Published:Updated:

மாதம் 50,000 ரூபாய் 'பலே' லாபம் கொடுக்கும் பட்டு வளர்ப்பு!

பட்டு வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
பட்டு வளர்ப்பு

மாநில அளவில் சிறந்த விவசாயி விருது பெற்றவரின் அனுபவம்!

மாதம் 50,000 ரூபாய் 'பலே' லாபம் கொடுக்கும் பட்டு வளர்ப்பு!

மாநில அளவில் சிறந்த விவசாயி விருது பெற்றவரின் அனுபவம்!

Published:Updated:
பட்டு வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
பட்டு வளர்ப்பு

மகசூல்

ட்டு வளர்ப்பில் முன்னோடி மாவட்டமாக உருவெடுத்து வருகிறது தேனி. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சிமலையையொட்டி நிலவும் சீரான சீதோஷ்ண நிலை, பட்டு வளர்ப்புக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதுதான். இப்போது பட்டு உற்பத்தியில் மாநில அளவில் தேனி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு முதல் மாவட்டத்தில் உள்ள பல விவசாயிகள் பட்டு வளர்ப்பில் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநில அளவில் தேனி மாவட்டம் முதலிடத்தை அடைய வாய்ப்புள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கூழையனூரைச் சேர்ந்த பட்டு விவசாயி சின்னன், அண்மையில் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயி விருதை முதல்வரிடம் பெற்றுள்ளார். கூழையனூர் அருகே அய்யநாதபுரத்தில் உள்ள அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றவர், தான் பட்டு வளர்ப்புக்கு வந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

மல்பெரி தோட்டத்தில் சின்னன்
மல்பெரி தோட்டத்தில் சின்னன்

‘‘ஆரம்பத்துல வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய்னு வழக்கமான வெள்ளாமை பண்ணிட்டு இருந்தேன். அதுல ஒரு தடவை காசு நிக்கும். அடுத்த தடவை கையைக் கடிச்சிடும். இப்படி ஏத்த இறக்காமாதான் இருந்துச்சு வெள்ளாமை. பல தடவை பெரிய நட்டமாகியிருக்கு. நம்ம பொழப்பு இப்படியே போகுதேனு கவலையோட இருக்கும்போதுதான், 2016-ம் வருஷம், பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிங்க வந்தாங்க. ‘இந்தப் பகுதி பட்டு வளர்ப்புக்கு ஏற்றதா இருக்கு. நீங்க அதைச் செய்யுங்க. நாங்க உதவியா இருக்கோம். அரசாங்கம் மானியம் கொடுக்குது. அதோட, பட்டுக்கூடுகளை அரசாங்கமே கொள்முதல் பண்ணிக்கும். இதுல இடைத்தரகர்கள் பிரச்னை யில்லாம லாபம் பார்க்கலாம்’னு சொன்னாங்க.

முதல்வரிடம் விருது பெறும் சின்னன்
முதல்வரிடம் விருது பெறும் சின்னன்

ஏற்கெனவே மாற்று வழி தேடிக்கிட்டு இருந்த எனக்கு, அது நல்ல யோசனையா பட்டுச்சு. என்ன ஆனாலும் சரி... பட்டு வளர்ப்புல இறங்கிடலாம்னு முடிவு பண்ணி 2 ஏக்கர் நிலத்தை ஒதுக் கிட்டேன். நிலத்தை நல்லா பண்படுத்தினேன். ஏக்கருக்கு ரெண்டு லோடு எரு போட்டு உழுதேன். வி.1 மல்பெரி குச்சியை நடவு பண்ணுனேன். ஒரு குச்சி 2.50 ரூபாய். 10,000 குச்சிகளை விலைக்கு வாங்கினேன். செடிக்குச் செடி 4 அடி வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளியில நட்டேன். 50,000 ரூபாய் செலவு பண்ணி சொட்டுநீர் அமைச்சேன். மல்பெரி நடவு பண்ணி முடிக்க ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல செலவாகிடுச்சு. பழனியில் பட்டுப்புழு வளர்ப்பு நடக்குது, அங்க பட்டுப்புழு முட்டைகளைப் பொரிக்க வெச்சு, ஒரு வாரம் வளர்த்துக் கொடுப்பாங்க. அதுக்கு 6,000 ரூபாய் செலவாகும்னு சொன்னாங்க. சரின்னு அங்க போய்ப் பார்த்துப் பேசி, ஏக்கருக்கு 270 முட்டைகள் வீதம் ‘ஆர்டர்’ கொடுத்தேன். அடுத்து பட்டு வளர்க்குறதுக்காக 20 அடி அகலம் 70 அடி நீளத்துல ‘வளர்ப்பு மனை’ அமைச்சேன். அதுக்கு 2 லட்சம் ரூபாய் செலவாச்சு.

மல்பெரி தோட்டம்
மல்பெரி தோட்டம்

என்னோட நிலம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துல இருக்குறதால அந்தச் சீதோஷ்ண நிலைக்கு மல்பெரி நல்லா வளர்ந்துச்சு. எவ்விதமான நோய் தாக்குதலும் இல்ல. ஒரு முறை மல்பெரி நடவு பண்ணிட்டா, சுமார் 20 வருஷம் வரைக்கும் இலை பறிச்சு கிட்டே இருக்கலாம். ரசாயன உரம், மருந்து எதுவுமே தேவையில்ல. 6 மாசத்துக்கு ஒரு தடவை எரு வெச்சாப் போதும்.

புழுக்களை வாங்கிட்டு வந்து வளர்ப்பு மனையில சேர்த்த பிறகு, மல்பெரி இலைகளைப் புழுக்களுக்கு இரையா கொடுத்துக்கிட்டே இருக்கணும். 60 கிலோ இலையில ஆரம்பிக்கணும். காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் கொடுக் கணும். ஒவ்வொரு நாளும் இலையோட அளவை அதிகரிச்சுகிட்டே போகணும். புழு வளர்ப்பு மனைக்குள்ள வந்ததுல இருந்து 22 நாள்ல தரமான பட்டுக்கூடு அறுவடை பண்ணலாம்.

மல்பெரி தோட்டம்
மல்பெரி தோட்டம்

பட்டு வளர்ப்புக்கு வேலையாளுங்க அதிகம் தேவையில்ல. எங்கள் குடும்ப ஆளுங்களே பார்த்துக்கிடுறோம். கண்ணும் கருத்துமாகப் பார்த்து வளர்க்குறோம். அதோட இயற்கை உரத்தாலும் பொருளைத் தரமானதா எடுக்க முடியுது. அதனாலதான் தொடர்ச்சியா விருது பெற முடியுது. சமீபத்துல தமிழக முதலமைச்சர் கையால விருது வாங்குனது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இப்போ வேளாண் கல்லூரி மாணவர்களும் விவசாயிகளும் பட்டு வளர்ப்பு பத்தி ஆலோசனைக் கேட்டுகுறாங்க. அது எனக்குப் பெருமையா இருக்கு’’ என்றவர் வருமானம் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

பட்டுப்புழு வளர்ப்பு மனை
பட்டுப்புழு வளர்ப்பு மனை

‘‘ஒரு கிலோ பட்டுக்கூட்டுக்கு அதிகபட்சமாக 800 ரூபாயும், குறைந்தபட்சம் 400 ரூபாயும் கிடைக்கிது. ரெண்டு ஏக்கர் மல்பெரி வளர்ப்புல வருஷத்துக்கு 12 தடவை பட்டுக்கூடு எடுக்க முடியும். ஒரு தடவைக்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் பாக்கலாம். செலவு போக குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வரை லாபம் பார்த்துட முடியும்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, சின்னன்,

செல்போன்: 97516 73298

4 வகையான மானியம்!

பட்டு வளர்ப்புக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து தேனி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கணபதியிடம் பேசினோம். ‘‘பட்டு வளர்ச்சித் துறைமூலம் விவசாயிகளுக்கு 4 வகையான மானியங்களை கொடுக்கிறோம். மல்பெரி நடவுக்கு 25,000 ரூபாய், சொட்டுநீர்ப் பாசனத்துக்குச் சிறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம், புழு வளர்ப்பு மனைக்கு மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியம், தளவாட சாமான்களுக்கு 52,500 ரூபாய் மானியம் வழங்குகிறோம்.

பட்டுக்கூடுகள்
பட்டுக்கூடுகள்

தேனி மாவட்டத்தில் முன்பு மஞ்சள் பட்டு உற்பத்தி செய்துகொண்டிருந்தபோது 50 முதல் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி கிடைத்தது. ஆனால், வெண்பட்டு மூலம் 80 முதல் 90 சதவிகிதம் வரை உற்பத்தி கிடைக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பட்டு வளர்ச்சித் துறையின் 7 மண்டலங்களிலும் பட்டு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மண்டலங்களில் பட்டு வளர்ப்பை அதிகப்படுத்த மர மல்பெரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 675 ஏக்கரில் மர மல்பெரி விளைவிக்கப்பட்டு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த முறையிலும் விவசாயம் செய்ய ஏக்கருக்கு 6,000 ரூபாய் மானியம், மண்புழு உரத்துக்காக 12,500 ரூபாய் மானியம் வழங்குகிறோம். தற்போது பள்ளப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் இதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

பட்டுப்புழு
பட்டுப்புழு


தேனி, போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் பட்டு வளர்ப்பு நடந்து வருகிறது. இதில் சுமார் 850 விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். போடி ஒன்றியத்தில் அதிகமான விவசாயிகள் பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சின்னமனூர், வருஷநாடு, ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளிலும் பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

கணபதி
கணபதி

கூழையனூர் விவசாயி சின்னனைப் போன்ற பல விவசாயிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். பட்டு விவசாயத்தில் மட்டுமே விதையும் விற்பனையும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் விவசாயிகள் மிகவும் நம்பகத்தன்மையுடன் பட்டு விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் மட்டும் மாதம் 10 டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. கோட்டூரில் 2 ஏக்கர் பரப்பில் 2.60 கோடி ரூபாயில் தானியங்கி பட்டு நூற்பாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் பலனடைவார்கள்’’ என்றார்.

மல்பெரி வளர்ப்பு முக்கியம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி முருகனுக்குச் சிறந்த பட்டு விவசாயி என்ற சான்றிதழும் பணப்பரிசும் கொடுத்துப் பாராட்டியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர். இது, மாவட்டத்தில் உள்ள மற்ற விவசாயிகளின் கவனத்தையும் பட்டு வளர்ப்பின் பக்கம் திருப்பியுள்ளது.

முருகன்
முருகன்


பட்டு வளர்ப்பில் முருகனின் அனுபவத்தைத் தெரிந்துகொள்ள நேரில் சந்தித்தோம். “சோழவந்தான் வட்டாரம் எப்பவும் முப்போகம் விளையுற அருமையான பகுதி. பாரம்பர்ய விவசாயக்குடும்பம். அதனால சின்ன வயசிலிருந்தே விவசாயத்தைப் பத்தி தெரியும். பி.ஏ.பி.எல் முடிச்சிட்டு, வழக்கறிஞர் தொழில் செய்தேன். ஒரு கட்டத்துல அதை முழுமையா நிறுத்திட்டு, விவசாயத்தில ஈடுபட ஆரம்பிச்சேன். காலப்போக்குல முதலீடு அதிகரிச்சு, லாபம் குறைய ஆரம்பிச்சது. கூடுதலா லாபம் கிடைக்க விவசாயத்தில வேறு முயற்சிகள்ல இறங்கலாம்னு யோசிச்சேன்.

பட்டுக்கூடுகள்
பட்டுக்கூடுகள்

அதன்பிறகு பட்டுப்புழு வளர்ப்பு குறித்து பட்டு வளர்ச்சித்துறையில ஆலோசனை கேட்டேன். ஆலோசனை சொன்னதோட அவங்களே பயிற்சியும் கொடுத்தாங்க. முறையா பயிற்சி எடுத்துக்கிட்டு இதுல இறங்கிட்டேன். இப்ப 10 வருஷம் ஆச்சு. மல்பெரி வளர்ப்புக்கும், சொட்டு நீர்ப் பாசனத்துக்கும், ‘ஷெட்’ அமைக்கவும் மானியம் தர்றாங்க. பட்டு வளர்ச்சித்துறையின் இளம்புழு வளர்ப்பு மையத்தில முட்டைகள் கிடைக்குது. அதை வாங்கி வளர்க்கலாம். இல்லைன்னா 7 நாள் வளர்ந்த இளம் புழுக்களா வாங்கி வளர்க்கலாம். பட்டுக்கூடு உருவானதும். அதைச் சேகரிச்சு, தேனி, சிவகங்கையில இருக்கப் பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில கொடுத்துடுவோம். நமக்கு இளம் புழுக்கள் கொடுக்குறதுல இருந்து கொள்முதல் செஞ்சு, விலை நிர்ணயம் வரைக்கும் பட்டு வளர்ச்சித் துறையே உதவி செய்யுது. நம்ம வேலை, பட்டுக்கூடுகளை ரொம்பக் கவனமா பராமரிக்கிறது மட்டும்தான். பட்டுப்புழுக்கள் வளர்ற ‘ஷெட்’டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும், எந்தவொரு வைரஸும் பாதிக்க விடாத அளவுக்கு வெச்சுக்கணும். ‘ஆஸ்பெட்டாஸ் ஷெட்’டுக்கு கீழே தென்னங்கிடுகை வெச்சு, வெப்பம் அதிகம் இறங்காம பார்த்துக்கணும். அப்படியும் வெக்கை (வெப்பம்) அதிகமா இருந்தா ‘ஷெட்’ சுவத்துல தண்ணி அடிச்சு உள்பகுதியைக் குளிர வைக்கணும். இதுதான் நம்ம வேலை. இதை மட்டும் சரியா செஞ்சுட்டாப் போதும். நல்ல லாபம் பார்த்திடலாம்.

மூட்டைப் பிடிக்கப்பட்ட பட்டுக்கூடுகள்
மூட்டைப் பிடிக்கப்பட்ட பட்டுக்கூடுகள்


வருஷம் முழுக்க உற்பத்தி செஞ்சு லாபம் பார்க்கணும்னா மல்பெரி செடிகளை 3 பகுதியா பிரிச்சு வளர்க்கணும். அப்பதான் வருஷம் முழுக்க இலையை வெட்ட முடியும். இலையை வெட்ட வெட்டத் தொடர்ச்சியாகப் பட்டுப்புழுக்களை வளர்க்கலாம்’’ என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, செல்போன்: 94431 09451

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism