Published:Updated:

38 பன்றிகள்... ஒன்றரை மாதம் ₹80,000 வெண்பன்றி வளர்ப்பில் வெற்றிகரமான லாபம்!

வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா
பிரீமியம் ஸ்டோரி
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா

கால்நடை

38 பன்றிகள்... ஒன்றரை மாதம் ₹80,000 வெண்பன்றி வளர்ப்பில் வெற்றிகரமான லாபம்!

கால்நடை

Published:Updated:
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா
பிரீமியம் ஸ்டோரி
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா

கால்நடை வளர்ப்பில் நிச்சய லாபம் கிடைப்பதால், கால்நடை வளர்ப்புத் தொழில் அதிகமாகக் கவனம் ஈர்த்து வருகிறது. அதே நேரம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் உள்ள ஆர்வம், பன்றி வளர்ப்பில் இல்லை. இந்தச் சூழலில், பட்டதாரி பெண் சுஜாதா, பல்வேறு சவால்களைக் கடந்து வெண்பன்றி வளர்ப்பில் சாதித்து வருகிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள பொகலூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரது பண்ணை. ஒரு காலை வேளையில் பண்ணைக்குச் சென்ற நம்மை, இன்முகத்துடன் வரவேற்றவர், பண்ணையை முழுமையாகச் சுற்றிக்காட்டினார். எல்லாப் பன்றிகளும் சரியாக உணவு உட்கொண்டிருப்பதை உறுதிசெய்துவிட்டு வந்தவர், பன்றி வளர்ப்பில் நுழைந்த கதையைப் பேசத் தொடங்கினார்.

வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா

“இந்த ஊர்லேருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலிருக்கிற பேரணாம்பட்டுங்கிற கிராமம்தான் என் பூர்வீகம். விவசாயக் குடும்பம். பி.சி.ஏ முடிச்சதும் எனக்குக் கல்யாணமாச்சு. உடனே சென்னையில குடியேறினோம். என் கணவருக்கு விவசாயத் துல ஆர்வம். பக்கத்து கிராமத்துல எங்களுக்குச் சொந்தமா 2 ஏக்கர் நிலமிருந்துச்சு. அதுல 10 வருஷத்துக்கு முன்னாடி மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சார் கணவர். அதுக்காக வேலை யிலிருந்து விலகினார். பால் விற்பனைக்காக 28 கறவை மாடுகள் வெச்சிருந்தோம். அடுத்த ஒரு வருஷத்துலயே அவர் மறுபடியும் வேலைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. அதனால, அவரால பண்ணையை சரியா கவனிச்சுக்க முடியாம போகவே, எல்லா மாடுகளையும் வித்துட்டு பண்ணையை மூடிட்டோம்.

மறுபடியும் சென்னையில வாழ்க்கை முறைக்கு மாறினோம். அவர் ஓரளவுக்கு நல்லாவே சம்பாதிச்சார். ஆனா, ஏதோ ஒரு வெறுமை எங்களுக்குள்ளாற இருந்துகிட்டே இருந்துச்சு. கிராமத்தை நோக்கிப் போகணும்ங்கிற எண்ணத்துல நிறைய தேடல்ல ஈடுபட்டோம். பன்றி வளர்ப்புப் பத்தித் தெரிஞ்சுகிட்டு இதுல முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு நினைச்சோம். ‘படிச்ச நீங்க ரெண்டு பேரும் பன்றி வளர்க்கப் போறீங்களா? இந்தத் தொழில்ல இறங்கினா உங்கள யாருமே மதிக்க மாட்டாங்க...’ன்னு குடும்பத்தினர், நண்பர்கள் வட்டாரத்துல எதிர்ப்பு கிளம்புச்சு. சரியான தொழிலை முறையா செய்யுறதுக்குத் தயங்கக் கூடாதுனு நாங்க உறுதியா இருந்தோம்” என்ற சுஜாதா, பேசிக்கொண்டே, ஒரு கூண்டுக்குள் நுழைந்தார். அதிலிருந்த பன்றிக் குட்டிகள், சுஜாதாவைச் சூழ்ந்துகொண்டு கூச்சலிட்டு விளையாடின. அவற்றைக் கொஞ்சியபடியே, அடுத்தடுத்த தோல்விகளிலிருந்து பாடம் கற்று, பன்றி வளர்ப்பில் வெற்றி பெற்றதை விவரித்தார்.

வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா

“இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கிற 2 ஏக்கர் நிலத்தை 2017-ம் வருஷம், குத்தகைக்கு வாங்கி, ஓலைக்கொட்டகை அமைச்சோம். அப்போ சில பன்றிப் பண்ணைகளைப் பார்வையிட்டோம். அங்கெல்லாம், இந்தத் தொழில்ல தோல்வி ஏற்படுறத்துக்கான காரணங்களைச் சொல்லாம, ஆசை வார்த்தைகளையே அதிகமா சொன்னாங்க. அதனால, அதிக நம்பிக்கையில பயிற்சி எடுத்துக் காமலேயே பன்றி வளர்ப்புல இறங்கினோம். பன்றி வளர்ப்புல புதுசா இறங்கிறவங்க, இறைச்சிக் காகக் குட்டிகளை வாங்கி வளர்க்கிற முறையைத்தான் முதல்ல தேர்ந்தெடுக்கணும். இது தெரியாம, 20 பெண் பன்றி களுடன் எடுத்ததுமே இனப் பெருக்க முறையை ஆரம்பிச் சுட்டோம். அதனால, சில சிக்கல்கள் ஏற்பட்டதால, முதல் ‘பேட்ஜ்’ல வளர்த்த எல்லாப் பன்றிகளையும் வித்துட்டு, புதுசா குட்டிகளை வாங்கினோம். அப்பவும், விவரம் தெரியாம, புதுப் பிரச்னையையும் சேர்த்தே விலைகொடுத்து வாங்கினோம்.

இனப்பெருக்கத்துக்காகப் பன்றிகளை வளர்க்கிறப்போ, அதே முறையில பன்றிகளை வளர்க்கிறவங்க கிட்டேருந்து புதுக்குட்டிகளை வாங்குறது தான் நல்லது. இது தெரியாம, இறைச்சிக்காக வளர்க்கிறவங்க கிட்டேருந்து பெண் பன்றிகளை வாங்கி வளர்த்தோம். உணவகக் கழிவுகளைச் சாப்பிட்டு வளர்ந்த அந்தப் பன்றிகளுக்கு, நாங்க கொடுத்த அடர்தீவனம் ஒத்துக்காம, கருக்கலைப்பு அதிகமா ஏற்பட்டுச்சு. உடனடியா, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அணுகினோம். அங்கிருக்கிற அதிகாரிகள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு, பிரச்னைக்கான காரணத்தை விளக்கினாங்க. ‘ஒவ்வொரு முறையும் இனச் சேர்க்கைக்கு விடுறதுக்கு முன்னாடி, ஆண், பெண் பன்றி களுக்கு ரத்தப் பரிசோதனை செய்றது நல்லது. நோய் இருந்தா கண்டுபிடிச்சிடலாம்’னு பயனுள்ள ஆலோசனையையும் சொன்னாங்க.

வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா

அதுக்கப்புறமா, அந்த ஆராய்ச்சி நிலையத்துல பன்றி வளர்ப்புக்கான ஒரு மாத பயிற்சி வகுப்புல கலந்து கிட்டேன். பற்களை நீக்குறது, தடுப்பூசி போடுறது, அத்தியாவசிய சிகிச்சைகளைச் செய்றது, பிரசவம் பார்க்கிறதுனு பன்றிகளைத் தனியாளா வளர்க்கிற அனுபவங் களைக் கத்துக் கொடுத்தாங்க. அதன்படி, நாங்க செஞ்ச நிறைய தவறுகளையும் சரிப்படுத்திக்கிட் டோம். உரிய சிகிச்சைகள் கொடுத்து, கருக்கலைப்பு ஏற்படாத வகையில பன்றிகளோட உடல் நிலையை வலுப்படுத்தினோம்.

எங்க பண்ணையில கிடைக்கிற தரமான பெண் பன்றிகளை மட்டுமே இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தி, புதுக்குட்டிகளை உருவாக்கினோம். மாசம் 50 குட்டிகளுக்கும் அதிகமா விற்பனை பண்ற அளவுக்குத் தொழில் நல்லபடியா போயிட்டிருந்துச்சு” என்றவர், கடந்த ஆண்டில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தைக் கலக்கத் துடன் பகிர்ந்துகொண்டார்.

“விவசாயத்துலயும் கால்நடை வளர்ப்புலயும் நம்முடைய நேரடி கவனிப்பு எப்பவும் இருக்கணும். அதுக்காகவே இந்தப் பண்ணையிலேயே எளிமையான முறையில வீடு கட்டினோம். பன்றி வளர்ப்பை நானே கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். இந்த நிலையில, கடந்த டிசம்பர் மாசத்துல ஒருநாள் உயர் மின்னழுத்த கம்பிகள், குறைஞ்ச மின்திறன்கொண்ட கம்பிகளோட உரசினதால இந்தச் சுற்றுவட்டாரத்துல பல இடங்கள்லயும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. பண்ணைக்குள்ளாற இருந்த மீட்டர் பாக்ஸ்ல மின்கசிவு ஏற்பட்டு, கண்ணிமைக்கிற நேரத்துல பண்ணை முழுக்கவே மளமளனு தீ பரவிடுச்சு.

வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா
வெண்பன்றிகள் பண்ணையில் சுஜாதா

மொத்தமிருந்த 400-க்கும் அதிகமான பன்றிகள்ல 150 உருப்படிகளைத்தான் எங்களால காப்பாத்த முடிஞ்சது. உயிர் பிழைச்ச பன்றிகளுக்குத் தீக்காயம் அதிகமா இருந்துச்சு. அதுக்கப்புறமாதான், மின் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறதால பண்ணைக்குள்ள மீட்டர் பாக்ஸ் பொருத்தக் கூடாதுனு தெரிஞ்சுகிட்டோம். மஞ்சள்தூளை வேப்பெண்ணெய்யுடன் கலந்து தடவிய தோடு, சில மருந்துகளைக் கொடுத்தும் பன்றிகளுக்கு ஏற்பட்ட காயத்தைச் சரிப்படுத் தினோம். பன்றி வளர்ப்புக்கு காப்பீடு வசதி இல்லை. காப்பீடு வசதி இருந்திருந்தா நஷ்டம் குறைஞ்சிருக்கும். அந்தத் தீ விபத்தால லட்சக் கணக்குல நஷ்டம் ஏற்பட்ட நிலையில, மேற்கொண்டு இந்தத் தொழிலைத் தொடரணு மான்னு நிறைய கேள்விகள் எனக்குள் உருவாச்சு. எவ்வித முன்அனுபவமும் இல்லாம, படிப்பினைகள் மூலமா பன்றி வளர்ப்புல போதிய அனுபவத்தைக் கத்துக் கிட்டோம். இதனால, கொஞ்சம் கூடுதலா மெனக்கெட்டு உழைச்சா சீக்கிரமே இழப்பை சரிசெஞ்சு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிடலாம்னு உறுதியா நம்பினேன்.

வெண்பன்றிகள்
வெண்பன்றிகள்


என் கணவரும் எனக்குப் பக்கபலமா இருந்தார். அந்த நம்பிக்கையில, சோர்ந்துபோய் உட்கார்ந்திடாம, சுறுசுறுப்பா வேலைகளை ஆரம்பிச்சேன். பண்ணையில மறுபடியும் ஓலைக்கொட்டகையைப் போடாம, காத்தோட்ட வசதியோட, தகரக்கொட்டகை அமைச்சோம். 4 ஆண் பன்றிகளோட சிறுசும் பெருசுமா இப்போ 200 பன்றிகள் இருக்கு” என்ற சுஜாதா, சிறிது இடைவெளி விட்டார்.

பிறகு, பிறந்து ஒருநாளே ஆகியிருந்த குட்டிகளை நம்மிடம் காண்பித்து உற்சாகமானவர், விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பகிர்ந்தார். “தீ விபத்துக்கு முன்னாடி 55 தாய்ப்பன்றிகள் இருந்துச்சு. அதன் மூலமா குட்டிகள் ஓரளவுக்கு அதிகமா கிடைச்சதால, போன வருஷம் நல்ல லாபம் கிடைச்சது. தீ விபத்துல இறந்தது போக இப்போ எஞ்சியிருக்கிற 38 பெண் பன்றிகள் மூலமா, ஒன்றரை மாசத்துக்கு ஒரு தடவை தான் 50 பன்றிகள் வீதம் விற்பனை செய்றேன். 3 மாசக் குட்டிகளைத் தலா 4,500 ரூபாய்க்கு மொத்தமா வித்திடுவோம். அந்த வகையில 2,25,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லாப் பன்றி களுக்குமே நாங்க அடர்தீவனம் மட்டுமே கொடுக்கிறதால தீவனச் செலவு அதிகம். அதோட, வேலையாளுங்க கூலி, மருத்துவச் செலவு, மின்சாரம், பராமரிப் புக்குனு மொத்தமா 1,45,000 ரூபாய் செலவாகுது. இதைக் கழிச்சுட்டுப் பார்த்தா ஒன்றரை மாசத்துக்கு 80,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

தீ விபத்தால ஏற்பட்ட இழப்பு, பிறகு, பண்ணையைப் புதுப்பிச்ச செலவுகளை ஈடுசெய்ய அதிகமா உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. அதனால, கூடுதலா 100 தாய்ப்பன்றிகளை வாங்கப்போறோம். அதோட, தனி ‘யூனிட்’ அமைச்சு இறைச்சிக்கான பன்றி வளர்ப்பையும் செய்யப்போறேன். காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் பாலசுப்ரமணியம், அந்த மையத்தின் பன்றியின பிரிவு உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் ரெண்டு பேரும் எந்தச் சந்தேகமா இருந்தாலும் உடனடியா தீர்வு சொல்லிடுவாங்க. இதனால, பன்றிகளை சரியா பராமரிக்க முடியுது’’ என்றவர் நிறைவாக,

‘‘முறையான பயிற்சி, அனுபவத்தோட முன்னெச் சரிக்கையா பன்றி வளர்ப்புல ஈடுபட்டா, இந்தத் தொழில்ல நல்ல வருமானம் பார்க்கலாம். தென்னிந்தியா வைப் பொறுத்தவரைக்கும் கேரளா, கர்நாடகாவுலதான் பன்றி இறைச்சிக்கான வரவேற்பு அதிகமா இருக்கு. கேரள வியாபாரிகள் நேரடியா எங்க பண்ணைக்கே வந்து பன்றிகளை வாங்கிட்டுப் போறாங்க. குறிப்பா, பன்றிகளை அருவருப்பா பார்க்காம, அதோட உறுமல் சத்தத்தைத் தொந்தரவா நினைக்காம, பாசமா வளர்த்தா, நாய்க்குட்டிகளைப் போலவே பன்றிகளும் நம்மகிட்ட நெருங்கி பழகும்” என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சுஜாதா,

செல்போன் : 63824 10794.

பன்றிகளை இப்படித்தான் வளர்க்கணும்!

பன்றி வளர்ப்புக் குறித்து சுஜாதா பகிர்ந்த அனுபவங்கள் இங்கே பாடமாக...

‘‘10 பெண் பன்றிகளுக்கு ஒரு ஆண் பன்றி போதுமானது. வேறு பண்ணையில் பிறந்த தரமான ஆண் பன்றியை, பண்ணையில் தனியாக வளர்த்து, இனச்சேர்க்கை நேரத்தில் மட்டுமே பெண் பன்றியுடன் இணை சேர்க்க வேண்டும். இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தும் ஆண் பன்றிகள், ஒரு வருட வயதும் குறைந்தபட்சம் 120 கிலோ எடையில் இருக்க வேண்டும். அவற்றின் உடல் நீளவாக் கிலும், முன்னங்கால் குட்டையாகவும், பின்னங்கால் சற்று நீண்டதாகவும், காது விரைப்பாகவும் இருக்க வேண்டும். 4 – 5 வயது வரை ஆண் பன்றிகளை இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தலாம். பெண் பன்றிகள், 8 – 9 மாத வயதில், 80 – 100 கிலோ எடையில், அவற்றின் உடல் வளைந்தும், அடிவயிற்றுப் பகுதியில் 12 முதல் 14 மடிக்காம்புகளுடனும் இருக்க வேண்டும். எட்டு முறை குட்டி போட்ட பிறகு, பெண் பன்றிகளை இறைச்சிக்கு விற்பனை செய்யலாம்.

வெண்பன்றிகள்
வெண்பன்றிகள்

பெண் பன்றியின் ஆசனவாய் நன்கு சிவந்த நிலையில், அவை சக பன்றிகளின் மேல் அடிக்கடி ஏற முயற்சி செய்யும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை இனச் சேர்க்கைக்குத் தயாரானதாக அர்த்தம். அந்தப் பெண் பன்றியை ஆண் பன்றியுடன் ஒருநாள் முழுக்கத் தனியறையில் விட்டால் இனச்சேர்க்கை நடக்கும்.

அதன் பிறகு, அந்தப் பெண் பன்றியை அவை வளரும் அறையில் சக பன்றிகளுடன் கும்பலோடு கும்பலாக விடலாம். அடுத்த ஒரு மாதத்திலிருந்து எடை கூடுவதுடன், இனச் சேர்க்கைக்கான அறிகுறிகள் அதனிடம் தென்படாது. ஒருவேளை கரு தங்கவில்லையெனில், இணைசேர்க்கை செய்த ஒரே வாரத்தில் அந்தப் பன்றியிடம் இனச்சேர்க்கைக்கான அறிகுறிகள் மீண்டும் தென்படும். இனச்சேர்க்கை செய்ததிலிருந்து 3 மாதங்கள், 3 வாரங்கள், 3 நாள்களில் குட்டி போட்டுவிடும். குட்டி போடுவதற்கு 7 - 10 தினங்களுக்கு முன்பு, பெண் பன்றியின் மடிப்பகுதி நன்கு இறங்கி, ஆசனவாய் அடர் சிவப்பு நிறத்துக்கு மாறும். அப்போது பன்றியைத் தனிமைப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் பெண் பன்றி 8 – 14 குட்டிகளை ஈனும். எல்லாக் குட்டிகளுக்கும் சரியாகத் தாய்ப்பால் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். 40 நாள்கள்வரை குட்டிகள் தாயிடம் வளரும். அதன் பிறகு, குட்டிகளைப் பிரித்து, 20*10 அளவுள்ள அறையில் 30 குட்டிகள் வீதம் ஒன்றரை மாதம் வளர்க்கலாம். சராசரியாக 90-ம் நாள் வயதில் 20 - 25 கிலோ அளவுக்கு வளர்ந்திருக்கும் பன்றியை வளர்ப்புத் தேவைக்கு விற்பனை செய்யலாம். இனச்சேர்க்கைக்காகத் தேர்வு செய்த பெண் பன்றிகளை, அவை மூன்று மாத வயதுக்கு வந்ததும், 10 * 10 அளவுள்ள அறையில் தலா ஐந்து உருப்படிகள் வீதம் வளர்க்கலாம்.

வெண்பன்றி குட்டிகள்
வெண்பன்றி குட்டிகள்


குட்டிகளைப் பிரித்ததும், அடுத்த 20-ம் நாளில் பெண் பன்றி மீண்டும் இனச் சேர்க்கைக்குத் தயாராகும். சராசரியாக, 8 மாதங்களுக்கு ஒருமுறை குட்டிகள் ஈனும். பிறந்த இரண்டாவது நாளில், குட்டிகளுக்குப் பற்களை நீக்கி, இரும்புச்சத்துக்கான ஊசியை அன்றே போட வேண்டும். இதை, முதன்முறை கால்நடை மருத்துவர் உதவியுடன் செய்துவிட்டு, பிறகு, முறையான அனுபவத்துடன் நாமே செய்துகொள்ளலாம். தாயிடமிருந்து குட்டியைப் பிரிக்கும்போது, தாய்க்கும் குட்டிக்கும் ‘ஸ்வைன் ஃப்ளூ’ தடுப்பூசி போட வேண்டும். பிறகு, கோமாரி நோய்க்கான தடுப்பூசியையும், ‘ஸ்வைன் ஃப்ளூ’ தடுப்பூசியையும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போட வேண்டும். தடுப்பூசிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும். கோடைக்காலம், குளிர்காலத்தில் கூடுதல் கவனிப்பு தேவை.’’

அடர்தீவனம் மட்டுமே
கொடுப்பது எதனால்?

‘‘இனச்சேர்க்கைக்காக வளர்க்கிற பன்றிகளுக்கு உணவகக் கழிவுகளைக் கொடுத்து வளர்க்கும்போது துர்நாற்றம் அதிகமா வர வாய்ப்பிருக்கு. அந்த உணவையோ, சமைச்ச உணவுகளையோ கொடுக்கும் போது, பன்றியின் வயிற்றுப் பகுதியில கொழுப்புச்சத்து அதிகரிச்சு, பெண் பன்றிகள் ஈனும் குட்டிகளோட எண்ணிக்கையும் குறையலாம். இதனால, 9 கிலோ அரிசி, 60 கிலோ மக்காச்சோளம், அரிசி தவிடு 10 கிலோ, 20 கிலோ சோயாபீன், தாது உப்பு 2 கிலோ, கல் உப்பு 500 கிராம் சேர்ந்த கலவையை, ஒவ்வொரு பன்றிக்கும் தலா இரண்டு கிலோ வீதத்துல அடர்தீவனமாகக் கொடுக்கிறோம். சமைக்காத உணவு, உணவகக் கழிவுகள் மூலமா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறதால, இறைச்சிக்கு வளர்க்கிற பன்றி களுக்கு மட்டும் நாமே சமைச்ச உணவுகளைக் கொடுக்கலாம்” என்கிறார் சுஜாதா.

வெண்பன்றி குட்டிகள்
வெண்பன்றி குட்டிகள்

சில ஆலோசனைகள்

பன்றி வளர்ப்பில் இறங்குபவர்களுக்காகச் சில ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்ட சுஜாதா, “கறுப்புப் பன்றி மற்றும் வெண்பன்றி இனங்கள்ல, வெண்பன்றி வளர்ப்புக்குத்தான் அதிக வரவேற்பு இருக்குது. மூணு மாசப் பருவத்திலிருக்கும் குட்டிகளை வாங்கி, 6 - 8 மாதங்கள் வளர்த்து 100 கிலோவுக்கும் அதிகமான எடை வந்ததும் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். இந்த முறையில வாங்குற பன்றிகள் ஏற்கெனவே பற்கள் நீக்கப்பட்டு, தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால, அவற்றுக்கான பராமரிப்புச் செலவுகள் குறையுறதோடு, சமைச்ச உணவுகளைக் கொடுத்துத் தீவன செலவையும் குறைக்கலாம். இந்த முறையில் அனுபவம் பெற்றதும், தேவைப்பட்டா இனச்சேர்க்கை முறை பன்றி வளர்ப்பையும் ஆரம்பிக்கலாம்” என்றார்.

தேவகி
தேவகி

தாது உப்பு, வேலிமசால், அசோலா..!

பன்றி வளர்ப்பு குறித்த கூடுதலான விவரங்களைப் பகிர்ந்துகொண்டார், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் க.தேவகி. “நோய் பரவலைத் தடுக்க, இறைச்சிக்காக மற்றும் இனச்சேர்க்கைக்கான பன்றி வளர்ப்பு முறையை தனித்தனி கொட்டகையில்தான் மேற்கொள்ள வேண்டும். ஓலைக்கொட்டகை உட்பட எந்த முறையில் பன்றிகளை வளர்த்தாலும், மின் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும். வடிகால் வசதியுடன் கூடிய கொட்டகைக்குள் 4 அடி உயரத்தில் தேவைக்கேற்ப தடுப்புகளை அமைத்து, ‘டியூப்’ வழியே பன்றிகள் தண்ணீர் குடிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மொத்த ஆற்றலையும் மூக்கின் வாயிலாகவே வெளிப்படுத்தும் பன்றிகள், மண் தரையை மூக்கினால் நோண்டி எளிதாகப் பள்ளத்தை ஏற்படுத்திவிடும். இதனால், கழிவுகள் தேங்கி நோய்த்தொற்று ஏற்படலாம். ‘டைல்ஸ்’ போன்ற வழவழப்பான தரையில் பன்றிகள் வழுக்கி விழ வாய்ப்பிருப்பதாலும், சொரசொரப்பான கான்கிரீட் தரையை அமைக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் பன்றிகளைக் குளிப்பாட்டுவதோடு, கொட்டகையை இரண்டு வேளை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு முறை குட்டிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிடவும் குறைவாகக் கிடைத்தால், அடுத்த இனச்சேர்க்கையில் வேறு ஆண் பன்றியைப் பயன்படுத்தலாம். அதன்பிறகும் குட்டிகள் குறைந்தால், அப்போது பெண் பன்றியை மாற்றலாம். உடல் வளர்ச்சிக்கும், கோடைக்காலத்தில் நீரிழப்பு (Dehydration) ஏற்படுவதைத் தவிர்க்கவும், பன்றிகளுக்கான தீவனத்தில் தாது உப்பை கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். கால்நடை அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்து, புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய, வேலிமசால் மற்றும் அசோலாவையும் பன்றிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism