Published:Updated:

நெல், பால், இயற்கை இடுபொருள் ஆண்டுக்கு ரூ.5.8 லட்சம் அற்புதமான லாபம்!

மாடுகளுடன் பசுபதி
பிரீமியம் ஸ்டோரி
மாடுகளுடன் பசுபதி

மகசூல்

நெல், பால், இயற்கை இடுபொருள் ஆண்டுக்கு ரூ.5.8 லட்சம் அற்புதமான லாபம்!

மகசூல்

Published:Updated:
மாடுகளுடன் பசுபதி
பிரீமியம் ஸ்டோரி
மாடுகளுடன் பசுபதி

ஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மாரனேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசுபதி, 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்வதுடன் 10 நாட்டு மாடுகளை வளர்த்து, பஞ்சகவ்யா, மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.

ஒரு காலைப்பொழுதில், அவருடைய பண்ணைக்குச் சென்றோம். பசுக்களும் கன்றுக்குட்டிகளும் பாசத்தோடு விளையாடி அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்த காட்சி, நம் மனதைப் பரவசப்படுத்தியது.

‘‘இதுங்க பல தலைமுறையா, நாங்க பாதுகாத்துக்கிட்டு வர்ற மிகப் பெரிய சொத்து. சத்தான பாலைக் கொடுத்து, எங்க குடும்பத்தை ஆரோக்கியமா வாழ வைச்சிக்கிட்டு இருக்கு. பால் விற்பனை மூலமாகக் கணிசமான வருமானம் கிடைக் குது. இதுங்களோட பால், கழிவுகள் மூலம் பஞ்சகவ்யா தயார் செஞ்சு, விற்பனை செய்றது மூலமாகவும் வருமானம் பார்த்துக் கிட்டு இருக்கோம். இதோடு 6 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்றது மூலமாகவும் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு’’ என்று ஆரம்பித்த பசுபதி, மாடுகளைத் தடவிக் கொடுத்தபடியே தொடர்ந்தார்.

பாரம்பர்ய நெல் வயலில் பசுபதி
பாரம்பர்ய நெல் வயலில் பசுபதி

தஞ்சாவூர் நாட்டுக்குட்டை

‘‘இந்த மாடுகளைத் தஞ்சாவூர் நாட்டுக்குட்டைனு சொல்லுவோம். உம்பளச்சேரி நாட்டு மாடுகளோட சாயல்ல இதுங்க இருக்கும். ஆனா, உம்பளச்சேரி மாடுகளுக்கான அடையாளங்கள் இதுல இருக்காது. இதுங்களோட சாணம், சிறுநீர்ல வீரியமிக்க நுண்ணுயிரிகள் நிறைஞ்சிருக்கு. இதைப் பயன்படுத்துறதோடு மட்டுமல்லாம, இந்த நாட்டுப் பசுக்களோட பால், தயிர், நெய் கலந்து பஞ்சகவ்யா தயார் செய்றதுனால, இதுக்கான பலன்களைக் கண்கூடா உணர முடியுது. இதனால்தான் நான் தயார் செய்யக்கூடிய பஞ்சகவ்யாவுக்கு விவசாயிகள் கிட்ட வரவேற்பு அதிகமாகிக்கிட்டே இருக்கு’’ என மிகுந்த உற்சாகமாகப் பேசியவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

நல்வழி காட்டிய நம்மாழ்வார்

‘‘8-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். 13 வயசுலயே முழுமையா விவசாயத்துல இறங்கிட்டேன். எங்க வீட்ல காலம் காலமா நாட்டு மாடுகள் இருந்தாலும் கூட, ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தோம். பூச்சி, நோய்த்தாக்குதலால இடுபொருள் செலவு அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. அதைக்கூட நான் பெருசா எடுத்துக்கல. கிடைச்ச வரைக்கும் போதும்னு தான் நினைச்சேன். ஆனா, எங்க அம்மா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, ரொம்பவே அவதிப்பட்டு 65 வயசுல இறந்துப் போனாங்க. எங்க அம்மாவோட மரணம் என் வாழ்க்கை யில திருப்புமுனையை ஏற்படுத்துனுச்சு. அம்மாவைத்தான் இப்படி விட்டுட்டோம்... அப்பா, என் மனைவி, குழந்தைகளையாவது ஆரோக்கியமா வாழ வைக்கணும்னு நினைச்சேன். எங்க ஊருக்கு ரொம்ப பக்கத்துலதான் நம்மாழ்வாரோட சொந்த ஊரான இளங்காடு இருக்கு. அவரைப் போயி பார்த்து, என் மன ஆதங்கத்தைக் கொட்டினேன். அவர்தான் சொன்னார்... ‘இயற்கை விவசாயம் செய்... மாப்பிள்ளைச் சம்பா மாதிரியான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சு சாப்பிட்டா, நோய் நொடியில்லாம வாழலாம்’னு வழிகாட்டினார். கடந்த 15 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்’’ என்றவர், தனது விவசாயம் தொடர்பான தகவலுக்குள் புகுந்தார்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

மாட்டுக்கிடைலதான் பலன் அதிகம்

‘‘6 ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். சம்பா பட்டத்துல மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சேலம் சன்னா, இலுப்பைப்பூ சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்றது வழக்கம். குறுவையைப் பொறுத்தவரைக்கும் ஒரு ஏக்கர்ல மட்டும் பாரம்பர்ய நெல் ரகமும், மீதி 5 ஏக்கர்ல நவீன ரக நெல்லும் சாகுபடி செய்றோம். இயற்கை விவசாயத்தைப் பொறுத்த வரைக்கும் என்னதான் அதிகமா இடுபொருள்கள் கொடுத்தாலும், மண்ணை வளப்படுத்த, மாட்டுக்கிடை போடுறது ரொம்பவே அவசியம். டன் கணக்குல எருவை கொண்டு போயி அடியுரமா கொட்டுறதை விடவும், மாட்டுக்கிடை போடுறதுலதான் பலன்கள் அதிகம். செலவும் குறைவு. சித்திரை, வைகாசி மாசங்கள்ல, வெளி மாவட்டங்கள்ல இருந்து கிடை அமைக்கக்கூடியவங்க, எங்க பகுதிகளுக்கு நூற்றுக் கணக்குல மாடுகளை ஓட்டிக் கிட்டு வருவாங்க. ஒரு ஏக்கருக்குக் கிடை போட 2,000 ரூபாய்தான் செலவாகும். கிடை கட்டி முடிச்சதும், 20 நாள் கழிச்சு புழுதி உழவு ஓட்டி வச்சிடுவோம். ஆத்து தண்ணி வர்றதுக்கு 15 நாளைக்கு முன்னாடி, சேத்துழவு செஞ்சி, கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு போட்டு, நாத்து நடவு செய்வோம்.

அசோலா
அசோலா

நாற்று நட்ட பிறகு ஏக்கருக்கு 10 கிலோ வீதம் அசோலா தெளிப்போம். அது நிலம் முழுக்கப் பல்கிப் பெருகி, மிகப் பெரிய பலன்களைக் கொடுக்குது. தழைச்சத்தை அதிகப்படுத்துது. தூர் கட்டும் தன்மையை அதிகப்படுத்துது. இது எல்லாத்துக்கும் மேல, களை கட்டுப்பாட்டுக்கு ரொம்பவே உறுதுணையா இருக்கு. மேலுரமா பஞ்சகவ்யா, மீன் அமிலம், அமுதக்கரைசல் கொடுப்போம். இயற்கை இடுபொருள்கள் மட்டுமே கொடுக்குறதுனால, மண்ணு நல்லா வளமாகி, நெற்பயிர்கள் பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாமல் வளருது’’ என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

பாரம்பர்ய நெல் ரகங்கள்

“பாரம்பர்ய நெல் ரகங்களைப் பொறுத்த வரைக்கும் ஏக்கருக்குச் சராசரியா 24 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்குது. 8 மூட்டை நெல்லை, விதை நெல்லாக விற்பனை செய்வோம். ஒரு மூட்டைக்கு 2,400 ரூபாய் வீதம் 19,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 16 மூட்டை நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி, விற்பனை செய்வோம். 960 கிலோ நெல்லுல இருந்து 560 கிலோ அரிசி கிடைக்கும். கிலோவுக்குச் சராசரியா 80 ரூபாய் வீதம் 44,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 கிலோ குறுணை, 12 கிலோ தவிடு கிடைக்கும். இதோட விலைமதிப்பு 3,500 ரூபாய். வைக்கோல் விலைமதிப்பு 2,000 ஆக ஒரு ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் 69,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, அரிசி அரவைக் கூலி எல்லாம் போக 45,300 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கும். சம்பாவுல 6 ஏக்கர்லயும் குறுவையில ஒரு ஏக்கர்லயும் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றது மூலமா 3,17,100 ரூபாய் லாபம் கிடைக்குது.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு

நவீன நெல் ரகம்

குறுவையில 5 ஏக்கர் நவீன நெல் ரகம் சாகுபடி செய்றோம். ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைக்குது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துல விற்பனை செய்வோம். ஒரு மூட்டைக்கு 1,250 ரூபாய் வீதம், 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, கொள்முதல் நிலையத்துல ஆகக்கூடிய இதர செலவுகள் எல்லாம் போக 25,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். 5 ஏக்கர் நவீன ரக நெல் சாகுபடி மூலம் 1,25,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆக மொத்தம் நெல் சாகுபடி மூலம் வருஷத்துக்கு 4,42,100 ரூபாய் லாபம் கிடைக்குது.

நெல் சாகுபடி இல்லாம நாட்டு மாடுகள் மூலமாகவும் வருமானம் கிடைக்குது. என்கிட்ட 10 மாடுகள் இருக்கு. இதுல ஏதாவது ரெண்டு மாடுகள் மூலம் வருஷம் முழுவதும் பால் கிடைக்குது. தினமும் 9 லிட்டர் பால் வீதம் வருஷத்துக்கு 3,285 லிட்டர் பால் கிடைக்குது. இதுல 750 லிட்டர் எங்க வீட்டுத் தேவைக்கு வச்சிக்குவோம். இதைத் தவிர, பஞ்சகவ்யா தயாரிப்புக்காக 200 லிட்டர் பால் பயன் படுத்துவோம். மீதியுள்ள பாலை ஒரு லிட்டர் 30 ரூபாய் வீதம் விற்பனை செஞ்சிடுவோம். எங்களோட வீட்டுத் தேவை, பஞ்சகவ்யா தயாரிப்புக்கு எடுத்துக்குற பால், வெளியில விற்பனை செய்றது எல்லாத்துக்கும் பொதுவா, லிட்டருக்கு 30 ரூபாய்னு விலை கணக்குப் பண்ணினோம்னா, ஒரு வருஷத்துக்குப் பால் மூலமா 98,550 ரூபாய் வருமானம் கிடைக்கும். மேய்ச்சல் மூலமாகவே மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைச்சிடுது. வைக்கோலும் போடுறோம். மழைக்காலங்கள்ல மேய்ச்சலுக்கு விட முடியாதப்ப, வரப்பு புல்லை வெட்டிக் கொண்டு வந்து போடுவோம்’’ என்றவர் நிறைவாக,

தோட்டத்தில் வாழை
தோட்டத்தில் வாழை

‘‘இயற்கை விவசாயத்துல நெல் சாகுபடி செய்றதுனால, என்னோட மாடுகளுக்கு ரசாயன நச்சுத்தன்மை இல்லாத சத்தான வைக்கோல் கிடைக்குது. குறிப்பா, பாரம்பர்ய நெல் ரகங்களோட வைக்கோலை எங்க மாடுகள் நல்லா விரும்பிச் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு ஆற்றலோடு ஆரோக்கியமா வளருது’’ என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, பசுபதி,

செல்போன்: 63854 59311

இப்படித்தான் சாகுபடி

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்வதற்குப் பசுபதி சொல்லும் தொழில்நுட்பம் இங்கே...

நாற்று உற்பத்தி

10 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட 15 கிலோ விதைநெல்லை நாற்றங்காலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும். 22-ம் நாள் 13 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பலன் கொடுப்பதோடு, இலைப்பேன் தாக்குதலைத் தடுக்கும். 30-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

தென்னை
தென்னை

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கிடை அமைக்க வேண்டும். நன்கு உழவு ஓட்டி, ஏக்கருக்கு தலா 10 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு இவற்றை, 80 கிலோ மாட்டு எருவுடன் கலந்து அடியுரமாகத் தெளித்து, குத்துக்குக் குத்து தலா முக்கால் அடி இடைவெளியில் 3 முதல் 5 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். இதனால், பயிரின் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும். தூர் அதிகமாக வெடிக்கும். பூச்சி, நோய்த்தாக்குதல்களையும் கட்டுப்படுத்தும். நாற்று நடவு செய்தவுடன், 10 கிலோ அசோலா தெளிக்க வேண்டும். 15-ம் நாள் பாசன நீரில் 100 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து விட வேண்டும். 30-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். கதிர் விடத் தொடங்கும்போது, 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யா, 1.5 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல தேவைக்கேற்ப களை எடுக்க வேண்டும். உயிர் மூடாக்காக அசோலா வளர்ப்பதால், களைகள் அதிகம் இருக்காது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சாகுபடி குறிப்புகள் அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்துக்கான தொழில்நுட்பங்கள்.

இடுபொருள் தயாரிப்பு
இடுபொருள் தயாரிப்பு

இடுபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை

‘‘என்னோட நெற்பயிர்கள் நல்லா செழிப்பா, ஊக்கமா வளர்றதைப் பார்த்துட்டு, எங்க பகுதியில ரசாயன விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுமேகூட என்கிட்ட பஞ்சகவ்யா, மீன் அமிலம் வாங்கிப் பயன்படுத்துறாங்க. குறிப்பா, செந்தாழை நோய்த்தாக்குதலால் சுணங்கிப்போன பயிர்களை மறுபடியும் செழிப்பா கிளப்பிக் கொண்டு வரப் பஞ்சகவ்யாவும் மீன் அமிலமும் ரொம்பவே கைகொடுக்குது. இந்தப் பகுதிகள்ல நெல் வயல்கள்ல எலித் தொல்லையால் மிகப்பெரிய பாதிப்பு கள் ஏற்படுறது வழக்கம். ஆனா, பஞ்சகவ்யாவோடு மீன் அமிலத்தையும் சேர்த்து தெளிச்சா, எலித் தொல்லை உடனே கட்டுப்படுது. பூச்சி, நோய்த்தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும் இந்த இடுபொருள்கள் உறுதுணையா இருக்கு. இதை எப்படித் தயார் செய்யணும்னு விவசாயிகளுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துடுவேன். சிலர் சொந்தமாகவே தயார் செஞ்சிக்குறாங்க. நாட்டு மாடுகள் இல்லாத விவசாயிகளும், இதைத் தயார் செய்றதை சிரமமா நினைக்கக்கூடியவங்களும், என்கிட்ட பஞ்சகவ்யா, மீன் அமிலம் வாங்கிக்கிட்டுப் போறாங்க.

மாடுகளுடன் பசுபதி
மாடுகளுடன் பசுபதி

வருஷத்துக்கு 600 லிட்டர் பஞ்சகவ்யா விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் 90 ரூபாய். இது மூலமா 54,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. என்னோட மாடுகள்ல இருந்து கிடைக்கக்கூடிய சாணம், சிறுநீர், பால், தயிர், நெய், என்னோட தோட்டத்துல விளையக்கூடிய வாழைப்பழம், இளநீர் பயன்படுத்துறனால, எனக்கு இதுல செலவே கிடையாது. பால், வாழைப்பழம், இளநீர், நாட்டுச் சர்க்கரை இதுக்கெல்லாம் விலை மதிப்பு கணக்குப் போட்டாலும்கூட 45,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். வருஷத்துக்கு 30 லிட்டர் மீன் அமிலம் விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் 120 ரூபாய். அது மூலம் 3,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல செலவு போக, 2,500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

இடுபொருள்கள் விற்பனை வருமானம் பார்க்குறது என்னோட முதன்மையான நோக்கமல்ல... ரசாயன விவசாயிகளைப் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாத்தணுங்கிறதுதான் என்னோட எண்ணம். அது ஓரளவுக்கு நிறைவேறிக்கிட்டு இருக்கு. இது எனக்கு ரொம்பவே ஆத்ம திருப்தியாக இருக்கு’’ என்கிறார்.

ரசாயன விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

சுரக்குடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன், ‘‘நாங்க 12 ஏக்கர்ல ரசாயன முறையில் நெல் சாகுபடி செஞ்சிருந்தோம். நடவு செஞ்ச 35-40-ம் நாள் நெற்பயிர்கள் சிவக்க ஆரம்பிச்சது. அது செந்தாழை நோய்க்கான அறிகுறி. உடனடியான ரசாயன மருந்துகளை வாங்கிக்கிட்டு வந்து தெளிச்சோம். ஆனாலும் நோய்த்தாக்குதல் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. அந்தச் சமயத்துலதான் பசுபதியை எங்க ஊர்ல யதார்த்தமா சந்திச்சப்ப, எங்களோட பிரச்னையைச் சொல்லிப் புலம்பினேன். பஞ்சகவ்யாவும், மீன் அமிலம் அடிச்சுப் பாருங்க. சரியாக வாய்ப்பிருக்குனு சொன்னார்.

லட்சுமணன்
லட்சுமணன்

முதல்ல ஒரு ஏக்கருக்கு மட்டும் தெளிச்சிப் பார்த்தோம். 100 லிட்டர் தண்ணீர்ல 3 லிட்டர் பஞ்சகவ்யா, 500 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிச்சோம். கண்கூடான பலன் தெரிஞ்சது. பயிர் நல்லா பச்சையாக மாற ஆரம்பிச்சது. பயிரோட வளர்ச்சியும் வேகமாக இருந்துச்சு. 12 ஏக்கருக்கு இதே கரைசலைத் தெளிச்சோம். அடுத்த ஒன்றரை மாசம் கழிச்சு மறுபடியும் இதே கரைசலைத் தெளிச்சோம். வழக்கத்தைவிடக் கதிர்கள் நல்லா வாளிப்பா வந்துச்சு. நெல்மணிகள் திரட்சியா அதிக எடை இருந்துச்சு. நெல்மணிகளோட நிறமும் பளிச்சினு பார்வையா இருந்துச்சு. எலித் தொந்தரவை கட்டுப்படுத்தவும் இது கைகொடுத்துச்சு. பசுபதி ஐயாக்கிட்ட இருந்து, இந்தச் சம்பாவுக்கு மட்டுமே 60 லிட்டர் பஞ்சகவ்யா, 8 லிட்டர் மீன் அமிலம் வாங்கினோம்’’ என்றார்.