Published:Updated:

வீட்டிலும் வளர்க்கலாம் சந்தன மரம்... எப்படி?

துரை.நாகராஜன்

இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் சந்தன மரங்களை வளர்க்கலாம். சந்தன மரங்களை வளர்ப்பதற்கான தடை 2002-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் நீக்கப்பட்டுவிட்டது.

sandalwood
sandalwood

"சந்தன மரத்தை வீட்டிலோ அல்லது பண்ணையிலோ வளர்க்க முடியாது. தானாக வளர்ந்திருந்தாலும்கூட, அது அரசுக்குதான் சொந்தம். வெட்டவும்கூடாது" இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் சந்தன மரங்களை வளர்க்கலாம். சந்தன மரங்களை வளர்ப்பதற்கான தடை 2002-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் நீக்கப்பட்டுவிட்டது. சாதாரண நபர், சந்தன மரங்களை வளர்ப்பதுகுறித்து ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம்.

வீட்டில் வளர்க்க விரும்பினால், வனத்துறையிடமோ அல்லது தனியார் நர்சரிகளிலோ நேரடியாக சந்தன மரக் கன்றுகளை வாங்கிவந்து வளர்க்கலாம்.

"சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன. சந்தன மர உற்பத்தியை அதிகப்படுத்த, சந்தன நாற்றுகளை குறைந்த விலைக்கு வனத்துறையினர், பொதுமக்களுக்குக் கொடுத்துவருகின்றனர். மாவட்ட வனத்துறை அலுவலகங்களிலேயே சென்று, சந்தன நாற்றுக்களை வாங்கலாம். சந்தனமரத்தை வளர்க்க, அரசு மற்றும் வனத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக வீட்டிலும் வயலிலும் வளர்க்கலாம். வீட்டில் வளர்க்க விரும்பினால், வனத்துறையிடமோ அல்லது தனியார் நர்சரிகளிலோ நேரடியாக சந்தன மரக்கன்றுகளை வாங்கிவந்து வளர்க்கலாம். தோட்டத்தில் வளர்க்கும்போது, நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களை வி.ஏ.ஓ அலுவலகத்தில் உள்ள சிட்டா மற்றும் அடங்கல்களில், மரங்களின் விவரங்களைப் பதிவேற்றிட வேண்டும்.

சந்தன மரம், 40 முதல் 50 அடி உயரமும் 2.4 மீட்டர் சுற்றளவும் கொண்டது. ஆனால், மரத்தை நாம் வெட்ட தடை உண்டு. சந்தன நாற்றை மற்ற மர வகையைப் போல எளிதாக வளர்க்க இயலாது. இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும் தட்பவெப்ப நிலைகளிலும் இது வளரக்கூடியது. குறிப்பாக, செம்மண் நிலங்களில் சந்தன மரங்கள் நன்றாக வளரும். சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இதன் மூலம், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.

sandalwood
sandalwood

சந்தன மரங்களை விவசாயம் செய்ய விரும்பினால், 3 மீ இடைவெளியில், சிறு குழிகள் எடுத்து ஏக்கருக்கு 400 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள், மற்ற மரங்களுடன் இணைந்து வளரும். எனவே தென்னை, சவுக்கு, குமிழ், மலைவேம்பு, மகோகனி எனப் பல வகையான மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம். வளர்த்த பின்னர், அவற்றை வெட்ட நினைத்தால், வனத்துறையிடம் தெரிவிக்க வேண்டும். வளர்க்கும் சந்தன மரங்களை நன்றாக வளர்ந்து, வெட்டும் நிலைக்கு வரும்போது, மாவட்ட வன அலுவலரிடம் வெட்டப்போவதைத் தெரிவித்து, அனுமதி வாங்க வேண்டும்.

இந்த அனுமதியின் அடிப்படையில், வன அதிகாரிகள் ஆய்வு செய்து மரங்களை வெட்ட ஏற்பாடு செய்வார்கள். சந்தன மரத்தின் வேர் முதல் அனைத்தையும் வெட்டி எடுத்து, மாவட்ட வன அதிகாரி அனுமதிபெற்று, வனத்துறையினர் எடுத்துச் சென்று விடுவர். வெட்டும் மரங்கள், சேலம் சந்தன மர குடோனுக்கு எடுத்துச்செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படும். அங்கே, வியாபாரிகளுக்கு ஏலம் விட்டு, வளர்ப்பவருக்கு பணம் கொடுக்கப்படும். அதில், 80 சதவிகித தொகை மரம் வளர்ப்போருக்கு கிடைக்கும். மீதமுள்ள 20 சதவிகித தொகையை வனத்துறை எடுத்துக்கொள்ளும். மரத்தை வெட்டி எடுத்த 90 நாள்களுக்குள், நிலத்தின் உரிமையாளருக்கு வனத்துறை பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் 15 கிலோ வரை சந்தனக் கட்டைகள் இருப்பு வைத்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.

ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6,000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து 3 முதல் 5 கிலோ வாசனை மிகுந்த வைரப் பகுதி கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தின்மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். அதனால், விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்கலாம். சந்தன மரங்கள், வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் வறட்சியிலும் வளரும். வளர்ப்பது எளிது. ஆனால், பாதுகாப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்க வேண்டும்" என்றார்.