Published:Updated:

2 ஏக்கர்... 9,03,000 ரூபாய்! மஞ்சளில் மகத்தான லாபம்...!

இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சள் கொத்துடன்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சள் கொத்துடன்

மகசூல்

2 ஏக்கர்... 9,03,000 ரூபாய்! மஞ்சளில் மகத்தான லாபம்...!

மகசூல்

Published:Updated:
இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சள் கொத்துடன்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சள் கொத்துடன்

படிச்சோம் விதைச்சோம்

ங்களகரமான நிகழ்ச்சி என்றால் நினைவுக்கு வருவது மஞ்சள்தான். அந்த மஞ்சளையே தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்ட ஊர் ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப் படும் ஈரோடு. இந்தியாவில் பல இடங்களில் மஞ்சள் விளைவிக்கப்பட்டாலும், ஈரோடு மஞ்சளுக்கெனத் தனி மதிப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட ஈரோடு மஞ்சளை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அதை மதிப்புக்கூட்டி இணையம் (ஆன்லைன்) மூலமாக விற்பனை செய்து அசத்தி வருகிறார் திருமூர்த்தி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரசாயன உரங்களால் வளம் குன்றிப் போயிருந்த அவருடைய 11 ஏக்கர் நிலத்தையும் கடந்த 10 ஆண்டுகளில் வளமான நிலமாக மாற்றி யிருக்கிறார்.

பனி பெய்த ஒரு காலைப் பொழுதில் திருமூர்த்தியை அவரது வீட்டில் சந்தித்தோம். சூடான தேநீர்க் கொடுத்துவிட்டு இதமாகப் பேசத் தொடங்கினார்.

மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சளுடன் திருமூர்த்தி
மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சளுடன் திருமூர்த்தி

“நான் பத்தாவதே முழுசா முடிக்கலைங்க. எனக்குப் படிப்பு மேல ஆர்வம் இல்ல. படிப்பை விட்டுட்டு அம்மா, அப்பாகூடத் தோட்டத்துலதான் இருந்தேன். இடையில ஒருசில தொழில் செஞ்சேன். முழுக்க நஷ்டமாகிடுச்சு. இந்த நிலையில, ஒருதடவை எங்க தோட்டத்துல கரும்புக்கு களைக்கொல்லி அடிச்சப்ப அது, என் கால் விரல்ல இருந்த காயத்துல பட்டு உடல்ரீதியா பெரும் பாதிப்பை ஏற்படுத்திடுச்சு. ஒரு மருந்து உடம்புல பட்டதுக்கே இவ்ளோ பிரச்னை ஆகுதே, அதே மருந்து, பயிர் வழியா போயி உணவா சாப்பிடுறப்ப என்ன ஆகும்னு தோணுச்சு’’ என்றவர் தான் விவசாயியான சூழலை விவரித்தார்.

‘‘அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இயற்கை விவசாயம் மேல மரியாதை வந்துச்சு. நம்மாழ்வார் புத்தகங்கள், பசுமை விகடன்னு படிக்கப் படிக்க இயற்கை விவசாயம் மேல எனக்கு நாட்டம் வந்துச்சு. இதுக்கிடையில 2012-ம் வருஷம் எங்க அப்பா மாரடைப்புல இறந்துட்டாரு. எனக்குக் கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆகிடுச்சு. அதுவரை வரவு செலவுப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. ஏற்கெனவே 10 ஏக்கர் நிலத்தை வித்துட்டோம். இனி வேற எந்தத் தொழிலைச் செஞ்சாலும் இருக்கிற நிலத்தை நாம வித்துடுவோம். அதனால இருக்கிறதை காப்பாத்தி அடுத்த சந்ததிக்காவது கொடுக் கணும்னு வைராக்கியத்தோடு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

விளைந்த மஞ்சள் கொத்துடன்
விளைந்த மஞ்சள் கொத்துடன்


முதல் முயற்சியில் இரண்டு அனுபவங்கள்

உறவினர் ஒருத்தர்கிட்ட இருந்து விதைக் குச்சியை வாங்கிட்டு வந்து 11 ஏக்கர் முழுக்க மரவள்ளிக்கிழங்கு போட்டேன். என்னோட நேரமோ என்னவோ... வரலாறு காணாத விலை. ஒரு டன்னுக்கு 14,500 ரூபாய் கிடைச்சது. நல்ல மகசூல். ஏக்கருக்கு 15 டன் மரவள்ளி கிடைச்சது. ஆனா, அதேநேரத்துல மரவள்ளிக்கு ஊடுபயிரா வெங்காயம் போட்டிருந்தேன். ஒரு கிலோ விதை வெங்காயத்தை 80 ரூபாய்க்கு வாங்கி விதைச்சு, அறுவடை சமயத்துல ஒரு கிலோ வெங்காயம் 14 ரூபாய்க்குத்தான் போச்சு. என்னோட முதல் முயற்சியிலயே இப்படி வித்தியாசமான அனுபவங்கள்’’ என்றவர் மஞ்சள் மதிப்புக்கூட்டல் பற்றிப் பேசினார்.

‘‘அடுத்த வருஷம் 40 சென்ட்ல மஞ்சள் போட்டேன். 10 குவிண்டால் மகசூல் கிடைச்சது. அப்புறம் ஒரு ஏக்கர் அதிகப் படுத்தி, விதை மஞ்சளை எடுத்து வெச்சிட்டு மிச்சத்தைத் தூளாக்கி விற்பனை செஞ்சேன். நல்ல லாபம் கிடைச்சது. அந்தத் தைரியத்துல அடுத்த வருஷத்துலயே 2 ஏக்கர்ல மஞ்சள் பயிரிட்டேன். மார்க்கெட்ல என் மஞ்சளை யாருமே எடுத்துக்கல. கடைசியில ஈரோட்டுல இருக்க மசாலா கம்பெனிக்கு 30 குவிண்டால் மஞ்சளைக் கொடுத்தேன். அந்தப் பணம் கைக்கு வரவே ஒரு மாசம் ஆகிடுச்சு. அப்போதான் இனிமேல் நாமளே மஞ்சளை விற்பனை பண்ணனும்னு மதிப்புக் கூட்டல்ல இறங்குனேன்.

மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சள் பொருள்கள், சோப்பு வகைகளுடன்
மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சள் பொருள்கள், சோப்பு வகைகளுடன்மஞ்சள் மதிப்புக்கூட்டல்

மஞ்சள்ல இருந்து மஞ்சள் தூள், மஞ்சள் சோப், பெப்பர் மஞ்சள், குங்குமம், ஹேர் டை, மஞ்சள் மால்ட், மஞ்சள் ஊறுகாய்னு பலதையும் செஞ்சேன். ‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸப்’ல என்னோட தயாரிப்புகளைப் பார்த்துட்டு நிறைய பேர் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மாசம் 400 கிலோ மஞ்சள் தூள் விக்கிறேன். அதுமட்டுமல்லாம தேங்காய் எண்ணெய், மூலிகை தேங்காய் எண்ணெய், குப்பைமேனி சோப், வேப்பிலை சோப், கற்றாலை சோப், பாத்திரம் விளக்குற சோப், குங்குமம்னு தயாரிச்சி விற்பனை செய்றேன்’’ என்றவர் மதிப்புக்கூட்டிய பொருள்களுக்கான சந்தை வாய்ப்பை விவரித்தார்.

மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சள் பொருள்கள், சோப்பு வகைகள்
மதிப்புக்கூட்டப்பட்ட மஞ்சள் பொருள்கள், சோப்பு வகைகள்

ஆன்லைன் மூலமாக ஆர்டர்

‘‘இயற்கை விவசாயம் செஞ்சு அப்படியே விற்பனை பண்ணா பெருசா விலை கிடைக்காது. அதை மதிப்புக்கூட்டி வித்தா தான் கட்டுப்படியாகும். அப்பா இறந்த பிறகு, நான் விவசாயம் செய்யமாட்டேன். நிலத்தை வித்துருவேன்னு நினைச்சாங்க. ஆனா, நான் தீவிரமா விவசாயம் செஞ்சேன். 2 ஏக்கர் மஞ்சள்ல இருந்து வர்ற வருமானத்தை வச்சித்தான் மிச்சமிருக்க 9 ஏக்கர்லயும் விவசாயம் செய்றேன். என்னோட பொருள் களைக் ‘கூரியர்’ மூலமா இந்தியா முழுக்க இருந்து வாங்குறாங்க. குறிப்பா கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை, அஸ்ஸாம்ல வாடிக்கையாளர்கள் இருக்காங்க. கிட்டத் தட்ட 3,000 பேர் என்கிட்ட தொடர்புல இருக்காங்க. கொரோனாவுக்குப் பிறகு, மஞ்சளோட தேவை அதிகமாகியிருக்கு.

சென்னையில் இருக்கப் பலரும் கிலோ கணக்குல என்கிட்ட மஞ்சள் வாங்குறாங்க. வரவேற்பு இருக்குன்னு ஒருபோதும் இயற்கை இல்லாத பொருளை மக்களுக்குக் கொடுத்துடக் கூடாது. எப்போதும் சமரசம் ஆகக்கூடாதுங் கிறதுல உறுதியா இருக்கேன். ஒரு பச்சக் குழந்தைக்குக்கூட என்னோட மஞ்சளை கொடுக்குறாங்க. என் மேல உள்ள நம்பிக்கையில தான் அதைச் செய்யுறாங்க. அந்த நம்பிக்கையை நான் பொய்யாக்குனேன்னா அது பாவ மில்லையா!” என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

செலவு, வரவுக் கணக்கு
செலவு, வரவுக் கணக்கு

நஷ்டத்தைத் தவிர்க்கும் மதிப்புக்கூட்டல்

‘‘2 ஏக்கருக்கு 40 குவிண்டால் கிடைக்குது. இன்னைய தேதியில் ஒரு குவிண்டால் மஞ்சள் சராசரியா 7,500 ரூபாய் விலை போகுது. 40 குவிண்டால் மஞ்சளுக்கு 3,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 2 ஏக்கர்ல மஞ்சளைப் போட்டு 4,17,000 ரூபாய் செலவு பண்ணி மஞ்சளை விளைவிச்சிட்டு, அதை அப்படியே வித்தா 3,00,000 ரூபாய் தான் கிடைக்கும். நிலத்துல போட்ட அசலைவிட ஒரு லட்சம் ரூபாய் நமக்கு நஷ்டம்தான். அதனாலதான் என்னோட மஞ்சளை எந்தெந்த வகையில் மதிப்புக்கூட்டி விக்க முடியுமோ அதைச் செஞ்சிக்கிட்டு இருக்கேன். இப்ப 4,000 கிலோ மஞ்சளை பொடியா மதிப்புக் கூட்டும்போது 10 சதவிகிதம் கழிஞ்சிடும். அதுபோக 3,600 கிலோ பொடி கிடைக்கும். ஒரு கிலோ பொடி 400 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். அந்த வகையில 3,600 கிலோவுக்கு 14,40,000 ரூபாய் வருமான மாக் கிடைக்குது.

மஞ்சள் விளைவதற்கான மொத்த செலவு ஏக்கருக்கு 2,08,500 ரூபாய். ஆக 2 ஏக்கருக்கு 4,17,000 ரூபாய். ஒரு வேலை யாளை மாச சம்பளத்துக்கு வெச்சிருக்கோம். அவருக்கு மாசம் 10,000 ரூபாய் சம்பளம். அந்த வகையில வருஷத்துக்கு 1,20,000 ரூபாய். ரெண்டையும் சேர்த்தா மொத்த செலவு 5,37,000 ரூபாய். மொத்த வருமான மான 14,40,000 ரூபாயில் செலவைக் கழிச்சுட்டா 9,03,000 ரூபாய் லாபமா கையில நிற்கும்’’ என்றவர் மகிழ்ச்சி பொங்க விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, திருமூர்த்தி, செல்போன்: 89034 69996

இப்படித்தான் இயற்கை மஞ்சள் சாகுபடி

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்துத் திருமூர்த்தி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

நடவு முறை

களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வரும். அக்னி நட்சத்திரம் முடிந்து ஜூன் மாதம் ஆரம்பித்தவுடன் நடவு செய்யலாம். நடவுக்கு முன்பாகப் பல தானியங்களை விதைக்க வேண்டும். பயிர் வளர்ந்து 45 நாள்கள் ஆனதும் மடக்கி உழவு செய்ய வேண்டும். மீண்டும் ஒருமுறை பலதானியங்களை விதைத்து, 45-ம் நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும். அதன் பிறகு நிலத்தைச் சமன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 2 மூட்டை வேப்பம் பிண்ணாக்கை நிலத்தில் இட வேண்டும். அடுத்து ஒன்றரை அடி இடைவெளியில் 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திக்கு நடுவில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்


மஞ்சளை நடவு செய்வதற்கு முன்பாக நிலத்தை, நீர்ப்பாய்ச்சி ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு, 50 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவை கலந்துகொள்ள வேண்டும். அதில் விதை மஞ்சளை நனைத்து, உலர வைத்து, பாத்தியின் இரண்டு பக்கமும் முக்கால் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 800 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். நடவுக்குப் பிறகு, முளைப்பு வரும் வரை நிலத்தைக் காயவிடாமல் பாசனம் செய்துகொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் முளைத்த பிறகு, வாரம் ஒருமுறை பாசனம் செய்தால் போதும். அக்டோபர் - டிசம்பர் வரை மழைக்காலம் என்பதால் அதிக தண்ணீர் கொடுக்கத் தேவையிருக்காது.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்


25 முதல் 30 நாள்களுக்குள் களையெடுக்க வேண்டும். பிறகு, பயிர் ஊக்கத்துக்காக, ஏக்கருக்கு 30 லிட்டர் பஞ்சகவ்யாவைத் தண்ணீரில் கலந்து சொட்டுநீர் மூலம் மாதம் 2 முறை கொடுக்க வேண்டும். இப்படி முதல் 3 மாதம் பஞ்சகவ்யா கொடுத்தால் செடி நன்றாக வளரும். மாதம் ஒருமுறை ‘வேஸ்ட் டி கம்போஸர்’ கொடுக்கலாம். செடியில் ஏதாவது பூச்சித்தாக்குதல் தென்பட்டால் ஒரு டேங்குக்கு 100 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்கலாம்.

60 நாளுக்கு மேல் ஏக்கருக்கு 2 டன் அளவுக்கு ஆட்டு எரு, 2 மூட்டை வேப்பம் பிண்ணாக்கைப் போட்டு, பாத்தியை லேசாக அணைக்க வேண்டும். பயிர் வளரும் 10 மாதத்தில் 5 முறை களை எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 20 குவிண்டால் மஞ்சள் மகசூல் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism