்பனைச் செஞ்சிடுவேன். ஒரு தார் குறைந்தபட்சம் 400 ரூபாய் வீதம் 1,500 தார்கள் மூலம் வருஷத்துக்கு 6,00,000 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆக, மொத்தம் இந்த 4 ஏக்கர்ல உள்ள தென்னை, இதுல ஊடுபயிரா உள்ள வாழை மூலம் வருஷத்துக்கு மொத்தம் 11,25,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அறுவடை, களை, இடுபொருள், மற்ற செலவுகள் எல்லாம் போக 8,43,500 ரூபாய் நிகரலாபமா கையில கிடைக்கும்’’ என்றவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம்.


தொடர்புக்கு,

சிதம்பரம், செல்போன்: 94862 65962

ஊட்டம் தரும் உரக்கிடங்கு

உரக்கிடங்கு பற்றிப் பேசிய சிதம்பரம், ‘‘4 ஏக்கர் தென்னந்தோப்பு. தலா 23 அடி இடைவெளியில 300 தென்னை மரங்கள் இருக்கு. 20 வயசுல இருந்து 60 வயசுக்கு மேற்பட்ட மரங்கள்வரைக்கும் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையில, ஊடுபயிரா, தலா 7 அடி இடைவெளியில 2,000 வாழை மரங்கள் இருக்கு. ரெண்டு தென்னை வரிசைக்கு இடையில 2 அடி அகலம், 1.5 அடி ஆழத்துக்கு வாய்க்கால் போன்று உரக்கிடங்கு அமைச்சிருக்கேன்.

நடைபாதையோட தேவைக்கு ஏற்ப, அங்கங்க உரக்கிடங்கோட நீளம் மாறுபடும். தென்னை மட்டை, வாழைச்சருகு, தேங்காய் உரிமட்டை, இலைதழைகள், களைச்செடிகள், தார் அறுவடை செஞ்ச பிறகுள்ள வாழை உட்பட எல்லாத்தையும் உரக்கிடங்குல போட்டுடுவேன். தோட்டத்துல பெய்யக்கூடிய மழைநீர் இதுல முழுமையா சேகரமாகுது. உரக்கிடங்கு வழியாதான் தண்ணீர் பாய்ச்சுறோம். தென்னைக்காகக் கொடுக்கக்கூடிய இடுபொருளை, இந்தக் கிடங்கு மூலமாகத்தான் கொடுக்குறோம். வருஷத்துக்கு ரெண்டு தடவை பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் கொடுப்போம்.

உரக்கிடங்கு
உரக்கிடங்கு

சாணம், மாட்டுச் சிறுநீர், வெல்லம் கலந்த இடுபொருள் கொடுப்போம். இதை உரக்கிடங்குலயே ஊத்திடுவோம். இதனால இடுபொருள் கொடுக்குறதுக்கான ஆள் செலவு மிச்சமாகுது. இது மூலமாகவே சத்துகள் தென்னைக்குக் கிடைச்சிடும். ஒவ்வொரு தென்னைக்குப் பக்கத்துலயும் அரைவட்டமா பள்ளம் பறிச்சு இடுபொருள்கள் கொடுக்குறதா இருந்தால் செலவு அதிகமாகும்.

தென்னையைவிட வாழைக்குச் சீக்கிரமாகவும் கூடுதலாகவும் சத்துகள் கிடைக்க வேண்டிய தேவை இருக்குறதுனால, ஒவ்வொரு வாழை குத்துக்குப் பக்கத்துலயும் ஒரு குச்சியால சின்ன பள்ளம் பறிச்சு, பஞ்சகவ்யா, இ.எம், சாணம், மாட்டுச்சிறுநீர், நாட்டுச்சர்க்கரை கலந்த இடுபொருளைப் போடுவோம். இதனால வாழை ஊக்கமா வளருது. வருஷத்துக்கு ஒரு தடவை தோட்டம் முழுக்கப் பரவலா களைகளைக் கொத்தி, அதை உரக்கிடங்குல போடுவோம். வருஷத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு வாழையைச் சுற்றியும் களைகளைக் கொத்துவோம். தரமில்லாத பக்கக் கன்றுகளைப் பெயர்த்து எடுத்துடுவோம். இப்ப எங்க தோட்டத்துல வாழை, 10-வது போக மறுவாழை. ஆனாலும் கூடத் தரமான தார்கள் கிடைச்சிக்கிட்டு இருக்கு’’ என்றார்.

பால்
பால் வருமானம் பற்றிப் பேசிய சிதம்பரம், ‘‘6 நாட்டு மாடுகள் வளர்க் குறோம். ஏதாவது ரெண்டு மாடுகள் மூலம் தினமும் ஒரு வேளை மட்டும் பால் கறப்போம். ரெண்டரை லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். சாயந்தரத்துல பால் கறக்குறதில்ல. கன்றுக்குட்டிகளுக்கு விட்டுடுவோம்’’ என்றார்.

நெல்
நெல்

பராமரிப்பு முறை

தென்னைக்கு ஒரு மரத்துக்கு 250 மி.லி வீதம் பஞ்சகவ்யாவை, உரக்கிடங்கில் (தென்னை மரங்களுக்கிடையில் வாய்க்கால் போன்று இருக்கும் உரக்கிடங்கு) ஊற்ற வேண்டும். இதுபோல் ஆண்டுக்கு முறை பஞ்சகவ்யா கொடுக்க வேண்டும். ஒரு மரத்துக்கு 5 லிட்டர் வீதம் ஜீவாமிர்தத்தை, உரக்கிடங்கில் ஊற்ற வேண்டும். இதுபோல் ஆண்டுக்கு இரு முறை ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். 10 கிலோ மாட்டுச் சாணம், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 500 கிராம் நாட்டுச்சர்க்கரை இவற்றை ஒன்றாகக் கலந்து, நிழற்பாங்கான இடத்தில் மூடி வைத்து, தினமும் கலக்கி விட வேண்டும்.

5 நாள்களுக்குப் பிறகு, இக்கரைசலுடன் 50 லிட்டர் தண்ணீர் கலக்க வேண்டும். இக்கரைசலிலிருந்து, ஒரு தென்னைக்கு ஒரு லிட்டர் வீதம் உரக்கிடங்கில் ஊற்ற வேண்டும். இதுபோல் ஆண்டுக்கு மூன்று முறை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வாழையின் அருகிலும் ஒரு குச்சியால், சிறு பள்ளம் பறித்து, தலா 100 மி.லி பஞ்சகவ்யா, தலா 20 மி.லி திறன்மிகு நுண்ணுயிரி திரவக் கரைசல் ஊற்ற வேண்டும். இதுபோல் ஆண்டுக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப 15 - 20 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை தோட்டம் முழுக்கப் பரவலாகக் களைகளைக் கொத்தி, உரக்கிடங்கில் போட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, வாழையைச் சுற்றிலும் களை கொத்த வேண்டும்.

நெல் சாகுபடி

‘‘3 ஏக்கர்ல இருபோகம் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றோம். ஏக்கருக்கு 21 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்குது. அரிசியா மதிப்புக்கூட்டிதான் விற்பனைச் செய்றேன். இதுலயும் எனக்கு நிறைவான லாபம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. வைக்கோலை எங்களோட மாடுகளுக்குப் பயன்படுத்திக்குறோம்’’ என்கிறார் சிதம்பரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism