Published:Updated:

ஒரு ஏக்கர், 1,32,000 ரூபாய்!கணிசமான வருமானம் தரும் காட்டுயானம்!

ஹமீது ஹம்ஸா
பிரீமியம் ஸ்டோரி
ஹமீது ஹம்ஸா

மகசூல்

ஒரு ஏக்கர், 1,32,000 ரூபாய்!கணிசமான வருமானம் தரும் காட்டுயானம்!

மகசூல்

Published:Updated:
ஹமீது ஹம்ஸா
பிரீமியம் ஸ்டோரி
ஹமீது ஹம்ஸா

நெல் சாகுபடியில் இயற்கை விவசாயப் பாதையை நோக்கித் திரும்பி வரும் விவசாயிகள், ஒட்டுரக நெல்லைத் தவிர்த்துப் பாரம்பர்ய நெல் ரகத்தைத் தேர்வு செய்து பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் காட்டுயானம் நெல்லைச் சாகுபடி செய்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஹமீது ஹம்ஸா. அவரைச் சந்திப்பதற் காகப் பயணமானோம்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி யிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது புலியூர்குறிச்சி. சாலையின் இருபுறமும் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தது நெல் வயல். ஊரின் தொடக்கத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் நமக்காகக் காத்திருந்தார் ஹமீது ஹம்ஸா. நம்மை அறிமுகப்படுத்துக் கொண்டதும் உற்சாகமானவர், ‘‘பார்த்தீயளா சார்... ஊரைச் சுத்தி நெல் வயல்தான். வீசுற காத்துக்கு மயில் தோகைய விரிச்சுக்கிட்டு ஆடுற மாதிரி, நெல் கதிருங்க எப்படி ஆடுதுன்னு.

எவ்வளவு ‘டென்ஷன்’ இருந்தாலும் வயக்காட்டுக்குள்ள இறங்கி வரப்புக்குள்ள கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வந்தாலே போதும். மனசு குளிர்ந்துடும்’’ எனச் சொல்லிச் சிரித்தவர், “ஏழெட்டு அடி உசரத்துக்கு நெடு நெடுன்னு வளர்ந்து நிக்குது பாருங்க. அதுதான் நம்ம காட்டுயானம். என் பின்னாலயே நடந்து வாங்க” எனச் சொல்லி நம்மை வயலுக்குள் அழைத்துச் சென்றவர், நடந்தபடியே பேச ஆரம்பித்தார்.

நெல் வயலில் ஹமீது ஹம்ஸா
நெல் வயலில் ஹமீது ஹம்ஸா

‘‘ஏர்வாடிதான் எனக்குச் சொந்த ஊரு. பூர்வீகமே விவசாயக் குடும்பம்தான். நெல், வாழை, தென்னைதான் இந்தப் பகுதியில பரவலா சாகுபடி செய்யப்படுது. ஆரம்பத்துல வெறும் மட்கின தொழுவுரத்தை மட்டும் போட்டுதான் தாத்தா, அப்பா சாகுபடி செஞ்சாங்க. ‘பசுமைப் புரட்சி’க்குப் பிறகு, ஊருல உள்ள எல்லாருமே ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த ஆரம்பிச்சதும், இவங்களும் ரசாயனத்துக்கே மாறிட்டாங்க.

10-ம் வகுப்பு முடிச்சதுமே பாம்பே (மும்பை)வுல இருக்கிற ‘கவரிங்’ நகைகள் செய்யுற கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அங்க இருந்து துபாய், பஹ்ரைன் நாடுகள்ல ‘எலக்ட்ரிஷியன்’ வேலைக்குப் போனேன். 16 வருஷங்களுக்குப் பிறகு, ஏர்வாடிக்கே திரும்பி வந்துட்டேன். பேக், சீட் கவர், பைக் டேங்க் கவர் தொழில் செஞ்சேன். அதே நேரத்துல ரசாயன உரத்துல நெல் விவசாயத்தையும் செஞ்சுட்டு வந்தேன். 7 வருஷத்துக்கு முன்னால ஒரு ஆர்வத்துல, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துல ‘பி.ஏ’ தமிழ் இலக்கியம், தொடர்ந்து அதுலயே ‘எம்.ஏ’வும் முடிச்சேன். அந்த நேரத்துல வாசிப்புக்காக அதிக நேரம் செலவிடுவேன். அப்போ எனக்கு ஒரு புத்தகக் கடையில அறிமுகமானதுதான் பசுமைவிகடன். விவசாய சம்பந்தமான புத்தகமா இருக்கேன்னு வாங்கிப் படிச்சேன்.

அதுல நெல் சாகுபடி கட்டுரையைப் பத்தி போட்டுருந்துச்சு. முழுசா படிச்சப்போதான் உரம் போடாம நெல் சாகுபடியில கணிசமான மகசூல் எடுக்க முடியும்னு தெரிஞ்சுக் கிட்டேன். தொடர்ந்து வாங்கிப் படிச்சேன். அதே நேரத்துல ‘யூடியூப்’ல நம்மாழ்வார் ஐயா பேசின நிறைய ‘வீடியோ’க்களையும் பார்த்தேன். இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு முறையைக் குறிப்பெடுத்து வெச்சேன்.

‘ரசாயன உரத்துனால ஆரம்பத்துல ஓரளவு மகசூல் கிடைக்கும்ங்கிறது உண்மை தான்னாலும், அடுத்தடுத்த வருஷங்கள்ல மகசூல் அப்படியே குறைஞ்சுடும். மண்ணை மலடாக்கிடும், அந்த உரத்தால புழு, பூச்சிகள், நுண்ணுயிர்கள் அழிஞ்சுடும். அப்படிப்பட்ட உரத்துல விளைஞ்சது விளைபொருள் இல்ல. அது விஷப்பொருள்’னு நம்மாழ்வார் பேசினது ரொம்ப ஈர்த்துச்சு.

தளதளவென வளர்ந்து நிற்கும் பாரம்பர்ய நெற்பயிர்கள்
தளதளவென வளர்ந்து நிற்கும் பாரம்பர்ய நெற்பயிர்கள்

நிலத்தை நாலஞ்சு தடவ உழுதேன். தக்கைப்பூண்டு, சணப்பை விதையைத் தூவினேன். 50 நாள்கள்ல பூப்பூத்த நிலையில அப்படியே மடக்கி உழுதேன். இப்படி ரெண்டு தடவ செஞ்சேன். அதோட மட்கின தொழுவுரம், மண்புழு உரம் தூவியும் மண்ணை வளப்படுத்தினேன். முதல் வருஷம் அம்பை-16 ரகம் போட்டேன். வழக்கமா கிடைக்குற மகசூலைவிடக் குறைவாத்தான் கிடைச்சது. ரெண்டாவது வருஷம் ‘கர்நாடகப் பொன்னி’ போட்டேன். ஓரளவு மகசூல் கிடைச்சது. அப்போதான் ‘இயற்கை விவசாயம் செய்யுறதுன்னு முடிவெடித்த பிறகு, ஒட்டுரக நெல்லை சாகுபடி செய்யுற துக்குப் பதிலா பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்யுங்க’ன்னு நண்பர் ஒருவர் சொன்னார்.

அதுல என்ன ரகத்தைச் சாகுபடி செய்ய லாம்னு யோசிச்சப்போதான் ‘காட்டுயானம்’ பத்திக் கேள்விப்பட்டு சாகுபடி செஞ்சேன். முதல் தடவையே நல்ல மகசூல் கிடைச்சது. காட்டுயானம் சிவப்பரிசி வகையைச் சேர்ந்தது. இதுக்கு நல்ல தேவை இருந்ததுனால அந்த ரகத்தையே தொடர்ந்து சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். இது மொத்தம் 3 ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல காட்டுயானம் அறுவடை நிலையில இருக்கு. ரெண்டு ஏக்கர்ல வாழைச் சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

அட்டவணை
அட்டவணை

“போன வருஷம் ஒரு ஏக்கர் காட்டுயானம் நெல் சாகுபடி செஞ்சதுல 2,530 கிலோ நெல் கிடைச்சது. வழக்கமா 25 மூட்டைதான் கிடைக்கும். மண்ணைத் தொடர்ந்து வளப்படுத்தியதால எனக்குக் கூடுதல் மகசூல் கிடைச்சிருக்கு. இந்த 2,530 கிலோவை அரிசியா மதிப்புக்கூட்டியதுல 1,720 கிலோ கிடைச்சது. ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். அந்த வகையில 1,20,400 ரூபாயும், வைக்கோலை கட்டாக் கட்டி வித்ததுல 12,000 ரூபாயும்னு மொத்தம் 1,32,400 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல, உழவுல இருந்து அரிசியா மதிப்புக்கூட்டுற வரைக்கும் மொத்தம் 55,900 ரூபாய் செலவாச்சு. இதைக் கழிச்சு, மீதமுள்ள 76,500 ரூபாய் எனக்கு லாபமாக் கிடைச்சிருக்கு. உள்ளூர்லயே போதுமான வாடிக்கையாளர்கள் இருக்குறதுனால விற்பனையைப் பொறுத்தவரையிலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. நெல்லுல பாரம்பர்ய ரகத்தைப் பொறுத்தவரைக்கும் பெரிய அளவுல பராமரிப்பும் கிடையாது. பூச்சி, நோய்த் தாக்குதலும் கிடையாது” என்றவர் சிரித்தபடியே விடை கொடுத்தார்.


தொடர்புக்கு, ஹமீது ஹம்ஸா,

செல்போன்: 99447 66117.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் காட்டுயானம் சாகுபடி செய்வது குறித்து ஹமீது ஹம்ஸா கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

காட்டுயானம் சாகுபடி செய்ய ஆடி முதல் புரட்டாசி வரையான மாதங்கள் ஏற்றவை. இதன் வயது 180 நாள்கள். தேர்வு செய்த பட்டத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நெல் வயலை 7 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 3 டிராக்டர் மட்கின தொழுவுரத்தைக் கொட்டி மீண்டும் ஒருமுறை உழவு செய்து விட்டு, தலா 6 கிலோ சணப்பை, தக்கைப்பூண்டு விதையைப் பரவலாகத் தூவி விட வேண்டும். 40 முதல்45 நாள்களில் பூப்பூத்து நிற்கும். அந்த நேரத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். அதன் பிறகு, எருக்கு, பூவரசு, ஆடாதொடா, வேம்பு, ஆவாரை ஆகியவற்றில் தலா 100 கிலோ இலைகளைப் பரவலாகத் தூவி மீண்டும் ஒரு முறை மடக்கி உழவு செய்ய வேண்டும்.

நெல் வயலில் ஹமீது ஹம்ஸா
நெல் வயலில் ஹமீது ஹம்ஸா

தண்ணீர் பாய்ச்சி 5 முதல் 8 நாள்கள் வரை இலைகள் அழுகும் வரை விட வேண்டும். பிறகு, மீண்டும் ஒருமுறை உழவு செய்துவிட்டு நாற்றுகளை நடலாம். வயலில் தக்கைப்பூண்டு, சணப்பை விதைத்த 20 முதல் 25-ம் நாளில் நாற்றங்கால் தயாரிப்பைத் தொடங்க வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பளவுக்குத் தேவையான நாற்று உற்பத்தி செய்ய ஒரு சென்ட் இடம் தேவை. ஒற்றை நாற்று முறையில் நடவு செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ முதல் 5 கிலோ விதை நெல் போதும். இரண்டு, மூன்று நாற்றுகள் சேர்த்து நடுவதாக இருந்தால் 18 கிலோ முதல் 20 கிலோ வரை விதை நெல் தேவை.

விதை நெல்லை, ஒரு பாத்திரத்தில் கொட்டித் தண்ணீர் விட்டு அலசி, சாவி பொக்குகளை நீக்க வேண்டும். பிறகு, சணல் சாக்கில் கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் மூழ்க வைத்து விட வேண்டும். பிறகு, வெளியே எடுத்துத் தண்ணீரை வடியவிட்டுத் தனி அறையில் சாக்கை வைத்து, அதன்மீது மற்றொரு சணல் சாக்கால் மூடி வைக்கோலைப்பரப்பி விட வேண்டும். இப்படி 12 மணி நேரம் வைத்திருந்தால் நெல்லில் முளைப்பு தெரியும்.

அவற்றை அப்படியே நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும். 18 முதல் 22 நாளுக்குள் நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து எடுத்து வயலில் நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை ஓர் அடி, நாற்றுக்கு நாற்று ஓர் அடி என்ற இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன்பாக நாற்றுகளை பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்து (நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்கச் செய்து) நடுவது நல்லது. இதனால், வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது. நடவு செய்த அன்று முதல்நீரும், பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். 15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் (ஒரு ஏக்கருக்கான அளவு) ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

30 முதல் 35-ம் நாள், 55 முதல் 60-ம் நாள் என இரண்டு முறை களை எடுக்க வேண்டும். 60 முதல் 70-ம் நாளில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 100 முதல் 120-ம் நாளில் பால் பிடிக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மீன் அமினோ அமிலம், 100 மி.லி பஞ்சகவ்யா கலந்து 7 நாள்கள் இடைவெளியில் 4 முறை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 160-ம் நாளுக்கு மேல் கதிர்கள் முற்றத் தொடங்கும். 175-ம் நாள் முதல் 180-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism