Published:Updated:

நெல், எள், பால்... ஆண்டுக்கு ரூ.4.48 லட்சம் இயற்கை வழி வேளாண்மையில் நிறைவான லாபம்!

நெல் வயலில் தவச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல் வயலில் தவச்செல்வன்

மகசூல்

'விவசாயம்ங்கறதை ஒரு தொழிலா மட்டும் பார்க்கக் கூடாது. இது வாழ்க்கையோட முக்கிய அங்கம். மாணவ பருவத்துலயே இந்த எண்ணத்தை விதைச்சிடணும். விவசாயத்து மேல ஒரு பிடிப்பை ஏற்படுத்திடணும்’ என்ற நம்மாழ்வாரின் வார்த்தையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா கருப்பட்டிப்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி தவச்செல்வன்.

நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் வெற்றி நடைபோட்டு வருகிறார். ‘நம்மாழ்வார் சிறப்பிதழு’க்காக ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். பச்சைப் பசேலெனச் செழிப்பாக இருந்தது ‘துளசி’ என்கிற பெயரில் அவர் உருவாக்கியிருக்கும் இயற்கை விவசாயப் பண்ணை..

கடல் அலைபோல், காற்றில் நெற்பயிர்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. நெற்பயிர் களின் குணாதிசயங்கள் குறித்து, மாணவர் களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த தவச்செல்வன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங் கினார்.

நெல் வயலில் தவச்செல்வன்
நெல் வயலில் தவச்செல்வன்

பலே பள்ளி மாணவர்கள்

‘‘சின்ன பசங்களா தெரியுறதுனால, இவங்களை எல்லாம் சாதாரணமா நினைச் சிடாதீங்க. நாத்து நடுவாங்க, களை பறிப்பாங்க, எதெல்லாம் நன்மை செய்யுற பூச்சிகள், எதெல்லாம் தீமை செய்யுற பூச்சிகள்னு துல்லியமா சொல்வாங்க. பஞ்சகவ்யா, மீன் அமிலம் எல்லாம் தயார் செய்வாங்க. பள்ளி விடுமுறை நாள்கள்ல ஆர்வமா இங்க வந்து இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைக் கத்துக்குறாங்க. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளோட பாதிப்புகளைப் பத்தி பெற்றோர்கள்கிட்ட எடுத்துச் சொல்லி, இயற்கை இடுபொருள்களை அதிகமா உபயோகப்படுத்த வச்சிருக்காங்க’’ என அங்கிருந்த மாணவர்களை அறிமுகப் படுத்தியவர், நம்மை அமர வைத்துப் பேசினார்.

விவசாயம் கற்கும் மாணவர்கள்
விவசாயம் கற்கும் மாணவர்கள்

நம்மாழ்வார் நூலகம்

‘‘நம்மாழ்வார் நூலகம்ங்கற பேர்ல என்னோட வீட்லயே ஒரு சின்ன நூலகம் அமைச்சிருக்கேன். முதல்கட்டமா, 15,000 ரூபாய்க்கு இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், பாரம்பர்ய உணவு, எளிமையான இயற்கை மருத்துவம் சார்ந்த நூல்களை வாங்கி வச்சிருக்கேன். சுற்று வட்டாரத்துல இருக்க மாணவர்கள் அதை ஆர்வமா படிக்குறாங்க. ‘மசானபு ஃபுகோகா’ எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைக்கூட படிச்சு அதுல உள்ள கருத்துகளை உள்வாங்கியிருக்காங்க’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

நம்மாழ்வார் நூலகம்
நம்மாழ்வார் நூலகம்

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, அதுக்கு பிறகு அஞ்சாறு வருஷம் விவசாயம் பார்த்தேன். விவசாயத்துல ஈடுபாடு குறைஞ்சதுனால, சிங்கப்பூர் போயி 10 வருஷம் வேலை பார்த்தேன். அங்க, ‘தேக்கா’ங்கற பகுதியில இருக்கிற புத்தகக் கடையில ‘ஆனந்த விகடன்’ வாங்கிப் படிக்குறது வழக்கம். அந்தச் சமயத்துலதான் எனக்குப் பசுமை விகடன் அறிமுகமாச்சு. இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் ரகங்களோட மகத்துவம் பத்தி நம்மாழ்வார் சொன்ன கருத்துகள் எனக்குள்ளாற தாக்கத்தை ஏற்படுத்திச்சு. சொந்த ஊருக்குத் திரும்பி வந்து இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்து, ஊருக்கு வந்துட்டேன். இப்ப 6 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்’’ என்றவர், எழுந்து வயலை நோக்கி நடந்தபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

நம்மாழ்வார் நூலகத்தில்
நம்மாழ்வார் நூலகத்தில்

‘‘இது களியும் மணலும் கலந்த இருமண் பாடு நிலம். மொத்தம் 6 ஏக்கர். அதுல 3 ஏக்கர்ல பாரம்பர்ய நெல், ஒரு ஏக்கர்ல நவீன ரக நெல், 2 ஏக்கர்ல தென்னையும் சாகுபடி செஞ்சிகிட்டு இருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு வந்த புதுசுல எங்ககிட்ட இருக்கிற மாடுகள் மூலமா கிடைக்கிற எருவை அதிக அளவு கொடுத்துக் கிட்டு இருந்தேன். ஆனா, எருவை கொண்டு போய் நிலத்துல போட நிறைய செலவாகும். இந்தச் செலவைக் குறைக்கவும், நிலத்தைச் சீக்கிரமா வளப்படுத்துறதுக்காகவும், எருவோடு உயிர் உரங்கள் கலந்து செறிவூட்டப்பட்ட எருவாக மாத்தி நிலத்துல போட ஆரம்பிச்சேன்.

எருக்கன் செடி மிகச் சிறந்த உரம்

எருவை நேரடியா நிலத்துல போட்டா, என்னோட நிலத்துக்கு 3 டன்னுக்கு மேல தேவைப்படும். ஆனா, செறிவூட்டிப் போட்டா, ஏக்கருக்கு 200 கிலோ எருவே போதும். சுற்றுப்புறங்கள்ல இயற்கையா என்னென்ன கிடைக்குதோ அதையெல்லாம் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தலாம்னு நம்மாழ்வார் சொல்லியிருக்கார். குறிப்பா, ‘எருக்கன் செடி மிகச் சிறந்த உரம், அருமையான பூச்சிவிரட்டி’னு நம்மாழ்வார் சொல்லியிருக்கார். அதை நான் கண்கூடா உணர்ந்துகிட்டு இருக்கேன்.

எருக்கன் செடியுடன்
எருக்கன் செடியுடன்

இந்தப் பகுதிகள்ல ஆறு, குளம், வாய்க்கால் ஓரங்கள்ல அதிக அளவுல எருக்கன் செடிகள் வளர்ந்து கிடக்கும். அதை வெட்டிக்கிட்டு வந்து என்னோட நிலத்துக்கு அடியுரமா போட்டுக்கிட்டு இருக்கேன். குறிப்பா, மழைக் காலங்கள்ல நீர்நிலை ஓரங்கள்ல இது அதிகமா மண்டிக் கிடக்கும். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் இதை வெட்டிப் போட்டுக் காஞ்சிப் போன பிறகு, நெருப்பு வச்சு கொளுத்திக்கிட்டு இருந்தாங்க. அதை நான் தடுத்து நிறுத்தி, என்னோட வயலுக்குப் பயன் படுத்திக்கிட்டு இருக்கேன்.

ஏக்கருக்கு 200 கிலோவுக்கு மேல இதை அடியுரமா போட்டு, 15 நாள்கள் கழிச்சு, உழவு ஓட்டி நாத்து நடவு செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். இதனால பயிர் நல்லா ஊக்கமா வளருது. நெற்பயிர்கள்ல ஆரம்பநிலையில ஏற்படக்கூடிய பூச்சி, நோய்த்தாக்குதல்களைத் தவிர்க்க, இது உறுதுணையா இருக்கு. ‘போர்வெல்’ல இருந்து தண்ணீர் ஊத்தக்கூடிய வாய்மடையில 10 நாளைக்கு ஒரு தடவை 15 கிலோ எருக்கன் செடியை ஒரு கல்லுல கட்டிப்போட்டுடுவேன். அது அழுகி, கொஞ்சம் கொஞ்சமா பாசன நீரோட கலந்து பாயும்.

சீரகச்சம்பா வயல்
சீரகச்சம்பா வயல்

வரும் முன் காப்போம்

இந்தப் பகுதிகள்ல நெல் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும், நாத்து நடவு செஞ்ச ஒரு மாசத்துக்குப் பிறகு, செந்தாழை நோய்த் தாக்குதல் இருக்கும். அதைச் சமாளிக்குறது ரொம்பவே சவாலா இருக்கும். அந்தப் பாதிப்பு ஏற்பட்டா, செம்பட்டை தட்டுனது மாதிரி, பயிர்கள் சிவந்து போயி வளர்ச்சி அப்படியே தடைப்பட்டுப் போயிடும். ரசாயன உரங்கள் போடக்கூடிய நிலங்கள்ல இந்தப் பாதிப்பு அதிகமா இருக்கும். ஆனா, நான் இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத் துறதுனால, அந்தப் பாதிப்பு அதிகம் இல்ல. ஆனாலும், வரும் முன் காப்போம் நடவடிக் கையா, ஏக்கருக்கு 250 லிட்டர் தண்ணீர்ல 25 லிட்டர் அமுதக்கரைசல், 1 கிலோ சூடோமோனஸ் கலந்து தெளிக்குறோம்.

குருத்துப்பூச்சி தாக்குதலைத் தவிர்க்க, தண்டு உருவாகும் நேரத்துல, மீன் அமிலத்தோட வேப்ப எண்ணெய் கலந்து தெளிப்போம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் வேலை செய்யுது. கதிர் வந்த பிறகு நெல்மணிகள் நல்லா திரட்சியா உருவாக, தேமோர் கரைசல் கொடுக்குறதுதான் பெரும்பாலான இயற்கை விவசாயிகளோட வழக்கம். ஆனால், நான் புளிச்ச தயிரோட, மீன் அமிலம் கலந்து தெளிப்பேன். இதனால் கதிர்கள் நல்லா வாளிப்பா உருவாகி, நெல்மணிகளும் திரட்சியா இருக்கும்... பூச்சிகளும் கட்டுப்படுத்தப்படுது. பயிரோட வளர்ச்சிக்காக, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தமும் கொடுக்குறோம்’’ என்று சொன்னவர், நெல் சாகுபடியில் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

கறுப்புக் கவுனி
கறுப்புக் கவுனி

வருமானம்
பாரம்பர்ய நெல் ரகம்


‘‘குறுவையில 3 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்களான பூங்கார், கருங்குறுவை, சொர்ணமயூரி சாகுபடி செய்றோம். சம்பா பட்டத்துல, சீரகச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி, காட்டுயானம் உள்ளிட்ட ரகங்களும் சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். ஏக்கருக்கு சராசரியா 28 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்குது. இதுல பாதியை நெல்லாக விற்பனைச் செஞ்சிடுவேன். குறைந்தபட்சம் ஒரு மூட்டை நெல்லுக்கு 1,800 ரூபாய் வீதம் 14 மூட்டைக்கு 25,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 14 மூட்டை நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். ஒரு மூட்டை நெல் அரைச்சோம்னா, 36 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 75 ரூபாய் வீதம், 2,700 ரூபாய் வருமானம் கிடைக்கும். 15 கிலோ தவிடு, 4 கிலோ குருணையோட விலை மதிப்பு 300 ரூபாய். நெல்லை அரிசியா மதிப்புக் கூட்டி விற்பனை செய்றது மூலமா, ஒரு மூட்டைக்கு 3,000 ரூபாய் வீதம் 14 மூட்டைக்கு 42,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

ஆகமொத்தம் ஒரு ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் 67,200 ரூபாய் வருமானம். வைக்கோலோட விலைமதிப்பையும் சேர்த்தால் 69,200 ரூபாய். சாகுபடி செலவு, அரிசி அரவைக் கூலி எல்லாம் போக, 48,200 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்குது. 3 ஏக்கர்ல இருபோகம், பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம், 2,89,200 ரூபாய் லாபம்.

நவீன ரகம்

ஒரு ஏக்கர்ல குறுவை, சம்பா இருபோகம் நவீன நெல் ரகம் சாகுபடி செய்றோம். இதையும் இயற்கை முறையிலதான் செய்றேன். ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கிடைக்குது. ரசாயனம் இல்லாம விளைவிக்குறதுனால, இயற்கை அங்காடிகள்லயும் இந்தப் பகுதியில உள்ள மக்களும் இதை விரும்பி வாங்குறாங்க. ஒரு மூட்டை நெல் 1,400 ரூபாய்னு விற்பனை செய்றேன். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைவிட மூட்டைக்கு 200 ரூபாய்தான் இதுல கூடுதல் விலை கிடைக்கும். ஆனா, தூத்துறது, லஞ்சம் கொடுக்குற செலவெல்லாம் மிச்சம். 30 மூட்டை நெல் விற்பனைமூலம் 42,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல சாகுபடி செலவு 18,000 ரூபாய் போக, 24,000 ரூபாய் லாபம் கிடைக்கும். இருபோகம் நவீன ரக நெல் சாகுபடி மூலம் 48,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆக, 3 ஏக்கர்ல இருபோகம் பாரம்பர்ய ரகங்கள், ஒரு ஏக்கர்ல நவீன ரக நெல் சாகுபடி மூலம், மொத்தம் 3,37,200 ரூபாய் லாபம் கிடைக்குது.

தென்னை
தென்னை

தென்னை

2 ஏக்கர்ல தென்னயை நட்டு 5 வருஷம் ஆகுது. இப்பதான் காய்ப்புக்கு வர ஆரம்பிச்சிருக்கு.

எள் சாகுபடி

முன்பட்ட கோடையில 2 ஏக்கர்ல எள் சாகுபடி செய்வோம். அடியுரமா ஏக்கருக்கு 50 கிலோ செறிவூட்டப்பட்ட எரு போடுவோம். புழுதி உழவு ஓட்டிட்டு, 3 கிலோ எள்ளு தெளிப்போம். 30-ம் நாள் 50 லிட்டர் தண்ணீர்ல 10 லிட்டர் ‘வேஸ்ட் டீ கம்போசர்’ கரைசல் கலந்து தெளிப்போம். 50-ம் நாள் 100 லிட்டர் தண்ணீர்ல 3.5 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிப்போம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. ஏக்கருக்கு 300 கிலோ எள் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 90 ரூபாய் வீதம் 27,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவு போக 20,000 ரூபாய் லாபமா கிடைக்கும். 2 ஏக்கர் எள் சாகுபடி மூலம் 40,000 ரூபாய் லாபம்.

மாடு வளர்ப்பு

ஒரு நாட்டுப் பசு, அதோட காளை கன்னுக்குட்டி, 2 கலப்பின மாடுகள், 2 கலப்பின கன்னுக்குட்டிகள் இருக்கு. இதுக்கு எந்தவித பராமரிப்பு செலவுகளுமே கிடையாது. மேய்ச்சலோடு வைக்கோலை சாப்பிடுறதுனால நல்லா ஆரோக்கியமா வளருது. நாட்டுப் பசு தினமும் 3 லிட்டர் பால் கொடுக்கும். ஆனா, அதோட காளைக் கன்னுக்குட்டியை ஜல்லிக்கட்டு மாடா தயார் செய்றதுனால, தாய் பசுக்கிட்ட வேணுங்கற அளவுக்குப் பால் குடிக்க விட்டுடுவோம். அது குடிச்சது போகத் தினமும் வீட்டுத் தேவைக்கு ஒன்றரை லிட்டர் பால் கிடைக்குது. இடுபொருள் தயாரிப்புக்கும் அந்தப் பாலை பயன்படுத்திக்குறோம்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

2 கலப்பின பசுக்கள்ல ஏதாவது ஒரு மாடு வருஷம் முழுக்கப் பால் கொடுக்குது. தினமும் 7 லிட்டர் பால் கிடைக்கும். லிட்டருக்கு 28 ரூபாய் வீதம் 196 ரூபாய் வருமானம் கிடைக்கும். பால் விற்பனைமூலம் வருஷத்துக்கு 71,540 ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனச் செலவு கிடையாது. அதனால இதை முழு லாபமா பார்க்கலாம். நான் மாடுகள் வளர்க்குறதோட முக்கிய நோக்கமே என்னோட வயலுக்குத் தேவையான இயற்கை இடுபொருள்களுக்கா தான். இயற்கை விவசாயம் எனக்கு மன நிம்மதியையும் நிறைவான வருமானத்தையும் கொடுத்துக்கிட்டு இருக்கு’’ என நெகிழ்ச்சியோடு சொன்னவரிடம், வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

தொடர்புக்கு, தவச்செல்வன்,

செல்போன்: 63852 95859

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்

நாற்று உற்பத்தி

இயந்திரம் மூலம் ஒற்றை நாற்று நடவு செய்ய, ஏக்கருக்கு 3 சென்ட் வீதம் பாய் நாற்றங்கால் அமைக்க வேண்டும். அதில் அடியுரமாக 30 கிலோ செறிவூட்டப்பட்ட எருவை இட வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட 15 கிலோ விதைநெல்லை, நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். அதன்மீது பச்சை நிற நிழல் வலையைப் போட்டு அதன் மீது வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும். நேரடியாக, வைக்கோல் போட்டால், அதில் ஏதேனும் நெல்மணிகள் இருந்து கலப்பு உருவாக வாய்ப்புள்ளது.

திருப்பதிசாரம்
திருப்பதிசாரம்

தினமும் காலை மாலை பூவாளியால், வைக்கோல் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். 5 நாள்களுக்குப் பிறகு வைக்கோல், நிழல் வலையை நீக்கிவிட்டு தேவைக்கேற்ப நேரடியாகத் தண்ணீர் பாய்ச்சலாம். 10-ம் நாள் 30 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேஸ்ட் டீ கம்போசர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். நாற்றுகள் நன்கு செழிப்பாக வளர்ந்து, 15-ம் நாள் நடவுக்குத் தயாராக இருக்கும். நடவு செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக, பாசன நீரில் தலா 250 மி.லி சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வேர் அழுகல் நோய் வராமல் தடுக்க இது மிகவும் அவசியமானது.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட எரு, 200 கிலோ எருக்கன் செடி போட்டுச் சேற்று உழவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். அடுத்த 15 நாள்களில் நடவு செய்யத் தயாராக இருக்கும். மீண்டும் உழவு ஓட்டி நிலத்தை நன்கு சமப்படுத்தி, இயந்திரம் மூலம் தலா 25 சென்டிமீட்டர் இடைவெளியில் 1-2 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 8-ம் நாள் 200 லிட்டர் வேஸ்ட் டீ கம்போசர் கரைசலைப் பாசனநீரில் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 மற்றும் 45-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 2.5 லிட்டர் மீன் அமிலம், 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறை பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். 30-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3.5 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 50 - 55 நாள்களில் 100 லிட்டர் தண்ணீரில் 2.5 லிட்டர் மீன் அமிலம், 1 லிட்டர் புளித்த தயிர் கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப கோனோ வீடர் மூலம் களை ஓட்டி அவற்றை மண்ணுக்குள் அமிழ்த்து விட வேண்டும்.

செறிவூட்டப்பட்ட எரு

3 டன் மாட்டு எருவுடன் தலா 3 லிட்டர் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, தலா 1 லிட்டர் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ ரைசோபியம், 500 கிராம் வேம், 20 லிட்டர் வேஸ்ட் டீ கம்போசர் கலந்து நிழலில் வைத்து, தினமும் கிளறி விட வேண்டும். அடுத்த 40 நாள்களில் செறிவூட்டப்பட்ட எரு தயாராகிவிடும். இதை அடியுரமாக, ஏக்கருக்கு 200 கிலோ பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும்.

நம்மாழ்வார் பிறந்தநாள் விழா போட்டிகள்

‘‘நானும் என்னோட இயற்கை விவசாய நண்பர்கள் சிலரும் சேர்ந்து, ‘விதையால் ஆயுதம் செய்வோம்’ங்கற இயக்கத்தை நடத்திக்கிட்டு இருக்கோம். மண்வள நாள், சுற்றுச்சூழல் தினம் உள்ளிட்ட முக்கிய நாள்கள்ல, வேளாண் நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாரம்பர்ய உணவு சார்ந்த செயற்பாட்டாளர்களை அழைச்சுக்கிட்டு வந்து எங்க பகுதி விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவோம். நம்மாழ்வாரோட பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்கள் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளும் நடத்தியிருக்கோம்’’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் தவச்செல்வன்.