நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

70 சென்ட்.. ரூ.1,58,000 லாபம்!செழிக்க வைக்கும் செடி முருங்கை!

முருங்கைத் தோட்டத்தில் சுடலைமணி
பிரீமியம் ஸ்டோரி
News
முருங்கைத் தோட்டத்தில் சுடலைமணி

மகசூல்

முருங்கை. இன்றைக்கு உலகச் சந்தையில் வரவேற்புமிக்கப் பொருளாக இருக்கிறது. இலை, பூ, காய், பிசின் என அனைத்துமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில், சத்துகளும் மருத்துவக் குணங்களும் இருப்பதால் சந்தையில் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது.

‘முருங்கைக் காய்க்குச் சரியான விலை இல்லை’ என விவசாயிகள் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அவர்களில், சில விவசாயிகள் மாத்தி யோசித்து முருங்கை இலைகளைக் காய வைத்து உலர் இலைகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். தென்காசியைச் சேர்ந்த சுடலைமணியும் அவர்களில் ஒருவர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சந்தையின் எதிரே உள்ளது சுடலைமணியின் முருங்கைத் தோட்டம். அறுவடை செய்த முருங்கை இலைகளைக் காய வைத்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், கைகுலுக்கி வரவேற்றவர் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார், ‘‘எனக்குச் சொந்த ஊரே பாவூர்சத்திரம் பக்கத்துல உள்ள கீழப்பாவூர்தான். அடிப்படையிலேயே விவசாயக் குடும்பம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், நெல், காய்கறிகள்தான் எங்கப் பகுதியோட முக்கியமான சாகுபடிப் பயிர்கள்.

முருங்கைத் தோட்டத்தில் சுடலைமணி
முருங்கைத் தோட்டத்தில் சுடலைமணி

எங்க தாத்தா காலத்துல பெரிய அளவுல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து களோட பயன்பாடு இல்லாமத்தான் விவ சாயம் நடந்துச்சு. தாத்தாவுக்குப் பிறகு, அப்பா விவசாயத்தைக் கையில எடுத்ததும் ஊரோட ஒத்து வாழணும்னு சொல்லுற மாதிரி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி தெளிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குச் சின்ன வயசுல இருந்தே ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துறது பிடிக்காது. அதை நஞ்சு உரம், நஞ்சுக் கொல்லின்னுதான் சொல்வேன்.

‘அதையெல்லாம் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்யணுமா? மண்ணை மலடாக்குற உரம் தேவையா?னு அப்பா கிட்டயே ஒருநாள் கேட்டேன். ‘நீ சொல்லுறது உண்மைதான். ஆனா, உரம் போடாம எப்படி மகசூல் எடுக்க முடியும்? பூச்சிக்கொல்லி தெளிக்காம எப்படிப் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். இதையெல்லாம் செஞ்சாத்தான என்னத்தயாவது காசு கிடைக்கும். இல்லேன்னா, நட்டப்பட்டு (நஷ்டப்பட்டு) வெறுங்கையைத் தேச்சுக் கிட்டு நிக்கச் சொல்லுறியா?’ன்னு கேட்டாங்க.அதுக்கப்புறம் நான் அதைப்பத்தி பேசுறதையே விட்டுட்டேன்.

‘‘ ‘டிஜிட்டல் கம்யூனிகேஷன்ல போஸ்ட் டிப்ளோமா’ முடிச்சுட்டு சில கம்பெனிகள்ல வேலை செஞ்சேன். கடைசியா 6 வருஷம் மூலிகைகள் மதிப்புக்கூட்டுற கம்பெனியில உதவி மேலாளராக வேலை செஞ்சேன். அந்த அனுபவத்துல மூலிகைகள் மதிப்புக்கூட்டுதல் மட்டுமில்லாம இயற்கை உணவுப் பொருள்களோட முக்கியத் துவத்தையும் தெரிஞ்சுகிட்டேன். மறுபடியும் நஞ்சில்லா விவசாயத்தைப் பற்றி அப்பாகிட்ட சொன்னேன். எங்க ஊரு பக்கத்துல இயற்கை முறையில விவசாயம் செய்துட்டு வந்த நாலஞ்சு விவசாயிகளோட தோட்டத் துக்கு அப்பாவைக் கூட்டிட்டுப் போனேன். அவங்களோட இயற்கை விவசாயச் சாகுபடி முறைகள், அனுபவங்களைச் சொன்னாங்க.

ரசாயன விவசாயத்துனால ஏற்படுற தீமைகள், அதிக செலவு பத்தியும் தெளிவாச் சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சுப் பார்த்தா என்னன்னு அப்பாவுக்கு மனசுல தோணிடுச்சு. ‘சரி செஞ்சுத்தான் பார்ப்போமே’னு சொன்னார். அவர் அந்த அளவுக்கு மாறியதை எனக்குக் கிடைச்ச வெற்றியா நினைச்சேன்’’ என்றவர், முருங்கை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

அறுவடை
அறுவடை

‘‘என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சப்போ, வழக்கமான சின்ன வெங்காயம், காய்கறிகளைச் சாகுபடி செய்யாம குறைவான பராமரிப்பு, குறைவான செலவுல மகசூல் கொடுக்குற முருங்கை என் மனசுல வந்து நின்னுச்சு.

அதுலயும், முருங்கைக் காயை விற்பனை செய்யாம, இலைகளைப் பறிச்சு உலர்த்தி விற்பனை செஞ்சா நல்ல வருமானம் கிடைக்கும்னு இணையதளத்துல படிச்சேன். இதே மாதிரி உலர் உலை விற்பனைக்காக, செடிமுருங்கைச் சாகுபடி செஞ்சுட்டு வர்ற சில விவசாயிகளைச் சந்திச்சு, அவங்ககிட்டயும் விளக்கம் கேட்டேன். சாகுபடி முதல் சந்தைப்படுத்துறது வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லன்னு சொன்னாங்க. செடி முருங்கையைச் (பி.கே.எம்.1) சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்தேன். இப்போ நாலு வருஷமா, நானும் அப்பாவும் சேர்ந்து இயற்கை முறையில செடி முருங்கையைச் சாகுபடி செய்துட்டு வர்றோம். இது 75 சென்ட் நிலம். இதுல 70 சென்ட்ல செடி முருங்கை அறுவடையில இருக்கு. தனியா உள்ள 5 ஏக்கர் நிலத்துலயும் செடி முருங்கைச் சாகுபடி செய்ய நிலத்தைத் தயார்ப்படுத்தி வச்சிருக்கோம்” என்றவர், அறுவடை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

செலவு/வரவு கணக்கு
செலவு/வரவு கணக்கு

‘‘45 முதல் 50 நாளுக்கு ஓர் அறுவடைன்னு வருஷத்துக்கு 6 முதல் 7 தடவை அறுவடை செய்யலாம். போன வருஷம் அறுவடையில 1,892 கிலோ உலர் இலை கிடைச்சது. ஒரு கிலோ 130 ரூபாய்னு ஓசூர்ல இருக்க மூலிகைகள் மதிப்புக்கூட்டுற கம்பெனிகளுக்கு பார்சல்ல அனுப்பினேன். அந்த வகையில 1,892 கிலோ உலர் முருங்கையிலை விற்பனை மூலமா 2,45,960 வருமானமாக் கிடைச்சது. இதுல, மொத்தச் செலவு 87,700 போக மீதமுள்ள 1,58,260 ரூபாய் லாபமாக் கிடைச்சது. இதுல உழவு, விதை, பாத்தி எடுத்த செலவுக ஒரு தடவை மட்டும்தான். அடுத்தடுத்த வருஷங்கள்ல பராமரிப்புச் செலவு மட்டும்தான்” என்றவர் நிறைவாக, “‘முருங்கையைப் போட்டவன், வெறுங்கையா நின்னதுல்ல’ன்னு பழமொழி சொல்வாங்க. அதே மாதிரி செடி முருங்கை, என்னைச் செழிக்கத்தான் வச்சிருக்கு” எனச் சொல்லி சிரித்தபடியே விடை கொடுத்தார்.தொடர்புக்கு, சுடலைமணி,

செல்போன்: 99805 66408

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

70 சென்ட் நிலத்தில் செடி முருங்கைச் சாகுபடி செய்வது குறித்துச் சுடலைமணி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

இலை அறுவடைக்கு மரமுருங்கையைவிடச் செடி முருங்கைதான் ஏற்றது. செடி முருங்கை சாகுபடி செய்யச் செம்மண் நிலம் ஏற்றது. இதற்குக் குறிப்பிட்ட பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். ஆனால், மழைக்கு முன்பாக விதையை ஊன்றுவது சிறந்தது. விதை ஊன்றுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, தேர்வு செய்யப்பட்ட நிலத்தை ஒரு வாரம் இடைவெளியில், 4 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்குப் பிறகு, 70 சென்ட் நிலத்துக்கு 4 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு உழவு செய்ய வேண்டும்.

முருங்கைத் தோட்டம்
முருங்கைத் தோட்டம்

பிறகு, 3 அடி இடைவெளியில் பார் (ஒரு பாருக்கும் அடுத்த பாருக்கும் இடைவெளி 3 அடி) அமைக்க வேண்டும். 70 சென்ட் பரப்பில் நடவு செய்ய 700 கிராம் விதை தேவைப்படும் (இவர் பி.கே.எம்-1 ரக விதையை நடவு செய்துள்ளார்). விதை ஊன்றுவதற்கு முன்பாக விதைநேர்த்தி செய்வது அவசியம். மண் பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் வேப்பெண்ணெயை ஊற்றி அதில் 700 கிராம் விதையைப் போட்டு இரண்டு நாள்கள் வரை ஊற வைத்து பிறகு, செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் இரண்டு இன்ச் ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

அன்றே முதல்நீர் விடலாம். பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். 8 முதல் 10-ம் நாளில் முளைப்பு தெரியும். 30 நாள்கள் வரை தண்ணீர் மட்டும் பாய்ச்சி வந்தாலே போதும். முருங்கையில் கம்பளிப்புழுக்களின் தாக்குதல் அதிகம் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த, 30-ம் நாளுக்குப் பிறகு வாரம் ஒரு முறை பூச்சிவிரட்டியாக, 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி மூலிகைக்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.

முதல் முறை 90 முதல் 100 நாள்களில் இலைகளை அறுவடை செய்யலாம். பிறகு, 45 முதல் 50 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். அறுவடை முடிந்தவுடன் தளிர் விடும் நேரத்தில் தண்டு துளைப்பான் தாக்குதல் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த மூலிகைக் கரைசலுடன் 1 கிலோ மஞ்சள் தூளைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்தாலே போதும். இலைக்காகச் சாகுபடி செய்யும் செடி முருங்கையைப் பொறுத்தவரையில் களைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மண்ணைப் பொறுத்து ஒவ்வோர் அறுவடை முடிந்த பிறகும் அறுவடை செய்து கொள்ளலாம்.

மூலிகைத்தூள் கரைசல்

ஓமத்தூள், வேப்பிலைத்தூள், நொச்சியிலைத் தூள் ஆகிய வற்றில் தலா 1 கிலோவும், வெள்ளைப்பூண்டுத் தூள் 500 கிராமும் கலந்து 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால் மூலிகைத்தூள் கரைசல் தயார்.

உலர வைத்தல்
உலர வைத்தல்

அதிக உரம் ஆபத்து

செடி முருங்கையைப் பொறுத்த வரையில் அதிக அடியுரம் தேவை யில்லை. அதிக உரம் கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும். 6 மாதத்துக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒருமுறையோ அடியுரமாகத் தொழுவுரம் வைக்கலாம். பயிர் வளர்ச்சி ஊக்கியாக ஜீவாமிர்தம், அமுதக் கரைசல் போன்றவற்றைக்கூட தேவைப்பட்டால் கொடுக்கலாம். மண்ணைப் பொறுத்து தேவைப்பட்டால் மாதம் ஒருமுறை கொடுக்கலாம்.

15 நாள்களுக்குள் விற்பனை செய்ய வேண்டும்

அறுவடை செய்த இலைகளைப் பெரிய பிளாஸ்டிக் தாளை விரித்து, அதில் பரப்பி நல்ல வெயிலில் இரண்டு நாள்கள் வரை காய வைக்க வேண்டும். உலர்ந்த இலைகளைத் தனியாகப் பிளாஸ்டிக் சாக்குப் பைகளில் அடைத்து வெயில் படாமல் இருட்டறையில் வைக்க வேண்டும். அதே நேரத்தில் உலர்த்தப்பட்டு பேக்கிங் செய்த 15 நாள்களுக்குள் விற்பனைக்காக அனுப்பிவிட வேண்டும். நிறம் மாறினால் விலை குறையலாம்.