Published:Updated:

4 ஏக்கர், ஆண்டுக்கு இருபோகம், ரூ.1,87,000 லாபம்! டென்னிஸ் பயிற்சியாளரின் பாரம்பர்ய நெல் சாகுபடி!

அறுவடை செய்யப்பட்ட நெல்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்யப்பட்ட நெல்

மகசூல்

4 ஏக்கர், ஆண்டுக்கு இருபோகம், ரூ.1,87,000 லாபம்! டென்னிஸ் பயிற்சியாளரின் பாரம்பர்ய நெல் சாகுபடி!

மகசூல்

Published:Updated:
அறுவடை செய்யப்பட்ட நெல்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்யப்பட்ட நெல்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா எரி கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்யும் இளம் விவசாயியும் டென்னிஸ் பயிற்சியாளருமான சரண்யனின் அனுபவமே இதற்கு சிறந்த உதாரணம். இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். நவீன நெல் ரகங்களை ஒப்பிடும்போது, பாரம்பர்ய நெல் ரகங்களில் லாபம் நிச்சயம் என்கிறார்.

ஒரு பகல் பொழுதில் இவரின் பண்ணைக்குச் சென்றோம். நான்கு ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த சொர்ணமசூரி மற்றும் சிவன் சம்பா ரக நெற்பயிர்களின் செழிப்பு... நம் மனதை உற்சாகப்படுத்தியது. தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த சரண்யன் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று, ‘‘ஒரு ஏக்கர்ல சிவன் சம்பாவும், 3 ஏக்கர்ல சொர்ணமசூரியும் சாகுபடி செஞ்சிருக்கேன். நடவு செஞ்சு இப்ப 50 நாள்கள் ஆகுது. ஒவ்வொரு குத்துக்கும் 1 - 3 நாத்துங்கதான் நடவு செஞ்சேன். ஆனாலும், ஏகப்பட்ட தூர்கள் வெடிச்சு வந்திருக்கு. கடுமையான வெயில் அடிச்சாலும்கூட பசுமைத்தன்மை குறையவே இல்லை. இதுதான் பாரம்பர்ய நெல் ரகங்களோட தனிச்சிறப்பு. நாலு வருஷமா, பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... ஒரு தடவைகூட, பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்பட்டதே இல்லை. இதனால இயற்கை பூச்சி விரட்டிகூட தேவைப்படலை.

நெல் வயலில் சரண்யன்
நெல் வயலில் சரண்யன்

பொதுவா இந்தப் பகுதிகள்ல நெற்பயிர்கள்ல வெள்ளைப்பூச்சி, மஞ்சள் நோய்த்தாக்குதல் ஏற்படுறது வழக்கம். நிறைய ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிச்சு எப்படியாவது கட்டுப்படுத்திடுவாங்க. ஆனா, என்னோட பாரம்பர்ய நெற்பயிர்கள்ல அந்தப் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை. அடியுரமா எரு கொடுக்குறதுனாலயும் மேலுரமா பஞ்சகவ்யா, கடலைப்புண்ணாக்கு, உயிர் உரங்கள், மீன் அமிலம் கொடுக்குறதுனாலயும் என்னோட பயிர்கள் பூச்சி, நோய் எதிர்ப்புத்திறனோட ஆரோக்கியமா விளையுது’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நாங்க விவசாயக் குடும்பம். என்னோட அப்பா, தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்துல வேலைபார்த்துக்கிட்டு இருந்தப்பவும்கூட, விவசாயத்தை விடலை. வேலைநேரம் போக மீதி சமயத்துல எல்லாம் வயல்லதான் இருப்பாங்க. நான் பி.ஏ வரைக்கும் படிச்சிருக்கேன். வெளியில எங்கயாவது வேலைக்குப் போயி கஷ்டப்படுறதைவிட விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு, இங்கயே நிம்மதியா இருனு, என்னோட அப்பாதான் எனக்கு யோசனை சொன்னார். நான் டென்னிஸ் பயிற்சியாளர். உள்ளூர்லயே இருந்து விவசாயம் பண்ணினா, அதுக்கும் வசதியா இருக்கும்னு முடிவெடுத்து, 2015-ம் வருஷம் விவசாயத்துல இறங்கினேன்’’ என்று சொன்னவர், இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

கறுப்புக் கவுனி அரிசி
கறுப்புக் கவுனி அரிசி

‘‘ஏற்கெனவே எங்க அப்பா செஞ்சுகிட்டு இருந்த ரசாயன விவசாயத்தைதான் ஆரம்பத்துல நானும் செஞ்சேன். சுற்றுவட்டார கிராமங்கள்ல ஒரு சில விவசாயிங்க இயற்கை விவசாயம் செஞ்சு, வெற்றிகரமா மகசூல் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதைப் பார்த்துட்டு, நாமலும் இயற்கை விவசாயம் செஞ்சிப் பார்க்கலாம்னு என்னோட அப்பாவும் தங்கச்சியும் யோசனை சொன்னாங்க. உடல் ஆரோக்கியத்துக்கு இது ரொம்ப நல்லதுங் கிறதுனால, எனக்கும் இதுல இயல்பா ஆர்வம் ஏற்பட்டுச்சு. எங்க குடும்பத்துக்கு மொத்தம் 7 ஏக்கர் நிலம் இருக்கு. 2018-ம் வருஷம் முதல்கட்டமா 4 ஏக்கர்ல இயற்கை விவசாயத்தைத் தொடங்கினோம். மாப்பிள்ளைச் சம்பா, ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செஞ்சோம். நடவு செஞ்ச 30 நாள்கள்ல இளம் பயிராக இருக்குறப்ப, சரியான மழை. வயல் முழுக்கத் தண்ணீர்ல மூழ்கிடுச்சு. ஒரு நாள் முழுக்கப் பயிர்கள் தண்ணிக்குள்ளயே மூழ்கி கிடந்துச்சு. அவ்வளவுதான்... எதுவும் தேறாதுனு நினைச்சோம். ஆனா, மறுநாள் தண்ணியை வடியவிட்டதும், கொஞ்சம்கூட இழப்பு இல்லாம, எல்லாப் பயிர்களும் ஒத்தாப்புல பொழைச்சு தேறி வந்துடுச்சு. ஆனா, அந்த வருஷம் எங்க ஊர்ல ரசாயன விவசாயத்துல சாகுபடி செஞ்சிருந்த வழக்கமான நெற்பயிர்கள் பெரும்பாலும் அழுகிப்போயிடுச்சு. எனக்குப் பாரம்பர்ய நெல் ரகங்கள்ல அந்த வருஷம் ஏக்கருக்கு 15 (60 கிலோ) மூட்டை மகசூல் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷங்கள்ல 18 - 24 மூட்டை மகசூல் கிடைச்சது.

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

கைநடவுதான் சிறப்பானது

நான் ஒற்றை நாற்று முறையில நடவு செய்றேன். இதுக்கு மிஷின் நடவைவிட, கை நடவுதான் சிறப்பா இருக்கு. என்னதான் நான் நிலத்தைச் சமப்படுத்தி வச்சாலும்கூட அங்கங்க லேசான மேடு பள்ளம் இருக்க தான் செய்யுது. ஆள்கள் மூலம் கையால நடவு செஞ்சோம்னா, மேடான பகுதியில குத்துக்குக் குத்து ஒரு நாத்து... பள்ளமான பகுதியில ரெண்டு, மூணு நாத்துகளைக் கூடுதலா நடவு செய்யலாம். மழை பெய்ஞ்சு தண்ணி தேங்கினா, ஒரு நாத்து அழுகிப் போனாலும்கூட இன்னொரு நாத்துப் பொழைச்சு வந்துடுது.

30 நாள் வயதுடைய நாற்றுகள்

ஒற்றை நாற்று முறையில நடவு செய்யக் கூடிய விவசாயிங்க பெரும்பாலும், 21 - 24 நாள்கள் வயசுடைய இளம் நாத்துகளா நடவு செய்றதுதான் வழக்கம். ஆனா, என்னோட நிலத்துல அங்கங்க லேசான பள்ளம் இருக்குறதுனால, 30 நாள்கள் வயசுலதான் நாத்துக்களை நடவு செய்றேன். மழை பெய்ஞ்சு தண்ணி தேங்கினாலும்கூட, இது மாதிரியான நாத்துக்களைத் தாக்குப் புடிச்சு தேறி வந்துடுது.

நெல்லுடன்
நெல்லுடன்

இருபோகம்

4 ஏக்கர்ல வருஷத்துக்கு ரெண்டு போகம் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, கறுப்புக் கவுனி, சொர்ணமசூரி, குள்ளக்கார், கருங்குறுவை பல ரகங்களும் சாகுபடி செய்றேன். ஒரு போகத்துக்கு நாலு ஏக்கர்லயும் மொத்தமா சேர்த்து தோராயமா 84 மூட்டை மகசூல் கிடைக்கும். இதுல 14 (60 கிலோ) மூட்டை நெல்லை, அரிசியா அரைப்போம். 840 கிலோ நெல்லுல இருந்து 490 கிலோ அரிசி கிடைக்கும். எங்களோட வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தியது போக மீதியுள்ள அரிசியை, தானா விரும்பி கேட்கக்கூடிய சொந்தக்காரங்க, நண்பருங்க கிட்ட வித்துடுவோம். ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 65 ரூபாய் வீதம் விலை கிடைக்கும். 490 கிலோ அரிசியோட மொத்த விலை மதிப்பு 31,850 ரூபாய். அரிசி, குருணையோட விலைமதிப்பு 2,900 ரூபாய். மீதி 70 மூட்டை நெல்லை தானியமா விற்பனை செஞ்சிடுவோம். ஒரு மூட்டைக்குச் சராசரியா 1,700 ரூபாய் வீதம் 1,19,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 4 ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் கிடைக்குற வைக்கோல் விலைமதிப்பு 20,000 ரூபாய். ஆக மொத்தம், ஒரு போகத்துக்கு 4 ஏக்கர்ல இருந்து 1,73,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, அரிசி அரைக்கிற கூலி எல்லாம் சேர்த்து 80,000 ரூபாய் செலவு போக, 93,750 ரூபாய் லாபமா கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு இருபோகம் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்றது மூலமா 1,87,500 ரூபாய் லாபம் கிடைக்குது. அடுத்தடுத்த வருஷங்கள்ல இன்னும் மகசூல் அதிகரிச்சு, கூடுதல் லாபம் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்குறேன்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


தொடர்புக்கு, சரண்யன்,

செல்போன்: 98404 66865

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய சரண்யன் சொல்லிய தகவல்கள் பாடமாக இடம் பெறுகின்றன...

முதலில் 15 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து, அடியுரமாக 100 கிலோ மாட்டு எரு இட்டு, மீண்டு உழவு ஓட்டி மண்ணைச் சமப்படுத்த வேண்டும். 15 கிலோ விதைநெல்லை, பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்து முன்றாம் கொம்பு விதை நெல்லாக நாற்றங்காலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். 12-ம் நாள் 5 கிலோ எருவுடன் 1 கிலோ கடலைப்பிண்ணாக்கை கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம்.

அறுவடை செய்யப்பட்ட நெல்
அறுவடை செய்யப்பட்ட நெல்

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்டி, அடியுரமாக ஏக்கருக்கு 2 டன் மாட்டு எரு இட வேண்டும். மீண்டும் ஒரு சால் உழவு ஓட்டி நிலத்தை நன்கு சமப்படுத்தி, ஒற்றை நாற்று முறையில் தலா 1 அடி இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்ய வேண்டும். சற்றுப் பள்ளம் தென்பட்டால், 2 - 3 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். 7-ம் நாள் 20 கிலோ எருவுடன் 5 கிலோ கடலைப் பிண்ணாக்கு கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யா தெளிப்பதால் ஏற்படும் பலன்களைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதனால் பயிர் வேகமாக வளர்ச்சி அடைவதோடு, தூர் கட்டும் தன்மையும் அதிகரிக்கும். 20-ம் நாள் 20 கிலோ எருவுடன் 5 கிலோ கடலைப்பிண்ணாக்கு, தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 20 கிலோ எருவுடன் 5 கிலோ கடலைப்பிண்ணாக்கு, தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 500 மி.லி பஞ்சகவ்யா, 250 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். கதிர் வரும் தருணத்தில் 100 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வப்போது தேவைக்கேற்ப களையெடுக்க வேண்டும். சொர்ணமசூரி 135 - 140 நாள்கள், சிவன் சம்பா 130 - 135 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும்.