Published:Updated:

6 மாதங்கள், ரூ.4,80,000 இனிக்கும் லாபம் கொடுக்கும் தேனீ வளர்ப்பு!

தேன் கூடுகளுடன் இசக்கி முத்து
பிரீமியம் ஸ்டோரி
தேன் கூடுகளுடன் இசக்கி முத்து

பண்ணைத் தொழில்

6 மாதங்கள், ரூ.4,80,000 இனிக்கும் லாபம் கொடுக்கும் தேனீ வளர்ப்பு!

பண்ணைத் தொழில்

Published:Updated:
தேன் கூடுகளுடன் இசக்கி முத்து
பிரீமியம் ஸ்டோரி
தேன் கூடுகளுடன் இசக்கி முத்து

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தேனீ வளர்ப்பு மூலம் நல்ல லாபம் பார்த்து வருகிறார், இசக்கிமுத்து. திருநெல்வேலியிலிருந்து 48 கி.மீ தொலைவில் இருக்கிறது களக்காடு. அதன் அருகே உள்ளது மலையடிபுதூர் கிராமம். அந்தக் கிராமத்தில் இறங்கி, இசக்கி முத்து பெயரைச் சொல்லி வழி கேட்டோம். ‘தேன் வித்துட்டு இருக்குறவர தானே கேட்குறீங்க. இந்த ரோட்டுலயே போங்க, ஓர் இடத்துல சாலையோரமா மர நிழல்ல தேனீப் பெட்டி வெச்சுருக்கும். அங்க இருப்பாரு’’ என்று வழி காட்டினார்கள்.

அவர்கள் சொல்லிய பாதையில் சென்றுகொண்டு இருந்தோம். ஓர் இடத்தில் நிறைய தேனீப் பெட்டிகள் இருந்தன. அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சென்றோம். ஏற்கெனவே இசக்கி முத்துவோடு அலைபேசியில் பேசியிருந்தாலும் நேரடியாகப் பார்த்ததில்லை. பண்ணையில் நுழைந்ததும் சொகுசு கார், கையிலும் கழுத்திலும் தங்க நகைகளுடன் ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட்டுடன் ஓர் இளைஞர் நின்றிருந்தார். அவரிடம் இசக்கிமுத்து என்பவரைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னதும், ‘‘நாந்தாங்க இசக்கிமுத்து’’ என்றவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் சரளமாகப் பேசத் தொடங்கினார்.

தேன் கூடுகளுடன் இசக்கி முத்து
தேன் கூடுகளுடன் இசக்கி முத்து

“நான் விவசாயத்தில ‘டிப்ளமோ’ படிச்சேன். படிப்பு முடிச்சதும் பயிர்கள்ல பயன்படுத்துற பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யுற கம்பெனியில வேலை கிடைச்சுது. நான் படிக்கும்போதே நம்மாழ்வார் பத்தி படிச்சுத் தெரிஞ்சிருந்தேன். சம்பளத்துக்காக அந்தக் கம்பெனியில வேலையில சேர்ந்தாலும், மக்களுக்கு நஞ்சை விற்பனை செய்யுறோமேனு மனசு உறுத்துச்சு.

அதனால ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எங்கப்பாவுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ஏதாவது விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன். நான் படிச்சுட்டு வேலைக்குப் போகாம வீட்டுல இருக்குறதைப் பார்த்து ஊர்ல இருக்கிறவங்க கிண்டல் பண்ணுனாங்க. என்னை வேலைக்குப் போகச் சொல்லி வீட்டுல வற்புறுத்துனாங்க. அதனால விவசாயம் சார்ந்த தொழில் செய்யலாம்னு முடிவெடுத்தேன். அதை அப்பா, அம்மாகிட்ட சொன்னேன். அவங்களும் என்னைப் புரிஞ்சுக்கிட்டு ஊக்கப்படுத்தினாங்க. ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, முயல் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்புன்னு பல பயிற்சி முகாமுக்குப் போனேன். அதுல தேனீ வளர்ப்புதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. தேனீக்கள்மூலம் மகரந்தச் சேர்க்கை நடந்து நல்ல விளைச்சல் கிடைக்கிற விஷயம் தெரிய வந்ததும், அந்தத் தொழிலைச் செய்யுறதுன்னு முடிவு செஞ்சேன்.

தேனீப் பெட்டிகள்
தேனீப் பெட்டிகள்


ஆரம்பத்துல எங்க தோட்டத்தில சில பெட்டிகளை வச்சு ஆரம்பிச்சேன். நான், தேனீ வளர்க்க ஆரம்பிச்சதும் எங்க தோட்டத்தில இருந்த மா மரங்கள்ல நிறையக் காய் பிடிச்சுது. தென்னைகளும் அமோகமா காய்க்கத் தொடங்கிச்சு. தேனீக்களால தான் இந்த மாற்றம் நடந்திருக்குன்னு புரிய ஆரம்பிச்சதும், நாம சரியான தொழிலைத் தான் செய்யுறோம்னு மனசுக்கு நிறைவா இருந்துச்சு” என்றவர் தேனீ வளர்ப்பைத் தொழிலாக மாற்றியதை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

தேன் எடுக்கும் பணியில்
தேன் எடுக்கும் பணியில்

“தேன் விற்பனை மூலமா எனக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சதும், தேனீப் பெட்டிகளைக் கூடுதலாகச் செஞ்சு வச்சேன். ஒரு கட்டத்தில என்னோட தோட்டத்தில மட்டுமில்லாம அக்கம் பக்கத்து தோட்டங்கள்லயும் தேனீப் பெட்டிகளை வச்சேன். அவங்களுக்கு மகசூல் அதிகம் கிடைக்குறதால எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இடம் கொடுத்தாங்க. பொதுவா, ஜனவரி மாசத்துலயிருந்து ஜூன் மாசம் வரைக்கும் தான் தேன் அதிகமாக் கிடைக்கும். அதுக்குப் பிறகு தேன் குறைஞ்சிடும். அதனால அந்தச் சமயத்தில தேனீப் பெட்டிகளைப் பராமரிக்குற வேலையைச் செய்வேன். அதோட தென்காசி, தூத்துக்குடி, கரூர், சேலம்னு பல மாவட்டங்களுக்கும் தேனீப் பெட்டிகளை விற்பனை செய்யுறேன். தமிழ்நாட்டுல பல இடங்கள்ல இருந்தும் பெட்டி கேட்டு ‘ஆர்டர்’ கொடுக்குறாங்க. கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் தேனீப் பெட்டிகளைக் கொண்டு போய் வெச்சுக் கொடுக்குறதோட, தேனீ வளர்ப்பு பயிற்சியும் கொடுக்கிறேன்.

தேன் கூடு
தேன் கூடு


பொதுவா, சீசன் காலத்தில 15 நாளுக்கு ஒரு தடவை தேன் கிடைக்கும். ஒரு பெட்டியிலிருந்து ஒரு கிலோ முதல் 2 கிலோ வரைக்கும் தேன் கிடைக்கும். ரெண்டு அடுக்கு, மூன்றடுக்கு பெட்டிகள்ல நிறையத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு பழங்கள், பூக்கள் சீசன்லயும் ஒவ்வொரு வகையான தேன் கிடைக்கும். மா, தென்னை, வேம்பு, நாவல், வாழை, முருங்கை, துளசி, கொளுஞ்சி, பருத்தி, எள், காய்கனிகள்னு ஒவ்வொண்ணுலயும் ஒவ்வொரு விதமான தேன் கிடைக்கும். அந்த நேரத்துல எந்தப் பூப்பூத்திருக்குதோ அதிலிருந்துதான் தேனீக்கள் தேன் எடுத்துட்டு வரும். அதனால ஒவ்வொரு வகையான தேனுக்கும் தனித்தனி ருசியும் மணமும் இருக்கும்.

தேன் எடுக்கும் பணியில்
தேன் எடுக்கும் பணியில்


என் தோட்டத்தில 100 பெட்டிகள் இருக்கு. இது தவிரத் தெரிஞ்சவங்க தோட்டங்கள்ல 50 பெட்டிகள் வச்சிருக்கேன். 15 நாள்களுக்கு ஒருமுறை சராசரியா 150 கிலோ தேன் கிடைக்கும். ஒரு மாசத்துக்கு 300 கிலோ தேன் எடுக்க முடியும். 6 மாசம்தான் இந்த அளவுக்குத் தேன் கிடைக்கும். அதுக்குப் பிறகு அளவு குறையும். தேனோட தரத்தைப் பொறுத்து கிலோவுக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்றேன். டிசம்பர் மாசக் கடைசியில தேன் சீசன் ஆரம்பமாகும். ஜனவரியிலிருந்து 3 மாசம் அதிகளவு தேன் கிடைக்கும். மொத்தமா கொடுக்குற தேன் கிலோ 400 ரூபாய்க்கு கொடுக்குறேன். ஒவ்வொரு பூவோட தேனுக்கு ஏத்தமாதிரி இந்த விலையில வித்தியாசம் இருக்கும். அதே நேரத்துல நாங்க, பாட்டில்ல அடைச்சு விற்பனை செய்ற தேன் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்றோம்.

நல்ல மகசூல் கிடைக்குற 6 மாசமும், மாசம் 300 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் சராசரியா 400 ரூபாய்னு வெச்சுக்கிட்டாகூட மாசம் 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தேனீ வளர்ப்புல பராமரிப்புச் செலவு மிகவும் குறைவுதான். வேலையாள்களுக்கான கூலியையும் போக்குவரத்துச் செலவும் மாசம் 40,000 ரூபாய் ஆகும். செலவுபோக, 80,000 ரூபாய் லாபமாக் கிடைக்கும். 6 மாசத்துக்கு 4,80,000 ரூபாய் கிடைக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, இசக்கிமுத்து,

செல்போன்: 88259 83712.

விற்பனைக்குத் தயாராக தேன்
விற்பனைக்குத் தயாராக தேன்

மாவில் விளைச்சல் கூட்டிய தேனீக்கள்

தேனீ வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிப் பேசிய இசக்கிமுத்து, ‘‘தேனீக்களை வளர்க்கத் தொடங்கிய பிறகு, மாந்தோப்புல விளைச்சல் நல்லா இருக்குன்னு பலரும் சொல்றாங்க. தென்னையில மகரந்தச் சேர்க்கை அதிகம் நடக்குறதால குரும்பை உதிராம நிறைய காய்க்குதுன்னு தென்னை விவசாயிகள் சொல்றாங்க. ஆனாலும் தேனீக்களுக்கு முக்கிய எதிரியா எறும்பு இருக்குற மாதிரி, பயிர்களுக்கு அடிக்குற ரசாயன பூச்சிக்கொல்லிகளும் இருக்கு.

தேன் சுவைக்கு எறும்புகள் கூடுகள்ல ஏறிடும். அதைக் கவனமாகப் பார்த்துக்கணும். அதோட, கூடுக்குள்ள புழுக்கள் செத்துடாம பராமரிக்கணும். சீசன் இல்லாத நேரத்துல தேனீக்களுக்கு உணவா, சர்க்கரைக் கரைசலை வெச்சு விட்டாப் போதும். அதுங்க வெளியே போகாமா கூட்டுலயே பாதுகாப்பாக இருந்துக்கும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism