Published:Updated:

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் லாபம்!பட்டுப்புழு வளர்ப்பு...

பட்டுப்புழு வளர்ப்பு மனையில் விஜின் பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டுப்புழு வளர்ப்பு மனையில் விஜின் பிரசாத்

மகசூல்

விவசாயப் பயிர்களில் குறுகிய காலத்தில் நிறைவான லாபத்தைத் தரக்கூடிய பயிர்களுள் ஒன்று மல்பெரி மற்றும் அதைத் தொடர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு. எந்தத் தொழிலுக்கும் இல்லாத வகையில் பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு, பல்வேறு மானியங்களை அள்ளிக் கொடுக்கிறது. இதனால் மல்பெரிச் சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்தவகையில், சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்த விஜின் பிரசாத் என்ற பட்டதாரி இளைஞர், பட்டுப்புழு வளர்ப்பில் இறங்கி அசத்தி வருகிறார். அடைமழை பொழிந்துகொண்டிருந்த ஒரு காலைவேளையில் விஜின் பிரசாத்தை அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.

உரக்கடையால் உண்டான ஆர்வம்

“பாரம்பர்யமான விவசாயக் குடும்பம். அம்மா அப்பாவுக்கு விவசாயத்தைத் தவிர வேற எதுவுமே தெரியாது. நான் ‘பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்’ படிச்சிருக்கேன். படிச்சு முடிச்சதும் பல இடங்கள்ல வேலை பார்த்தேன். இடையில கொஞ்ச உடல்நலப் பிரச்னை வந்ததால வெளியே எங்கயும் வேலைக்குப் போக முடியல. அப்பதான் எங்க ஊர்ல சொந்தக்காரர் ஒருத்தரோட உரக்கடையில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க, நிறைய விவசாய நிலங்களுக்குப் போக ஆரம்பிச்சேன். ஒரு விவசாயக் குடும்பத்துல பிறந்திருந்தாலும், அப்போதான் எனக்கு விவசாயத்து மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. அதுமட்டுமல்லாம ரசாயன உரங்களால நிலத்துக்கு என்னென்ன பாதிப்புகள் வருதுன்னும் தெரிஞ்சுக்க முடிஞ்சது. இதுக்கு பிறகு, இயற்கை விவசாயம் மேல ஆர்வம் அதிகமாச்சு. என்னோட தேடுதலை அதிகப் படுத்தினேன். நிறைய புத்தகங்கள், யூடியூப் வீடியோக்களைப் பார்த்தேன். ‘நம்மகிட்டயும் மூன்றரை ஏக்கர் விவசாயம் நிலம் இருக்கு. பேசாம நாமளும் முழுநேரமா விவசாயத்துல இறங்குனா என்ன’ன்னு தோணுச்சு.

பட்டுப்புழு வளர்ப்பு மனையில் விஜின் பிரசாத்
பட்டுப்புழு வளர்ப்பு மனையில் விஜின் பிரசாத்

அந்தச் சமயத்துல, ‘பட்டுப்புழு வளர்ப்புல நல்ல லாபம் இருக்கு. மாசம் ஆனா, உறுதியான வருமானம் கிடைக்கும். அப்படி இருக்குறப்ப ஏன் அங்கயும் இங்கயும் வேலைக்கு அலைஞ்சு சிரமப்படுற’ன்னு எங்க பக்கத்து தோட்டத்துல பட்டுப்புழு வளர்ப்பை செஞ்சுகிட்டு இருந்த அசோகன் அண்ணன் சொன்னாரு.

‘ஒருதடவை மல்பெரி செடி வச்சா 25 வருஷம் சாகுபடி செய்யலாம். மல்பெரிச் செடி வைக்கப் பெருசா செலவும் ஆகாது. பட்டுப்புழு வளர்ப்புக்கான ‘ஷெட்’ போட்டா, நாளைக்கு வருமானம் இல்லைனாக்கூட வேற எதுக்காவது பயன்படுத்திக்கலாம். எந்த நஷ்டமும் கிடையாது. மாசாமாசம் நிரந்தமான வருமானமும் கிடைக்கும்’னு அப்பாகிட்ட சொல்லி அனுமதி வாங்கினேன்.

2019, ஜூன் மாசம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்ல இருக்கப் பட்டு வளர்ச்சித்துறை பயிற்சி மையத்தில 5 நாள்கள் இலவச பயிற்சி வகுப்புக் குப் போனேன். அங்க பட்டுபுழு வளர்ப்பு சம்பந்தமான நுணுக்கங் களைக் கத்துக்கிட்டு வந்தேன். இன்னைக்குச் சிறப்பா மல்பெரிச் சாகுபடி பண்ணி பட்டுப்புழுக் களை வளர்த்துப் பட்டுக்கூடுகளை உற்பத்தி செஞ்சுகிட்டு இருக்கேன்” என்றபோது மழை லேசாக விட்டிருந்தது. சில்லென்று காற்று வீசத் தோட்டத்தில் நடந்தபடியே மறுபடியும் பேசத் தொடங்கினார்.

“முதற்கட்டமா ஒன்றரை ஏக்கர்ல மல்பெரி நடவு செஞ்சேன். 50 அடி நீளம், 20 அடி அகலத்தில புழு வளர்ப்பு மனையையும் தயார் பண்ணேன். முதல்ல 50 முட்டைத் தொகுதியை 1,250 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து வளர்த்தேன். எனக்கு அனுபவம் இல்லாததால பட்டுப்புழு வளர்ப்பு மனையில நிறைய எறும்பு ஏறிடுச்சு. அதனால 8 கிலோதான் பட்டுக்கூடு எடுக்க முடிஞ்சது. பட்டுக்கூடும் தரமா இல்லைன்னு சொன்னாங்க. அதுல 700 ரூபாய்தான் எனக்கு வருமானம் கிடைச்சது.

22-ம் நாள் கூடு அறுவடை

ஏற்கெனவே பட்டுக்கூடு உற்பத்தி செஞ்சுகிட்டு இருக்க விவசாயிகள், நண்பர்கள்னு பலர்கிட்ட ஆலோசனைக் கேட்க ஆரம்பிச்சேன். மல்பெரிச் செடிகளுக்குத் தொழுவுரம் கொடுத்து, முறையா களை எடுத்துட்டு வந்தேன். அடுத்த 15-வது நாள்ல மறுபடியும் புழு வளப்புல இறங்குனேன். 50 முட்டைத் தொகுதிகளை வாங்கி வச்சேன். 22-ம் நாள்ல 33 கிலோ பட்டுக்கூடு கிடைச்சது. அன்னைக்கு கிலோ 300 ரூபாய் போச்சு. 10,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. அது உற்சாகத்தைக் கொடுத்துச்சு.

வருஷத்துக்கு 10 முறை மகசூல்

இப்ப மாசம் குறைஞ்சது 90 முட்டைத் தொகுதிகளை வைக்குறேன். 80 கிலோ வரைக்கும் பட்டுக்கூடு கிடைக்குது. கடைசியா ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு 400 ரூபாய் விலை கிடைச்சது. அது மூலமா 32,000 வருமானம் கிடைச்சது. ஒரு முட்டைத்தொகுதி 30 ரூபாய்னு 90 முட்டைத் தொகுதிக்கு 2,700 ரூபாய், தோட்டப் பராமரிப்பு, களை யெடுப்புனு மொத்தச் செலவு 5,000 ரூபாய். செலவு போகக் கையில 27,000 ரூபாய் லாபம் நின்னுச்சு. இப்படி வருஷத்துக்கு 10 தடவை பட்டுக்கூடு எடுக்கலாம். விலை முன்ன பின்ன இருக்கும். சராசரியா 80 கிலோ பட்டுக்கூடு மூலமா 25,000 ரூபாய் நிச்சயம் லாபம் கிடைக்கும். அந்த அடிப்படையில பார்த்தா வருஷத்துக்கு 2,50,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

மல்பெரித் தோட்டத்தில்
மல்பெரித் தோட்டத்தில்


என்கிட்ட 200 முட்டைத் தொகுதிகளை வைக்கிற அளவுக்குப் புழு வளர்ப்பு மனை இருக்கு. போதுமான மல்பெரி இலைகள் இல்லாததாலயும், மல்பெரி செடிகள்ல போதுமான அறுவடை செய்ய முடியாத தாலும்தான், இப்ப வெறும் 90 முட்டைத் தொகுதிகளை வச்சுக்கிட்டு இருக்கேன். போன மாசம்தான் கூடுதலா ஒரு ஏக்கர்ல மல்பெரி பயிரிட்டு இருக்கேன். இன்னும் 40 முட்டைத் தொகுதிகளை வாங்கி வளர்க்க எண்ணம் இருக்கு” என்றவர் பட்டுப்புழு வளர்ப்பு தொடர்பாகப் பேசினார்.

சத்தான இலை அவசியம்

‘‘பட்டுப்புழு வளர்ப்பு மனைகளை நல்ல காற்றோட்டமான இடத்துல அமைக்கணும். மனைகள்ல எறும்பு ஏறாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யணும். எந்த அளவுக்கு இயற்கை விவசாய முறையில விளைஞ்ச சத்தான மல்பெரி இலைகளைக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்குப் பட்டுப்புழுக்கள் எந்தப் பாதிப்பும் இல்லாம நல்லா வளர்ந்து, தரமான பட்டுக்கூடுகளைக் கொடுக்கும். பட்டுப்புழு முட்டைகளை வாங்கிட்டு வந்து விவசாயிகளே பொரிக்க வெச்சு வளர்க்க முடியும். ஆனா, இதுல அதிக இழப்பு இருக்கும். அதனால ‘சாக்கி சென்டர்’னு சொல்ற இளம்புழு வளர்ப்பு மையங்களிலிருந்து 7 நாள்கள் வயசுள்ள புழுக்களை வாங்கிட்டு வந்தும் வளர்க்கலாம். கிராமப்புறப் பெண்கள், வேலை யில்லாத இளைஞர்கள் ஆகியோருக்குப் பட்டுப்புழு வளர்ப்பு நல்ல நீடித்த வருமானம் கொடுக்கக்கூடிய சிறந்த தொழில்” என்றார்

தொடர்புக்கு,
விஜின் பிரசாத்,
செல்போன்: 81488 82445.

மல்பெரி ரகங்கள்

மல்பெரி ரகங்கள் குறித்துப் பேசிய விஜின் பிரசாத், ‘‘பட்டுவளர்ச்சித் துறை மூலம் வி-1, எம்.ஆர்-2, ஜி-4 வீரிய மல்பெரி ரகங்களைப் பரிந்துரை செய்றாங்க. இந்த மூணு ரகங்களும் விவசாயிக மத்தியில பிரபலமான ரகங்கள். இது தவிர, எஸ் வரிசை ரகங்கள், மானாவாரி நிலங்களுக்கான ரகங்களும் இருக்கு. நான் வி-1 ரக மல்பெரியைத் தேர்ந்தெடுத்தேன். இந்த ரகம் அதிக இலை மகசூலைத் தரக்கூடியது. இலைகள் அதிக நீர்ச்சத்துடன் இருக்கும். வறட்சி, மழை எல்லாத்தையும் தாங்கி வளரும். பெரும்பாலான பட்டு வளர்ப்பு விவசாயிகள் இந்த ரகத்தைத் தான் தேர்ந்தெடுப்பாங்க. ஒரு நாற்று 2 ரூபாய்னு ஒன்றரை அடி உயரமுள்ள 6,000 மல்பெரி நாற்றுகளை வாங்கிட்டு வந்து நடவு பண்ணியிருக்கேன்’’ என்றார்.

பட்டுப்புழுக்கள்
பட்டுப்புழுக்கள்

நோய்த் தாக்குதலும் மேலாண்மையும்

இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி

கோடைப் பருவத்தில் இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாகக் காணப்படும். குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் செடியின் இளந்தளிர் மற்றும் குருத்துத் தண்டுப் பகுதியில் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் உண்டாக்கும். பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் சுருண்டு காணப்படும். இரண்டு கணுக்களுக்கான இடைவெளி மிகவும் குறைந்து, செடிகள் வளர்ச்சி குறைந்து காணப்படும். இலைகளின் தரம் குறைந்துவிடும். இதைத் தடுக்கப் பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி சேகரித்து எரிந்து விட வேண்டும். மீன்எண்ணெய் தெளிப்பதன் மூலமும், இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

பப்பாளி மாவுப் பூச்சி

இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். இதனால் சிவப்பு மற்றும் கறுப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இலைகள் வாடிக் கருகிவிடும். இயற்கையாக வயலில் காணப்படும் ‘ஸ்பால்ஜியஸ்’ மற்றும் ‘காக்ஸிநெல்லிட்ஸ்’ போன்ற ஒட்டுண்ணிகளைப் பாதுகாப்பதோடு, ‘அசெரோபேகஸ்பப்பாயே’ ஒட்டுண்ணிகளை வயலில் விடுவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம். பட்டு வளர்ச்சித்துறையில் கேட்டால் இந்த ஒட்டுண்ணியை ஏற்பாடு செய்துகொடுப்பார்கள்.

இலைப்பிணைக்கும் புழு

குளிர்காலங்களில் இப்புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இப்புழுக்கள் மல்பெரி செடியின் இலைகளைப் பிணைத்து உண்ணுகின்றன. இதன் தாக்குதலால் செடியின் வளர்ச்சி குன்றிவிடும். பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதிகளைக் கிள்ளி எடுத்து அழித்து விட வேண்டும்.

பட்டுப் புழுக்களைத் தாக்கும் ஊசி ஈ

மழைக் காலங்களில் ஊசி ஈ, தாக்குதல் அதிகமாகக் காணப்படும். ஊசி ஈயின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், பட்டுப்புழுவின் உடலைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடும். ஊசி ஈ துளைத்துச் சென்ற இடத்தில் பட்டுப்புழுவின் மீது ஒரு கரிய புள்ளி ஏற்படும். புழு உள்ளே வளர வளரக் கரும்புள்ளியும் பெரிதாகிக்கொண்டே வந்து ஒரு கரிய வடுவாக மாறிவிடும். ஊசிப்புழு பட்டுப்புழுவின் உடலைத் துளைத்துக்கொண்டு வருவதால் பட்டுப்புழுக்கள் இறந்துவிடுவதோடு, ஊசி ஈயின் தாக்குதல் ஏற்படும். பட்டுப்புழு மிகவும் வலுவற்ற கூட்டைக் கட்டும். இத்தாக்குதலால் ஒவ்வொரு 100 முட்டை எண்ணிக்கை கொண்ட புழு வளர்ப்புக்கும் சராசரியாக 10 கிலோ வரை பட்டுக்கூடு மகசூல் இழப்பு உண்டாகிறது.

ஊசி ஈயினால் துளைக்கப்பட்ட பட்டுக் கூடுகளைப் பிரித்தெடுத்து அவற்றைப் பட்டுக் கூடுகளின் கழிவுகளோடு சேர்த்து எரித்து விட வேண்டும். ஊசி ஈக்கள் வளர்ப்பறையினுள் நுழைவதைத் தடுக்க வளர்ப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளில் வலை அடிக்க வேண்டும். ‘நிஸோலின்க்ஸ் தைமஸ்’ என்ற ஒட்டுண்ணியை 100 முட்டைத் தொகுதிகளுக்கு ஒரு லட்சம் ஒட்டுண்ணிகள் என்ற விகிதத்தில் மாலை நேரங்களில் வெளியிட்டுக் கட்டுப்படுத்தலாம். பட்டுக்கூடு அறுவடைக்குப் பிறகு, வளர்ப்பறைகளில் கோழிகளை விடுவது மீதமுள்ள ஊசிப்புழுக்களையும் அழிக்க உதவும்.

மல்பெரிச் சாகுபடி பற்றி விஜின் பிரசாத் கூறிய தகவல்கள் இங்கே பாடமாக...

மல்பெரி செடி நடவு செய்வதற்கு முன்பு, நிலத்தை நன்கு உழுது, சமன்படுத்தி, ஏக்கருக்கு 8 டிராக்டர் தொழுவுரம் இட்டு நிலத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். செம்மண் நிலம் மல்பெரிச் சாகுபடிக்குச் சிறந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மல்பெரி நாற்றுகளைச் செடிக்குச் செடி 2 அடி, வரிசைக்கு வரிசை 4 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் நிலத்தின் தேவைக்கேற்ப நீர்பாய்ச்ச வேண்டும். மல்பெரி அறுவடை வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடவு செய்த மூன்றாம் மாதத்திலிருந்து மல்பெரி இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 45 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பூச்சித் தாக்குதல் இருந்தால் வேப்பிலைக் கரைசலை ஏக்கருக்கு 50 லிட்டர் வீதம் இலை வழியாகத் தெளிக்கலாம். செடியின் வளர்ச்சிக்காக 6 மாதத்துக்கு ஒரு முறை தொழுவுரம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கொடுத்தால் பூச்சித் தாக்குதல் பெரிதாக இருக்காது.

பட்டுப்புழுக்கள்
பட்டுப்புழுக்கள்

புழு வளர்ப்பு மனைக்கு 1,20,000 ரூபாய் மானியம்

பட்டு வளர்ப்புத் தொடர்பாக, சேலம் பட்டு வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் ஆ.பழனிச் சாமியிடம் பேசினோம்.

‘‘தமிழ்நாட்டின் கச்சா பட்டுத் தேவை ஆண்டு ஒன்றுக்கு 3,000 மெட்ரிக் டன். ஆனால், அவ்வளவு உற்பத்தி இல்லை. தேவை மற்றும் உற்பத்திக்குமான இடைவெளியைப் போக்கவும், கச்சா பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவை அடையவும், தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களையும் மானியங்களையும் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், விவசாயிகளுக்கு மல்பெரி நடவு மானியமாக ஏக்கருக்கு 10,500 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 52,500 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. மல்பெரி தோட்டங்களில் சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளை நிறுவ ஏக்கருக்கு 45,800 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயி 12.35 ஏக்கர் வரையில் 4,24,200 ரூபாய் மானிய உதவியுடன் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக்கொள்ளலாம்.

அதேபோல தனிப் புழு வளர்ப்பு மனை அமைத்துக்கொள்ள 1,000 சதுர அடி மனைக்கு 1,20,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. புழு வளர்ப்புக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ள, நவீன புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கு 52,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. முன்னோடி பட்டு விவசாயிகளுக்குப் ‘பவர் டில்லர்’ வாங்க 35,000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது. நடப்பாண்டில் 5,000 ஏக்கருக்கு நடவு மானியம், 4,000 ஏக்கருக்குச் சொட்டு நீர்ப்பாசன மானியம் மற்றும் 300 புழு வளர்ப்பு மனைகளுக்கு மானியம் வழங்கிட அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பட்டுக்கூடு சராசரியாக 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

தொடர்புக்கு:

உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை,

அணைமேடு, சேலம்-636001

தொலைபேசி: 0427 2905443,

செல்போன்: 75987 90157.

தேசிய அளவில் 2-வது இடம்

2020-21-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த பட்டுக்கூடு உற்பத்தி 11,505 மெட்ரிக் டன். இதில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி 10,963 மெட்ரிக் டன். 2020-21-ம் ஆண்டுத் தமிழ்நாட்டின் மொத்த கச்சா பட்டு உற்பத்தி 1,834 மெட்ரிக் டன். இதில் 1,754 மெட்ரிக் டன் வெண் கச்சா பட்டு. தேசிய அளவில் மொத்த மல்பெரி கச்சா பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும், வெண் கச்சா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.