Published:Updated:

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,80,000 மகத்தான லாபம் கொடுக்கும் மாசிப்பச்சை!

தோட்டத்தில் மோகன்தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் மோகன்தாஸ்

மகசூல்

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,80,000 மகத்தான லாபம் கொடுக்கும் மாசிப்பச்சை!

மகசூல்

Published:Updated:
தோட்டத்தில் மோகன்தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் மோகன்தாஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில், வடகாடு, கீரமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை கட்டப் பயன்படுத்தும், மாசிப் பச்சை (மரிக்கொழுந்து அல்ல) அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை அருகே மேற்பனைக்காடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், தன்னுடைய தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக மாசிப்பச்சை பயிரிட்டு வருகிறார். ஒரு மாலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம். மாசிப்பச்சை அறுவடையில் முனைப்பாக இருந்தவர், அறுவடையை முடித்த பிறகு, நம்மிடம் வந்தார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“மேற்பனைக்காடுதான் நான் பிறந்த ஊர். விவசாயக் குடும்பம். வெளிநாட்டுல சம்பாதிச்ச பணத்தை வச்சி, வீட்டுக்கிட்ட 4 ஏக்கர், அதுக்குக் கொஞ்சம் பக்கத்துல 2 ஏக்கர்னு மொத்தம் 6 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிப்போட்டேன். பிறகு, அதுல ‘போர்’ போட்டேன். 4 ஏக்கர்ல தென்னையை நட்டேன். அதற்கப்புறம்தான், நாங்க இருந்த குடிசை வீட்டை இடிச்சுட்டு, ஓட்டு வீடு கட்டுனேன். என்னோட மூணு பசங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சேன். நமக்கு நல்லா தெரிஞ்ச தொழில் விவசாயம். கடைசிக் காலத்துல அதுதான் நமக்கு உதவும்னு நெனச்சு, இந்த நிலத்தை வாங்கிப் போட்டேன். இதுவும் நான் நெனச்ச மாதிரியே எனக்குக் கைகொடுக்குது. வெளிநாடுகள்ல வேலை பார்த்துட்டு, ஊருக்கு வந்து 20 வருஷம் ஆகிருச்சு. இப்போ முழு நேரமா விவசாயத்துல ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன்.

மாசிபச்சையுடன் மோகன்தாஸ்
மாசிபச்சையுடன் மோகன்தாஸ்

தேங்காய் 2 மாசத்துக்கு ஒரு தடவைதான் வெட்டுக்கு வரும். இடையில ஊடுபயிரா ஏதாவது போடலாம்னு யோசிச்சு, கத்திரி, மிளகாய்னு காய்கறிகளைப் போட்டுப் பார்த்தேன். கோழி, மயில் தொல்லையால அது எதுவும் சரிபட்டு வரல. அந்த நேரத்துல மகள் வீட்டுல, கொஞ்சமா இந்த மாசிப் பச்சை நடவு செஞ்சிருந்தாங்க. அவங்கள பார்த்துதான், நாமலும் இதைச் செய்யலாம்னு தோணுச்சு. சம்பந்தி வீட்டுல இதைப் பத்தி முழுசா கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, பச்சை விவசாயத்துல முழுசா இறங்கிட்டேன். இப்போ 10 வருஷமா 2 ஏக்கர் தென்னைக்குள்ள மாசிப்பச்சை சாகுபடி செஞ்சு, அதுல நல்ல மகசூல் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

மாசிப்பச்சை சாகுபடி செய்ய ஆரம்பிச்சி இப்போ 10 வருஷமாச்சு. வழக்கமா குப்பை உரம் வச்சிட்டு, அதற்கப்புறம் காம்ளக்ஸ், யூரியா போட்டுதான் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கோம். சில வருஷங்களுக்கு முன்னால, உரச் செலவைக் குறைச்சுப் பார்க்கலாம்னு நெனச்சு, ஒரு பாத்தியில மட்டும் குப்பையை மட்டும் வச்சிட்டு, மேற்கொண்டு ரசாயன உரம் போடாம விட்டுப்பார்த்தேன். அறுவடை நேரம் வந்தும் அந்தப் பாத்தியில இருந்த மாசிப்பச்சை மட்டும் வளர்ச்சியே இல்லாம இருந்துச்சு. அதை அறுத்து விற்பனைக்குக் கொண்டு போகவே, முடியலை. செயற்கை உரம், பூச்சிக்கொல்லி போட்டாதான் மாசிப்பச்சையே வரும்ங்கிற நிலைக்கு நான் வந்திட்டேன். தொடர்ச்சியா, ரசாயன உரம் பயன்படுத்தி வந்ததன் பலன், என்னோட மண்ணு இன்னிக்கு மலடாகிப் போகிற நிலைமையிலதான் இருக்கு. மண்ணுல நடக்குற மாற்றம், இப்போ கண்கூடா தெரியுது. மண்ணைக் காப்பாத்த என்ன செய்யலாம்னு வேளாண் அதிகாரிகளை அணுகினப்பதான், அசோஸ்பைரில்லம் டிரைக்கோடெர்மாவிரிடி, சூடோமோனஸ், பஞ்சகவ்யாவைப் பயன்படுத்திப் பார்க்கலாம்னு சொல்லியிருக்காங்க.

இதற்கிடையில 3 உரம் போட்டுக்கிட்டு இருந்த நான், அதை ரெண்டாகக் குறைச்சிருக்கேன். பூச்சிக்கொல்லி இப்போ ரொம்ப குறைவாத்தான் பயன்படுத்திக்கிட்டு வர்றேன்.

தோட்டத்தில் மோகன்தாஸ்
தோட்டத்தில் மோகன்தாஸ்


தொடர்ச்சியா, இப்போ மாசிப்பச்சை வெட்டு நடந்துக்கிட்டு இருக்கு. வெட்டுக்கு வந்திருக்கும் ரெண்டு பாத்தியில, சோதனை முயற்சியா இன்னும் சில தினங்களுக்குள்ளேயே வேளாண் அதிகாரிகள் சொன்னதை செஞ்சு பார்க்கலாம்னு இருக்கேன். இதுல, நல்ல முடிவு கிடைச்சா, முழுவதுமே இயற்கை விவசாயத்துக்கு மாறிடலாம்னு இருக்கேன். எங்க பகுதியில எனக்குத் தெரிய என்னோட சேர்த்து 99 சதவிகிதம் பேர் ரசாயன உரத்தைப் பயன்படுத்திதான் இந்த மாசிப்பச்சையை அறுவடை செஞ்சிக்கிட்டு இருக்கோம். என்னோட முயற்சியில நல்ல ரிசல்ட் கிடைச்சிருச்சின்னா, எங்க பகுதி விவசாயிகள் எல்லார்கிட்டயும் இதனைக் கொண்டு போய் சேர்த்து எல்லாரையும் மாத்திடணும்” என்ற மோகன்தாஸ் சாகுபடி மற்றும் விற்பனை குறித்துப் பேச ஆரம்பித்தார்.

“மாலை கட்டுறதுக்கும், கதம்பத்துக்கும் இந்த மாசிப்பச்சை பயன்படுது. மாசிப் பச்சையில கட்டுகிற மாலைகள் மட்டும் தனியா தெரியும். மாசிப்பச்சைக்கு மட்டும்’ மார்க்கெட்’டுல எப்பவுமே மவுசு இருக்கும். அதனாலதான் 2 ஏக்கர்ல தென்னைக் கிடையில பாத்தி எடுத்து, மாசிப்பச்சையை நடவு செஞ்சிருக்கேன். இதைத் தினமும் சுழற்சி முறையில அறுவடை செய்றேன். அறுவடை செய்யுற மாசிப்பச்சையைப் பக்கத்துல இருக்கக் கீரமங்கலம் பூ ‘மார்க்கெட்’ல ‘கமிஷன்’ கடையிலக் கொண்டு போய்க் கொடுத்துக்கிட்டு இருக்கேன். மொத நாளே எவ்வளவு வேணும்னு ‘ஆர்டர்’ கொடுத் திருவாங்க. அன்னைக்குச் சாயங்காலமே அறுவடையை ஆரம்பிச்சிடுவோம். அறுக்குற மாசிப்பச்சையைத் தண்ணியில ஊறவெச்ச தென்னை ஓலை மூலமா முடிகளா கட்டுவோம். தொடர்ந்து, தண்ணி தெளிச்சு வெச்சிருந்து, அடுத்த நாள் அதிகாலையில மார்க்கெட்டுலக் கொண்டு போய்ப் போட்டுடுவேன். எப்பவுமே நம்ம பச்சை மட்டும் எந்தவித வாடலும் இல்லாம நல்லா இருக்கும். அதனாலயே எங்க மாசிப்பச்சைக்கு ‘மார்க்கெட்’டுல மவுசு அதிகமா இருக்கும்.

மாசிப்பச்சையை அதிகபட்சமா கிலோ 20 ரூபாய்க்கு எடுத்துக்கிறாங்க. இப்போ தினமும் சராசரியா 50 கிலோவுக்குக் குறையாம அறுவடை செஞ்சு விற்பனை செய்றேன். அது மூலமா தினமும் 1,000 ரூபாய் கிடைச்சிடும். மாசம் 30,000 ரூபாய் வருமானம் கிடைச்சிடும். அதுல, களை எடுக்குறது, உரம், அறுவடை செலவு, ஆள்கூலின்னு 15,000 ரூபாய் செலவாகிடும். பாதிக்குப் பாதி லாபமா கிடைக்கும். இப்போதைக்கு என்னோட சேர்த்து வேலை பார்க்கிறதுக்கு ரெண்டு ஆளுங்க இருக்காங்க. இதையும் வெளி ஆளுங்க இல்லாம குடும்ப ஆளுங்களே பார்த்தா, இன்னும் கொஞ்சம் கூடுதலா லாபம் பார்க்கலாம். மாசிப்பச்சை மூலமா வருஷத்துக்கு 1,80,000 ரூபாய் எனக்கு லாபமா கிடைக்குது” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, மோகன்தாஸ்,

செல்போன்: 96292 83546.

மாசிப்பச்சை சாகுபடி
மாசிப்பச்சை சாகுபடி

இப்படித்தான் மாசிப்பச்சை சாகுபடி

மாசிப்பச்சை சாகுபடி செய்வது தொடர்பாக மோகன்தாஸ் சொன்ன சாகுபடி நுட்பங்கள் இங்கே பாடமாக...

மாசிப்பச்சைக்கு விதையோ, நாற்றோ தேவையில்லை. அதன் தண்டுப்பகுதி மட்டும் இருந்தால் போதும். அதை நடவு செய்யலாம். மாசிப்பச்சையைப் பொறுத்தவரை அரை வெயில், அரை நிழல் என்ற சூழல் இருப்பது அவசியம். அதிக மழை பெய்தாலும் ஆபத்துதான். வெயில் காலங்களில் நிலத்தைக் காய விடாமல் பாசனம் செய்ய வேண்டும்.

சாகுபடி நிலத்தை நன்கு உழவு செய்து, சிறு, சிறு பாத்திகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏக்கருக்கு 1,000 கிலோ எரு இட வேண்டும். அதன் பிறகு மாசிப்பச்சையின் தண்டுப் பகுதியை நடவு செய்ய வேண்டும். நடவு செய்தது முதல் ஈரம் காயாமல், 3 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். செடிகளின் வளர்ச்சிக்காக அறுவடைக்கு முன் இருமுறை உரம் இட வேண்டியது அவசியம். களைகள் வளர்ந்திருப்பதைப் பொறுத்துக் களை எடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தலாம். முதல் உரம் இட்ட அடுத்த ஒரு வாரத்தில் களை எடுக்க வேண்டும். நடவு செய்த 40 நாள்களில் அறுவடை செய்யலாம். ஏக்கர் கணக்கில் தென்னைக்குள் ஊடுபயிராகப் பயிர் செய்தால், ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம். ஒரு முறை நடவு செய்தால், சுமார் 8 ஆண்டுகள்வரை இலையை அறுவடை செய்யலாம். அதன் பிறகு, அழித்துவிட்டுப் புதிதாகத் தண்டுகளை வைத்து மீண்டும் சாகுபடி செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism