Published:Updated:

மாதம் ரூ.59,000 பொழுதுபோக்கிலும் பெருகும் வருமானம்! செல்லப் பறவைகள் வளர்ப்பு!

செல்லப் பறவைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லப் பறவைகள்

கால்நடை

சிறு வயதில் பொழுதுபோக்குக்காகத் தொடங்கிய செல்லப் பறவைகள் வளர்ப்பை, தற்போது பறவைகளை விற்பனை செய்யும் தொழிலாக மாற்றி நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெப்ரி பால்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது போலையார்புரம் கிராமம். இங்குள்ள ஜெப்ரி பால் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்குள் இருக்கிறது செல்லப் பறவைகள் வளர்ப்புக்கூடம். கோழிகள் அடைக்கும் கூடாரம்போலச் சிறியதும் பெரியதுமாக 5 வளர்ப்புக்கூடங்கள் உள்ளன. கூடாரத்துக்குள் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம்.

“பத்துப் பதினைஞ்சு நிமிஷம் இந்தப் பறவைகளைப் பார்த்துக்கிட்டிருந்தாலே போதும். அதுங்க அங்கயும் இங்கயும் பறக்குறதும், கீச்... கீச்... சத்தம் எழுப்புறதும் கவலைகளை மறக்கடிச்சு சந்தோஷத்தைப் பிறக்க வைக்கும்” என்றபடியே பேச ஆரம்பித்தார்,

ஜெப்ரி பால்
ஜெப்ரி பால்

‘‘முருங்கை, வாழை, தென்னைதான் இந்தப் பகுதியோட முக்கியமான பயிர்கள். அப்பா விவசாயம் தான் பார்த்துக்கிட்டிருந்தாங்க. வீட்டுக்குப் பின்னாலயே தோட்டம் இருக்குறதுனால ஆடு, மாடு, கோழி, நாய் என எல்லாமே இருந்துச்சு. அதனால, பிராணிகள் வளர்க்குறது ரொம்பப் பிடிக்கும். நான் மூணாவது படிச்சபோது 10 ஜோடி ‘லவ் பேர்ட்ஸ்’-ஐ அப்பா வாங்கிக் கொடுத்தாங்க. அதுக்குன்னு மரக்கூண்டு தயாரிச்சு அதுல போட்டு வளர்த்தோம். காலையில தீவனம், தண்ணீர் வெச்சுட்டுதான் பள்ளிக்குப் போவேன். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தீவனம் சாப்பிட்டிருக்கா, இல்லையா, தண்ணி வைக்கணுமான்னு ஒரு தடவைப் பார்த்துட்டுதான் வீட்டுக்குள்ளயே போவேன். விடுமுறை நாள்கள்ல எல்லாப் பசங்களும் தெருவுல விளையாடுவாங்க. ஆனா, நான் ‘லவ் பேர்ட்ஸ்’ கூண்டைச் சுத்தப்படுத்திட்டு இருப்பேன். ஆடு, நாய்களைக் குளிப்பாட்டுவேன்.

காக்டெய்ல்
காக்டெய்ல்

இப்படி வீட்டுல இருக்க எல்லாப் பிராணிகள் மேலயும் எனக்குப் பாசம் அதிகமாச்சு. மூணு மாசத்துல லவ் பேர்ட்ஸ் குஞ்சு பொரிக்க ஆரம்பிச்சுச்சு. குஞ்சு பொரிச்ச 40 நாள்கள்ல பானைகளை விட்டுக் குஞ்சுகள் வெளியே வந்து சுயமா தீவனம் எடுத்துப் பறக்க ஆரம்பிச்சுச்சு. கூண்டுல இடம் போதல. என்ன செய்யணும்னு தெரியாம, லவ் பேர்ட்ஸ் வாங்கின கடையிலயே போயிக் கேட்டோம். ‘கூண்டுல இடமில்லன்னா, இங்க விற்கலாம்’னு அந்தக் கடைக்கார அண்ணாச்சி சொன்னார்.

‘10 ஜோடி இருந்தா போதாதா, எதுக்கு இத்தனை..? பேசாம, அவர் சொல்ற மாதிரி வித்துடலாம்’னு அப்பா சொன்னாங்க. விற்க வேண்டாம்னு தோணுச்சு. அதே சமயம், கூண்டுல இடமில்லாம, அதுங்க ஒண்ணுக் கொண்ணு சண்டை போட்டுச் செத்துப் போனாலும் போகும். அதனால, அப்பா சொன்ன மாதிரி விற்கலாம்னு நினைச்சேன்.

கனூர்
கனூர்

10 ஜோடிகளைப் பிளாஸ்டிக் கூடைக்குள்ள பிடிச்சுப்போட்டு கடைக்குக் கொண்டுட்டுப் போனோம். ஒரு ஜோடி 60 ரூபாய்னு 10 ஜோடிகளை 600 ரூபாய்க்கு வித்தோம். அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டு வர மனசில்ல. ‘குருவி வித்த காசைக் குருவிக்கே செலவு செய்யணும்’னு அப்பாகிட்ட சொன்னேன். இன்னொரு கூண்டு வாங்கி, எங்கிட்ட இல்லாத கலர் குருவிகளைப் பார்த்து வாங்கிட்டு வந்தோம். 20 ஜோடி, 50 ஜோடி, 100 ஜோடி, 500 ஜோடி வரைக்கும் பெருக்கினேன். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு சென்னையில ஒரு தனியார் கம்பெனியில மூணு வருஷம் வேலை பார்த்தேன்.

சென்னையில வேலை பார்த்தபோது, நேசப் பறவைகளை வளர்க்குறதுக்காகவே பெரிய வீடா வாடகைக்குப் பிடிச்சேன். 50 ஜோடிகளை வளர்த்தேன். அதே சமயம் ஊருல, தோட்டத்துல உள்ள மிச்சக் குருவிகளைக் கவனிச்சுக்க, வீட்டுப் பக்கத்துல ஒருத்தருக்கு மாசமாசம் சம்பளம் கொடுத்தேன். செல்லப்பிராணிகளுக்கு நல்ல தேவையும் விலையும் இருக்குறதைத் தெரிஞ்சுகிட்டேன். இதற்கிடையில பார்த்துக்கிட்டிருந்த வேலையில திருப்தி இல்லாம, ஊருக்கே திரும்பிடலாம்னு தோணுச்சு. கையில இருந்த 50 ஜோடிகளையும் சென்னையிலயே விற்பனை செஞ்சுட்டு ஊருக்கே திரும்பிட்டேன். முழு நேரமா ரெண்டு ஏக்கர் முருங்கை, மூணு ஏக்கர் தென்னையைப் பார்த்துக்கிட்டே, பகுதிநேரமா செல்லப் பறவைகள் விற்பனையிலயும் வருமானம் பார்த்துட்டு இருக்கேன். இப்போ 100 ஜோடி லவ் பேர்ட்ஸ், 100 ஜோடி பின்ச்சஸ் (Finches), 50 ஜோடி காக்டெய்ல் (Cockatiel), 20 ஜோடி கனூர் (Conure) பறவைகள் இருக்குது” என்றவர் பறவைகளை நமக்கு காட்டினார்.

செல்லப் பறவைகள்
செல்லப் பறவைகள்

மாதம் 59,500 ரூபாய்

தொடர்ந்து வருமானம் பற்றிப் பேசிய ஜெப்ரி பால், “ஒவ்வொரு மாசமும் 50 ஜோடி லவ் பேர்ட்ஸும், 40 ஜோடி பின்ச்சஸும், 5 ஜோடி காக்டெய்லும், 2 ஜோடி கனூரும் விற்பனையாயிட்டு இருக்கு. லவ் பேர்ட்ஸ் ஒரு ஜோடி ரூ.250, பின்ச்சஸ் ஒரு ஜோடி ரூ.300, காக்டெய்ல் ஒரு ஜோடி ரூ.3,000, கனூர் ஒரு ஜோடி ரூ.10,000-க்கு விற்பனையாகுது. அந்த வகையில லவ் பேர்ட்ஸ் மூலமா ரூ.12,500, பின்ச்சஸ் மூலமா ரூ.12,000, காக்டெய்ல் மூலமா ரூ.15,000, கனூர் மூலமா ரூ.20,000 என மொத்தம் ரூ.59,500 மாச வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்புச் செலவுகள் ரூ.25,000 போக மீதமுள்ள 34,500 லாபமாக் கிடைச்சுட்டு இருக்கு. இது சராசரி வருமானம்தான். சில நேரங்கள்ல சில பறவைகள் அதிக எண்ணிக்கையிலகூட விற்பனையாகும். நேரத்துக்குச் சரியான தீவனம், முறையான பராமரிப்பு இருந்தால் இதிலும் நல்ல வருமானம் பார்க்கலாம்” என்றவர் நிறைவாக,

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

“இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை மன இறுக்கத்தைக் குறைக்கவும், அன்பு காட்டி நேசமாகப் பழகவும், மகிழ்ச்சிக்காகவும் காதல் பறவைகள், நேசப்பறவைகளை வளர்க்கிறாங்க. இதை வளர்ப்பதற்குச் சின்ன இடமே போதும். ஒருநாளைக்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் செலவிட்டாலே போதும். இத விற்பனை செய்றதுலயும் பிரச்னை இல்ல. இந்தப் பறவை வளர்ப்புத் தொழிலைப் பெண்கள் வீட்டிலிருந்தபடியோ, பிற தொழில்களைச் செய்துகொண்டோ செய்யலாம். அதன் மூலம் மாதந்தோறும் கணிசமான வருமானம் பெற வாய்ப்புள்ளது’’ என்றார்.


தொடர்புக்கு, ஜெப்ரி பால்,

செல்போன்: 90807 02584

ஒவ்வோர் இனத்துக்கும் தனிக் கூண்டு!

‘லவ் பேர்ட்ஸ்’ தமது ஜோடிகளுக்குள் காட்டும் காதல் அதீதமானது. கூட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சுதந்திரமாக இருந்தாலும் சரி, ஒன்றுக்கொன்று கொஞ்சி வெளிக்காட்டும் அன்பு ஆச்சர்யப்பட வைக்கும். முட்டையிட்டால் கூண்டைவிட்டுப் பெண் பறவை வெளியே வராது. அந்த நேரத்தில் ஆண் பறவையே பெண் பறவைக்கு இரை எடுத்துக் கொடுக்கும். அந்த உணவு ஊட்டலைப் பார்த்தால் பொறாமைப்பட வைக்கும். இதனால்தான் இவற்றை ‘நேசப் பறவைகள்’, ‘காதல் பறவைகள்’ என அழைக்கிறார்கள். பறவைகளை, அவற்றின் இனத்தைப் பொறுத்து தனித்தனியாகத்தான் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பறவைகள் அவற்றுக்கே உரிய குணாதிசயங்களுடன் வளரும். பறவைகள் எண்ணிக்கையைப் பொறுத்தே கூண்டுகளை அமைக்க வேண்டும். கனூர், காக்டெய்ல் உள்ளிட்ட பறவைகள் பெரிதாக வளரும் என்பதால், பெரிய கூண்டு அமைக்க வேண்டும்.

லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்


மரச்சட்டங்கள், கம்பி வலைகள் கொண்ட செவ்வக வடிவக் கூண்டுகளே சிறந்தது. செவ்வக வடிவக் கூண்டுகள் அதிக அளவு பறக்கும் இட வசதியுடன் இருக்கும். கூண்டுகளில் வலைகள் அமைக்கும்போது 1 சென்டிமீட்டருக்கு 1 செ.மீ, இடைவெளி கொண்ட சதுர வடிவ வலைகளாக இருக்க வேண்டும். இவை ஆரோக்கியமாக வளர காற்றோட்டம் மற்றும் சூரியவெளிச்சம் படும் பகுதியில் வைக்க வேண்டும். நேரடியாகச் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்கக் கூடாது. ஓய்வெடுக்க மரச்சட்டங்களால் ஆன பரண்கள், குச்சிகளை அமைக்க வேண்டும். மரம் மட்டுமல்லாமல் அலுமினியம், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றாலும் அமைக்கலாம். இக்குச்சிகள் ஒரே அளவு இல்லாமல் வெவ்வேறு அளவில் இருக்க வேண்டும். இதனால், பறவைகளின் கால்வலிப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

முட்டைப் பானைகள்

செல்லப் பறவைகள், இயற்கையாகவே முட்டையிட்டு அடைகாக்கும் திறன் பெற்றவை. பெண் பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்கு வசதியாகப் பானைகளைப் போதிய எண்ணிக்கையில் கட்டித் தொங்க விட வேண்டும். பானைகளின் வாய்ப்பகுதியை மூடி வைக்க வேண்டும். சத்தமில்லாத, ஓரளவு இருண்ட சூழ்நிலைதான் இவை முட்டையிட ஏற்றது. போதுமான அளவு பானைகள் இல்லையென்றால் பெண் பறவைகள் சண்டையிட்டுக் கொள்வதுடன் ஏற்கெனவே பானைகளில் இருக்கும் முட்டைகள், குஞ்சுகளைக் கீழே தள்ளிவிட்டு அவை முட்டையிடும். ஒரு ஜோடிக்கு ஒரு பானை வீதம் கட்ட வேண்டும். ஒரு முறை வைக்கும் பானையை இரண்டு இனப்பெருக்கக் காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிறகு, புதிய பானைகளைக் கட்டி விட வேண்டும்.

பறவைகள் வளர்க்கும் ஷெட்
பறவைகள் வளர்க்கும் ஷெட்


சத்தான தீவனம் அவசியம்!

காலை 7 மணி முதல் 8 மணி

தினை, சிவப்புத்தினை, காடைக்கண்ணி, சாமை, வரகு, பனிவரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சிறிய கம்பு, பெரிய கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றைக் கலந்து தீவனத் தட்டுகளில் போட வேண்டும். இதில், ‘தினை’தான் விருப்ப உணவு. மற்றவை கூடுதல் சத்தூட்டும் தானியங்கள். (10 ஜோடிகளுக்குத் தினை- 1 கிலோ, மற்ற தானியங்கள் - 250 கிராம்).

காலை 10 மணி முதல் 11 மணி

நிலக்கடலை, பாசிப்பயறு, கறுப்புக் கொண்டைக் கடலை, பச்சைப்பட்டாணி, வெள்ளைப்பட்டாணி, சம்பா கோதுமை, கறுப்பு எள், சிவப்பு எள், கறுப்புக்கானம், சிவப்புக்கானம், சூரியகாந்தி விதை ஆகியவற்றை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வடிகட்டி, அப்படியே தீவனத் தட்டுகளில் வைக்க வேண்டும். (10 ஜோடிகளுக்கு ஒவ்வொன்றிலும் தலா 50 கிராம்).

மதியம் 1 மணி முதல் 2 மணி

பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கை, அறுகம்புல் எனத் தினமும் ஏதாவது ஒரு வகைக் கீரையைப் பசுந்தீவனமாகப் போட வேண்டும். (10 ஜோடிகளுக்கு 200 முதல் 300 கிராம் கீரை போதுமானது) இதில், ‘கனூர்’ வகைப் பறவைகளுக்குக் கீரையின் அளவைக் குறைத்துவிட்டுக் கொய்யா, மாதுளை, ஆப்பிள், பீட்ரூட், கேரட், பப்பாளி, திராட்சை எனத் தினம் ஒரு பழத்தைக் கொடுக்கலாம். அவை விரும்பி உண்ணும். 15 நாள்களுக்கு ஒருமுறை கீரைகளுடன் வேப்ப இலைகளைக் கொடுக்கலாம். இவை, வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். (10 ஜோடிகளுக்கு 20 முதல் 30 வேப்பிலைகள்)

வாரம் ஒருமுறை சுத்தம்

வாரத்தில் ஒரு முறை கூண்டுகள் அல்லது கூடாரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். உள்ளே சுத்தம் செய்வதுபோல, கூடாரத்துக்கு வெளியிலும் சுத்தம் செய்ய வேண்டும். பறவைகளின் தீனிக்கு எறும்புகள் வருவது வாடிக்கை. இவை பறவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், வெளிப்புற ஓரமாக எறும்புப்பொடியைத் தூவ வேண்டும். கூண்டாக இருந்தால், கூண்டைச் சுற்றி எறும்புக்கொல்லி சாக்பீஸை கோடாகப் போடலாம்.

பின்ச்சஸ்
பின்ச்சஸ்

தண்ணீர் கவனம்

குடிநீர் பாத்திரத்தைத் தினமும், தீவனப் பாத்திரத்தை வாரத்துக்கு இரண்டு முறையும் சுத்தம் செய்ய வேண்டும். காலையில் தண்ணீர் வைப்பதோடு மட்டுமல்லாமல், மாலையிலும் ஒருமுறை தண்ணீர் உள்ளதா என்பதைக் கண்காணித்து, நிரப்பி விட வேண்டும். தினமும் காலையில் குருவிகள் முட்டையிட்டுள்ளதா, குஞ்சுகள் இறந்துள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். சில ஆண் பறவைகள் சண்டையிடும் குணமுடையதாக இருக்கும். அவை, மற்ற பறவைகளுடன் சண்டையிட்டுக் கூண்டில் உள்ள குஞ்சுகள், முட்டைகளைக் கீழே தள்ளிவிடும். இவ்வகை ஆண் பறவையைக் கண்காணித்துக் கூண்டை விட்டு நீக்குவது நல்லது. நோய்வாய்ப்பட்ட பறவைகளைத் தனிமைப்படுத்த வேண்டும்.

கூண்டுக்குள் கணவாய்க்கூடு போட்டால் அதைக் கொத்துவதால் கால்சியம் சத்து கிடைப்பதுடன் அவற்றின் அலகும் கூர்மையாகும். மழை நேரத்திலும், குளிர்ந்த காற்று, அதிகக்காற்று வீசும் நாள்களிலும் சளி தாக்கும். அப்போது, மருத்துவரால் பரிந்துரைக் கப்பட்ட மருந்தைத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். 40 முதல் 45-வது நாளில் குஞ்சுகளைத் தனியே பிரித்து விட வேண்டும். அந்தக் குஞ்சுகள், 90-ம் நாளுக்கு மேல் முட்டையிட ஆரம்பிக்கும். இதில், காக்டெய்ல், கனூர் உள்ளிட்ட சில பறவைகள் முட்டையிட ஓராண்டாகும். 4 முதல் 5 முட்டைகள் வரை இடலாம். இவற்றின் அடைக்கலம் 18 முதல் 21 நாள்கள் ஆகும்.

புதியவர்களுக்கு!

‘‘செல்லப்பறவைகள் வளர்க்கலாம்னு நினைக்கிறவங்க ஆரம்பத்துல 10 ஜோடிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிக்கலாம். லவ் பேர்ட்ஸ், பின்ச்சஸ்களின் வளர்ப்பே அடிப்படையானது. அடுத்து, வேறு வேறு வகைப் பறவைகளை வளர்க்கலாம். 10 ஜோடி செல்லப்பறவைகள் வளர்ப்பதற்குத் தேவையான கூண்டு, 10 ஜோடி பறவைகள் வாங்கும் செலவு, தீவனப்பெட்டி, தண்ணீர்க் குடுவை என்று ரூ.7,000 வரை செலவாகும். மூன்று மாசத்துக்கு பிறகு மாதம் 10 ஜோடிகள் மூலம் குறைந்தபட்சமாக ரூ.2,500 முதல் அதிகபட்சமாக 3,000 வரை வருமானம் கிடைக்கும். செல்லப்பறவைகளைப் பொறுத்தவரையில் குறைவான லாபத்தைக் கணக்கில் வைத்தால்தான் போகப்போக வருமானம் கூடும்” என்கிறார் ஜெப்ரி பால்.