Published:Updated:

எண்ணெய், பிண்ணாக்கு உற்பத்தி... மாதம் 90,000 ரூபாய் லாபம்!

சந்திரசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகரன் ( நா.ராஜமுருகன் )

மதிப்புக்கூட்டல்

எண்ணெய், பிண்ணாக்கு உற்பத்தி... மாதம் 90,000 ரூபாய் லாபம்!

மதிப்புக்கூட்டல்

Published:Updated:
சந்திரசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகரன் ( நா.ராஜமுருகன் )

‘இயற்கை விவசாயம் செய்வதைவிட, அதில் விளையும் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போதுதான், அதிக லாபம் ஈட்ட முடியும். அதேபோல், ‘இயற்கை இடு பொருள்கள், உரங்களைத் தயாரித்து விற்பதும் லாபம் தரும்’ என்பது அனுபவ விவசாயிகளின் கருத்து.

அந்த வழியில், வேப்பம் பிண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், ஆமணக்குப் பிண்ணாக்கு, ஆமணக்கு எண்ணெய் தயாரித்து, தமிழ்நாடு முழுக்க உள்ள இயற்கை விவசாயிகளிடம் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன். அதன் மூலம், மாதம் 90,000 ரூபாய் வருமானம் பார்த்து வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கொக்கராயன்பேட்டைதான் சந்திரசேகரனின் சொந்த ஊர். விவசாயத்தோடு சேர்ந்து பிண்ணாக்கு, எண்ணெய் தயாரிக்கும் தொழிலைப் பிரதானமாகச் செய்து வருகிறார். கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கணபதிபாளையத்தில் இயங்கி வருகிறது இவரது ‘லோட்டரி’. வேப்ப எண்ணெய் பிழியும் பணியில் மும்முரமாக இருந்த சந்திரசேகரனைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றவர், பேச ஆரம்பித்தார்.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

“கொக்கராயன்பேட்டையில் எங்களுக்கு அஞ்சரை ஏக்கர் நிலமிருக்கு. காவிரிப் பாசனம். எங்க பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து விவசாயம்தான் தொழில். கரும்பு, வாழை, காய்கறினு விவசாயம் நடக்கும். ஆரம்பத்துல எனக்கு விவசாயத்தில பெரிய ஈடுபாடு இல்ல. எங்க அப்பாதான் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தார். நான் பத்தாவது படிச்சு முடிச்சுட்டு, 1996-ம் வருஷம் ‘கேபிள் டிவி ஆபரேட்டர்’ ஒருத்தர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். பத்து வருஷம் அங்க வேலை பார்த்தேன். பிறகு, சொந்தமாகக் கார் வாங்கி, ‘டிராவல்ஸ்’ நடத்திக் கிட்டு இருந்தேன். இந்த நிலையில, 7 வருஷத்துக்கு முன்னாடி எங்கப்பா தவறிட்டார். அதுக்குப் பிறகு, விவசாயத்தை நான் பார்க்க வேண்டிய சூழல். அதனால, தொழிலையும் விடாம, கூடவே விவசாயத்தையும் பண்ண ஆரம்பிச்சேன்.

வேப்பம்பழத்தை உலர்த்தும் பணி
வேப்பம்பழத்தை உலர்த்தும் பணி

ஒரு கட்டத்துல ‘டிராவல்ஸ்’ தொழில்ல பெருசா லாபம் இல்லை. செயற்கை விவசாயம் பண்ணிக் கிட்டு இருந்த எனக்கு, நம்மாழ்வார் வீடியோக்களைப் பார்க்குற வாய்ப்பு கிடைச்சது. அதுக்குப் பிறகு, இயற்கை விவசாயம், இயற்கை உரங்கள் மேல ஈடுபாடு வந்துச்சு. உடனே, இயற்கை விவசாயத்துக்கு நிலத்தைப் பழக்க முடியாது இல்லையா? மெள்ள மெள்ளதான் மாத்த முடியும். அதனால, முதல்ல இயற்கை உரம் குறித்து நிறைய தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அப்பதான், இயற்கை இடுபொருள்கள் தேவை, அதிகமா இருந்ததை உணர முடிஞ்சது.

அதையே தொழிலா செய்யலாம்னு தோணுச்சு. அதனால, ‘டிராவல்ஸ்’ தொழிலுக்கு முழுக்குப் போட்டேன். நண்பர்கள் ரெண்டு பேரோட சேர்ந்து, வேப்ப எண்ணெய், புண்ணாக்கு தயாரிக்குற இந்தத் தொழிலைத் தொடங்கினோம். ஆனால், அதைச் சந்தைப்படுத்துறதுக்கு ரொம்ப சிரமப் பட்டோம். அதனால, ரெண்டு வருஷத்துல பங்குதாரர்கள் ரெண்டு பேரும், தொழிலை விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா, எனக்கு விட்டுட்டுப் போக மனசு வரல. இதுல சாதிக்கணும்னு நினைச்சேன்.

எண்ணெய் பிழியும் செக்கு
எண்ணெய் பிழியும் செக்கு

தனியா கம்பெனி ஆரம்பிச்சேன். அடுத்த ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன். சமூக வலைதளங்கள்ல என்னோட தயாரிப்பு பற்றி அதிகம் எழுதினேன். அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்துல சேர்ந்தேன். அவங்க மூலமா, நிறைய இயற்கை விவசாயிகளோட தொடர்பு கிடைச்சுச்சு. பிறகு, விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிச்சது. கடந்த ஒரு வருஷமாதான் விற்பனை அதிகமாகியிருக்கு” என்றவர், அங்கிருந்த இயந்திரங்களைக் காட்டியபடியே, அங்கு நடக்கும் பணிகள் பற்றி விளக்கினார்.

“ஆந்திரா, கர்நாடகா, கரூர், கோவில்பட்டி, சங்கரன்கோயில், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர்னு பல இடங்கள்ல இருந்து வேப்பம் பழத்தை வாங்கிக்குறோம். இதைத் தவிர, கணபதிபாளையம் சுத்துப்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகக் கொண்டு வந்து கொடுக்கிறாங்க. தமிழ்நாட்டில் உள்ள வேப்பம் பழத்தோட தரம், ஆந்திரா, கர்நாடகாவுல வாங்குற வேப்பம் பழத்தில் இருக்காது. அதனால, அங்க இருந்து அளவாதான் வாங்குறோம். வாங்குற பழங்களை வெயில்ல உலர்த்துவோம். நல்லா வத்தலா காய்ஞ்சதும், அதைக் கல், மண் பிரிக்கிற இயந்திரத்துலப் போட்டு, தனித்தனியா பிரிச்சு எடுத்துக்குவோம். பிறகு, இன்னொரு இயந்திரத்துலப் போட்டு, பருப்பையும், தோலையும் ரெண்டா பிரிச்சு எடுத்துக்குவோம். அந்தப் பருப்பை ஆட்டிதான், வேப்பம் எண்ணெய் தயாரிப்போம். அதேபோல, உடைக்கும்போது வர்ற உடையாத முழுக் காய், தனியாக வந்த வேப்பம் ஓடுகளைச் சேர்த்து வேப்பம் புண்ணாக்காகத் தயாரிச்சுக்குவோம். அந்தப் பருப்புல வர்ற பருப்பு கழிவுகளை வச்சு, பருப்புப் புண்ணாக்கை தனியா தயாரிப்போம். ‘சீஸனு’க்குத் தகுந்த மாதிரி வேப்பம் பழத்தோட விலை மாறும். உதாரணத்துக்கு வேப்பம் பழத்தை 100 கிலோ வாங்கி, அதை காய வைச்சா 95 கிலோ கிடைக்கும். கல், மண்ணுனு 10 கிலோ போயிடும். மீதி 85 கிலோவுல 10 கிலோ பருப்பு கிடைக்கும். 10 கிலோ பருப்பை ஆட்டும்போது, 3 லிட்டர் வேப்பம் எண்ணெய், 6 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 72 கிலோ வேப்பம் பருப்பு புண்ணாக்குக் கிடைக்கும். எண்ணெய் ஒரு லிட்டர் 400 ரூபாய்னு விற்பனை செய்றோம். இதன்மூலம், 1,200 ரூபாய் கிடைக்கும். வேப்பம் பருப்புப் புண்ணாக்கு கிலோ 30 ரூபாய். இதுல 2,160 ரூபாய் கிடைக்கும். வேப்பம் புண்ணாக்கு கிலோ 50 ரூபாய். அதுல 300 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்த வருமானம், 3,660 ரூபாய். 100 கிலோ வேப்பம் பழத்தை, கிலோ 18 ரூபாய்னு 1,800 ரூபாய்க்கு வாங்குறோம். அதை அரைக்கிறதுக்கான செலவு, ஆள் கூலியெல்லாம் 200 ரூபாய் ஆகும். மீதி 1,660 ரூபாய் லாபமா கிடைக்கும்’’ என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

கல், மண் பிரிக்கும் பணி
கல், மண் பிரிக்கும் பணி

‘‘வேப்பம் புண்ணாக்கு கிலோ 30 ரூபாய், வேப்பம் பருப்புப் புண்ணாக்கு கிலோ 50 ரூபாய் விலை வச்சு விற்பனை பண்றோம். மாசத்துக்கு 350 லிட்டர் வேப்ப எண்ணெய், 20 டன் வேப்பம் புண்ணாக்கு, 4 டன் வேப்பம் பருப்புப் புண்ணாக்கு விற்பனை செய்ய முடியுது. எண்ணெய் விற்பனை மூலம், மாசத்துக்கு 1,40,000 ரூபாய் கிடைக்கும். வேப்பம் புண்ணாக்கு வகையில் 6 லட்சம் ரூபாயும், வேப்பம் பருப்புப் புண்ணாக்கு வகையில் 2 லட்சமும் கிடைக்கும். இதுல, செலவுனு பார்த்தா, இட வாடகை மாசம் 16,000 ரூபாய் போயிரும். தவிர, மின்சாரக் கட்டணமா 15,000 ரூபாய் வரை செலவாகும். 6 பேர் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்குக் கூலியா, மாசத்துக்கு 50,000 ரூபாய் வரை போயிரும். இயந்திரங்கள் பழுதானா, அதைச் சரிசெய்றதுக்கான செலவு, பராமரிப்புச் செலவுனு மாசத்துக்கு 20,000 ரூபாய் வரை ஆகும். புண்ணாக்கு ஓட்டுற இயந்திரம், வேப்ப எண்ணெய் ஆட்டுற இயந்திரம், கல், மண் பிரிக்கிற இயந்திரம், காய் உடைக்கிற இயந்திரம், பருப்பில் தோல் எடுக்கிற இயந்திரம், அதேபோல பருப்புல சிறுதோல் பிரிக்கிற இயந்திரம், புண்ணாக்கை பொடியாக்குற இயந்திரம்னு 20 லட்ச ரூபாய் இதுல மூலதனம் போட்டிருக்கேன். அதுக்கு, ஒன்றரை லட்சம் போயிரும். போக்குவரத்துச் செலவு மாசத்துக்கு 19,000 ரூபாய். மூலப்பொருள்கள் வாங்க 5,80,000 ரூபாய் வரை செலவாயிரும். மீதியுள்ள 90,000 ரூபாய் லாபமா நிற்கும்’’ என்றவர், ஆமணக்கு எண்ணெய் விற்பனை குறித்துப் பேசினார்.

பாட்டிலில் அடைத்த வேப்பெண்ணெய்
பாட்டிலில் அடைத்த வேப்பெண்ணெய்

‘‘கடந்த ஒரு மாசமா, ஆமணக்கு எண்ணெய், புண்ணாக்கு உற்பத்தி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். திருச்செங்கோடு பகுதியிலிருந்து ஆமணக்கு விதைகளைக் கிலோ 50 ரூபாய்னு வாங்குறேன். ஒரு மாசத்துல 500 கிலோ வரை ஆட்டினேன். 40 லிட்டர் எண்ணெய், 400 கிலோ புண்ணாக்கு கிடைச்சுச்சு. ஆமணக்கு எண்ணெய் லிட்டர் 250 ரூபாய், புண்ணாக்கு கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஆரம்பம்ங்கிறதால, இதுல 3,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கு. போகப் போக இதுலயும் என்னால நல்ல லாபம் எடுக்க முடியும்.

இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாம, ரசாயன உரங்கள் பயன்படுத்துற விவசாயிகளும் என்கிட்ட வேப்பம் புண்ணாக்கு, எண்ணெய் வாங்குறாங்க. தமிழ்நாடு முழுக்க விற்பனை செஞ்சாலும், தென்மாவட்ட விவசாயிகள் அதிகம் வாங்குறாங்க’’ என்றவர் நிறைவாக,

மகன் ராஜூ விக்னேஷுடன்
மகன் ராஜூ விக்னேஷுடன்

‘‘அடுத்து, இயற்கை முறையில் விளைஞ்ச கடலையை வாங்கி ஆட்டி, எண்ணெய், புண்ணாக்கு விற்கிற எண்ணமும் இருக்கு. அதேபோல, வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தி ‘ஆர்கானிக் சோப்’ தயாரிக்குற முயற்சியிலும் இறங்கலாம்னு இருக்கேன். வேப்பங்காயை விவசாயிகளுக்கு முன்னாடி ஆட்டிக் கொடுக்கிற மாதிரியான அமைப்பையும் உருவாக்கப் போறேன். பி.காம் படிக்கிற என் மகன் ராஜூ விக்னேஷ் எனக்கு ஒத்தாசையா இருக்கான். நான் இப்போ, நாலு ஏக்கரில் கரும்பும், கொஞ்சம் வாழை, காய்கறினு வெள்ளாமை பண்ணியிருக்கேன். இடுபொருளா வேப்பம் பிண்ணாக்கை அதுல பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷத்துல முழுக்க இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்றார்.


தொடர்புக்கு, சந்திரசேகரன்,

செல்போன்: 97504 97992.