Published:Updated:

கிரீன் டீ, ஒயிட் டீ, ஊலாங் டீ... மதிப்புக்கூட்டல் தேயிலையில் மாதம் ₹47,000

தேயிலை பறிப்பில் பிரபு
பிரீமியம் ஸ்டோரி
தேயிலை பறிப்பில் பிரபு

மதிப்புக்கூட்டல்

கிரீன் டீ, ஒயிட் டீ, ஊலாங் டீ... மதிப்புக்கூட்டல் தேயிலையில் மாதம் ₹47,000

மதிப்புக்கூட்டல்

Published:Updated:
தேயிலை பறிப்பில் பிரபு
பிரீமியம் ஸ்டோரி
தேயிலை பறிப்பில் பிரபு

லகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பானம்... தேநீர். இதனால், தேயிலைக்கான சந்தை வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தி அதிகம் நடைபெறும் நீலகிரி மாவட்டத்தில், மிகக் குறைவான அளவிலேயே இயற்கை முறையில் தேயிலைச் சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, இயற்கை முறையில் தேயிலைச் சாகுபடி செய்து வருகிறார். தேயிலையை மரமாக வளர்த்து இலைகளைப் பறித்து, மதிப்புக்கூட்டல் செய்து நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

குன்னூர்-ஊட்டி சாலையில் உபதலை செல்லும் வழியில் உள்ள பொரேரைஹட்டி கிராமத்தில் அமைந்துள்ளது இவரது தோட்டம். ஒரு காலை வேளையில், தேயிலை பறிப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபுவைச் சந்தித்தோம்.

தற்சார்பு வாழ்க்கை

“எங்களுடைய பூர்வீகம் நீலகிரி மாவட்டம்தான். நான் படிக்கும்போதே விவசாய வேலைகள்லயும் செய்ய ஆரம்பிச்சேன். கோயம்புத்தூர்ல பி.எஸ்ஸி முடிச்சதும், அப்பா கூட விவசாய வேலையிலயே முழுசா இறங்கிட்டேன். அந்த நேரத்துல, தொழிற்சாலையில கொள்முதல் செய்ற தேயிலை விலை கடுமையா வீழ்ச்சியடைஞ்சது. அதனால வேற வேலைக்காகத் திருப்பூர் போயிட்டேன்.

தோட்டத்தில் பிரபு
தோட்டத்தில் பிரபு

விடுமுறை தினங்கள்ல ஊருக்கு வரும்போது, என்னோட அண்ணன், அக்காகூடப் புதுத் தொழில் வாய்ப்புகள் பத்தி ஆலோசனை செய்வேன். அந்தத் தேடல்ல, சீனா, ஜப்பான்ல பிரபலமா இருந்த கிரீன் டீ, ஊலாங் டீ-னு பல்வேறு உயர் ரக டீ வகைகள் (Fancy Tea Varieties) பத்தி தெரிஞ்சுகிட்டோம். நாமும் அதுபோல மதிப்புக்கூட்டல் முறைகளைச் செஞ்சு பார்க்கலாம்னு முடிவெடுத்தோம். நீலகிரி மாவட்டத்துல சொந்த எஸ்டேட்ல தொழிற்சாலை நடத்துற பெரும் முதலாளிகள் சிலர் மட்டும்தான், உயர் ரக மதிப்புக்கூட்டல் தேயிலையைத் தயாரிச்சாங்க. எங்களை மாதிரி சாமானிய விவசாயிகள்ல யாரும் மதிப்புக் கூட்டல் யுக்திகளை அப்போ செய்யல.

நீண்ட சோதனை முயற்சி

வருஷகணக்குல சோதனை முயற்சி செய்ததுக்குப் பலன் கிடைச்சது. இயற்கை சாகுபடி முறையில தேயிலையை உற்பத்தி செஞ்சு, மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா தனித்துவம் கிடைக்கும்னு நினைச்சோம். அதுக்காக, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், கனஜீவா மிர்தம் பயன்படுத்தி, 2010-ம் வருஷத்துல இருந்து நிலத்தைப் படிப்படியா இயற்கை விவசாய முறைக்கு மாத்தினோம். எங்க பகுதியில வழக்கமா பறிக்கிற மாதிரி, செடியின் மேற்பகுதியில இருந்து 5- 6 இலைகள் வரைக்கும் பறிச்சோம். ஒவ்வொரு முறையும் தலா 5 கிலோ தேயிலையை அடி பிடிக்காதவாறு வதக்கி ‘கிரீன் டீ’ தயாரிச்சோம்” என்று முன்கதையை விவரித்த பிரபு, தேயிலைத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டியபடியே தொடர்ந்தார்.

மதிப்புக்கூட்டப்பட்ட தேயிலை
மதிப்புக்கூட்டப்பட்ட தேயிலை

8,000 தேயிலை மரங்கள்

“தேயிலையில இருக்கும் கஃபீன் (Caffeine) என்ற வேதிப்பொருள்தான், தேநீர் குடிச்சதும் நமக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்குது.

அந்த உணர்வை, ‘தியனைன்’ என்ற வேதிப் பொருள்தான் நம்ம உடல்ல குறிப்பிட்ட சில மணிநேரத்துக்கு நீடிக்கச் செய்யும். தேயிலையில இருக்கும் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’, உடல்ல இருக்குற கெட்ட ‘செல்’களை நீக்கும் பணிகளைச் செய்யும். இந்த மூணு வேதிப்பொருள்கள்தான், தேநீரில் திடம், மணம், சுவையைத் தீர்மானிக்கப் பெரிதும் உதவுது. தேயிலையில EGCG (Epigallocatechin Gallat) உட்பட 5 வகையான ‘ஆன்டிஆக்ஸிடன்ஸ்’ இருக்குது. இவற்றின் கூட்டுத்தொகையைக் ‘கேட்டசி’ன்னு சொல்வாங்க. இதோட அளவு, தேயிலைச் செடியில நுனி மொட்டு, முதல் மற்றும் ரெண்டாவது இலையிலதான் அதிகம் இருக்கும். இதை, வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்கள் ஆராய்ச்சியில உறுதிப்படுத்தி இருக்கு. இந்த விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டு, அதன்படியே மதிப்புக்கூட்டல் செஞ்சோம்.

இந்த முறையில தயாரிச்ச கிரீன் டீ வகை மதிப்புக்கூட்டல் தேயிலையை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ‘டீ டேஸ்டர்’களுக்கு அனுப்பினோம். அவங்ககிட்ட இருந்து சாதகமான பதில்கள் கிடைச்சது. 2013-ம் வருஷம் இறுதியான செய்முறையை உருவாக்கினோம். பிறகு, படிப்படியா மேலும் சில வகை மதிப்புக்கூட்டல் தேயிலை முறைகளையும் கத்துக்கிட்டோம். இதுக்கிடையே, தேயிலைத் தோட்டத்துல குறிப்பிட்ட பகுதியில மட்டும் செடிகள்ல சரியான வளர்ச்சி இல்லாம இருந்துச்சு. அதனால, அந்தப் பகுதியில மட்டும் தேயிலையைப் பறிக்காம விட்டதுல அவை மரமாகிடுச்சு. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு, அந்த மரங்கள்ல இலைகள் செழிப்பா வளர்ந்துச்சு. அதுலயும், மொட்டு, முதல் மற்றும் ரெண்டாவது இலையை மட்டுமே பயன்படுத்தி, சோதனை முயற்சியா மதிப்புக்கூட்டல் செஞ்சு பார்த்தோம். அந்தத் தேயிலையில தயாரிச்ச தேநீரின் தரமும் சுவையும் சிறப்பா இருந்துச்சு. அதை ஆராய்ச்சியாளர்கள் சிலர்கிட்ட கொடுத்து, சோதிச்சு பார்த்தோம். அவங்களும் இதை உறுதி செஞ்சாங்க.

மாடுகளுடன்
மாடுகளுடன்

பிறகு, எங்களோட 13 ஏக்கர் தேயிலைத் தோட்டத்துல எல்லாச் செடிகளையும் மரமாவே வளர்த்தோம். ஒருகட்டத்துல உயரமான கிளைகள்ல இருந்து தேயிலை பறிக்கிறதுல சிரமமாகிடுச்சு. அதனால, சில அடி இடைவெளிக்கு ஒரு மரம் வீதம், மொத்தமா 8,000 மரங்களை மட்டும் விட்டுட்டு, மற்ற மரங்களைக் கவாத்து செஞ்சு மறுபடியும் நாலடி உயரம் உள்ள செடிகளா மாத்திட்டோம்” என்றவர், மதிப்புக்கூட்டல் செய்யும் முறைகளை விளக்கினார்.

ஆறு வகைத் தேயிலை

“2014-ம் வருஷம் விற்பனையை ஆரம்பிச்சோம். அப்போ மாசத்துக்கு ரெண்டு கிலோ மட்டுமே ‘கிரீன் டீ’ வகை மதிப்புக்கூட்டல் தேயிலையை உற்பத்தி செஞ்சோம். கிரீன் டீ, ஒயிட் டீ, பிளாக் டீ, ஊலாங் டீ, எல்லோ டீ, ஏஜ்டு டீ-னு 6 வகை உயர் ரகத் தேயிலையை மட்டும் இப்போ தயாரிச்சு, இந்தியா முழுக்க விற்பனை செய்றோம்.

மழை இல்லாத காலங்கள்ல 15 நாள்களுக்கு ஒருமுறை இலைவழி தெளிப்பா பயிர் முழுக்க ஜீவாமிர்தம் தெளிப்போம். மழைக் காலங்கள்ல 15 நாள்களுக்கு ஒருமுறை இலைவழி தெளிப்புடன், வேருக்கும் ஜீவாமிர்தம் கொடுப்போம். 6 மாசத்துக்கு ஒரு தடவை, ஏக்கருக்கு 250 கிலோ ஊட்டமேற்றிய கனஜீவாமிர்தத்தைத் தோட்டம் முழுக்கத் தூவிவிடுவோம். இதனால, பூச்சித்தாக்குதல், நோய் தாக்குதல் எதுவும் வர்றதில்ல.

குதிரையுடன்
குதிரையுடன்

ஒரு மொட்டு, இரண்டு இலை

வருஷத்துக்கு மூணு பருவத்துல (மார்ச் - ஏப்ரல், ஆகஸ்ட் - செப்டம்பர், டிசம்பர் - ஜனவரி) மட்டும்தான் அறுவடை. ஒவ்வொரு பருவத்துலயும், ஒரு மரத்துல இருந்து சராசரியா மூணு கிலோ தேயிலையைப் பறிக்கலாம். ஆனா, விற்பனை வாய்ப்பு குறைவா இருக்கிறதால, ஒரு மரத்துல சராசரியா ஒரு கிலோ அளவுக்குத்தான் தேயிலை பறிக்கிறோம். பறிக்காத தேயிலை காய்ஞ்சு கீழ விழுந்து உரமாகிடும். இந்தத் தேயிலை மரங்கள் சராசரியா 10 அடியில இருந்து 22 அடி வரைக்கும் இருக்குது. இதுல, ஏணிய பயன் படுத்தியும், கிளைகளை வளைச்சும்தான் தேயிலை பறிப்போம். எனக்குத் தெரிஞ்ச அளவுல நீலகிரி மாவட்டத்துல எங்களைத் தவிர வேறு யாருமே, மரமா வளர்த்து மதிப்புக்கூட்டல் தேயிலையைத் தயாரிக்கல” என்றவர் விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசத் தொடங்கினார்.

மாதம் ₹1,18,500

“நேர்த்தி, பொறுமை, அர்ப்பணிப்புடன் உயர் ரகத் தேயிலையைத் தயாரிப்பதும் ஒரு கலைதான். ரொம்பவே மெனக்கெட்டு தயாரிக்குற இந்த உயர் ரகத் தேயிலையின் விலையும் அதிகம்தான். அதனாலயே, 25 கிராம், 50 கிராம் பாக்கெட்ல மட்டுமே தேயிலையை விற்பனை செய்றோம். ‘கிரீன் டீ’ தேயிலை 6 கிலோ, ‘பிளாக் டீ’ தேயிலை ரெண்டரை கிலோ, ‘ஒயிட், எல்லோ, ஊலாங் டீ’ தேயிலை தலா அரைக்கிலோ, ‘ஏஜ்டு டீ’ தேயிலை 100 கிராம் அளவுக்குத்தான் மாதம்தோறும் விற்பனை செய்றோம். ‘பிளாக் டீ’ தேயிலை, ‘எல்லோ டீ’ தேயிலை, ‘ஊலாங் டீ’ தேயிலை வகையெல்லாம் ஒவ்வொரு கிலோவும் தலா 13,000 ரூபாய், ‘ஒயிட் டீ’ தேயிலை 22,000 ரூபாய், ‘கிரீன் டீ’ தேயிலை கிலோ 10,000 ரூபாய், ‘ஏஜ்டு டீ’ தேயிலை 20,000 ரூபாய் விலையில விற்பனை செய்றோம்.

6 வகையிலயும் சேர்த்து, மாதம்தோறும் சராசரியா 10 கிலோ தேயிலையை விற்கிறோம். அந்த வகையில, 6 கிலோ ‘கிரீன் டீ’ 60,000 ரூபாய், ரெண்டரை கிலோ ‘பிளாக் டீ’ 32,500 ரூபாய், அரைக்கிலோ ‘ஒயிட் டீ’ 11,000 ரூபாய், அரைக்கிலோ ‘எல்லோ டீ’ 6,500 ரூபாய், அரைக்கிலோ ‘ஊலாங் டீ’ 6,500 ரூபாய், 100 கிராம் ‘ஏஜ்டு டீ’ 2,000 ரூபாய்னு மொத்தம் 1,18,500 ரூபாய் கிடைக்கும். அதுல தேயிலை பறிப்புக்கூலி, உற்பத்திச்செலவு, கூரியர் செலவுக்கு 60 சதவிகிதம் போயிடும். அந்த வகையில, 71,000 ரூபாய் போனா, மாசத்துக்கு 47,500 ரூபாய் லாபமா நிக்கும்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

ஒரு குடும்பத்துக்கு

50 கிராம் தேயிலை போதும்

ஜப்பான், சீனாவுல சில உயர் ரக மதிப்புக் கூட்டல் தேயிலை வகையெல்லாம் கிலோவுக்குச் சில லட்சம் ரூபாய் வரை விற்கப்படுது. அவ்வளவு விலை கொடுத்து நம்ம ஊர்ல வாங்க மாட்டாங்க. தேயிலைக்கு உரிய விலை கிடைக்காட்டியும், வேறு வழியில்லாம சுத்துவட்டார தொழிற்சாலை களுக்குத் தேயிலையை விற்பனை செய்றோம். இதுவே, மதிப்புக்கூட்டல் செஞ்சு வெச்சிருந்தா, பல மாதங்கள்வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம். சராசரியா 3 - 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு, இந்த வகை மதிப்புக்கூட்டல் தேயிலையில 50 கிராம் அளவே ஒரு மாசத்துக்குப் போதுமானது. நன்கு கொதிநிலையில இருக்கும் 300 - 350 மி.லி நீர்ல, இந்த 6 வகையில ஏதாச்சும் ஒரு ரகத் தேயிலையில 2 கிராம் மட்டும் சேர்க்கணும். அதை, 2 - 3 நிமிடங்கள் ஊற வெச்சு வடிகட்டினா, 300 மி.லி அளவுல ‘கிரீன் டீ’ தயார். சில மணிநேர இடைவெளியில, அதே முறையில அடுத்தடுத்து ரெண்டு முறை தேநீர் தயாரிக்கலாம். 2 கிராம் தேயிலையைப் பயன்படுத்தி, தோராயமா 900 மில்லி லிட்டர் தேநீர் தயாரிக்க முடியும். இந்தத் தேநீர்ல, சர்க்கரை மற்றும் காய்ச்சிய பாலைச் சேர்த்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்கணும். ஏன்னா, பலருக்கு அந்தச் சுவைப் பிடிக்காது” சுவாரஸ்யமான தகவல்களை அடுக்கியவர், வழக்கமான தேயிலைச் சாகுபடிக்கும் மதிப்புக் கூட்டலுக்குமான வித்தியாசத்தை விளக்கினார்.

‘‘தேயிலைத் தோட்டத்துல சரியான வளர்ச்சி இல்லாம செடிகள் இருந்துச்சு. அதுல மட்டும் தேயிலையைப் பறிக்காம விட்டதுல அவை மரமாகிடுச்சு.’’

குதிரை சாணத்தில் இடுபொருள்கள் தயாரிப்பு

“13 ஏக்கர் நிலத்துல இருக்குற 60,000 தேயிலை செடிகள்ல இருந்து வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்குச் சராசரியா 6,000 கிலோ தேயிலை கிடைக்கும். கிலோவுக்குச் சராசரியா 20 ரூபாய் வீதம், 1,20,000 ரூபாய். மொத்தம் 13 ஏக்கருக்கு, 15,60,000 ரூபாய் கிடைக்கும். இதுல 70 சதவிகிதம் செலவாகிடும். அந்த வகையில், 10,92,000 ரூபாய் போனா, ஒரு வருஷத்துக்கு 4,68,000 ரூபாய் லாபமா நிக்கும். மாசத்துக்குன்னு கணக்கு போட்டா 39,000 ரூபாய் கிடைக்குது. ரெண்டு வருமானமும் இந்த 13 ஏக்கர் மூலமாத்தான் கிடைச்சிட்டு வருது. ஆனா, 8,000 மரத் தேயிலை (மதிப்புக்கூட்டல்) மூலமா மாதம் 47,500 ரூபாய் லாபம் கிடைக்குது. இதோடு 13 ஏக்கர்ல இருக்கிற தேயிலை செடிகளுக்கான பராமரிப்பை விட தேயிலை மரங்களுக்கு பராமரிப்பு குறைவு. வருமானமும் கூடுதலாகக் கிடைக்குது. உயர் ரகத் தேயிலை பத்தின விழிப்புணர்வு குறைவு, விலை அதிகம். அதுதான் விற்பனை வாய்ப்புகள்ல சவாலா இருக்குது’’ என்றவர் நிறைவாக,

‘‘தேயிலை தவிர, கொஞ்சமா மூலிகைச் செடிகளை வளர்க்கிறோம். சிறுத்தை, காட்டுப்பூனை தொந்தரவுகளால கோழி வளர்ப்பை மேற்கொள்ள முடியல. பர்கூர் இனத்துல ரெண்டு காளை, மூணு கறவை மாடுகளும் மேய்ச்சல் முறையில வளருது. பஞ்சாப் நாட்டு இனத்துல ரெண்டு குதிரைகள் இருக்கு. இதோட சாணத்தையும், மாட்டுச் சாணத்தையும் சேர்த்து, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். பெங்களூரில் வேலை செய்தபடியே அண்ணனும் மதிப்புக் கூட்டல் விற்பனைக்கு உதவுறார். மொத்தக் குடும்பமும், தேயிலை விவசாயத்தை நம்பி, புதிய மாற்றத்தை நோக்கி உழைக்கிறோம்” என்றபடி விடைகொடுத்தார் பிரபு.

தொடர்புக்கு, பிரபு,

செல்போன்: 75988 12974

இப்படித்தான் தயாரிக்க வேண்டும்!

‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள் குறித்து, பிரபு பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

தேயிலைப் பறிப்பு
தேயிலைப் பறிப்பு
‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள்
‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள்
‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள்
‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள்
‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள்
‘கிரீன் டீ’ தயாரிப்பு முறைகள்

ஒரு கைப்பிடி அளவுத் தேயிலையை வாணலியில் சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு 15 நிமிடங்கள் தொடர்ந்து வதக்க வேண்டும். பிறகு, அதைத் தனியாக மூங்கில் மர முறத்தில் பரப்பி, கையிலேயே லேசாகத் தேய்க்க வேண்டும். சூடாக இருக்கும் இலையானது அப்படியே சுருண்டுகொள்ளும். இவ்வாறு, தேவைக்கேற்ப பறித்துவந்த எல்லாத் தேயிலையையும் வதக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, முதலில் வதக்கிய இலைகளில் ஒரு கைப்பிடி எடுத்து, மீண்டும் வாணலியில் 5 நிமிடங்கள் வதக்கி, மீண்டும் தேய்க்க வேண்டும். இந்த இலையை, ஐந்து நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து மூன்று முறை வதக்க வேண்டும். மொத்தமாக ஐந்து முறை வதக்கிய பிறகு, தேயிலை மிகவும் சுருண்டு இருக்கும். இந்த முறையில் ஒரு கிலோ தேயிலையை வதக்கினால், இறுதியாக அரைக்கிலோ அளவில் தேயிலை இருக்கும். அதை ஓர் அறையில் கட்டில் அல்லது மேஜையின்மீது துணி விரிப்பின்மீது சில மணிநேரம் உலர்த்தி வைக்க வேண்டும். பிறகு, நன்கு வெயில் அடிக்கும்போது பகல் முழுக்கக் காயவிட வேண்டும். ஒரு கிலோவுக்கு இறுதியாகக் கால் கிலோ அளவுக்குத் தரமான தேயிலை கிடைக்கும். தரமான இந்த இலை ரகக் ‘கிரீன் டீ’ தேயிலையை, காற்று புகாதவாறு மூடி வைத்து இரண்டு ஆண்டுகள்வரை பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism