Published:Updated:

கோடைக்காலத்தையும் சமாளிக்கும் மழைக்குடில்கள்!

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! - 6

பிரீமியம் ஸ்டோரி

மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப்பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லும் தொடர் இது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

வங்கதேசம். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், மேற்கு வங்க மாநிலத்தையொட்டியிருக்கும் மிகச்சிறிய நாடு. வங்காள விரிகுடாவையொட்டியிருக்கும் வங்க தேசத்தின் பெரும்பகுதி, கங்கை நதிப்படுகை யில் வளமான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதனால்தான் வங்கதேசத்தை நதிகளின் தேசம் என்று அழைக்கிறார்கள். மிகச்சிறிய நாடான அதில் (கிட்டத்தட்ட அதன் பரப்பளவு ஒடிசா மாநிலத்தின் பரப்பளவே), கங்கை (வங்கதேசத்தில் அதன் பெயர் பத்மா), பிரம்மபுத்ரா மற்றும் மேக்னா ஆகிய மூன்று மிகப்பெரும் நதிகள் உட்பட 57 நதிகள் பாய்ந்துகொண்டிருக்கின்றன. ஆக, வங்கதேசம் எப்போதுமே நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப் படுவதில்லை. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்படும். அந்த நாட்டில் அனுபவத்தில் கண்ட விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

வங்கதேசத்தின் பெரும்பான்மையான நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 12 மீட்டர் உயரமே உடையவை. கடல் நீர் மட்டும் ஒரு மீட்டர் உயர்ந்தால், வங்கதேசத்தின் 10 சதவிகித நிலப்பரப்புத் தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. மிக அதிகமான தாழ்வுநிலப் பகுதிகளைக் கொண்டிருப்பதாலும், அதிக எண்ணிக்கையிலான ஆறுகள் பாய்வதாலும் மழைக் காலத்தில் வங்கதேசம் வெள்ளநீரில் மூழ்கடிக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் காய்கறி விவசாயம் செய்வதென்பது குதிரைக் கொம்பாகவே விளங்கியது.

மழைக்குடில் விவசாயம்
மழைக்குடில் விவசாயம்

அதிக வெயில், அதிக மழை,
அதிக வெள்ளம்

வங்கதேசத்தில் மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையில் கடுமையான கோடைக்காலம். ஜூலை முதல் அக்டோபர் வரையில் புயல் மழைக்காலம் ஆகும். ஏப்ரல் மாதத்திலிருந்தே பருவமழை ஆரம்பித்துவிடும். ஏப்ரலில் மாதத்துக்குச் சராசரியாக ஆறு உழவு என ஆரம்பிக்கும் மழை, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மாதத்துக்கு 18 உழவுக்கும் மேலேகூடப் பெய்யும். அதே போல, ஏப்ரல் மாதம்தான் ஆண்டிலேயே அதிக வெயிலைக் கொண்டிருக்கும் மாதம். ஆக, அதிக வெயில், மழை, வெள்ளம் அனைத்தும் இருக்கும். இதில் எப்படிக் காய்கறி விவசாயம் செய்ய முடியும்? எனவே, சந்தையில் உள்ளூர் காய்கறிகளின் வரத்து மிகமிகக் குறைவாகவே இருக்கும். அதனால், காய்கறிகளின் விலையோ விண்ணை எட்டி நிற்கும். இப்படிப்பட்ட சூழலில், ஏதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்ளூரில் காய்கறிகளை விளைவித்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குமே என்று அறிமுகப் படுத்தபட்டவை தான் மழைக்குடில்கள் (Rain shelters).

வளைவுக்கூரை மழைக்குடில்
வளைவுக்கூரை மழைக்குடில்

மழைத்தாக்குதலிலிருந்து காக்கும் மழைக்குடில்கள்

பிளாஸ்டிக் குடில்களின் ஓர் எளிய வடிவம்தான் மழைக்குடில்கள். அதாவது, பயிர்களை விதைக்கும் அல்லது நடவு செய்யும் பாத்திகளின் மேலே பிளாஸ்டிக்கால் ஆன கூரைகளை அமைத்து, மழையின் நேரடித் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதே மழைக்குடில்கள். மற்றபடி, பக்கவாட்டில் வலைகளை அமைப்பதோ, பிளாஸ்டிக் சுவர்களை அமைப்பதோ தேவையற்றது. ஏனெனில், வெப்பநிலையும் காற்றின் ஈரப்பதமும் அதிகம் இருப்பதால், சுற்றிலும் வலைகளால் அல்லது பிளாஸ்டிக் கால் ஆன சுவர்களை அமைத்தால், உட்புறம் காற்றின் ஈரப்பதம் மிகமிக அதிகரித்துப் பூஞ்சை மற்றும் பாக்டீரிய நோய்களை உருவாக்கிவிடும். வெறும் பிளாஸ்டிக் கூரைகளை மட்டுமே பாத்திகளின் மேற்புறம் அமைக்க வேண்டியிருப்பதால், இவற்றை நிர்மாணிப்பதற்கான செலவும் குறைவு. அதிலும், வங்கதேசம் ஐந்தில் ஒருபகுதி வனங்களால் ஆனது. அதனால் மூங்கில்கள் மிக மலிவாகக் கிடைக்கும். அவர்கள் இரும்புக் குழாய்களுக்குப் பதிலாக மூங்கில் கழிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆகவே, மழைக்குடில்கள் அமைப்பதற்கான மொத்த செலவு மிகமிகக் குறைவாகும்.

A-கூரை மழைக்குடில்கள்
A-கூரை மழைக்குடில்கள்

மழைக்குடில் அமைப்பு

மழைக்குடில்களை இருவேறு தோற்றங்களில் அமைக்கலாம். ஒன்று வளைவுக் கூரைகளை (Arched roof) கொண்டது. மற்றொன்று ஆங்கில எழுத்து A போன்ற கூரையைக் (A-shaped roof) கொண்டது. நடவுப் படுக்கைகளின் அளவுதான் இரண்டுக்கும் வேறுபாடு. வளைவுக்கூரை மழைக்குடில்கள் 8 அடி அகலத்தில் அமைக்கப்படும். எனவே, அதனுள் 5 அடி அகலத்தில் நடவுப் படுக்கைகளை அமைக்கலாம். ஆனால் A-கூரை மழைக் குடில்கள் 16 அடி அகலத்தில் அமைக்கப் படுபவை. எனவே அதனுள் 5 அடி அகலத்திலான இரண்டு நடவுப் படுக்கைகளை அமைக்கலாம். இரண்டுவகை மழைக் குடில்களுக்குமே, அவற்றின் மையப்பகுதியின் உயரம் 8 அடி அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான், அதனுள் நுழைந்து வேலை செய்யவும், காய் மற்றும் பழங்களை அறுவடை செய்யவும் ஏதுவாக இருக்கும். அவரவருடைய வயல்வெளியின் அளவைப் பொறுத்து, மழைக்குடில்களின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். வங்கதேசத்தில், வளைவுக் கூரை மழைக்குடில்களை 16 அல்லது 17 அடி நீளத்திலும், A-கூரை மழைக்குடில்களை 20 அடி நீளத்திலும் அமைக்கின்றனர்.

பொதுவாகவே, வெயில் காலத்தில் தக்காளியில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த வெள்ளை ஈக்கள், இலைச்சுருட்டு வைரஸ் நோயைப் பரப்புவதால், அவற்றின் முக்கியத்துவம் இன்னும் கூடுதல் ஆகிறது. ஆகவே, கோடை மழைக்காலத்தில் தக்காளி பயிரிடுவது என்று முடிவு செய்துவிட்டால், இலைச்சுருட்டு வைரஸ் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட தக்காளி ரகங்களையே தேர்வு செய்ய வேண்டும். முதன்முதலில் மழைக்குடில் தொழில்நுட்பம் வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, இது போன்ற ரகங்களே விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக வயல்களில் மழைநீர் தேங்குவது... நான் ஏற்கெனவே சொல்லியபடி, வங்கதேசத்தின் பெரும்பகுதி தாழ்வுநிலப் பகுதி. எனவே, மிகச்சிறிய மழைக்குக்கூட வயல்களில் வெள்ளம் விரைவாகத் தேங்கிவிடும். இது போன்ற வெள்ளம் புகுந்த வயல்கள்தான் பாக்டீரிய வாடல் நோய்க்குக் கொண்டாட்டமானவை. ஆகவே, மழைக் குடில்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி, ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளியாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், உயர்மட்ட நடவுப் பாத்திகளை அமைப்பதும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கும்போது மழைக்குடில் பயிர்கள் மற்றும் திறந்தவெளி வயல்களின் பயிர்கள்
மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கும்போது மழைக்குடில் பயிர்கள் மற்றும் திறந்தவெளி வயல்களின் பயிர்கள்
மழை வெள்ளம் வடிந்த பின்னர் மழைக்குடில் பயிர்கள் மற்றும் திறந்தவெளி வயல்களின் (நல்ல மற்றும் மடிந்த) பயிர்கள்
மழை வெள்ளம் வடிந்த பின்னர் மழைக்குடில் பயிர்கள் மற்றும் திறந்தவெளி வயல்களின் (நல்ல மற்றும் மடிந்த) பயிர்கள்

கோடைக்காலத்தில் தக்காளிச் சாகுபடியில் ஏற்படும் மற்றொரு பிரச்னை, பூக்கள் மற்றும் காய்களின் உதிர்வு. எந்தவோர் உயிரினத்துக்கும் (செடி, கொடிகளிலிருந்து நாம் உட்பட), அவற்றின் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் அவற்றின் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றங்களுக்கும் முக்கியமானவை. தாவரங்களில் ‘ஆக்ஸின்’ என்றொரு வகை ஹார்மோன்கள் உண்டு. செடிகளின் வளர்ச்சி, பூத்தல் மற்றும் காய்த்தல் ஆகியவற்றில் இவற்றின் பங்கும் உண்டு. கோடை மழைக்காலத்தில், பகல் நேர வெப்பநிலை 32 டிகிரி செல்சிஸ் அளவிலும், இரவுநேர வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவிலும், சூரிய ஒளியின் தீவிரம் மிக அதிகளவிலும் இருக்கும்போது, தக்காளிச் செடிகளில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும். அது தக்காளியின் மகரந்தச் சேர்க்கையைப் பாதிக்கும். அதன் காரணமாக, பூக்கள் மிக அதிகளவில் உதிர்ந்து, விளைச்சல் பாதிக்கப்படும். எனவே, அந்த ஹார்மோன் குறைபாட்டை நிவர்த்திச் செய்ய, தக்காளிச் செடிகளுக்கு ஹார்மோன்களைக் கொடுப்பது அவசியமாகிறது.

தக்காளிச் செடிகள் பூக்கின்ற சமயத்தில், ‘டொமட்டோ டோன்’ (Tomato tone) என்ற ஹார்மோனை (இதன் வேதியியல் பெயர் ‘4-குளோரோஃபீனாக்ஸி அசிட்டிக் அமிலம், 4-CPA’ என்பதாகும்) இரண்டு சதவிகிதச் செறிவினில், ஒருவார இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது உடலிலும் சரி, செடிகளிலும் சரி, ஹார்மோன்கள் மிகமிக நுண்ணிய அளவிலேயே தேவைப்படும்; அதற்கேற்ப மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தியாகும். எனவே, டொமட்டோ டோன் ஹார்மோனைத் தெளிக்கும்போது, அதன் செறிவு இரண்டு சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, இரண்டு முறைக்கு மேல் தெளிக்கக் கூடாது. இல்லையேல், அது செடிகளுக்குப் பாதகமாக அமையக்கூடும். அப்படி இருமுறை தெளித்த பிறகு, கோடைமழைக்காலத் தக்காளியின் மகசூல், வழக்கமான பருவத்தில் பயிரிடப்படும் தக்காளியின் மகசூலை ஒத்திருக்கும். இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கோடை மழைப்பருவத்தில் பூக்களின் உதிர்வு அதிகம் இருந்தால் மட்டுமே ஹார்மோன் தெளிப்பு அவசியமாகிறது. இல்லையேல் அதைத் தவிர்த்து விடலாம்.

லாவோஸ் நாட்டில் மழைக்குடில்களில் நடைபெறும் கீரை சாகுபடி
லாவோஸ் நாட்டில் மழைக்குடில்களில் நடைபெறும் கீரை சாகுபடி

பொதுவாகப் பசுமைக்குடில் விவசாயத்தில் ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதாக ஒரு கருத்து இருக்கிறது. உண்மையில் பசுமைக்குடில் இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற ஒன்று. பசுமைக் குடிலுக்குள் இயற்கை எதிரிகள் மூலமாக வெற்றிகரமாகச் சாகுபடி செய்ய முடியும்.

இந்த இடத்தில், உங்களுக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழலாம். முதலில் மழைக் குடில்களை அமைக்க வேண்டும். அதன் பிறகு இலைச்சுருட்டு வைரஸ் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட தக்காளி ரகங்களைத் தேர்வு செய்து, அவற்றைப் பாக்டீரிய வாடல்நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட கத்திரிச் செடியுடன் ஒட்டுக்கட்ட வேண்டும். பிறகு, செடி வளர்ந்து பூக்கின்றபோது டொமட்டோ டோன் ஹார்மோன் தெளிக்க வேண்டும். இவை அனைத்துமே அதிக செலவு பிடிக்குமே? அவ்வளவு முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா? வங்கதேச அனுபவம்தான் அதற்கும் பதில் சொல்கிறது.

முதன்முதலில் வங்கதேசத்தின் தென் மேற்குப் பகுதியில் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியிருக்கும் குல்னா மாகாணத்திலும், அதற்கடுத்து தென்மையப் பகுதியில் அமைந்திருக்கும் பரிஷால் மாகாணத் திலும்தான் மழைக்குடில் தக்காளிச் சாகுபடி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. காரணம், அவைதான் கடலோர மாகாணங்கள் ஆகும். ஜெஸ்ஸூருக்கு அருகில் தாட்பூர் கிராமத்தில் முதன்முதலில் மழைக்குடில் தக்காளி பயிரிட்ட ஒரு விவசாயி, 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டால் கிடைக்கும் லாபத்தை, கால் ஏக்கரில் மழைக்குடில் தக்காளி பயிரிட்டு அடைந்ததாகச் சொன்னார். இது போன்ற முன்னுதாரணங்களே வங்கதேசத்தின் பல்வேறு மாகாணங்களில் இருக்கும் தக்காளி விவசாயிகளையும் மழைக்குடில் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்த்தியது. இந்தப் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, மழைக்குடில் தக்காளிச் சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு டக்காவுக்கும் (வங்கதேச பணத்தின் பெயர் டக்கா), குறைந்தபட்சம் இரண்டரை டக்கா லாபம் கிடைப்பதாகத் தெரிவித்திருக் கிறார்கள்.

லாவோஸ் நாட்டில் மழைக்குடில்களில் நடைபெறும் கீரை சாகுபடி
லாவோஸ் நாட்டில் மழைக்குடில்களில் நடைபெறும் கீரை சாகுபடி

வங்கதேசத்தைப் போலவே மழைப்பொழிவு அதிகம் இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மழைக்குடில் விவசாயம் பிரபலமாகி வருகிறது. உதாரணத்துக்கு இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்திலும் மழைக்குடில் தக்காளி பரவலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வொன்று, மழைக்குடில்களில் பயிரிடப்படும் தக்காளியில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், திறந்தவெளி வயல்களில் செய்யப்படும் தக்காளிச் சாகுபடியுடன் ஒப்பிட்டால், மழைக்குடில் தக்காளிச் சாகுபடி இருமடங்கு லாபத்தைக் கொடுப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

குடிலுக்குள் விவசாயம்
குடிலுக்குள் விவசாயம்

ஒரு ஏக்கர்...
ரூ.7 முதல் 9 லட்சம் வரை வருமானம்

மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் மழைக்குடில் விவசாயம் மிகவும் பிரசித்தம். அங்கு, தக்காளி மட்டுமன்றி, பல்வேறு வகையான கீரைகள், வெள்ளரி, பொரியல் தட்டை, குடமிளகாய், முட்டைக் கோஸ், பட்டாணி மற்றும் பாகற்காய் ஆகியவற்றையும் பயிரிடுகின்றனர். இந்நாடுகளில் சாகுபடி செய்யப்படும் பயிரைப் பொறுத்து, மழைக்குடில் விவசாயத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கரில் ரூ.7 முதல் 9 லட்சம் வரை வருமானம் ஈட்ட இயலும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஆனால், நான் முந்தைய கட்டுரைகளில் சொல்லியபடி, இந்த வருமானம் பருவமில்லா பருவத்தில், அதாவது மிக அதிக மழைப்பொழிவு காலங்களில் எந்தவொரு பயிரைத் திறந்தவெளி வயல்களில் பயிரிட இயலாதோ அது போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலமே சாத்தியம் ஆகும்.

குடிலுக்குள் விவசாயம்
குடிலுக்குள் விவசாயம்

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கிடைக்கும் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு இருக்கும் பட்சத்தில் மழைக்குடில் விவசாயத்தை முன்னெடுக்கலாம். அதைப் போல வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்யும் மாவட்டங்களில் இந்த முறையைப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மழைக்காலங்களில் வெங்காய சாகுபடி சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. அதற்கு மழைக்குடில் தொழில்நுட்பம் பயன்படும். இதனைக் குறைந்த பரப்பில் சோதனை முயற்சி செய்து பார்த்து அதன் பிறகு அதிகப்படுத்தலாம். ஆக, மழைக்குடில் விவசாயம் என்பது மிகப்பெரிய, பின்பற்றுவதற்குக் கடினமான தொழில்நுட்பம் ஒன்றும் கிடையாது. மிக எளிதாக நம்மூரிலும் பின்பற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பமே.

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி


இதுவரையிலும் பருவமில்லா பருவத்தில் பயிர் சாகுபடியை வெற்றிகரமாகச் செயல் படுத்துவது எப்படி என்று பார்த்து வந்த நாம், பயிர் சாகுபடியில் கண்ணுக்கே தெரியாத ஒரு வில்லனைக் கவர்ந்து அழிப்பது எப்படி என்ற நுட்பத்தை அடுத்த இதழில் பார்க்கலாம்.

- வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு