Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.67,650 லாபம்!கணிசமான வருமானம் தரும் கறுப்புக்கவுனி!

பசுமை பரவியிருக்கும் நெல் வயலில் சந்திரசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை பரவியிருக்கும் நெல் வயலில் சந்திரசேகரன்

இயற்கை

ஒரு ஏக்கர்... ரூ.67,650 லாபம்!கணிசமான வருமானம் தரும் கறுப்புக்கவுனி!

இயற்கை

Published:Updated:
பசுமை பரவியிருக்கும் நெல் வயலில் சந்திரசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை பரவியிருக்கும் நெல் வயலில் சந்திரசேகரன்

படிச்சோம் விதைச்சோம்

“இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுக்குறது மட்டுமல்லாம, விற்பனை வாய்ப்புக்கும் வழிவகுத்துக் கொடுத்து, என்னை மாதிரி விவசாயிகளோட பாடநூலாகவும் வழிகாட்டியாவும் இருக்குறது ‘பசுமை விகடன்’தான்’’ எனச் சிலாகிக்கிறார் நியூ இந்தியா அஸ்ஷூரன்ஸ் கம்பெனியில் மண்டல மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரான சந்திரசேகரன்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப் பாளையத்திலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது தருவை. இங்கு உள்ளது சந்திரசேகரனின் நெல்வயல். தாமிரபரணி பச்சையாற்றுப் பாலத்தின் அருகில் நமக்காகக் காத்திருந்தவர், ஆற்றைத் தாண்டி உள்ள அவரது நெல் வயலுக்கு நம்மை அழைத்துச் சென்றார். “ஊரைச் சுத்தி வயல்தான்... என்னைத் தவிர எல்லாரும் ரசாயனம் பயன்படுத்திதான் சாகுபடி செய்றாங்க. 100 அடி தூரத்துல செழுமையா கம்பீரமா நெல் கதிர்கள் வளர்ந்து நிற்குது பாருங்க. அதுதான் நம்ம வயல்” என அடையாளம் காட்டியவர், தொடர்ந்து பேசிக்கொண்டே வரப்பு வழியாக நம்மை அழைத்துச் சென்றார்.

பசுமை பரவியிருக்கும் நெல் வயலில் சந்திரசேகரன்
பசுமை பரவியிருக்கும் நெல் வயலில் சந்திரசேகரன்

“எங்க தாத்தா காலத்துல தொழுவுரத்தை மட்டும் போட்டுப் பாரம்பர்ய ரகத்தைச் சாகுபடி செஞ்சாங்க. அதுல ‘பொன்னுருவி’ன்னு ஒரு ரகம், 5 அடி உயரம் வரைக்கும் வளரும். வயலுக்குள்ள ஆள் நின்னா வெளியே தெரியாது. கதிர்கள் கத்தி மாதிரி கூர்மையா இருக்கும். அப்பா காலத்துல முழுமையா ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விவசாயம் நடந்துச்சு. ஆடுதுறை, அம்பை-16, ஐ.ஆர்-8, ஐ.ஆர்-20-னு வீரிய ரக நெல்லுக்கு மாறிட்டாங்க. எல்லா வயல்காரங்களும் என்ன உரம் போடுறாங்களோ அதைத்தான் நாங்களும் போடுவோம்.

ரசாயனப் பூச்சிக்கொல்லியும் அப்படித்தான். பூச்சிக்கொல்லி தெளிக்கிற நாளுல அந்த வாடை ஊர் வரைக்கும் வீசும். முகத்துல துண்டைக் கட்டிக்கிட்டுதான் ஆளுங்க நடமாடு வாங்க. பி.எஸ்ஸி இயற்பியல் முடிச்சதும், நியூ இந்தியா அஸ்ஷூரன்ஸ் கம்பெனியில ‘கிளார்க்’ வேலை கிடைச்சது. தொடர்ந்து அடுத்தடுத்துப் பதவி உயர்வு கிடைச்சு... 36 வருஷம் பணி முடிச்சு மண்டல முதுநிலை மேலாளரா, 2015-ம் வருஷம் ஓய்வு பெற்றேன். வேலையில இருந்தபோது விவசாயத்தைக் கவனிச்சுக்க முடியாத துனால எங்க நிலத்தை உள்ளூர்ல ஒரு விவசாயிகிட்டயே கட்டுக்குத்தகைக்கு விட்டிருந்தோம்’’ என்றபோது, நெல் வயலுக்கு வந்துவிட்டோம். நெல் பயிரைக் காட்டியபடியே தொடர்ந்து பேசினார்.

“2014-ம் வருஷம், சென்னையில நடந்த புத்தகத் திருவிழாவுல விகடன் ‘புக் ஸ்டால்’லதான் எனக்கு பசுமை விகடன் அறிமுகமாச்சு. புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தப்போ அதுல பூங்கார் நெல் சாகுபடி பத்தி ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. படிச்சுப் பார்த்தேன். தாத்தா காலத்துல செஞ்ச விவசாயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. தொடர்ந்து இதழ்களை வாசிச்சப்போ இயற்கை விவசாயம் பற்றியும், ரசாயன விவசாயத்தோட பாதிப்புகளையும் தெரிஞ்சுக்கிட்டேன். பசுமை ஒலிங்கிற பக்கத்துல கொடுத்திருக்கிற போன் நம்பருக்கு போன் செஞ்சு ஒவ்வோர் இடுபொருளைப் பத்தியும் கேட்டு ஒரு நோட்டுல எழுதி வெச்சுக்கிட்டேன்.

நெல் வயல்
நெல் வயல்


ரசாயன விவசாயத்துல தோற்று, இயற்கைக்குத் திரும்பி ஜெயிச்ச விவசாயிகளின் மகசூல் கட்டுரைகளைப் படிச்சப்போ நாமளும் ஏன் விவசாயம் செய்யக் கூடாதுன்னு எனக்குள்ள தோணுச்சு. குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தை 2017-ம் வருஷம் கையகப்படுத்தினேன். நிலத்தை நாலஞ்சு தடவை உழுதேன். 5 நாள் செம்மறி யாட்டுக்கிடை போட்டேன். ரெண்டு முறை கொழுஞ்சியை விதைச்சு பூத்த நிலையில அப்படியே மடக்கி உழுதேன்.

பாரம்பர்ய ரக நெல் விதை கிடைக்காததுனால முதல் தடவை ஒரு ஏக்கர்ல ஆடுதுறை-45 ரகத்தை விதைச்சேன். கணிசமான மகசூல் கிடைச்சது. ரெண்டாவது வருஷம் ஆத்தூர் கிச்சலி, பூங்கார் விதைச்சேன். போன வருஷம் கறுப்புக்கவுனி விதைச்சேன். கறுப்புக்கவுனிக்கு நல்ல வரவேற்பும், அதிக தேவையும் இருக்கிறதுனால இந்த வருஷமும் ஒரு ஏக்கர்ல கறுப்புக்கவுனியையே விதைச்சிட்டேன். நாத்து நட்டு 85 நாள்கள் ஆகுது” என்றவர், மதிப்புக்கூட்டல் குறித்துப் பேசினார்.

“பாரம்பர்ய நெல் வகைகளை இயற்கை முறையில் சாகுபடி செஞ்சாலும், சாதாரண அரவை ஆலைகளில் அரிசியா மதிப்புக்கூட்டும்போது பட்டை தீட்டப்பட்டதாத்தான் கிடைக்குது. அரிசி பட்டை தீட்டியதைப்போல இருக்குறதுனால சந்தையில பாரம்பர்ய ரகத்துக்கான மவுசும் குறையுது. ‘பாரம்பர்ய அரிசின்னு சொல்றீங்க... ஆனா, பார்க்கப் ‘பாலிஷா’த்தான இருக்கு’ன்னு நிறையபேரு கேக்குறாங்க.

அரிசியுடன்
அரிசியுடன்

அதனால என்ன செய்யலான்னு யோசிச்சப்போ தான், நடுக்கல்லூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் விஸ்வநாதனோட கறுப்புக்கவுனி, பூங்கார் மகசூல் கட்டுரையைப் பசுமை விகடன்ல படிச்சேன். ‘லேத்’ பட்டறையில ‘ரப்பர் ஹெல்லர் மெஷினை’ வடிவமைச்சு அந்த ‘மெஷின்’லயே நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டி அவர் விற்பனை செய்துட்டு வர்றதைப் படிச்சேன். உடனே அவரைத் தொடர்புகொண்டு பேசுனேன். இப்போ ஒரு வருஷமா அவரோட ‘மெஷின்’லதான் ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் கொடுத்து அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சுட்டு இருக்கேன்’’ என்றவர் நிறைவாக,

அட்டவணை
அட்டவணை


“போன வருஷம் மழை அதிகமா பெய்ஞ்சதுனால அறுவடையில 1,252 கிலோ நெல்தான் கிடைச்சது. அதை அரிசியா மதிப்புக்கூட்டுனதுல 731 கிலோ அரிசி கிடைச்சது. இயற்கை அங்காடிகள்ல ஒரு கிலோ அரிசியை 200 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யுறாங்க. நான், ஒரு கிலோ 150 ரூபாய்னு நண்பர்கள், உள்ளூர் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலமாக விற்பனை செய்றேன். அந்த வகையில 731 கிலோ விற்பனை மூலமா 1,09,650 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல உழவு முதல் அறுவடை வரை 42,000 ரூபாய் வரை செலவானது. மீதமுள்ள 67,650 ரூபாய் லாபமாக் கிடைச்சது” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு, சந்திரசேகரன், செல்போன்: 63822 19188

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் இயற்கை முறையில் கறுப்புக்கவுனிச் சாகுபடி செய்வது குறித்துச் சந்திரசேகரன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

கறுப்புக்கவுனி நெல் சாகுபடி செய்ய ஆடி, புரட்டாசிப் பட்டம் ஏற்றது. இதன் வயது 150 நாள்கள். நடவுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கொழுஞ்சியை (ஒரு ஏக்கருக்கு 20 கிலோ) விதைத்து, 60 முதல் 70-ம் நாள்களுக்குள் மடக்கி உழவு செய்ய வேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு, ஒரு வார இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். உழவுப் பணியின்போதே நாற்றங்காலைத் தயார் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 20 கிலோ விதைநெல் தேவை. 2 சென்ட் பரப்பளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் விதை நெல்லைக் கொட்டி தண்ணீர் விட்டு அலசி, சாவி பொக்குகளை நீக்கிய பிறகு சணல் சாக்கில் கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் மூழ்க வைத்துவிட வேண்டும். பிறகு, எடுத்து நெல் விதையைத் தரையில் பரப்பி, தலா 100 கிராம் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியாவை அதன் மீது தூவ வேண்டும். மீண்டும் சாக்குக்குள் கொட்டி, தொட்டியில் மீண்டும் 12 மணி நேரம் மூழ்க வைக்க வேண்டும். பிறகு, வெளியே எடுத்துத் தண்ணீரை வடியவிட்டுத் தனி அறையில் சாக்கை வைக்க வேண்டும். அதன் மீது மற்றொரு சணல் சாக்கால் மூடி வைக்கோலைப் பரப்ப வேண்டும். இப்படி 12 மணி நேரம் வைத்திருந்தால் நெல்லில் முளைப்பு தெரியும்.

இயற்கை இடுபொருள்களுடன்
இயற்கை இடுபொருள்களுடன்

அவற்றை அப்படியே நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும். 22 நாள்கள்வரை நாற்றங்காலிலேயே வளரவிட்டு பிறகு, வயலில் நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை முக்கால் அடி, நாற்றுக்கு நாற்று முக்கால் அடி என்ற இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நடவுக்கு முன்பாக நாற்றுகளைப் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து (நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்கச்செய்து) நடுவது நல்லது. இதனால், வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது. ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். 15-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாளிலிருந்து 15 நாளுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, வேப்பெண்ணெய் கரைசலை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா, 20 மி.லி அசோஸ்பைரில்லம் தலா 25 மி.லி வேம்பு, புங்கன் எண்ணெய் மற்றும் ஒட்டும் திரவத்துக்காக 5 மி.லி காதிசோப் கரைசல்) சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் நோய் தாக்குதலைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 50 முதல் 55-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி சூடோமோனஸ், 100 மி.லி புளித்தமோர் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 80 முதல் 90-ம் நாளில் கதிர் பிடிக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி தேமோர்கரைசல் கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கதிர் நாவாய்ப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 90 முதல் 100-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி-பூண்டு-பெருங்காயக் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 140 முதல் 150-வது நாளில் அறுவடை செய்யலாம்.

இஞ்சி-பூண்டு-பெருங்காயக் கரைசல்

இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவை தலா ஒரு கிலோ எடுத்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெருங்காயத்தூள் 300 கிராம், புகையிலை 500 கிராம், மஞ்சள் தூள் 500 கிராம் ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு கலக்கி வடிகட்டினால் இஞ்சி-பூண்டு-பெருங்காயக் கரைசல் தயார்.

விஸ்வநாதன்
விஸ்வநாதன்

உமி மட்டுமே நீங்கும்... சத்துக்கள் மாறாது!

‘ரப்பர் ஹெல்லர் மிஷின்’ குறித்துப்பேசிய ஓய்வுபெற்ற பேராசிரியர் விஸ்வநாதன், “பாரம்பர்ய நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டித் தர்றதுல அரவை மில்காரர்கள் அக்கறை செலுத்துறதில்ல. ஒரு தடவை நான் ரெண்டு மூட்டை நெல்லை தூக்கிட்டுப் போனேன். இன்னைக்கு, நாளைக்குன்னு அலைக்கழிச்சாங்க. அதனால, நாமளே சின்னதா ஒரு அரவை மிஷின் வாங்கிட்டா என்னன்னு ஒரு யோசனை வந்துச்சு. பக்கத்து ஊருல உள்ள ‘லேத்’ பட்டறையில நான் சொன்னபடியே சின்ன ‘மிஷினை’ வடிவமைச்சு கொடுத்தாங்க. ‘மிஷின்’ வடிவமைக்க 70,000 ரூபாய் செலவாச்சு. இதுல, ரப்பர் ஹெல்லர் பொருத்தியிருப்பதுனால நெல்லிலிருந்து உமி மட்டும்தான் நீங்கும். மற்ற சத்துகள் அப்படியேதான் இருக்கும். அரவை மில்களில் நெல்லை மொத்தமா அரிசியாக்கிட்டா அதிக நாள்கள் இருப்பு வைக்க முடியாது. குறிப்பிட்ட நாளுக்குள்ள வித்தாகணும். ஆனா, இந்த ‘மிஷின்’ இருக்குறதுனால எவ்வளவு தேவையோ அதை மட்டும் அரிசியாக்கி விற்பனை செய்யலாம். மிஷினுக்கான தொகையை ஒரே விவசாயி செலவழிக்கிறத விட, ஒவ்வொரு கிராமத்துலயும் 5 விவசாயிகள், 10 விவசாயிகள் ஒண்ணாச் சேர்ந்துகூட இதே மாதிரி ஒரு மிஷினை வாங்கிட்டா, விற்பனைத் தேவைக்கு ஏத்த மாதிரி அரிசியாக்கி வித்துக்கலாம். அதுமட்டுமில்லாம மற்ற விவசாயிகளின் நெல்லையும் அரிசியாக்கிக் கொடுக்கலாம். இதனால, அரவைக்கூலி மூலமா தனி வருமானம் கிடைக்கும்” என்றார்.

தொடர்புக்கு, விஸ்வநாதன், 94425 82582

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism