Published:Updated:

7 ஏக்கர், ரூ.4,62,000 கலக்கல் லாபம் கொடுக்கும் கறுப்புக்கவுனி!

பாரம்பர்ய நெல் வயலில் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய நெல் வயலில் சீனிவாசன்

மகசூல்

சாயன விவசாயத்தோடு ஒப்பிடும்போது, இயற்கை விவசாயத்தில் செலவு குறைவு என்பது பலரும் அறிந்த உண்மை. இந்நிலையில், செலவு குறைந்த இயற்கை விவசாயத்தில் மேலும் செலவுகளைக் குறைத்து, ஆச்சர்யப்பட வைக்கக்கூடிய விவசாயிகளும் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட விவசாயிகளில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம், மேலமாத்தூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன்.

மிக எளிமையான முறையில் இயற்கை விவசாயம் செய்து, நிறைவான மகசூல் எடுத்து வருகிறார். ஒரு பகல்பொழுதில் மேலமாத்தூரில் உள்ள அவரது வயலுக்குச் சென்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேலெனச் செழிப்பாக இருந்த கறுப்புக் கவுனி நெற்பயிர்கள், காற்றில் அசைந்தாடி நம் மனதைப் பரவசப்படுத்தியது.

வயலில் தேங்கிய மழைநீரை வடித்துக் கொண்டிருந்த சீனிவாசன் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “இயற்கை விவசாயம்ங்கறது, இன்றைய காலகட்டத்துல தவிர்க்கவே முடியாதது. ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டாதான், நோய் நொடியில்லாம வாழ முடியும். விவசாயிகள் எந்த ஒரு காரணத்தைச் சொல்லியும், இயற்கை விவசாயத்தைத் தவிர்க்கக் கூடாது. தங்களுக்கு எதெல்லாம் சாத்தியமோ, அதைப் பயன்படுத்தி வெற்றிகரமா இயற்கை விவசாயம் செய்ய முடியும்’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பாரம்பர்ய நெல் வயலில் சீனிவாசன்
பாரம்பர்ய நெல் வயலில் சீனிவாசன்

சூழலுக்கு ஏற்ப மாறிக்கணும்

“என்னால மாடுகள் வளர்க்க முடியாது. காரணம் அதுக்கான சூழல் இல்ல. மத்த விவசாயிகள்ட்ட இருந்து எரு வாங்கிக்கிட்டு வந்து போடலாம்னா, அதுலயும் சில சிரமங்கள் இருக்கு. மத்த விவசாயிகளோட நிலத்துல வரப்பு வழியா பல கிலோமீட்டர் தூரம் நடந்து போனாதான் என்னோட வயலுக்குப் போக முடியும். டன் கணக்குல எருவைக் கொண்டு போயி வயல்ல போட்டு நிரவிவிட செலவும் நிறைய ஆகும். அப்படிக் கொண்டு போய் அடியுரமா எரு போட்டா, என்னோட மண் வாகுக்கு அதிகமா களை மண்டுது. களை எடுக்கச் செலவு அதிகமாகும். இதனால எருவுக்குப் பதிலா, பசுந்தாள் விதைகள விதைச்சி மடக்கி உழுவுறேன். இதுக்கு கண்கூடான பலன் தெரியுது. அதிக தழைச்சத்து கிடைக்குது. பொதுவா விவசாயிக, நாற்றங்கால்களுக்கு பசுந்தாள் விதைப்பு செய்றதில்ல. ஆனா, நான் நாற்றங்கால், சாகுபடி நிலம் ரெண்டுக்குமே பசுந்தாள் விதைப்பு செய்வேன். நாற்று நடவு செஞ்ச பிறகு, மீன் அமிலம், இஞ்சி, பூண்டு பச்சைமிளகாய் கரைசல் மட்டும்தான் பயன்படுத்துறேன். இந்த ரெண்டு இடுபொருள் களையுமேகூட தனித்தனியா கொடுக்காம சேர்த்தே கொடுத்துடுவேன். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி, நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பலன் கொடுக்குது. இதைத் தவிர, வேற எந்த இடுபொருள்களுமே பயன்படுத்துறதில்லை.

பாரம்பர்ய நெல் ரகங்கள்ல 24 முதல் 30 மூட்டை மகசூல் கிடைக்குது. நவீன ரகங்கள்ல 36 முதல் 42 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்குது. இந்த வருஷம் சம்பா பட்டத்துல 7 ஏக்கர்ல கறுப்புக் கவுனி சாகுபடி செஞ்சிருக்கேன். நடவு செஞ்சு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது. பயிர் நல்லா வாளிப்பா, ஒரு குத்துக்கு 50 தூர்களுக்கு மேல வளர்ந்திருக்கு. தண்டு நல்லா திடகாத்திரமா இருக்கு’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பாரம்பர்ய நெல் ரகங்களுடன்
பாரம்பர்ய நெல் ரகங்களுடன்

“நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்களுக்கு மொத்தம் 8 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர் சவுக்கு பயிர் பண்ணியிருக்கோம். 7 ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிகிட்டு இருக்கோம். இது களியும் மணலும் கலந்த இருமண் பாடு. பள்ளிக்கூடம் படிக்கும்போதே எனக்கு விவசாயத்துல ஈர்ப்பு அதிகமாயிடுச்சு. பள்ளிப் படிப்பு முடிச்சதுமே முழுநேர விவசாயியா மாறிட்டேன். வேலையாள்களை மட்டுமே முழுமையா நம்பியிருக்காம நானும் வயல்ல இறங்கி வேலை பார்ப்பேன்’’ என்று சொன்னவர், இயற்கை விவசாய அனுபவம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

“6 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன் படுத்தி நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். இந்தப் பகுதியில குருத்துப் பூச்சித் தாக்குதல் அதிகமா இருக்கும். கதிர்கள் வந்த பிறகு, புகையான் தாக்குதலைச் சமாளிக்குறதும் பெரும்பாடா இருக்கும். பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த நிறைய செலவாகும். ரசாயன உரங்களுக்கான செலவும் படிப்படியா அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. இந்த நிலையிலதான், ‘இயற்கை விவசாயம் செஞ்சா, பல பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைச்சிடும்’னு நண்பர்கள் சொன்னாங்க. என்னோட பையன் பார்த்திபனும், அவனோட நண்பர் ஒருத்தரும், பசுமை விகடன் படிச்சிட்டு, ‘நிச்சயமா இயற்கை விவசாயத்துல வெற்றிபெற முடியும்’னு நம்பிக்கைக் கொடுத்தாங்க.

எங்க ஊருக்குப் பக்கத்துல செட்டிப்புலம் கிராமத்துல இருக்க முன்னோடி இயற்கை விவசாயி ராமமூர்த்திக்கிட்டே யோசனை கேட்டேன். என்னோட பையனும், பசுமை விகடன் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து நிறைய தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொல்லிக்கிட்டே இருப்பான். உடனடியா மண்ணை வளப்படுத்தியாகணும்னுங்கறதுக்காக, முதல் வருஷம் தக்கைப்பூண்டு, சணப்பு, உளுந்து, மொச்சைக்கொட்டை, பச்சைப்பயறு, எள்ளு எல்லாம் கலந்து ஏக்கருக்கு 25 கிலோ வீதம் விதை தெளிச்சு பல தானிய விதைப்பு செஞ்சோம். 45-ம் நாள்ல அதை மடக்கி உழுதோம். மண்ணுல உள்ள ரசாயன நச்சுத்தன்மைப் போக்குறதுக்கும், மண்ணுல தழைச்சத்துகள் அதிகமா கிடைக்குறதுக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள் கை கொடுத்துச்சு.

கிளைத்திருக்கும் தூர்கள்
கிளைத்திருக்கும் தூர்கள்

முதல் வருஷம் ஒன்றரை ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்களும், அஞ்சரை ஏக்கர்ல நவீன நெல் ரகமும் சாகுபடி செஞ்சேன். நடவுக்குப் பிறகு பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம் எல்லாம் அதிக அளவு கொடுத்தேன். பாரம்பர்ய ரகங்கள்ல ஏக்கருக்கு 18 முதல் 24 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைச்சது. நவீன ரகத்துல 32 முதல் 36 மூட்டை மகசூல் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷங்கள்ல, சம்பா பட்டத்துல நடவுக்கு முன்னாடி... தக்கைப்பூண்டு, சணப்பு விதைகள கலந்து ஏக்கருக்கு 20 கிலோ விதை தெளிச்சு, 20-ம் நாள் 80 லிட்டர் தண்ணி, 800 மி.லி மீன் அமிலம், 4 லிட்டர் இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் கரைசல், 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து தெளிப்போம்.

வரும் முன் காப்போம்

பசுந்தாள் உரம்தானேனு பெரும்பாலான விவசாயிகள், விதைப்பு செஞ்சிட்டு சும்மா இருந்துடுறாங்க. இதுலயும் பூச்சித்தாக்குதல் ஏற்படும். நிலத்தைச் சுத்தியுள்ள செடி, கொடிகள்லயும் பூச்சிகள் தங்கியிருந்து, நெற்பயிர்களைப் பாதிக்கவும் வாய்ப்பு இருக்கு. அதனாலதான் நான், பசுந்தாள் உரப் பயிருக்கு, வரும் முன் காப்போம் நடவடிக்கையா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் கொடுக்குறதை வழக்கமா வச்சிருக்கேன்.

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் கரைசல்

30 முதல் 35 நாள்கள்ல பசுந்தாள் உரப் பயிர்களை மடக்கி உழுது, நாற்று நடவு செஞ்ச பிறகு, ஏற்கெனவே சொன்ன மாதிரி, மீன் அமிலமும், இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் கரைசலும் கலந்து தெளிப்போம். பயிரோட வளர்ச்சிக்கும், பூச்சி நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், இது நல்லாவே கைகொடுக்குது. என்னைப் பொறுத்தவரைக்கும் பூச்சி, நோய்த்தடுப்புக்கு மூலிகைப் பூச்சிவிரட்டித் தயார் செய்றதை விட, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தயார் செஞ்சு பயன்படுத்துறது சுலபமா இருக்கு. இது நல்லா வீரியமா இருக்கு. பயிர் நல்லா செழிப்பா ஆரோக்கியமா விளைஞ்சு, கதிர்கள் நல்லா வாளிப்பா உருவாகுது. அதனால, அடுத்தடுத்த வருஷங்கள்ல படிப்படியா மகசூல் அதிகரிச்சி, கடந்த மூணு வருஷமா பாரம்பர்ய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு 24 - 30 மூட்டையும், நவீன ரகங்கள்ல 36 முதல் 42 மூட்டை மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு.

நவீன ரகத்துல கூடுதலா மகசூல் கிடைச்சாலும் கூட, நெல் கொள்முதல் நிலையங்கள்ல விற்பனை செய்றதுல நிறைய சிரமங்கள் இருக்கு. விலையும் குறைவாகத்தான் கிடைக்குது. இந்த வருஷம் 7 ஏக்கர்லயுமே பாரம்பர்ய நெல் ரகம்தான் சாகுபடி செய்யணும்னு முடிவெடுத்தேன். குறிப்பா, கறுப்புக் கவுனிக்கு வரவேற்பு அதிகமா இருக்கு. சென்னை, திருச்சினு பல ஊர்கள்ல உள்ள விற்பனை யாளர்களும் என்கிட்ட கறுப்புக் கவுனி நெல்லும் அரிசியும் வேணும்னு சொல்லி வச்சிருக்காங்க. அதனாலதான் இந்த வருஷம் ஏழு ஏக்கர்லயும் கறுப்புக் கவுனி சாகுபடி செஞ்சிருக்கேன்’’ என்றவர், விற்பனை பற்றிய தகவல்களைச் சொல்லத் தொடங்கினார்.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு

விற்பனை

“ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 24 மூட்டை (60 கிலோ) நெல் மகசூல் கிடைக்கும். இதுல 50 சதவிகித நெல்லை அப்படியே விற்பனை செஞ்சிடுவேன். கறுப்புக் கவுனி நெல்லுக்கு தேவை இருக்கிறதால, ஒரு கிலோ 45 ரூபாய் விலையில ஒரு மூட்டைக்கு 2,700 ரூபாய். மொத்தம் 12 மூட்டை நெல்லுக்கு 32,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 12 மூட்டை நெல்லை, அரிசியாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யப்போறேன். தோலை மட்டும் நீக்கிட்டு, ‘பாலிஷ்’ செய்யாத அரிசியைத்தான் பலரும் விரும்புறாங்க. அதுல சத்துகள் அதிகம். ஒரு மூட்டை நெல் அரைச்சா, வழக்கத்தை விட கூடுதலா 40 கிலோ அரிசி கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 12 மூட்டை நெல்லுல இருந்து, 480 கிலோ அரிசி கிடைக்கும். இதுல குருணை தவிடு பெருசா சொல்லிக்குற அளவுக்குக் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் மில்லுக்காரங்க எடுத்துக்குவாங்க. ஒரு கிலோ அரிசிக்குக் குறைந்தபட்சம் 120 ரூபாய் வீதம், 480 கிலோ அரிசிக்கு 57,600 ரூபாய் விலை கிடைக்கும். ஆகமொத்தம் ஒரு ஏக்கர் கறுப்புக் கவுனி சாகுபடி மூலம் 90,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, அரிசி அரவை, இதர செலவுகள் 24,000 ரூபாய் போக 66,000 ரூபாய் லாபம் கிடைக்கும். 7 ஏக்கர் கறுப்புக் கவுனிச் சாகுபடி மூலம் 4,62,000 ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என்றவரிடம், வாழ்த்துக்கூறி விடை பெற்றோம்.


தொடர்புக்கு, சீனிவாசன்,

செல்போன்: 96557 23603

சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் கறுப்புக் கவுனி சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், தக்கைப் பூண்டு, சணப்பு விதைகளைக் கலந்து ஏக்கருக்கு 20 கிலோ தூவ வேண்டும். 20-ம் நாள் 80 லிட்டர் தண்ணீரில் 800 மி.லி மீன் அமிலம், 4 லிட்டர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல், ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்படாமல் தடுக்க இது மிகவும் அவசியம். 30 முதல் 35 நாள்களில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, கறுப்புக்கவுனி நாற்றை, குத்துக்குக் குத்து 40 செ.மீ இடைவெளியில் தலா ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். 15 மற்றும் 30-ம் நாளில் 80 லிட்டர் தண்ணீரில் 800 மி.லி மீன் அமிலம், 4 லிட்டர் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல், ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப களையெடுக்க வேண்டும்.

நெல்லுடன்
நெல்லுடன்

நாற்றங்கால் கவனம்

“குறைந்த அளவு விதைநெல் பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் பெரும்பாலும், குறைவான பரப்புல (3 முதல் 5 சென்ட்) தான் நாற்றங்கால் அமைப்பாங்க. ஆனா, நான் நாற்றங்காலுக்கு அதிக இடத்தைப் பயன்படுத்துறேன்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 10 சென்ட்ல நாற்றங்கால் அமைச்சு, தலா 2 கிலோ தக்கைப்பூண்டு, சணப்பு தெளிப்பேன். நல்லா வளர்ந்திருக்கும். 20-ம் நாள் அதை மடக்கி உழுதுட்டு, மண்ணை சமன்படுத்தி, 3 கிலோ விதைநெல் தெளிப்பேன். ஒவ்வொரு விதைநெல்லும், நல்ல இடைவெளியில பரவலா இருந்தா, நாற்றுகளோட வளர்ச்சி சிறப்பா இருக்கும். ஒரு விதைநெல்லும் இன்னொரு விதைநெல்லும் ஒரே இடத்துல சேர்ந்து கிடக்காத அளவுக்குக் கவனமா விதைநெல் தெளிப்போம். 8-ம் நாள் 5 லிட்டர் தண்ணியில 50 மி.லி மீன் அமிலம், 250 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் கலந்து தெளிப்பேன். 15 முதல் 18 நாள்கள்ல நாற்று நல்லா வளர்ந்து நடவுக்குத் தயாராகிடும்’’ என்கிறார் சீனிவாசன்.

மகன் பார்த்திபனுடன்
மகன் பார்த்திபனுடன்

திருப்புமுனை

விவசாயி சீனிவாசனின் மகனும் பசுமை விகடனின் தீவிர வாசகருமான பார்த்திபன், “நான் சவுதி, ஜமைக்கானு வெளிநாடுகள்ல மென்பொருள் நிறுவனங்கள்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னோட நண்பர் கௌரிசங்கர் சென்னையில் ஐ.டி கம்பெனி நடத்திக்கிட்டு இருக்கார். நானும் அவரும் சென்னை அடையாறுல போயிக்கிட்டு இருந்தப்ப ஒரு வீட்டு வாசல்ல, ‘ஆர்கானிக் சூப்பர் மார்க்கெட்’னு போர்டு போட்டிருந்துச்சு. இயற்கை விவசாய விளைபொருள்களை வீட்டு வாசல்லயே வெச்சு விற்பனை செஞ்சாங்க. வாரத்துல ரெண்டே நாள்கள்தான் விற்பனை. அதுவும் நாலு மணிநேரம்தான். எல்லா பொருள்களும் வித்துப்போயிடுது. மக்கள் போட்டிபோட்டு வாங்கிக்கிட்டு போனாங்க. அந்த விளைபொருள்கள் எல்லாம் தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர் பகுதிகள்ல இருந்துதான் விற்பனைக்கு வருதுனு தெரிஞ்சுகிட்டோம்.

‘இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு இந்தளவுக்குப் பிரகாசமான விற்பனை வாய்ப்பு இருக்கு; நம்மகிட்டயும் நிலம் இருக்கு; ஏன் இதுல இறங்கக்கூடாது’னு நினைச்சோம். எங்க ஆசையை அப்பா மூலம் நிறைவேற்றினோம். இங்க உற்பத்தி செய்ற அரிசியை, சென்னையில இருக்க நண்பருக்கு அனுப்பிடுவோம். அவர், அதை நண்பர்கள், உறவினர்களுக்கு விற்பனை செஞ்சிடுவார். இதுமட்டுமல்லாம நான் சவுதியில இருந்தப்ப இங்கயிருந்து, அரிசி கொண்டு போவேன். அங்க என்னோட வேலைபார்க்குறவங்க, சாப்பிட்டுப் பார்த்துட்டு தமிழ்நாட்டுல இருக்க அவங்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு அரிசி விற்பனையை செய்யச் சொன்னாங்க. இப்படியே எங்களுக்காகச் சந்தை வாய்ப்பு விரிவடைஞ்சிக்கிட்டே இருக்கு. நாங்க எவ்வளவு அதிகமா உற்பத்தி செஞ்சாலும் அதை விரும்பி வாங்க ஆளுங்க இருக்காங்க’’ என்றார் உற்சாகமாக.