Published:Updated:

3 ஏக்கர்... ரூ.2,27,000 கலக்கல் லாபம் தரும் கறுப்புக் கவுனி!

நெல் வயலில் செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் செல்வராஜ்

மகசூல்

3 ஏக்கர்... ரூ.2,27,000 கலக்கல் லாபம் தரும் கறுப்புக் கவுனி!

மகசூல்

Published:Updated:
நெல் வயலில் செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் செல்வராஜ்

டித்த பட்டதாரிகளில் பலர் இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு ஆர்வமாக விவசாயம் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட முன்னோடி இளம் விவசாயிகளில் ஒருவர்தான் செல்வராஜ். நெல் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, தோட்டப்பயிர்கள் சாகுபடி எனத் தற்சார்பு விவசாயத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். அவரைச் சந்திக்க ஒரு காலை வேளையில் பயணமானோம்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பாலப்பாடி கிராமம். ஊரின் உட்புறமாக, சாலையின் இடதுபுறத்தில் இருந்தது செல்வராஜூடைய அழகிய வயல்வெளியோடுகூடிய வீடு. மாடுகளுக்கு வைக்கோல் அள்ளிப் போட்டுக்கொண் டிருந்தவர், நம்மை இன்முகத்தோடு வரவேற்றார். அவருடைய தோட்டத்தில் வரிசையாக இருந்த தென்னை மரங்களின் அடியில் அமர்ந்து பேசத் தொடங்கினோம்.

நெல் வயலில் செல்வராஜ்
நெல் வயலில் செல்வராஜ்

“நான், பாரம்பர்ய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். சின்ன வயசுல இருந்தே விவசாயத்த பார்த்து வளர்ந்ததால, விவசாயம் நல்லாவே தெரியும். 1999-ம் வருஷம் ‘ஐ.டி.ஐ- மெக்கானிக்கல்’ முடிச்சேன். பல தனியார் கம்பெனில மாறி மாறி ரெண்டு வருஷம் வேலை செஞ்சேன். ஒரு கட்டத்துல அந்த வேலை மனசுக்குத் திருப்திகரமா இல்ல. எதையோ இழந்துட்ட மாதிரியும், கடமைக் காக வேலை செய்ற மாதிரியும் இருந்துச்சு. அதனால விவசாயமே பண்ணலாம்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

எங்களுக்குச் சொந்தமா 4 ஏக்கர் நிலமிருக்கு. அப்பா, ரசாயன இடுபொருள் களைப் பயன்படுத்திதான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அதுல, கடைசியா கூட்டிக் கழிச்சு பார்க்கும்போது உரச் சாக்கு மட்டும்தான் மிச்சமிருக்கும். இதுக்கெல்லாம் மாற்றா என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போதான் நம்மாழ்வார் ஐயாவை பற்றித் தெரிய வந்துச்சு. அவரோட நிகழ்ச்சியில கலந்துக்கிட ஆரம்பிச்சேன். சுத்துப்பட்டு பகுதியில ஐயா பேசுறார்னு தெரிஞ்சாலே அங்க போய்டுவேன். இதுக்கு இடையில, 18 கலப்பின மாடுகளை வாங்கி பால்பண்ணை வச்சு நடத்திக்கிட்டு வந்தேன். அப்புறம் கொஞ்ச நாள்லயே, எங்களோட விவசாய நிலத்தில இயற்கை விவசாயம் செய்யுறதுக்கு களம் இறங்கிட்டேன். 2003-04-ம் வருஷம், நம்மாழ்வார் ஐயா என்னுடைய நிலத்துக்கு வந்திருந்தாரு. இயற்கை விவசாயம் பண்றதுக்கு ஆர்வமா இருந்த 20 பேருக்கு, இயற்கை விவசாயத்தைப் பத்தி களப்பயிற்சி கொடுத் தாரு. அது எனக்கு இன்னும் உத்வேகமா இருந்துச்சு.

நெல் வயலில் செல்வராஜ்
நெல் வயலில் செல்வராஜ்

என்னோட திருமணம், நம்மாழ்வார் ஐயா தலைமையிலதான் நடந்துச்சு. அவர்தான் தாலி எடுத்துக் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினாரு. ரசாயன உரம் போடக் கூடாதுன்னுதான் இயற்கை விவசாயத்துக்கே வந்தேன். அதுக்கு மாற்று என்னனு கொஞ்சம் கொஞ்சமாதான் தெரிஞ்சுகிட்டேன். ஆரம்பத்துல அமுதக்கரைசல், பஞ்சகவ்யா மட்டும்தான் தெரியும். இயற்கை விவசாய முறையில எனக்கு இருந்த சந்தேகத்த நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, நான் செஞ்ச தவறுகளை எல்லாம் சரி பண்ணிக்கிட்டு இயற்கை விவசாயத்த முழுசா தெரிஞ்சுகிட்டேன். 2009-ம் வருஷத் திலிருந்து இயற்கை விவசாயம் கைகொடுக்க ஆரம்பிச்சது. சம்பா பருவத்துல பொதுவா மழை அதிகமா இருக்கும். அதனால புன்செய் பயிர் எதுவும் அப்போ செய்ய முடியாது. அதனால சம்பா பருவத்துல நெல் போட்டு டுவோம். உற்பத்தி செலவும் கம்மியாதான் ஆகும். அப்படித்தான் இந்தச் சம்பா பருவத்திலயும் 3 ஏக்கர்ல கறுப்புக் கவுனி நட்டிருந்தேன்’’ என்றவர், விற்பனை மற்றும் வருமானம் பற்றிப் பேசினார்.

நெல் வயலில் செல்வராஜ்
நெல் வயலில் செல்வராஜ்

“3 ஏக்கர்ல நட்டிருந்த கறுப்புக் கவுனியை சமீபத்துலதான் அறுவடை பண்ணி முடிச்சேன். ஏக்கருக்கு 17 மூட்டை (75 கிலோ) வரைக்கும் மகசூல் கிடைச்சது. அரிசியா மாத்துனதுக்கு அப்புறம் 765 கிலோ கிடைச்சது. கூடுதலா, 35 கிலோ வரைக்கும் நொய் அரிசி கிடைச்சது. அந்த நொய்யில் வீட்டுப் பயன்பாடு போக மீதியை அதிரசம், முறுக்கு செஞ்சு விற்கிறேன். இந்த அரிசியில நிறைய நோய் எதிப்பு சக்தியும், மருத்துவ குணங்களும் இருக்கு. உடம்புக்கும் ரொம்ப நல்லது.

ஒரு கிலோ கறுப்புக் கவுனி அரிசியை 150 ரூபாய்னு விக்குறேன். மொத்த விலைக்குக் கேக்குறவங்களுக்கு 135 ரூபாய்னு கொடுக்கிறேன். கிலோ 135 ரூபாய்னே வெச்சுகிட்டாலும் 765 கிலோ விற்பனை மூலமா 1,03,275 ரூபாய் வருமானம். அதுல 27,460 ரூபாய் செலவு. அதுபோக ஏக்கருக்கு 75,815 ரூபாய் லாபம். அந்த வகையில 3 ஏக்கருக்கு 2,27,445 ரூபாய் வரைக்கும் கையில நின்னுச்சு. வீட்டுல இருக்கிறவங் களையே வெச்சு உழைச்சதாலும், பல தேவைகளுக்குத் தற்சார்பா இருக்கிற தாலும்தான் இது சாத்தியப்பட்டுச்சு. மீதி இருக்கிற தவுடு, வைக்கோலை எல்லாம் எங்க மாடுகளுக்கே வச்சுகிட்டோம்’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, செல்வராஜ்,

செல்போன்: 94423 80866

அடுக்குப்பயிர் திட்டம்

காய்கறி விவசாயம் பற்றிப் பேசிய செல்வராஜ், “இப்போ 1.5 ஏக்கர்ல பூங்கார், 1 ஏக்கர்ல நிலக்கடலை, மீதி இடத்துல காய்கறி நட்டிருக்கேன். இந்த முறையும் நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். காய்கறித் தோட்டம் போட்டிருக்குற இடத்துல 50 சென்ட் அளவுக்கு ‘அடுக்குப் பயிர் திட்டத்துல’ கீரைகள், காய்கறிகள், வாழை, மிளகாய் எனத் தோட்டப்பயிரை விவசாயம் பண்றேன். எல்லா செலவும் போக இதுல மாசம் 10,000 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. இந்தப் பொருள்களையும் அங்காடி மூலமாகவே விற்பனை பண்ணிடுறேன். மீதி இருக்கிற சுமார் ஒரு ஏக்கர்ல, எங்க மாடுகளுக்குத் தேவையான தீவனம் வளர்க்கிறேன்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

ஆரம்பத்துல வச்சிருந்த கலப்பின மாடுகளைக் கொடுத்துட்டு, இப்போ நாட்டு ரக மாடு களைத்தான் வச்சிருக்கேன். பாலை கறந்து நானே நேரடியா விற்பனை செய்றதால... தீவனம், பராமரிப்பு செலவெல்லாம் போக மாசம் 30,000 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. இந்த வாழ்க்கை முறை எங்களுக்குப் புடிச்ச மாதிரி இருக்கு. விவசாயி உற்பத்தி பண்ணும் பொருள்கள் எல்லாம் நேரடியா மக்களுக்குப் போய்ச் சேரணும்” என்றார் மலர்ந்த முகத்துடன்.

கறுப்புக் கவுனி நெல் சாகுபடி அனுபவங்கள்

கறுப்புக் கவுனி நெல் சாகுபடி குறித்துப் பேசிய செல்வராஜ், “ஒவ்வொரு வருஷமும், ஆனி மாசத்துல மழை வந்துச்சுனா, அந்த ஈரத்துலேயே உழவு ஓட்டிடுவோம். ஒரு ஏக்கருக்கு 21 வகை தானியங்களைத் தலா ஒரு கிலோ வீதம் கலந்து விதைப்போம். ஆளு உசரத்துக்கு வளர்ந்த உடனே மடக்கி உழுதுடுவோம். ஆடி மாசம் நாற்று விடுறதுக்கு 15 நாள்களுக்கு முன்னாடியே அந்த நிலத்துல... மாட்டுச் சாண எரு; மரம், செடி, கொடி தழைகளைப் போட்டு ஓட்டி வச்சிடுவோம். அதுக்கு அப்புறமாதான் நாற்றங்காலுல நெல் விதைப்போம்.

நெல் வயலில் செல்வராஜ்
நெல் வயலில் செல்வராஜ்

முக்கியமா பட்டத்துக்கு ஏத்த மாதிரிதான் நெல் ரகத்தைத் தேர்வு பண்ணணும். ஏன்னா, நாம தேர்ந்தெடுக்கிற நெல், அந்தப் பருவத்துல பூச்சி தாக்காத மாதிரி இருக்கணும், அதேசமயம் நல்ல மகசூல் தர்ற மாதிரியும் இருக்கணும். அதுமட்டுமல்லாம, விற்பனை வாய்ப்பையும் பார்க்கணும். அதுக்கு ஏத்தமாதிரிதான் நெல் தேர்வு இருக்கணும். நாற்றுவிட்ட 3-ம் நாளே சேடை ஓட்டிடுவோம். சொந்தமா பவர் டிரில்லர் இருக்கிறதால, நாங்களே ஏர் ஓட்டிப்போம். அதனால, டிராக்டர் வாடகை மிச்சம். பரம்பு ஓட்டுறப்ப ஆமணக்குப் புண்ணாக்கு (1 ஏக்கருக்கு 70 கிலோ) போடுவோம். பரம்பு ஒரே மட்டமா ஓட்டுறது முக்கியம். ஏன்னா, மகசூல் நல்லா கிடைக்கிறதுக்கும், களை மேலாண்மைக்கும் அது ரொம்பவே முக்கியம். சரியா 17-ம் நாள்ல நாற்றை எடுத்து 9-க்கு 9 அங்குல இடைவெளியில கயிறு புடிச்சு நடவு பண்ணிடுவோம். அன்னையிலிருந்து 13, 25, 35-ம் நாள்ல கோனோவீடர் ஓட்டி 3 தடவை களை எடுத்துடுவோம். இதுக்காக நாங்க வேலைக்கு ஆள் வைக்கிறது இல்ல. எங்க குடும்பத்துல இருக்கிறவங்களே செஞ்சிப்போம். கோனோவீடர் மூலமா, 3 தடவை களை எடுக்கிறதால பயிர் சாயாம ‘ஜம்’முனு இருக்கும்.

2-வது களைக்கு அப்புறமா கடலைப் புண்ணாக்கு (ஒரு ஏக்கருக்கு 15 கிலோ) போடுவோம், பூச்சிவிரட்டி தெளிப்போம். பஞ்சகவ்யா கொடுப்போம். 3-வது களைக்கு அப்புறமா... வேப்பம் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு போடுவோம் (1 ஏக்கருக்கு மொத்தம் 30 கிலோ). அதேபோல பூச்சிவிரட்டி மட்டும் தெளிப்போம். 45-ம் நாள் ஒட்டுண்ணி கட்டுவோம். அது, இலை சுருட்டுப்புழு, குருத்துப் பூச்சி தாக்கம் வராமல் தடுத்திடும். பூச்சித் தாக்கம் இருக்கிற மாதிரி தெரிஞ்சா... ஒரு ஏக்கருக்கு, 100 லிட்டர் தண்ணி எடுத்து, அதுல 10 கிலோ மாட்டுச்சாணம், 2 கிலோ நாட்டு வெல்லம், சூடோமோனஸ் எல்லாம் கலந்து வச்சிடணும். அதை மறுநாள் எடுத்துத் தெளிச்சா போதும். தோட்டத்தைச் சுத்தி மரம், செடி, கொடி தழை எல்லாம் இருக்குது. அதனால இடுபொருள் தயாரிக்க அதிக செலவு ஆகுறதில்ல. மேலே சொன்ன விஷயங்களையெல்லாம் சரியா செய்துட்டு, தேவைப்படும்போது தண்ணி பாய்ச்சிகிட்டு பயிரைப் பார்த்துக்கிட்டாலே போதும். நல்ல மகசூல் நிச்சயம் கிடைக்கும்’’ என்றார்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

இயற்கை அங்காடி

“இதுவரைக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கே போனது கிடையாது. ஆரம்பத்துல, நண்பர்களுக்கு மட்டும்தான் அரிசியை விற்பனை செஞ்சுகிட்டு வந்தேன். 2002-ம் வருஷம், இயற்கை விவசாயம் செய்யுற நண்பர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஆரணியில ‘அமுது களஞ்சியம் இயற்கை அங்காடி’னு தொடங்கினோம். நல்ல வரவேற்பு இருந்துச்சு. அதனால, இப்போ செஞ்சியிலும் தொடங்கியிருக்கோம். அந்த அங்காடி மூலமா என்னோட விளைபொருளை, சுலபமா விற்பனை பண்ண முடியுது. தனிப்பட்ட முறையில கேக்குறவங்களுக்கும் விலைக்குக் கொடுக்கிறேன்’’ என்கிறார் செல்வராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism