நாட்டு நடப்பு
Published:Updated:

1.5 ஏக்கர், ரூ.1,73,500... ரத்தசாலி, நவரா, நாட்டுப் பாசுமதி...

நெல் வயலில் லெட்சுமிதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
நெல் வயலில் லெட்சுமிதேவி

பரிசு வாங்கித் தந்த பாரம்பர்ய நெல் சாகுபடி!

திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் விவசாயி லெட்சுமிதேவி 2020-21-ம் ஆண்டுக் கான பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு, ஒரு ஹெக்டேருக்கு 10,024 கிலோ மகசூல் எடுத்து மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இவருக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் விருதும் வழங்கி கௌரவித்தார். சாதனை விவசாயியாகக் கவனம் ஈர்க்கும் லெட்சுமிதேவி, இந்த ஆண்டு ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்த நவரா, ரத்தசாலி, நாட்டுப் பாசுமதி ஆகிய ரகங்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளன. இவருடைய விவசாய அனுபவங்களை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தோடு கிளம்பிச் சென்றோம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது லெட்சுமிதேவியின் நெல் வயல். இங்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த மருத மரங்கள்... ரசித்தபடியே சென்றோம். பாபநாசத்திலிருந்து பாய்ந்தோடி வந்த தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் குதுகலமாகக் குளித்துக்கொண்டிருந்தனர் உள்ளூர்வாசிகள்.

நெல் வயலில் லெட்சுமிதேவி
நெல் வயலில் லெட்சுமிதேவி

பெண் விவசாயி லெட்சுமிதேவியின் நெல் வயலை சென்றடைந்தோம். நமது வருகையை முன்பே இவரிடம் தெரிவித்திருந்ததால், நம்மை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தார் லெட்சுமிதேவி. “பாத்தீயளா சார்... எங்க ஊரைச் சுத்தி எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு நெல் வயல்தான். குளுகுளுனு வீசுற காத்துக்கு தோகையை விரிச்சுக்கிட்டு ஆடுற மயில் மாதிரி, நெல்லு கதிருங்க அசைஞ்சாடுது. மனசு எவ்வளவுதான் இறுக்கமா இருந்தாலும் வயக்காட்டுப் பக்கம் நடந்து வந்தா, எல்லாக் கவலையும் மறந்துப்போயிடும்’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘விவசாயத்துகும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. என்னோட அப்பா, மேல்நிலைப் பள்ளியில தலைமை ஆசிரியரா வேலை பார்த்தவர். நான் பி.எஸ்ஸி, எம்.ஏ, பி.எல் படிச்சிட்டு தொலைத்தொடர்புத்துறையில வேலை பார்த்தேன். எங்க வீட்டுல இருந்து பஸ்ல வேலைக்குப் போயிட்டு வர்றப்ப, ரோட்டுல ரெண்டு பக்கமும்... பச்சைப் பசேல்னு இருக்குற வயல்களைப் பார்க்குறப்ப மனசுக்கு ரொம்பப் பரவசமா இருக்கும். அங்க இருந்து வரக்கூடிய வாசனையை நுகரும்போது ஏகாந்தமா இருக்கும். நாமளும் விவசாயம் செய்யணும்ங்கற ஆசை அதிகமாச்சு. தொலைத்தொடர்பு துறையில நான் பார்த்துக்கிட்டு இருந்த பணிச்சூழல் ஒரு கட்டத்துல ரொம்பச் சுமையா மாற ஆரம்பிச்சது. 2010-ம் வருஷம் அந்தப் பணியில இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கிட்டு இயற்கை விவசாயத்துல இறங்க முடிவு செஞ்சேன்.

விருது பெறும்போது...
விருது பெறும்போது...

இது நல்ல முடிவுனு சொல்லி... என்னோட கணவர், மகள், மகன்கள் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினாங்க. ஆனா, என்னோட உறவினர்கள், குடும்ப நண்பர்கள் எல்லாம் ‘விவசாயத்துல இறங்குறதெல்லாம் தேவை யில்லாத வேலை... வீட்ல ஓய்வெடுங்க’னு சொன்னாங்க. ஆனா, இயற்கை விவசாயம் செய்யணும்ங்கற என்னோட முடிவுல நான் ரொம்பவே உறுதியா இருந்தேன்.

இயற்கை விவசாயம் செய்யுற யாரையும் எனக்குத் தெரியாது. யூடியூப் வீடியோக்கள் மூலமாத்தான் இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். நம்மாழ்வார் அய்யாவோட பேச்சுக்களையும் கேட்டேன். பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்ச பிறகு, எங்க ஊர்லயே இயற்கை விவசாயம் செஞ்சு கிட்டுருந்த விவசாயிகள் எனக்கு அறிமுக மானதுதான் பெரிய ஆச்சர்யமான விஷயம்.

ஆறரை ஏக்கர் வாங்கினேன். எரு, கனஜீவாமிர்தம் போட்டு 2 வருஷம் மண்ணை வளப்படுத்தினேன். எங்க வீட்டு பால்காரர் கிட்ட சொல்லி வச்சு தென்பாண்டி குட்டை உள்ளிட்ட 4 நாட்டு மாடுகளை வாங்கினேன். இந்த மாடுகளோட கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை இடுபொருள்கள் தயார் செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ‘அம்பை-16’ ரக நெல் சாகுபடி செஞ்சேன். அதுக்குப் பிறகு பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.

லெட்சுமிதேவி
லெட்சுமிதேவி

தஞ்சாவூர்ல உள்ள ஓர் இயற்கை விவசாயி கிட்ட இருந்து ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, ஒரத்தநாட்டுல மாப்பிள்ளைச் சம்பா நெல் விதைகளை வாங்கினேன். அப்படியே ஒவ்வொரு ரகமா சேகரிக்க ஆரம்பிச்சேன். கொட்டாரச்சம்பா, காலாநமக், பால்குட வாழை, பனங்காட்டு குடவாழை, மிளகுச் சம்பா, பூங்கார், கருத்தக்கார், சித்திரைக் கார், கறுப்புக்கவுனி, ஒடிசா குட்டை, ஒடிசா நெட்டை, ஒடிசா மணிச்சம்பா, ரத்தசாலி, வாசனைச் சீரகச்சம்பா, செங்கல்பட்டு சிறுமணிச் சம்பா, நவரா, சிவன்சம்பா, வைகரைச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, தங்கச் சம்பா, வாடன் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மடுமுழுங்கி, பாசுமதி, சிவப்புக்கவுனி, தூயமல்லி, கல்சேரி, பிசினிச் சம்பா, புழுதிக்கார், கருடன் சம்பா, காட்டுயானம், மாப்பிளைச் சம்பா, இலுப்பைப்பூச் சம்பா உட்பட மொத்தம் 32 ரகங்கள் சேகரிச்சு2 ஏக்கர்ல பயிர் செஞ்சேன்.

என்னோட தேவைக்காகவும் இந்த ரகங்களையும் மற்ற விவசாயிகள்கிட்ட பரவலாக்கம் செய்யணுங் கற நோக்கத்தோடும்தான் பயிர் செஞ்சேன். வெற்றிகரமா விளைச்சல் கிடைச்சது. தொடர்ச்சியா பாரம்பர்ய நெல் ரகங்கள் பயிர் பண்ணிகிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், நவரா, பாசுமதி, ரத்தசாலி ஆகிய நெல் ரகங்களின் சாகுபடி அனுபவங்கள் குறித்து விவரித்தார்.

செழிப்பாகக் காட்சியளிக்கும் பாரம்பர்ய நெல் வயல்
செழிப்பாகக் காட்சியளிக்கும் பாரம்பர்ய நெல் வயல்

“என்கிட்ட உள்ள ஆறரை ஏக்கர்ல, பாரம்பர்ய விதைநெல் உற்பத்திக்கு அஞ்சு ஏக்கரை ஒதுக்குறது வழக்கம். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி விதைநெல் உற்பத்தி அப்பப்ப மாறுபடும். ஒவ்வொரு வருஷமும் ஒன்றரை ஏக்கர்ல ரத்தசாலி, பாசுமதி, நவரா சாகுபடி செஞ்சு, அதுல கிடைக்குற நெல்லை, அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். ஏன் இந்த மூணு ரகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சாகுபடி செய்றோம்னா, இந்த ரகங்களுக்கு விற்பனை வாய்ப்பு பிரகாசமா இருக்கு. இதனால எளிதா விற்பனை செஞ்சிட முடியுது. இப்ப அறுவடை செஞ்ச இந்த ரத்தசாலி, நவரா, பாசுமதி நெல்லை இனிமேதான் அரிசியா அரைச்சு விற்பனை செய்யப்போறேன்’’ என்று சொன்னவர், கடந்த ஆண்டு கிடைத்த மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘போன வருஷம் 40 சென்ட்ல நவரா சாகுபடி செஞ்சதுல 850 கிலோ நெல் மகசூல் கிடைச்சது. அதை அரிசியா அரைச்சது மூலமா 650 கிலோ அரிசி கிடைச்சது. 40 சென்ட்ல சாகுபடி செஞ்ச ரத்தசாலியில 680 கிலோ நெல் மகசூல் கிடைச்சது. அதை அரிசியா அரைச்சது மூலம் 450 கிலோ அரிசி கிடைச்சது. 70 சென்ட் பரப்புல பாசுமதி சாகுபடி செஞ்சதுல, 1,075 கிலோ நெல் கிடைச்சது. அதை அரிசியா அரைச்சது மூலம் 800 கிலோ அரிசி கிடைச்சது.

அட்டவணை
அட்டவணை

நவரா அரிசி 1 கிலோ 80 ரூபாய், ரத்தசாலி அரிசி 1 கிலோ 200 ரூபாய், பாசுமதி அரிசி ஒரு கிலோ 100 ரூபாய்ங்கற விலையில விற்பனை செஞ்சேன். அந்த வகையில நவரா மூலம் 52,000 ரூபாயும், ரத்தசாலி மூலம் 90,000 ரூபாயும், பாசுமதி மூலம் 80,000 ரூபாயும் வருமானம் கிடைச்சது. ஒன்றரை ஏக்கர்ல சாகுபடி செஞ்ச இந்த மூணு ரகங்கள் மூலம் மொத்தம் 2,22,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சுது. இதுல உழவு முதல் அரிசியா மதிப்புக்கூட்டுதல் வரை செலவுகள் 48,500 ரூபாய் போக, 1,73,500 நிகர லாபமாக் கிடைச்சது.

உள்ளூர்லயே போதுமான வாடிக்கை யாளர்கள் இருக்குறதுனால விற்பனையைப் பொறுத்தவரையிலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. பாரம்பர்ய நெல் ரகத்தைப் பொறுத்தவரைக்கும் பெரிய அளவுல பராமரிப்பும் கிடையாது. பூச்சி, நோய்த் தாக்குதலும் கிடையாது. இதனால் எனக்கு இதுல நிறைவான லாபம் கிடைக்குது” என்றவர் புன்னகையோடு விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

லெட்சுமிதேவி,

செல்போன்: 94430 81066.

நவரா
நவரா

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய லெட்சுமிதேவியின் செயல்முறைகள் இங்கே பாடமாக.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை 5 நாள்கள் இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும். முதல் உழவின்போதே அடியுரமாக 4 டன் எரு இட்டு, நன்கு உழவு செய்ய வேண்டும். ஒன்றரை ஏக்கரில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய 5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றுகள் உற்பத்தி செய்ய... ரத்தசாலி விதைநெல் 3 கிலோ, நவரா விதைநெல் 3 கிலோ, நாட்டுப் பாசுமதி விதைநெல் 4 கிலோ தேவைப்படும். 6 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் கல் உப்பு போட்டு கரைக்க வேண்டும். அந்தக் கரைசலில் நெல் விதையை அலசி தரமற்ற விதைநெல்லை நீக்க வேண்டும். விதைப்புக்கு ஏற்ற விதைநெல்லை எடுத்து, நல்ல தண்ணீரில் நன்கு அலசி, சணல் சாக்கில் கட்டி வைக்க வேண்டும். மறுநாள் நாற்றங்காலில் விதையைத் தூவ வேண்டும். 10-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி மூலிகை பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 21-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும். நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்துப் பஞ்சகவ்யாவில் நனைத்து வயலில் நடவு செய்ய வேண்டும். இதனால், வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது.

ரத்தசாலி
ரத்தசாலி

நடவு வயலில்... நாற்றுக்கு நாற்று முக்கால் அடி, வரிசைக்கு வரிசை முக்கால் அடி இடைவெளியில் தலா ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது களை எடுக்க வேண்டும். 40-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசனநீரில் விட வேண்டும். 60-ம் நாள் 200 லிட்டர் அமிர்தகரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 20 நாள்களுக்கு ஒரு முறை இதுபோல் பஞ்சகவ்யாவையும் அமிர்தகரைசலையும் சுழற்சி முறையில் பாசனநீரில் கலந்து விட வேண்டும். 60 - 70 நாள்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருக்கும். அந்தத் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 85 முதல் 90-வது நாளில் பால் பிடிக்கத் தொடங்கும். 100-வது நாளுக்கு மேல் கதிர்கள் முற்றத் தொடங்கும். 120 - 135 நாள்களில் அறுவடை செய்யலாம்.