Published:Updated:

காட்டுயானம்.... 2 ஏக்கர், ரூ.1,70,000 லாபம்!

அரிசிப்பைகளுடன் வினோத் சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
அரிசிப்பைகளுடன் வினோத் சுரேஷ் ( ம.அரவிந்த் )

மகசூல்

காட்டுயானம்.... 2 ஏக்கர், ரூ.1,70,000 லாபம்!

மகசூல்

Published:Updated:
அரிசிப்பைகளுடன் வினோத் சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
அரிசிப்பைகளுடன் வினோத் சுரேஷ் ( ம.அரவிந்த் )

ஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியிலிருந்து ஆவணம் செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் செங்கமங்கலம். இது, காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஒன்று. தென்னையைப் பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில் வினோத் சுரேஷ் என்ற இளைஞர், பாரம்பர்ய நெல் ரகமான காட்டுயானத்தை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார்.

அவரைச் சந்திப்பதற்காக ஒரு காலை வேளையில் சென்றோம். காட்டுயானம் அரிசியை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பு வதற்கான பணியிலிருந்தவர், மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றார். ‘‘எங்க பகுதியில ரசாயன உரம் பயன்படுத்திதான் பெரும் பாலும் விவசாயம் செய்யுறாங்க. எங்க தாத்தா, அப்பாகூட இதே வயல்ல ரசாயன உரம் போட்டுதான் நெல் விவசாயம் செய்துகிட்டு இருந்தாங்க.

இதைத் தடுக்கணும்னா இயற்கை முறையில மருத்துவக் குணமுள்ள பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யணும்னு நினைச்சேன். அதன்படி கடந்த ரெண்டு போகமா அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தேன்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘பி.எஸ்ஸி விலங்கியல் படிச்சிருக்கேன். 5 வருஷம் வெளிநாட்டுல வேலை பார்த்தேன். அப்பா ராஜேந்திரன் இறந்த பிறகு, நானே நேரடியா விவசாயத்தில இறங்கிட்டேன். நானும், முதல்ல ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சேன். உரத்தைத் தெளிக்கும் போதே என்னை அறியாம மனசுல ஒரு வலி உண்டாகும்.

அரிசியுடன் வினோத் சுரேஷ்
அரிசியுடன் வினோத் சுரேஷ்

இனி, ரசாயன உரத்தைப் போட்டு மண்ணும் மக்களும் கெட்டுப்போக நாம காரணமாக இருக்கக் கூடாதுனு நினைச்சேன். உயிர்கள் மேலயும் இயற்கை மேலயும் ஆர்வம் வர்றதுக்கு விலங்கியல் படிப்பு காரணமா இருந்துச்சு. போன போகத்துல பாரம்பர்ய நெல் ரகமான மாப்பிள்ளைச் சம்பா பயிர் பண்ண முடிவு பண்ணுனேன். எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. வண்டல் மண் நிலம். அதுல உழவு ஓட்டினேன். பிறகு, வரப்பு வெட்டி தண்ணீர் பாய்ச்சி, எருக்கன் செடிகள வயலுக்குள்ள போட்டு ஊற வச்சேன். ஒரு நாள் முழுக்க ஊறுன பிறகு, இரண்டு தடவை உழவு ஓட்டுனேன். ரெண்டு சென்ட்ல நாற்றங்கால் அமைச்சேன்.20 நாள்கள்ல வளர்ந்த நாற்றை பறிச்சு ஒற்றை நாற்று முறையில நடவு பண்ணுனேன். 15 நாளைக்கு ஒரு தண்ணி பாய்ச்சினதோடு சரி. களை எடுக்கல; துளி உரம்கூட போடல; எந்தப் பராமரிப்பும் இல்லாம 180-ம் நாள்ல இயந்திரம் மூலம் அறுவடை செஞ்சேன்.

ஒரு ஏக்கருக்கு 16 மூட்டை மகசூல் கிடைச்சது. ‘ரசாயன உரத்த போட்டிருந்தா இன்னொரு மடங்கு கூடுதலாக நெல் கிடைச்சிருக்கும். ஏதே வானத்துல இருந்து குதிச்சு வந்தவன் மாதிரி புதுசா விவசாயம் செய்ய வந்துட்டான்’னு அக்கம் பக்கத்துல இருந்தவங்க நக்கலடிச்சாங்க. முதல் முயற்சி. அனுபவம் இல்லாம செஞ்சதால சிலதை சரியா கடைப்பிடிக்கல. அதுக்குப் பிறகு கொஞ்சம் தெளிவு ஏற்பட்டுச்சு.

அடுத்ததா... மாப்பிள்ளைச் சம்பாவுக்குக் கடைப்பிடிச்ச அதே முறையில காட்டுயானம் பயிர் பண்ண முடிவு பண்ணுனேன். முதல்ல வயல்ல உழவு ஓட்டினேன். 6 கிலோ விதை நெல்லை பயன்படுத்தி நாற்றங்கால் அமைச்சேன். நாற்றங்காலிருந்து நாற்றுக்களைப் பறிச்சு ஒற்றை நாற்று முறையில நடவு செஞ்சேன். 30 நாள்களுக்குப் பிறகு, வெள்ளைப் பூச்சித் தாக்குதல் ஆரம்பிச்சது. அதுக்கு, பஞ்சகவ்யா தெளிச்சேன். அடுத்த வாரத்திலயே பூச்சித் தாக்குதல் கட்டுக்குள்ள வந்துச்சு. அடுத்த 45-ம் நாள்ல ஒரு தடவை பஞ்சகவ்யா தெளிச்சேன். களை எடுக்கல. ரெண்டு வாரத் துக்கு ஒரு தடவை தேவையான அளவு தண்ணிப் பாய்ச்சினேன்.

அரிசிப்பைகளுடன் வினோத் சுரேஷ்
அரிசிப்பைகளுடன் வினோத் சுரேஷ்

பயிர் 7 அடி உயரம் வளர்ந்துச்சு. வயலுக்குள்ள நான் இறங்கினாலே சுத்தமாக மறைச்சிடும். 120-ம் நாள்ல தொடர்ந்து மழை பெய்ஞ்சது. அதுல என்னோட நெல் பயிருக்கு எந்தச் சேதமும் ஏற்படல. அடுத்து 150-ம் நாள்லயும் கடும் மழை. ஆனா, காட்டுயானப் பயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படல. தொடர் மழை, காத்துல என் வயல்ல எந்தப் பாதிப்பும் ஏற்படாததைப் பார்த்துப் பக்கத்து வயல் விவசாயிங்க ஆச்சர்யமா பேசிகிட்டாங்க. ஆனா, மூணாவது தடவையா பலத்த காத்தோட மழை பெய்ஞ்சது. நெல் பயிர் உயரமா இருந்ததால அப்படியே வயல்ல சாய்ஞ்சிடுச்சு. ஆனாலும் பயிருக்கு எந்த சேதமும் இல்ல. மத்த ரகமா இருந்தா, ஒரு நெல்மணி கூட வீடு வந்து சேர்ந்திருக்காது.

180-ம் நாள் இயந்திரம் மூலம் அறுவடை செஞ்சேன். ஒரு ஏக்கருக்கு 23 மூட்டை வீதம் 2 ஏக்கருக்கும் சேர்த்து 46 மூட்டை (1 மூட்டைக்கு 64 கிலோ) நெல் கிடைச்சது. இடைத்தரகர்கள் மூலமா நெல் மூட்டைகளை விற்பனை பண்ண முயற்சி செஞ்சேன். ஒரு மூட்டை 1,800 ரூபாய்க்கு கேட்டாங்க. அதனால நாமே நெல்லை அவிச்சு அரிசியா விற்பனை செஞ்சா லாபம் கூடுதலாக் கிடைக்கும்னு நினைச்சேன்.

அரிசிப்பைகள்
அரிசிப்பைகள்


நெல்லை அவிச்சு, காயவெச்சு, மில்லுலக் கொடுத்து உமி மட்டும் நீக்கி அரிசியாக்கினேன். ஒரு மூட்டை நெல்லுக்கு 40 கிலோ அரிசி கிடைச்சது. மொத்தம் 46 மூட்டைக்கும் 1,840 கிலோ அரிசி கிடைச்சது. சராசரியா ஒரு கிலோ 130 ரூபாய்க்குக் கொடுத்தேன். பாரம்பர்ய ரகமான காட்டுயானம் அரிசிக்கு அமிர்தம்னு பேர்வெச்சு, விற்பனை செஞ்சேன்’’ என்றவர், வருமானம் பற்றிப் பேசினார்.

‘‘ஒரு கிலோ 130 ரூபாய் வீதம் 1,840 கிலோ விற்பனை செஞ்சதுல 2,39,200 ரூபாய் கிடைச்சது. அதுல ரெண்டு ஏக்கருக்குமான செலவு 62,500 போக, 1,76,700 ரூபாய் நிகர லாபமாக் கையில கிடைச்சது. இது பெரிய மன நிறைவைக் கொடுத்திருக்கு’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, வினோத் சுரேஷ்,

செல்போன்: 90805 24746.

விதை நேர்த்தி

பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட வேண்டும். பிறகு, 6 கிலோ விதை நெல்லை அதில் கொட்ட வேண்டும். தரமான நெல் விதைகள் அடிப்பகுதியில் தங்கிவிடும். கருக்கா, முளைப்புத்திறன் இல்லாத நெல் மணிகள் மேல் பகுதியில் மிதக்கும். அவற்றை நீக்கிவிட்டு, மீதமிருக்கும் நெல் விதைகளை ஒரு நாள் அந்தத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

நாற்றங்காலில் விதைப்புக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு தண்ணீரிலிருந்து விதை நெல்லை எடுக்க வேண்டும். அதை தூவ வேண்டும். 20 நாள்களுக்குப் பிறகு, நாற்றுகளைப் பறித்து ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism