Published:Updated:

2.5 ஏக்கர்... 1,25,000 ரூபாய் கவனம் ஈர்க்கும் இடுபொருள் மேலாண்மை!

பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்

பாரம்பர்ய நெல் சாகுபடியில் சத்தான லாபம்!

2.5 ஏக்கர்... 1,25,000 ரூபாய் கவனம் ஈர்க்கும் இடுபொருள் மேலாண்மை!

பாரம்பர்ய நெல் சாகுபடியில் சத்தான லாபம்!

Published:Updated:
பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்

மகசூல்

சாயன விவசாயம் செய்த நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாற்றினால், சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெற்றிகரமான விளைச்சல் எடுக்க முடியும் என்பது பொதுவான கருத்து. ஆனால், ஒரு சில விவசாயிகள் தங்களது தனித்துவமான தொழில்நுட்பத்தின் மூலம், உடனடியாக மண்ணை வளப்படுத்தி, நிறைவான விளைச்சல் காண்கிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி- நடுபடுகை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்.

ஒரு பகல்பொழுதில் அவருடைய பண்ணைக்குச் சென்றோம். வரப்பில் நடந்தவாறே, மாப்பிள்ளைச் சம்பா நெற்பயிரை பார்வையிட்டுக் கொண்டிருந்த செந்தில்குமார், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.

‘‘என்னோட அம்மா வழி பாட்டி, விவசாயத்துல கைதேர்ந்தவங்க. அதனால எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல பரிச்சயம் உண்டு. பி.இ படிச்சிட்டு வெளி நாட்டுக்கு வேலைக்குப் போயிட்டேன். அங்க இருந்தப்பதான் பசுமை விகடன் அறிமுகமாகி, இயற்கை விவசாயத்து மேல ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. இந்த நிலையில போன வருஷம் சொந்த ஊருக்கே நிரந்தரமா திரும்பி வந்துட்டேன். எங்க நிலத்துல மாமா, ரசாயன விவசாயம் செஞ்சிகிட்டு இருந்தார். அதை என்னோட கட்டுப்பாட்டுல எடுத்தேன். போன வருஷம் சோதனை முயற்சியா ஒரு ஏக்கர்ல மட்டும் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். பாரம்பர்ய நெல் ரகத்துல நிறைவான மகசூல் கிடைச்சது. இயற்கை விவசாயத்துக்காக நாட்டு மாடுகளையும் வாங்கியிருக்கேன். இந்த வருஷம் ரெண்டரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, ரத்தசாலி, தூயமல்லி, சொர்ணமசூரி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சிருக்கேன்’’ என்றவர், பாரம்பர்ய ரகங்களின் பெருமை களைப் பேசத் தொடங்கினார்.

பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்
பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்

‘‘நான் இப்ப வயலுக்குள்ள இறங்கி உள்ளாரப் போறேன்... நீங்க என்னைப் பார்க்க முடியாது. ஆளே மறைஞ்சிடுவேன். அந்த அளவுக்கு என்னைவிட பயிர் நல்லா உசரமா விளைஞ்சி நிக்கிது. இதுமட்டுமல்ல...கறுப்புக் கவுனி, ரத்தசாலி, சொர்ணமசூரி எல்லாமே நல்லா செழிப்பா விளைஞ்சிருக்கு. பயிரோட வளர்ச்சி சிறப்பா இருக்குறதோடு, கதிர்கள் நல்லா வாளிப்பா, நெல்மணிகள் திரட்சியா இருக்கு.

என்னோட நெற்பயிர்களோட அபரிமிதமான விளைச்சலைப் பார்த்து, இயற்கை விவசாயிகளே ஆச்சர்யப்படுறாங்க. இயற்கை விவசாயத்துல எனக்கு இது ரெண்டாவது வருஷம். போன வருஷம் சம்பா பட்டத்துல அரை ஏக்கர்ல கறுப்புக் கவுனியும் இன்னொரு அரை ஏக்கர்ல பல்கலைக்கழகம் வெளியிட்ட பொன்னி ரகத்தைச் சாகுபடி செஞ்சேன். கறுப்புக் கவுனியில 15 மூட்டை மகசூல் கிடைச்சது. பல்கலைக்கழகம் வெளியிட்ட பொன்னியில எலி வெட்டு அதிகமா இருந்ததுனால, 10 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. பல்கலைக்கழக பொன்னி ரகம் மென்மையாகவும் சுனை ரொம்பக் குறைவாகவும் இருக்குறதுனால எலி தாக்குதலோட பாதிப்புகள் அதிகம்.

இயற்கை விவசாயத்துல அதுவும் பாரம்பர்ய நெல் ரகத்துல முதல் வருஷமே இந்தளவுக்கு மகசூல் கிடைச்சதைப் பார்த்துட்டு எல்லாருமே ஆச்சர்யப்பட்டாங்க. சணப்புத் தெளிச்சு, பூ பூக்கும் தருணத்துக்கு முன்னாடி, மடக்கி உழணும். பிறகு, 20 நாள்கள் தொடர்ச்சியா தண்ணீர் கட்டி நல்லா புளிக்க வெக்கணும். பிறகு, மடக்கி உழுதா எப்படிப்பட்ட மண்ணும் நல்லா வளமாகிடும்னு இயற்கை விவசாய நண்பர்கள் சிலபேர் சொன்னாங்க. அதுமட்டுமல்லாம, செறிவூட்டப்பட்ட உயிர் உரங்கள்-கடலைப்புண்ணாக்குக் கரைசலை பாசனநீர்ல 10 நாளுக்கு ஒரு தடவை கொடுத்ததால, நிலத்துல சீக்கிரமே நுண்ணுயிரிகள் பெருகி மண்ணுக்கு தேவையான சத்துகளையும் கொடுத்துடும்னு வழிகாட்டினாங்க.

நெல் வயலில் செந்தில்குமார்
நெல் வயலில் செந்தில்குமார்

செறிவூட்டப்பட்ட உயிர் உரங்கள்- கடலைப்புண்ணாக்குக் கரைசலுக்கு வீரியம் ரொம்ப அதிகம். அதோடு பஞ்சகவ்யா, திறன்மிகு நுண்ணுயிரி(இ.எம்), ஜீவாமிர்தத்தையும் பாசன நீர்ல கலந்துவிட்டேன். இதுக்கான பலன்களை உடனடியா பார்க்க முடியுது. பயிர்களுக்கு இலைவழியா தேமோர் கரைசல், இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய்-புகையிலை கரைசல் கொடுத்தேன்” என உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனவர், பூச்சி நோய் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

இடுபொருள்
இடுபொருள்
2.5 ஏக்கர்...  1,25,000 ரூபாய் 
கவனம் ஈர்க்கும் 
இடுபொருள் மேலாண்மை!

‘‘இந்தப் பகுதிகள்ல பொதுவாக நெற்பயிர் கள்ல யானை கொம்பன், இலைச்சுருட்டுப்புழு, கதிர் நாவாய் பூச்சித்தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் கட்டுப்படுத்த ஒரு போகத்துக்கு நாலு தடவை பூச்சிக்கொல்லி தெளிப்பாங்க. ஆனா, நான் பாரம்பர்ய ரகங்களை இயற்கை விவசாய வழியில சாகுபடி செய்றதுனால, பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம பயிர்கள் ஆரோக்கியமா வளருது. சில சமயங்கள்ல பூச்சிகள் லேசா தென்பட்டா, இயற்கை இடுபொருள்கள் மூலமே அதைக் கட்டுப்படுத்திடுவோம். இந்த வருஷம் எல்லா ரகங்களுமே அருமையா விளைஞ்சிருக்கு. இன்னும் 15 - 20 நாள்கள்ல முழுமையா கதிர்கள் முத்தி, பயிர் அறுவடைக்கு வந்துடும். தூர்களோட எண்ணிக்கை, நெல்மணிகளோட எண்ணிக்கை இதையெல்லாம் பார்த்தா, ஏக்கருக்கு குறைந்தபட்சம் 25 மூட்டையில இருந்து அதிகபட்சம் 30 மூட்டை மகசூல் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன்’’ என்றவர், வருமானக் கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.

வாழை
வாழை

‘‘ஏக்கருக்கு 25 (60 கிலோ) மூட்டை மகசூல் கிடைச்சா, அதுல 5 மூட்டையை விதைநெல்லா விற்பனை செஞ்சிடுவோம். ஒரு மூட்டைக்கு 3,600 ரூபாய் வீதம் 18,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 20 மூட்டை நெல்லை, புழுங்கல்- கைக்குத்தல் அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப்போறேன். ஒரு மூட்டை நெல் அரைச்சோம்னா, 38 கிலோ அரிசி கிடைக்கும். கைக்குத்தல் அரிசியா அரைக் குறதுனால, தவிடு, குருணை கிடைக்காது. ஒரு கிலோ அரிசிக்கு சராசரியா 80 ரூபாய் வீதம் 38 கிலோ அரிசிக்கு, 3,040 ரூபாய் விலை கிடைக்கும்.

20 மூட்டை நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது மூலமா, 60,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். வைக்கோல் விலைமதிப்பு 1,500 ரூபாய். ஆக ஒரு ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம், 80,300 வருமானம் கிடைக்கும். இதுல சாகுபடி செலவு, அரிசி அரவைக்கூலி 30,000 ரூபாய் போக, மீதி 50,300 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம், 1,25,750 ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என்ற செந்தில்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம்.

தொடர்புக்கு, செந்தில்குமார்

செல்போன்: 89034 55052

இப்படித்தான் இயற்கை நெல் சாகுபடி!

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் ரகத்தை சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம் பற்றி செந்தில்குமார் சொல்லியவை பாடமாக இடம் பெறுகின்றன.

பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்
பாரம்பர்ய நெல் வயலில் செந்தில்குமார்

நாற்று உற்பத்தி

2 அடி நீளம், 1 அடி அகலம் கொண்ட ‘பிளாஸ்டிக் டிரே’யில் நாற்று உற்பத்தி செய்யலாம். ஒரு ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு செய்ய, 30 - 32 ‘டிரே’க்களில் நாற்று உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு மொத்தம் 2 கிலோ விதைநெல் தேவை. மண்ணைச் சேறாக்கி, டிரேயில் நிரப்பிச் சமப்படுத்திய பிறகு, ஏற்கெனவே விதைநேர்த்தி செய்து தயாராக வைத்துள்ள விதை நெல்லை தெளிக்க வேண்டும். ஒவ்வொரு விதை நெல்லுக்கும் இடைவே அதிக இடைவெளி இருந்தால், நாற்றுகள் நன்கு திடகாத்திரமாக வளரும். நாற்றுகளை நடவு செய்தவுடன், பசுமை நிழல் வலையைப் போட்டு மூடி, அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். 3 நாள்களுக்கு இதுபோல் நிழல் வலையின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். 4-ம் நாள் நிழல் வலையை நீக்கிவிட்டு, நாற்றுகளின் மீது நேரடியாகத் தண்ணீர் தெளிக்கலாம்.

மாட்டுடன்
மாட்டுடன்

5-ம் நாள் 12 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் ஜீவாமிர்தம், 250 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து நாற்றுகளின் மீது தெளிக்க வேண்டும். 9-ம் நாள் நாற்றுகளை லேசாகத் தடவிப் பார்க்க வேண்டும். இலைப்பேன் தென்பட்டால், 12 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 100 மி.லி வேப்ப எண்ணெய், 5 கிராம் மஞ்சள்தூள், 5 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும். இளம் நாற்றாக நடவு செய்ய வேண்டும்.

நெல் வயலில் செந்தில்குமார்
நெல் வயலில் செந்தில்குமார்

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பு தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணத்துக்கு முன்பு, 30 - 35-ம் நாளில் வயலில் தண்ணீர் கட்டி மடக்கி உழவு செய்ய வேண்டும். உழவு செய்த பிறகு, 20 நாள்கள் வரை தினமும் தண்ணீர் கட்டி, மண்ணைப் புளிக்கச் செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்தி, ஒற்றை நாற்று முறையில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். அதிக வயதுடைய நெல் ரகத்துக்குத் தலா 30 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நாற்று நடவு செய்ய வேண்டும். வயது குறைவான நெல் ரகத்துக்கு, 25 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நாற்று நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்திவிட வேண்டும். 18-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் தலா 5 லிட்டர் பஞ்சகவ்யா, திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) திரவத்தைக் கலந்து பாசன நீரில் விட வேண்டும்.

25-ம் நாள்... ஒரு ‘பிளாஸ்டிக் கேனி’ல் 200 லிட்டர் தண்ணீரில் தலா 5 லிட்டர் செறிவூட்டப்பட்ட அசோஸ்பைரில்லம் கரைசல், சூடோமோனஸ் கரைசல், பாஸ்போ பாக்டீரியா கரைசல், 2 கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஒரு கிலோ வெல்லம் கலந்து, ஒரு துணியால் கட்டி வைக்க வேண்டும். இதில் மழைநீர் படாமல் இருக்க, கொட்டகையில் வைக்க வேண்டும். அடுத்த 7 நாள்களில் நன்கு நொதித்து, செறிவூட்டப்பட்ட உயிர் உரங்கள் - கடலைப் பிண்ணாக்குக் கரைசல் தயாராகிவிடும். இதிலிருந்து 170 லிட்டர் கரைசலை மட்டும் எடுத்து பாசனநீரில் கலந்துவிட வேண்டும். ‘பிளாஸ்டிக் கேனி’ல் மீதியுள்ள சுமார் 30 லிட்டர் கரைசலில் 170 லிட்டர் தண்ணீர், 2 கிலோ கடலைப் பிண்ணாக்கு, ஒரு கிலோ வெல்லம் கலந்து மூடி வைத்து, 10 நாள்கள் கழித்து பயன்படுத்தலாம். இதுபோல் 10 நாள்களுக்கு ஒரு முறை 170 லிட்டர் கரைசலைப் பாசனநீரில் கலந்து விடலாம்.

45-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 700 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். கதிர்கள் வரும் தருணத்தில் 120 லிட்டர் தண்ணீரில் 7 லிட்டர் தேமோர் கரைசல், 500 கிராம் வெல்லம் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் கதிர்கள் நன்கு வாளிப்பாகவும் நெல்மணிகள் திரட்சியாகவும் இருக்கும்.

பிளாஸ்டிக் டிரே
பிளாஸ்டிக் டிரே

‘பிளாஸ்டிக் டிரே’யில் நாற்று உற்பத்தி

‘‘பொதுவா, ‘மிஷின்’ நடவுக்குத்தான் ‘பிளாஸ்டிக் டிரே’யில நாற்று உற்பத்தி செய்வாங்க. ஆனா, கை நடவுக்கே ‘பிளாஸ்டிக் டிரே’வுலதான் நாற்று உற்பத்தி செய்றேன். இதனால பலவிதமான நன்மைகளைப் பார்க்குறேன். நிலத்துல நாற்றங்கால் அமைச்சோம்னா, அதிக மழை பெய்ஞ்சு தண்ணீர் தேங்கி நின்னா, நாற்றுகள் பாதிக்கப்படும். பள்ளக்கால் பகுதிகளாக இருந்தா தண்ணீரை வடிய வைக்குறது சிரமம். ‘டிரே’யில நாற்றுகள் உற்பத்தி செஞ்சோம்னா, சூழலுக்கு ஏத்த மாதிரி இடத்தை மாத்திக்கலாம். நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாரான பிறகு, அதைச் சாகுபடி நிலத்துக்கு எடுத்துக்கிட்டுப் போறது ரொம்பச் சுலபமா இருக்கும். நாற்றுகளைப் பறிக்குற செலவும் மிச்சம். வேர் பகுதிகள்ல மண்ணு கெட்டியா பிடிச்சிருக்காது. நாற்றுகள் மண்ணைச் செரிச்சிடும். இதனால் நாற்றுகளை ரொம்ப எளிதா கையில எடுத்து நடவு செய்யலாம். ஒற்றை நாற்று நடவு முறைக்கு, ‘பிளாஸ்டிக் டிரே’யில நாற்று உற்பத்தி செய்றது ரொம்பவே ஒத்தாசையா இருக்கு’’ என்கிறார் செந்தில்குமார்.

இடுபொருளுடன்
இடுபொருளுடன்

பூச்சிக் கட்டுப்பாடு

தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், 500 கிராம் புகையிலை இவற்றைத் தனித் தனியாக அரைத்து, 50 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இவற்றுடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர் சேர்த்து, 2 நாள் மூடி வைக்க வேண்டும். 3-ம் நாள் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தயாராகிவிடும். இதில் 10 லிட்டர் கரைசலை எடுத்து, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, 25 மற்றும் 35-ம் நாள் தெளிக்க வேண்டும். இந்த அளவு ஒரு ஏக்கருக்கானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism