Published:Updated:

மா, நெல்லி... நாலரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,43,000... மகத்தான லாபம் தரும் மழைநீர் சேகரிப்பு!

மா அறுவடையில்
பிரீமியம் ஸ்டோரி
மா அறுவடையில்

மகசூல்

மா, நெல்லி... நாலரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,43,000... மகத்தான லாபம் தரும் மழைநீர் சேகரிப்பு!

மகசூல்

Published:Updated:
மா அறுவடையில்
பிரீமியம் ஸ்டோரி
மா அறுவடையில்

கடும் உழைப்பைக் கொட்டியும், பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டும் விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். விளைந்ததை சந்தைப்படுத் தும்போது பெரும் சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில்தான் கரூரைச் சேர்ந்த விவசாயி துரைசாமி, தன் விளை பொருள்களை விற்பனை செய்வதில் தனித்துவமான வியூகத்தைக் கடைப்பிடித்து கவனம் ஈர்க்கிறார். 4 ஏக்கரில் இயற்கை முறையில் மா, நெல்லி சாகுபடி செய்யும் இவர், பராமரிப்புப் பணிகளில் மட்டும் நேரடியாக முழுக் கவனம் செலுத்துகிறார். இங்கு விளைவிக்கப்படும் மா, நெல்லியை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டு, நிம்மதியான லாபம் பார்க்கிறார்.

கரூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வெண்ணைமலை பசுபதிபாளையத்தில் அமைந்துள்ளது துரைசாமியின் தோட்டம். இப்பகுதி முழுவதும் கட்டடக் காடுகளாக மாறிவரும் நிலையில்... நட்ட நடுவே பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் இவருடைய தோட்டம் காட்சி அளிக்கிறது. ஒரு பகல் பொழுதில் இத்தோட்டத்துக்குச் சென்றோம். பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த துரைசாமி, மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தபடியே பேசினார்.

குடும்பத்தினருடன் துரைசாமி
குடும்பத்தினருடன் துரைசாமி

“எனக்குச் சொந்த ஊர் மண்மங்கலம் புதுப்பாளையம். இந்தத் தோட்டம் அமைஞ்சிருக்குற பசுபதிபாளையம், என்னுடைய மாமனார் ஊர். நான் பி.காம் படிச்சுட்டு, 1991-ம் வருஷம் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில, திருமணப் பத்திரிகைகள் அச்சடிக்கும் அச்சகத்தைத் தொடங்கினேன். அப்ப எனக்கு விவசாயத்தைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்குத் திருமணமான பிறகு, மாமனார் வீடல செட்டிலானேன். அவங்களுக்கு இங்க ரெண்டேகால் ஏக்கர் நிலமிருந்துச்சு. மேற்கொண்டு இந்த இடத்துல நான் இரண்டேகால் ஏக்கர் நிலம் வாங்கினேன்.

ஆசைகாட்டிய ரியல் எஸ்டேட் புரோக்கர்கள்...

அசைந்து கொடுக்காத துரைசாமி

கரூர் நகரையொட்டி இந்த ஊர் இருக்குறதுனால, இங்கயிருந்த விவசாய நிலங்கள்ல பெரும்பகுதி, வீட்டுமனையா மாறிடுச்சு. 2005-ம் வருஷமே கிட்டத்தட்ட 90 சதவிகித நிலங்களைப் பிளாட் போட்டு விற்பனை செஞ்சுட்டாங்க. புரோக்கர்கள் என்னோட நிலத்தையும் பிளாட் போட்டு விற்க சொல்லி ஆசை காட்டினாங்க. ஆனா, நான் அதுக்கெல்லாம் ஒத்துக்கலை. விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டேன்.

2005-ம் வருஷம், இந்த நாலரை ஏக்கர் நிலத்துல மா, நெல்லி சாகுபடி செய்ய தீர்மானிச்சேன். ஒரு வரிசை மா மரக் கன்றுகள்... அடுத்த வரிசை நெல்லிக் கன்றுகள்னு மாத்தி மாத்தி நடவு செஞ்சேன். மா வரிசைக்கும் நெல்லி வரிசைக்கும் இடையில 10 அடி இடைவெளி. ஒரு மா மரத்துக்கும் இன்னொரு மா மரத்துக்கும் 20 அடி இடைவெளி. நெல்லிக்கு நெல்லி நீள வாக்கில் 15 அடி இடைவெளி இருக்குற மாதிரி கன்னுகளை நடவு செஞ்சேன். பங்கனப்பள்ளி, இமாம் பசந்த் உட்பட 400 மாங்கன்னும், என்.ஏ 7 ரக நெல்லி 400 கன்னும் நட்டேன்.

நெல்லி
நெல்லி

பலவிதமான சவால்கள்

இங்க ஏற்கெனவே 35 அடி ஆழத்துல ஒரு கிணறு இருந்ததால, மோட்டார் மூலம் அந்தத் தண்ணியை மரக்கன்றுகளுக்குப் பாய்ச்சினேன். ஆனா, அந்தத் தண்ணி போதாததால, அடுத்த வருஷமே 550 அடியில ஒரு போர்வெல் போட்டுத் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பிச்சேன். அப்பாடா... இனிமே எந்தக் கவலையும் இல்லைனு நினைச்சேன். ஆனா அடுத்த சில வருஷங்கள்ல 100-க்கும் மேல மாங்கன்னுங்க கருக ஆரம்பிச்சது. ரொம்பவே பயந்துபோயிட்டேன். இது சுண்ணாம்புத் தன்மை அதிகமுள்ள பகுதி. அதனாலதான் கன்னுங்க கருகியிருக்குனு இந்தப் பகுதி விவசாயிங்க சொன்னாங்க.

நல்லவேளையா 240 மாங்கன்னுங்க, 380 நெல்லி கன்னுங்க நல்லா தேறி வந்து, மரங்களா வளர்ந்து காய்ப்புக்கு வந்துச்சு. பொதுவா இது மாதிரியான பழ வகை மரங்களுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி எல்லாம் தேவையில்லைங்கறதுனால, ஆரம்பத்துல இருந்து மாட்டு எரு மட்டும்தான் கொடுத்தேன். வீட்டுல பத்து மாடுகள் இருந்ததால, தாராளமா எருவும் கிடைச்சது.

வருமானம்

2011-ம் வருஷத்துல இருந்து, இந்த நாலரை ஏக்கர்ல வருஷத்துக்கு 2 டன் மாங்காய்களும், 4 டன் நெல்லிக்காய்களும் கிடைச்சது. அதை அறுவடை செஞ்சு, விற்பனை செய்றதுல ஏகப்பட்ட சவால்களைச் சந்திச்சேன். நிறைவான லாபம் கிடைக்கவே இல்லை.

மா அறுவடையில்
மா அறுவடையில்

குத்தகை

இப்படிப்பட்ட சூழ்நிலையிலதான் மரங்களுக்குத் தண்ணி விடுறது, களை எடுக்குறது, இடுபொருள் கொடுக்குறது, உழவு ஓட்டுறதுனு தோட்டத்தைப் பராமரிக்குறதை மட்டும் நாம பார்த்துக்குவோம்... காய்களை அறுவடை செஞ்சு, விற்பனை செய்யும் பொறுப்பை வேற யாருக்கிட்டயாவது ஒப்படைச்சிடலாம்னு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த மல்லிகாங்கறவங்ககிட்ட குத்தகைக்கு விட்டேன். ஒவ்வொரு வருஷமும் காய்ப்போட தன்மையைப் பார்த்து, அறுவடைக்கு முன்னாடியே பணம் கொடுத்துடுவாங்க. மூணு வருஷமா இந்த ஒப்பந்த முறையைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.

முதல் வருஷம் 3 லட்சம் ரூபாய் குத்தகை பணம் கொடுத்தாங்க. போன வருஷத்துல 4 லட்சம் ரூபாயும், இந்த வருஷத்துல 6 லட்சம் ரூபாயும் குத்தகை பணமா கொடுத்தாங்க. இந்த வருஷம் எங்க தோப்புல நல்ல காய்ப்பு. 5 டன்னுக்கு மேல மாங்காய்களும், 10 டன்னுக்கு மேல நெல்லிக்காய்களும் பறிச்சுருப்பாங்க. அதுல அவங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்னு எல்லாம் நான் கணக்குப் போட்டுப் பார்க்குறதில்லை. எனக்கு உத்தரவாதமான லாபம் கிடைச்சா போதும்’’ என்றவர், தன்னுடைய தோட்டத்தின் பராமரிப்பு மற்றும் செலவுகள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார்.

அறுவடையான நெல்லிக்காய்களுடன்
அறுவடையான நெல்லிக்காய்களுடன்

“வருஷத்துக்கு நாலு தடவை டிராக்டரை வச்சு உழுவோம். அதுக்கு 25,000 ரூபாய் செலவாகுது. வருஷத்துக்கு ஒரு தடவை, ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் அரைவட்டமா, முக்கால் அடி ஆழத்துக்குப் பள்ளம் பறிச்சு, 6 கிலோ எருவுக்கு 1 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு கலந்து போடுவோம். அதுக்கு 24,000 ரூபாய் செலவாகும். வருஷத்துக்கு நாலு முறை களை எடுப்போம். அதுக்கு 28,000 ரூபாய் செலவாகும். தோட்டத்துலயே நிரந்தரமா தங்கியிருந்து கவனிச்சுக்குறதுக்கு, ஒரு விவசாயத் தொழிலாளர் குடும்பத்தை இங்கயே நிரந்தமா தங்க வச்சுருக்கோம். அவங்களுக்கு வருஷத்துக்கு 1,80,000 ரூபாய் சம்பளம் கொடுக்குறேன். ஆகமொத்தம் ஒரு வருஷத்துக்கு 2,57,000 ரூபாய் செலாகுது. இந்த வருஷம் கிடைச்ச குத்தகை தொகை 6,00,000 ரூபாய்ல எல்லாச் செலவுகளும் போக, 3,43,000 ரூபாய் நிகர லாபமா கிடைச்சிருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு இது நிறைவான லாபம்’’ என்று உற்சாகமாக சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, துரைசாமி,

செல்போன்: 94437 43336

வறட்சியை விரட்டிய மழைநீர் சேகரிப்பு!

இப்பகுதியில் தொடர்ச்சியாக நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மழைநீரை சேகரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்தியுள்ளார் துரைசாமி. இதில் சேகரிக்கப்படும் மழைநீரைத் தன்னுடைய தோட்டத்துக்கு பாசனத்துக்குப் பயன்படுத்துவதோடு, குடிநீர், குளியல் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார். இது குறித்து மிகுந்த உற்சாகத்தோடு பேசும் துரைசாமி, ‘‘இந்தத் தோட்டத்துக்குப் பக்கத்துலயே 50 சென்ட் நிலம் வாங்கிப் போட்டுருந்தேன். இங்கதான் என்னோட அச்சகம் செயல்படுது. இந்தக் கட்டடத்தோட மொட்டை மாடி பரப்பு 20 அடி அகலம், 80 அடி நீளம். இது தவிர மற்ற பயன்படுகளுக்காக, மூணு தகரக் கொட்டகையும் அமைச்சிருந்தேன்.

2017-ம் வருஷம் என் தோட்டத்துல இருந்த கேணியில் தண்ணி வத்திப் போயிடுச்சு. எங்க பகுதியில அந்த வருஷம் வறட்சியால, நிலத்தடி நீர்மட்டம் 1,300 அடிக்கு கீழ போயிடுச்சி. நான் ஏற்கெனவே போட்டிருந்த போர்வெல் 550 அடி தான் ஆழம். போர்லயும் தண்ணி இல்லை. அதனால 1,100 அடியில புதுசா ஒரு போர்வெல் போட்டேன். அப்போதான், தண்ணீரோட முக்கியத்துவம் புரிஞ்சுச்சு. அச்சகத்துக்காக அமைச்சிருந்த கட்டடத்தோட மொட்டைமாடி, மற்ற பயன்பாட்டுக்காக அமைச்சிருந்த தகர ஷீட் கொட்டகைகள் எல்லாம் சேர்த்து, மொத்தம் 20,000 சதுர அடி பரப்புல பெய்யும் மழைநீரை சேமிக்க, ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன். கட்டடம், தகரக் கொட்டகைகள்ல இருந்து வடியக்கூடிய மழைநீரைக் கொண்டு வர 4 குழாய்கள் அமைச்சேன். அதை 8 இன்ச் விட்டம் கொண்ட குழாய்ல இணைச்சேன். அது வழியா வரக்கூடிய மழைநீரை சேமிக்க, ஒண்ணேகால் லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தொட்டியை உருவாக்கினேன். இதுல சேமிக்கப்படும் மழைநீரில் பூஞ்சணம் புடிக்காமல் தடுக்க, இந்தத் தொட்டிக்கு மேலே தகரத்தாலான மேற்கூரை அமைச்சிருக்கேன். பறவைகள், விலங்குகள் எதுவும் விழுந்துடாம இருக்க, தொட்டிக்கு மேலே நாலு பக்கமும் கிரீன் வலை அமைச்சிருக்கேன். இதுல சேகரிக்கக்கூடிய தண்ணியை மரங்களுக்குப் பாய்ச்சுறோம். இதனால, ஒரு தடவை இங்கே மழை பெய்ஞ்சா, அது எங்களுக்கு இரண்டுமுறை மழை பெய்ஞ்ச மாதிரியான பலனைக் கொடுத்தது. அதாவது, நேரடியா நிலத்துல விழக்கூடிய மழைத்தண்ணியால, மண்ணுல ஈரம் தக்க வைக்கப்படுது. அதனால 10 நாள்களுக்கு மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. அதுக்குப் பிறகு இந்தத் தொட்டியில சேகரிக்கப்பட்ட மழைநீரை மரங்களுக்குப் பாய்ச்சிறோம்.

கட்டடங்களுக்கிடையே பசுமைப் பண்ணை
கட்டடங்களுக்கிடையே பசுமைப் பண்ணை

உபரிநீர் சேகரிப்பு

இந்தத் தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு மழை பெய்யும்போது, அந்த உபரி நீரை பூமிக்குள் விட அதுக்குத் தனியா ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கோம். 14 அடி சுற்றளவு, 16 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு தோண்டி, அதுல வெங்கை கற்களைக்(வெண்கற்கள்) கொட்டியிருக்கோம். தரைத்தொட்டியில் உபரியாக வரும் மழைநீரை குழாய் மூலம் கொண்டுபோய், இந்த வெங்கைகல் மேல விழும்படி செஞ்சோம். அதுமட்டுமல்லாம, எங்கள் தோட்டத்தைச் சுற்றி பெய்யும் மழைநீரை வடிய வைக்க, வாய்க்கால் மாதிரி வெட்டி, அதைக் கொண்டுபோய், அந்த வெங்கைகல் மழைநீர் சேமிப்பு அமைப்பு வழியாகப் பூமிக்குள் போற மாதிரி செஞ்சிருக்கேன். எவ்வளவு மழைநீரையும் இந்த வெங்கைகல் வெளியே தள்ளாமல் அப்படியே பூமிக்குள் கொண்டுபோகும் தன்மை கொண்டது. இப்படிச் செஞ்சதால், நிலத்தடி நீர்மட்டம் நாங்களே ஆச்சர்யப்படுற அளவுக்கு உயர்ந்திருக்கு. தண்ணீ வத்திப்போன 550 அடி போர்வெல்ல 15 அடியிலேயே தண்ணி கிடக்குது. வத்திப்போன 35 அடி கிணத்துல 10 அடி ஆழத்துலேயே தண்ணீர் சலசலக்குது.

குடிநீருக்கான சுத்திகரிப்பு

இதுக்கிடையில, 2020-ம் வருஷம் 4,000 சதுர அடியில இங்க ஒரு வீடு கட்டினோம். இதோட மொட்டை மாடியில பெய்யும் மழைநீரை ஒரு குழாய் மூலமா கொண்டு வந்து, சேகரிச்சு, அதை இயற்கையான முறையில சுத்திகரிச்சு குடிநீரா பயன்படுத்தக்கூடிய ஓர் அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கேன். இதுல, இயற்கையா வடிக்கட்டப்பட்டு வர்ற தண்ணீர் அவ்வளவு குளிர்ச்சியா இருக்கும். குடிநீருக்குப் போக மீதமுள்ள தண்ணீரை, சமையல் செய்ய, குளிக்க, துணி துவைக்கவும் பயன்படுத்திக்கிறோம்’’ என்கிறார்.

பூச்சி நோய்த்தாக்குதல்கள் இல்லை!

‘‘மாட்டு எரு, வேப்பம்புண்ணாக்கு போடுறதுனாலயும், இங்கவுள்ள மரங்கள்ல இருந்து விழக்கூடிய இலைதழைகளாலயும் மண்ணு நல்லா வளமாகி, மரங்கள் ஆரோக்கியமா வளருது. இதனால பெருசா சொல்லிக்குற அளவுக்கு எல்லாம் நோய்த்தாக்குதல் வந்ததில்லை” என்கிறார் துரைசாமி.