நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

மாதம் ரூ.2 லட்சம் கோதுமைப் புல் ஜூஸ்! அமேசானில் விற்பனை...

கோதுமைப் புல்லுக்குத் தண்ணீர் பாய்ச்சும் ராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
கோதுமைப் புல்லுக்குத் தண்ணீர் பாய்ச்சும் ராஜ்குமார்

முயற்சி

ரு காலத்தில் விவசாயத்தை விட்டு வெளியேறிய இளைஞர்கள் இன்றைக்கு ஆர்வமாக விவசாயத்தில் கால் பதிக்கிறார்கள். அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், கோதுமைப் புல் வளர்த்து, அதை அரைத்துப் பொடியாக்கி அமேசான் மூலமாக விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலை அறிந்து அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். சின்னாளபட்டியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஊத்துப்பட்டி. கீற்று வேயப்பட்ட கூரைக்குக் கீழே கோதுமைப் புற்களுக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த ராஜ்குமார் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

சூப்பர் ஃபுட்...

‘‘உலகநாடுகளோட ‘சூப்பர் ஃபுட்’ பட்டியல்ல கோதுமைப் புல் ஜுஸையும் சேர்த்திருக்காங்க. இதைப் ‘பச்சை ரத்தம்’னு சொல்றாங்க. மனுச உடம்புக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவுக்குக் கொடுக்குறதோடு, உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள் அதிகம் இருக்குறது கோதுமை ஜுஸ். அதனாலதான் உலகளவுல இதுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகிட்டு வருது’’ என்றவர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பு படிச்சேன். எங்க தோட்டத்துல விளையுற காய்களோட மத்த சந்தைகள்லயும் காய்கறிகள் வாங்கிக் கேரளாவுக்கு அனுப்பிட்டு இருந்தேன். அந்த நேரத்துல கேரளாவுல இருந்த நண்பர் ஒருத்தர், ‘உன்னை மாதிரி ‘அக்ரி’ படிச்சவங்களுக்கு வெளிநாட்டுல கைநிறைய சம்பளத்தோட வேலை கிடைக்குது. போறியா’னு கேட்டாரு. எங்க குடும்பம் பொருளாதார ரீதியில ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்துச்சு. அதனால நானும் அவர்கிட்ட சரின்னு சொல்லி, வெளிநாட்டு வேலைக்குப் போயிட்டேன்.

தண்ணீர் பாய்ச்சும் ராஜ்குமார்
தண்ணீர் பாய்ச்சும் ராஜ்குமார்

வெறுத்துப்போன வெளிநாட்டு வேலை

துபாய், கத்தார், ஒமன் நாடுகள்ல வேலைப் பார்த்தேன். வீட்டுத்தோட்டம் அமைச்சு கொடுக்குறது, பசுமைக்குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்குறதுனு பல வேலைகளைப் பார்த்தேன். அதோட பாலைவனத்துல காய்கறி விளைய வைக்குற கஷ்டமான வேலையையும் பார்த்தேன். கைநிறைய சம்பளம் கிடைச்சது. அதுலயே 8 வருஷம் ஓடிப்போச்சு. ஒரு கட்டத்துல மனசுக்குள்ள வெறுப்பு உண்டாச்சு. இந்த வருமானத்தை நம்ம ஊர்லயே சம்பாதிக்கலாம்னு தோணுச்சு. உடனே வேலையைத் தூக்கிப் போட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன்’’ என்றவர் தான் கோதுமைப் புல் சாகுபடிக்கு மாறிய கதையைச் சொல்லத் தொடங்கினார்.

கோதுமைப் புல் சாகுபடி
கோதுமைப் புல் சாகுபடி

கோதுமைப் புல் ஜுஸ்

‘‘இங்க வந்தபிறகு, ‘விவசாயம் செய்யப் போறேன்’னு சொன்னதும் வீட்டுல கொலைவெறியாகிட்டாங்க. நண்பர்கள், சொந்தக்காரங்கள்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அத எதையும் கண்டுக்காம என்னோட முடிவுல தெளிவா இருந்தேன். விவசாயம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஏற்கெனவே பண்ணுன காய்கறி வியாபாரம் பண்ணி கொஞ்சம் காசு சேர்த்துக்கிட்டு பிறகு விவசாயத்துல இறங்கலாம்னு முடிவு பண்ணுனேன். ஆனா என்னோட கெட்ட நேரம். வியாபாரத்துல பெரிய நஷ்டம் ஆகிப்போச்சு. வெளியில தலைகாட்ட முடியல.

இதையடுத்து திண்டுக்கல்லை விட்டு வெளியேறி வடமாநிலங்களுக்குப் போயிட்டேன். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்க மக்கள் கோதுமை ஜுஸ் குடிக்குறதைப் பார்த்தேன். அது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அவங்ககிட்ட விசாரிச்சேன். நம்ம ஊர்ல டீ குடிக்குற மாதிரி அங்க கோதுமைப் புல் ஜூஸ் குடிக்குறது வழக்கம்னு தெரிஞ்சுகிட்டேன். உடனே அதபத்தி தகவலைத் தேட ஆரம்பிச்சேன். அது உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லதுன்னு தெரிஞ்சது. அதையே நாம தொழிலா செய்யலாம்னு முடிவு பண்ணுனேன்.

கோதுமைப் புல் சாகுபடி
கோதுமைப் புல் சாகுபடி

2 கிலோ கோதுமை விதையோட திண்டுக்கல் திரும்பினேன். கோதுமைப் புல் வளர்த்து, அதைப் பொடி பண்ணி பாட்டில்ல அடைச்சு விக்கப்போறோன்னு சொன்னதும் மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஆதரவா என்னோட தம்பி சரவணக்குமார் மட்டும்தான் இருந்தார். எதைப் பத்தியும் யோசிக்காம கோதுமைப் புல் சாகுபடி செய்றதுல முனைப்பா இறங்கிட்டேன். அதுக்கு முன்னாடி அதைச் சாகுபடி பண்ற முறைகளைப் பத்தி பல பேர்கிட்ட ஆலோசனை கேட்டுகிட்டேன். ஆன்லைன்லயும் படிச்சுகிட்டேன்.

விதைச்ச 7-ம் நாள் புல் நல்லா வளர்ந்திடும். 8-ம் நாள் அறுவடை பண்ணிடணும். ஒருநாள் தாமதமா அறுவடை பண்ணுனாலும் வீணாகிடும். ஒரு கிலோ கோதுமையை விதைச்சா 3 கிலோ புல் கிடைக்கும்.


தோல்வியில இருந்து கிடைச்ச பாடம்

ஒரு தெளிவு கிடைச்ச பிறகு, துணிஞ்சு களத்துல இறங்கிட்டேன். எங்களுக்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை உழுது பாத்தி பாத்தியாகத் தயார் பண்ணுனேன். பாத்திகள் மேல வெயில் படாம இருக்க மேலே கீற்றுக் கூரையைப் போட்டுகிட்டேன். முதல் தடவை மேட்டுப்பாத்தி அமைச்சு, கோதுமை விதைச்சேன். சரியா வளரல. ரெண்டு, மூணு தடவை முயற்சி பண்ணியும் சரியான புல் கிடைக்கல. ஒவ்வொரு தடவையும் எதனால முளைக்கலன்னு யோசிச்சு, நான் பண்ணுன தவறுகளைக் கண்டுபிடிச்சி அடுத்த தடவை அந்தத் தவறுகள் இல்லாம விதைச்சேன். ஒரு கட்டத்துல நல்லா புல் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு.

விதைச்ச 7-ம் நாள் புல் நல்லா வளர்ந்திடும். 8-ம் நாள் அறுவடை பண்ணிடணும். ஒருநாள் தாமதமா அறுவடை பண்ணுனாலும் வீணாகிடும். ஒரு கிலோ கோதுமையை விதைச்சா 3 கிலோ புல் கிடைக்கும். அதை வெட்டி, காய வெச்சு அரைச்சு பொடியாக்கினா 100 முதல் 150 கிராம் பொடி கிடைக்கும். மறுபடியும் அந்தப் பொடியைக் காய வெச்சு பாட்டில்ல அடைச்சு விற்பனைக்கு அனுப்புறேன். பெரும்பாலும் ஆன்லைன்ல இதுதொடர்பான விவரங்களைப் பார்த்து அறியக்கூடிய படித்த மக்கள்தான் இந்தப் பொடியை விரும்பி வாங்கித் தொடர்ச்சியாகப் பயன்படுத்திட்டு வர்றாங்க. நானும் இந்தக் கோதுமைப் புல் ஜூஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு வர்றேன். இத ‘க்ரீன் டீ’ மாதிரியும் பயன்படுத்தலாம். அதுக்கு ஏற்ற வடிவத்துல பொடியை ‘பேக்’ பண்ண திட்டம் வச்சிருக்கேன்’’ என்றவர் வருமானம்பற்றிப் பேசினார்.

கோதுமைப் புல் பொடி
கோதுமைப் புல் பொடி


கிரீன் டீ மாதிரி பயன்படுத்தலாம்

‘‘100 கிராம் பாட்டில் 349 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். வெளியூர்ல இருந்து கேட்குறவங்களுக்கு பார்சல் மூலமா அனுப்பி வைக்கிறேன். தினமும் 30 முதல் 40 பாட்டில் விற்பனையாகுது. சராசரியா 30 பாட்டில் வீதம் 10,470 ரூபாய் வருமானம் கிடைக்கும். சமயத்துல சில நாள் விற்பனையாகமலும் இருக்கும். அந்த வகையில மாசக் கணக்குப் பார்த்தா 20 நாளுக்கு 2,09,400 ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 70,000 ரூபாய் ஆகிடும். அதுபோக 1,39,400 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘க்ரீன் டீ மாதிரி இதைப் பயன்படுத்தலாம். அதுக்கு ஏற்ற வடிவத்துல பொடியை ‘பேக்’ பண்ற எண்ணமும் இருக்கு. அதுக்கு பிறகு விற்பனை இன்னும் அதிகமாகும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு, ராஜ்குமார்,

செல்போன்: 97878 87288

கோதுமைப் புல் சாகுபடி செய்யும் முறை

கோதுமைப் புல் சாகுபடி தொடர்பாக ராஜ்குமார் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பாடமாக இங்கே...

சாகுபடி நிலத்தில் நேரடியாகச் சூரிய ஒளி படக் கூடாது. அதற்காகக் கீற்றுக் கூரை அல்லது நிழல் வலை அமைத்துக்கொள்ள வேண்டும். மண்ணை நன்றாகக் கொத்தி விட வேண்டும். அதன் பிறகு மண்புழு உரம் 50 சதவிகிதம், தென்னை நார் கழிவு உரம் 10 சதவிகிதம், தொழுவுரம் 40 சதவிகிதம் கலந்த கலவையை மண்ணில் கொட்டி கொத்தி விட வேண்டும். மண் பொலபொலப்பானவுடன் 4 அடி அகலம், தேவைக்கு ஏற்ற நீளம், ஓர் அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்தியை மட்டப்படுத்தி அதன் பிறகு விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன்பு கோதுமை விதையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு கோதுமை விதை மீதுள்ள கடினமான தோல் உரிந்துவிடும். அதன் பிறகு மேட்டுப்பாத்தியில் விதைக்க வேண்டும்.

கோதுமைப் புல்
கோதுமைப் புல்

நிலத்தில் விதையை விதைப்பது போலவே விதைக்கலாம். இடைவெளி இல்லாமல் சீராக விதைக்க வேண்டும். அதன் பிறகு பூவாளி மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதிக பாத்திகளில் நீர் பாய்ச்சப் பூவாளி தூவான் வாங்கிக் குழாயில் பொருத்தித் தெளிக்கலாம். முதல் 3 நாள்கள் காலை, மாலை இருவேளையும் பூவாளி மூலம்தான் தெளிக்க வேண்டும். 3 நாள்களுக்கு மேல் பயிர் முளைக்கத் தொடங்கும். அதன் பிறகு தினமும் ஒருவேளை தெளித்தால் போதும். 8-ம் நாள் பயிர் 15 செ.மீ உயரம் இருக்கும். அப்போது அறுவடை செய்து விட வேண்டும். அதன் பிறகு அறுவடை செய்தால் புல்லில் உள்ள சத்துகள் குறையும்.

அறுவடை செய்த புல்லை 3 நாள்கள் நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை அரைத்துப் பொடியாக்க வேண்டும்.

ஒரு கிலோ விதையை விதைத்தால் 3 கிலோ புல் கிடைக்கும். அதனை நிழலில் காய வைத்தபிறகு, ஒரு கிலோ எடையில் கிடைக்கும். அதனை அரைத்துப் பொடியாக்கும்போது 200 கிராம் பொடி கிடைக்கும்.

கோதுமைப் புல்
கோதுமைப் புல்

தண்ணீர் அதிகமாகக் கொடுத்தால் பூஞ்சண தாக்குதல் ஏற்படும். விதைகள் பூஞ்சண தாக்குதலுக்கு ஆளாகி வெள்ளை வெள்ளையாகத் திட்டு திட்டாகத் தெரியும். அதேபோலச் சில நேரங்களில் வேரழுகல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும். இதைச் சமாளிக்கத் தண்ணீரை முறையாகக் கொடுக்க வேண்டும். இதை உடனே புரிந்துகொள்ள முடியாது. இரண்டு, மூன்று முறை சாகுபடி செய்வதன் மூலம் இதில் தெளிவு பெறலாம்.

அமேசானில் விற்பனை

‘‘கோதுமைப் புல் பொடி விற்பனை தொடர்பா எல்லா வேலைகளையும் என் தம்பி பார்த்துக்குறார். கோதுமைப் புல் பொடியை விற்பனை செய்றதுக்கு உணவு பாதுகாப்பு துறையில (எஃப்.எஸ்.எஸ்.ஐ) உரிய சான்றிதழ் வாங்கியிருக்கேன். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணையதளங்கள்ல என்னோட கோதுமைப் புல் பொடி பாட்டில்கள விற்பனை செய்றேன்’’ என்கிறார் ராஜ்குமார்.