Published:Updated:

6 ஏக்கர்... 3,61,500 ரூபாய் பாரம்பர்ய நெல் சாகுபடி!

பாரம்பர்ய நெல் வயலில் தனபால்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல் வயலில் தனபால்

மகசூல்

6 ஏக்கர்... 3,61,500 ரூபாய் பாரம்பர்ய நெல் சாகுபடி!

மகசூல்

Published:Updated:
பாரம்பர்ய நெல் வயலில் தனபால்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல் வயலில் தனபால்

படிச்சோம் விதைச்சோம்

“நான் விவசாயத்துல நீடிச்சுக்கிட்டு இருக்குறதுக்கும் நிறைவான லாபம் பார்த்து, மகிழ்ச்சியா வாழ்றதுக்கும் பசுமை விகடன் முக்கியக் காரணம். பல வழிகள்லயும் எனக்கு வழிகாட்டினதுனாலதான், விவசாயத்துல நான் வெற்றிகரமா நடைபோட முடிஞ்சது. இப்பவும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. நான் என்னோட காலம் முழுக்க நன்றிக்கடன் பட்டுருக்கேன்’’ நெகிழ்ச்சியான வார்த்தைகளை உதிர்க்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள சீராலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால்.

கடந்த 6 ஆண்டுகளாக இயற்கை வழி வேளாண்மையில் பாரம்பர்ய நெல் சாகுபடியை மேற்கொண்டு வரும் அவருடைய அனுபவங்கள் மற்ற விவசாயிகளுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒரு பகல்பொழுதில் சந்திக்கச் சென்றோம். தங்கச்சம்பா, சிவன் சம்பா, சின்னார், கறுப்புக் கவுனி, தூயமல்லி, ஆத்தூர் கிச்சலிச் சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய நெற்பயிர்கள் உற்சாகமாக அசைந்தாடி நம்மை வரவேற்றன. நம்மை உற்சாகமாக வரவேற்றுப் பேசிய தனபால், “நவீன ரக நெற்பயிர்கள், உயரம் ரொம்பக் குறைவா இருக்கும். மழை பேஞ்சதுனா, பயிர் அழுகாம காப்பாத்த உடனடியா தண்ணியை வெளியேத்தியே ஆகணும். ஆனா, பாரம்பர்ய நெல் ரகங்கள் அப்படியில்ல... குறைந்தபட்சம் நாலரை அடியில இருந்து ஏழு அடி உயரத்துல வளர்ந்து நிக்கிறதுனால, அதிகமா மழை பேஞ்சு தண்ணி தேங்கினாலும் வெளியேத்த வேண்டியதில்லை.

பாரம்பர்ய நெல் வயலில் தனபால்
பாரம்பர்ய நெல் வயலில் தனபால்

நிலத்துக்குள்ளயே தண்ணியைச் சேமிக்க முடியுது. நிறைவான லாபம், சத்தான உணவுங்கறதை எல்லாம் தாண்டி, பாரம்பர்ய நெற்பயிர்கள் சாகுபடியால, தண்ணீர் சேமிக்கப்படுதுங்கிறதை நான் ஒரு முக்கிய அனுகூலமா பார்க்குறேன்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்க அப்பா அரசுப் பள்ளியில ஆசிரியரா வேலை பார்த்திருந்தாலும்கூட, விவசாயத்தையும் ஆர்வமா கவனிச்சுக் கிட்டார். ஆனா, எனக்கு விவசாயத்துல கொஞ்சம்கூட ஈடுபாடு இல்லாம இருந்தேன். பத்தாம் வகுப்பு படிச்சிட்டு, பிறகு, ஐடிஐ-யில ‘மோட்டார் மெக்கானிக்’ முடிச்சேன். விவசாயத்து பக்கமே வந்துடக் கூடாதுங்கற எண்ணத்தோடு என் படிப்புக்கேத்த வேலை தேடினேன். பெரிய தொழிற்சாலைகள் இல்லைனா, அரசாங்க வேலைக்குப் போகணும்னு கடுமையா முயற்சி பண்ணினேன். ஆனா, அதுமாதிரியான வேலை கிடைக்கல. வேற வழியில்லாததால, தஞ்சாவூர்ல உள்ள ஒரு ‘டூவீலர் மெக்கானிக் ஷாப்’ல வேலைக்குச் சேர்ந்தேன். உழைப்பு அதிகம்... சம்பளம் ரொம்பக் குறைவு. தன்மான பிரச்னைகளும் ஏற்பட்டுச்சு. ‘சொந்த நிலத்தை வச்சுக்கிட்டு, நாலு பேத்துக்கு வேலை கொடுக்கக்கூடிய கொடுப்பினையும் இருக்கும்போது நீ ஏன் இப்படிக் கௌரவத்தை விட்டுட்டு கஷ்டப் படணும்’னு என்னோட உறவினர்கள், ஊர்க்காரங்க எல்லாம் சத்தம் போட்டாங்க.

பாரம்பர்ய நெல் வயல்
பாரம்பர்ய நெல் வயல்

சரி, விவசாயத்தைப் பார்ப்போம்னு முடிவெடுத்து, இதுல ஈடுபட ஆரம்பிச்சேன். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிக்கும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்ததால உழைப்புக்கேத்த லாபம் இல்ல. அது மட்டுமல்லாம, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல ஏற்பட்ட அலைக்கழிப்பு னாலயும், விவசாயத்துல முழுமையான ஈடுபாடு இல்லாமலேதான் இருந்தேன். வேற நல்ல வேலையோ, சொந்தத் தொழிலோ அமைஞ்சா, அதுக்கு மாறிடலாம்ங்கற எண்ணம் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. இந்தச் சூழ்நிலையிலதான் எனக்குப் பசுமை விகடன் அறிமுகமாச்சு. என்னோட வாழ்க்கையில புதிய நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் கொடுத்துச்சு. இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள், குறிப்பா பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சு நிறைவான லாபம் பார்க்கக்கூடிய வங்களோட அனுபவ வார்த்தைகள், என்னோட மனசுல ஈர்ப்பை ஏற்படுத்துனுச்சு.

2016-ம் வருஷம் இயற்கை விவசாயத்துல ஈடுபட ஆரம்பிச்சேன். இதுக்காக, புலிக்குளம் நாட்டுப் பசு ஒண்ணு வாங்கினேன். எனக்குச் சொந்தமான 6 ஏக்கர்லயுமே முழுமையா இயற்கை முறையில, நவீன ரக நெல்தான் சாகுபடி செஞ்சேன். முதல் வருஷம் அடியுரமா கனஜீவாமிர்தம் போட்டதோடு அதிக அளவுல எருவும் பயன்படுத்தினேன். மேலுரத்துக்கு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், பத்திலைக் கரைசல் எல்லாம் அதிக அளவுல கொடுத்தேன். ரசாயன விவசாயத்தோடு ஒப்பிடும்போது செலவு குறைவுதான். ஆனா, செலவுகளை இன்னும் குறைக்கணும்னு நினைச்சேன். விவசாயத்துல முடிஞ்சவரைக்கும் செலவுகளைக் குறைக்க முயற்சிப் பண்ணணும்ங்கற எண்ணத்தைப் பசுமை விகடன்தான் என் மனசுல ஆழமா விதைச்சுக்கிட்டே இருந்துச்சு. ரெண்டாவது வருஷம், சோதனை முயற்சியா, கனஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் மட்டுமே பயன்படுத்தி, பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சேன். ஏக்கருக்கு இருபதுல இருந்து இருபத்திரண்டு மூட்டை வரைக்கும் மகசூல் கொடுத்துச்சு. அடுத்தடுத்த வருஷங்கள்ல படிபடியா மகசூல் அதிகமாகி இப்ப, ஏக்கருக்கு சராசரியா 27 மூட்டை மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்கு. மண்ணை வளப்படுத்தி, நிறைவான மகசூல் எடுக்க, கனஜீவாமிர்தமும், ஜீவாமிர்தமுமே போதும்ங்கறது என்னோட அனுபவம்’’ என்றவர், தனது சாகுபடி முறைகளைப் பற்றிப் பேசினார்.

நாட்டுமாடு
நாட்டுமாடு

சிக்கனமோ சிக்கனம்

“ஒற்றை நாத்து முறையிலதான் நடவு செய்றேன். இதுக்கு ஏக்கருக்கு 3 கிலோ விதைநெல் மட்டுமே பயன்படுத்தி நாத்து உற்பத்தி செய்றேன். இதுவே போதுமானதாகத்தான் இருக்கு. நாத்துக்கு நாத்து முக்கால் அடி இடைவெளி விட்டு நடவு செய்றேன். ஆனா, அதுக்காகக் கயிறு புடிச்சு சீரான வரிசை முறை எல்லாம் கடைப்பிடிக்குறதில்ல. அதுக்கு கூடுதலா செலவாகும். என்னோட அனுபவத்துல தோராயமான இடைவெளி விட்டு ஒத்தை நாத்து நடவு செஞ்சாலே போதும். இதனால எந்த ஒரு பின்னடைவும் எனக்கு ஏற்படலை. என்னோட நிலத்து மண் வாகுக்கு அதிகமா களைகள் மண்டுறதில்ல. லேசான களைகள் இருந்தால் ஆரம்பத்துலயே கையாள புடுங்கி அப்புறப்படுத்திடுவோம். இதனால் கோனோவீடர் ஓட்டிக் களை யெடுக்க வேண்டிய தேவையும் இதுவரைக்கும் ஏற்படல.

சாகுபடி நிலத்தைத் தயார் செய்றதுலயும் கூட சிக்கனத்தைக் கடைப்பிடிக்குறேன். ‘கேஜ்வீல்’ போட்டு ஒரு சால் உழவு ஓட்டிட்டு, ஏக்கருக்கு 200 கிலோ கனஜீவாமிர்தம் போடுவேன். அதுக்கு பிறகு ‘ரோட்டோ வேட்டர்’ல ஒரு சால் உழவு ஓட்டிட்டு, ஓரளவுக்கு லேசா மண்ணைச் சமப்படுத் திட்டு, நாத்து நடவு செஞ்சிடுவேன். ஆனா சில விவசாயிங்க, மண்ணை நல்லா சமப்படுத்துறேன்னு சொல்லி அதிகமா செலவு செய்றாங்க. என்னோட நிலத்துல அங்கங்க லேசான மேடு பள்ளம் இருந்தாலுமே நான் சாகுபடி செய்றது பாரம்பர்ய நெல் ரகங்களாக இருக்குறதுனாலயும், 30 நாள் வயசுடைய நல்லா வளர்ந்த நாத்துகளா நடவு செய்றதுனாலயும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்ல.

பொதுவா, ஒற்றை நாத்து நடவு செய்யக்கூடிய விவசாயிங்க, 20 நாள் வயசுலேயே நாத்துகளைப் பறிச்சு நடவு செஞ்சிடுவாங்க. ஆனா, நான் நாத்துகளைப் பறிக்க, 30 நாள்கள் வரைக்கும் காத்திருப்பேன். இதனால, என்னோட நாத்துகள் சுமார் ஒண்ணேகால் அடி உயரத்துக்கு மேல வளர்ந்துடுது. நல்லா தடிமனா திரட்சியாவும் ஆயிடுது. இதுமாதிரியான நாத்துகளை நடவு செய்றதுனால, ஆரம்ப நிலையில அதிகமா மழை பேஞ்சாலோ, வறட்சி ஏற்பட்டாலோ, ஓரளவுக்குத் தன்னைத் தற்காத்துத் தாக்குப்புடிச்சு பிழைச்சுக்குது’’ என்றவர் பூச்சி, நோய் மேலாண்மை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

நெல் வயலில்
நெல் வயலில்


பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன்

“ரசாயன முறையில் நவீன நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தப்ப, இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, புகையான் தாக்குதல் அதிகமா இருந்துச்சு. இதை எல்லாம் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளுக்கு நிறைய செலவு செய்வேன். ஆனா, இப்ப அந்த மாதிரியான பாதிப்புகள் கொஞ்சம்கூட ஏற்படுதிறல்ல. போன சம்பா பட்டத்துல இந்தப் பகுதிகள்ல ரசாயன விவசாயிகளோட நெற்பயிர்கள்ல யானை கொம்பன் தாக்குதலும் குலைநோயும் அதிகமா இருந்துச்சு. என்னோட பாரம்பர்ய நெற்பயிகள்ல அந்தப் பிரச்னை ஏற்படவே இல்லை. இயற்கை இடுபொருள்கள் மட்டுமே கொடுக்குறதுனாலயும், பாரம்பர்ய நெல் ரகங்களாக இருக்குறதுனாலயும், இந்தப் பயிர்கள்ல பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் அதிகமா இருக்கு. ஆனாலும்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, அக்னி அஸ்திரம் தெளிச்சிடுவேன்’’ என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

மதிப்புக்கூட்டி விற்பனை

“ஆத்துப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்குறதுனால, ஒரு போகம் மட்டும் சம்பாவுல நெல் சாகுபடி செய்றேன். ஏக்கருக்கு சராசரியா 27 மூட்டை (ஒரு மூட்டை 60 கிலோ) மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இதை அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஏகப்பட்ட ‘வாட்ஸ் அப் குரூப்’கள்ல இருக்கேன். இது மூலமா எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சிருக்காங்க. முகநூல் மூலமாகவும் நிறைய தொடர்புகள் ஏற்பட்டுருக்கு. பாரம்பர்ய அரிசிக்குச் சந்தை வாய்ப்பு அதிகமா இருக்கு.

செலவு, வரவுக் கணக்கு
செலவு, வரவுக் கணக்கு


ஒரு ஏக்கர்... 66,500 ரூபாய்

ஒரு ஏக்கர்ல கிடைக்கக்கூடிய 1,620 கிலோ நெல்லை அரைச்சோம்னா, 950 கிலோ அரிசி கிடைக்குது. ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 70 ரூபாய் வீதம், 66,500 ரூபாய் வருமானம் கிடைக்குது. 300 கிலோ தவிடு, 100 கிலோ குருணை கிடைக்குது. இதோட விலைமதிப்பு 6,000 ரூபாய். வைக்கோல் விலைமதிப்பு 3,000 ரூபாய். இதெல்லாம் சேர்த்தால், ஒரு ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம், 75,500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

சாகுபடி செலவு, அரிசி அரவைக்கூலி உட்பட எல்லாச் செலவுகளும் போக, 60,250 ரூபாய் நிகர லாபமா கிடைக்கும். 6 ஏக்கர் நெல் சாகுபடி மூலம், 3,61,500 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம்.தொடர்புக்கு, தனபால்,

செல்போன்: 90475 90940

இப்படித்தான் சாகுபடி

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்

நாற்று உற்பத்தி

ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து அடியுரமாக 50 கிலோ கனஜீவாமிர்தம் இட்டு, மண்ணைச் சமப்படுத்த வேண்டும். பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ விதையைப் பரவலாகத் தெளிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் விட வேண்டும். 15-ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் 15 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி அக்னி அஸ்திரம் கலந்து தெளிக்க வேண்டும். நாற்றுகள் நன்கு செழிப்பாக வளர்ந்து 30-ம் நாள் நடவுக்குத் தயாராக இருக்கும்.

பச்சைக்கட்டி நிற்கும் நெற்பயிர்கள்
பச்சைக்கட்டி நிற்கும் நெற்பயிர்கள்

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ‘கேஜ்வீல்’ மூலம் ஒரு சால் உழவு ஓட்டி, அடியுரமாக 200 கிலோ கனஜீவாமிர்தம் இட்டு, ‘ரோட்டோவேட்டர்’ மூலம் ஒரு சால் உழவு ஓட்டி, ஓரளவுக்கு மண்ணைச் சமப்படுத்த வேண்டும். தலா முக்கால் அடி இடைவெளியில் ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 20 மற்றும் 40-ம் நாள்களில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாளியில் எடுத்து, நிலம் முழுக்கப் பரவலாக விசிறியடித்துத் தெளிக்க வேண்டும். சுற்றுவட்டார வயல்களில் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகம் ஏற்பட்டிருந்தால், அந்தத் தருணத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 50 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் அக்னி அஸ்திரம் கலந்து தெளிக்க வேண்டும்.

புலிக்குளம் நாட்டுமாடு

“பசுமை விகடன் மூலம்தான் புலிக்குளம் மாடு பத்தி எனக்குத் தெரிய வந்துச்சு. சிவகங்கையில இருந்து, ஒரு மாடும் கன்னுக்குட்டியும் வாங்கிக்கிட்டு வந்தேன். இப்ப ஒரு மாடும் நாலு கன்னுக்குட்டிகளும் இருக்கு. சம்பா பட்டத்துல நெல் சாகுபடி செய்ற மாசங்கள்ல மட்டும், மாடுகளையும் கன்னுக்குட்டிகளையும் மேய்ச்சலுக்கு அனுப்ப மாட்டோம். எங்க நிலத்துல விளைஞ்ச பாரம்பர்ய நெற்பயிர்களோட வைக்கோலைத் தீவனமா கொடுப்போம். வாய்க்கால் வரப்புகள்ல மண்டிக்கிடக்குற களைகளையும் வெட்டிக்கொண்டு வந்து பசுந் தீவனமா கொடுப்போம். நெல் சாகுபடி நடக்காத மாசங்கள்ல எங்களோட நிலத்துலயே மேய்ச்சலுக்கு விடுவோம். பாரம்பர்ய நெல் அரைக்கும்போது கிடைக்கக்கூடிய தவுடையும் எங்க மாடுகளுக்குப் பயன்படுத்திக்குறோம். இதனால் நல்லா ஆரோக்கியமா எங்க மாடுகள் வளருது. ஒரு தாய் பசு மூலம் தினமும் 5 லிட்டர் பால் கிடைக்குது. இதுல ஒரு லிட்டர் பாலை எங்களோட வீட்டுத் தேவைக்கு வச்சிக்குவோம். மீதி 4 லிட்டர் பாலை விற்பனை செஞ்சிடுவோம்.

நாட்டுமாட்டுப் பாலாக இருந்தும்கூட லிட்டருக்கு 25 ரூபாய்தான் விலை கிடைக்குது. ஆனால், இதை நான் பொருட்படுத்துறதில்லை. இயற்கை விவசாயத்துக்காகத்தான் நாட்டுமாடுகள் வளர்க்குறோம். நாட்டுமாட்டுப் பால் குடிச்சு நானும் எங்க குடும்பத்துல இருக்குறவங்களும் ஆரோக்கியமா இருக்குறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism