Published:Updated:

ஆரணி... அரிசி ஆலைகளின் களஞ்சியம்!

அரிசி ஆலை
பிரீமியம் ஸ்டோரி
அரிசி ஆலை

சந்தை

ஆரணி... அரிசி ஆலைகளின் களஞ்சியம்!

சந்தை

Published:Updated:
அரிசி ஆலை
பிரீமியம் ஸ்டோரி
அரிசி ஆலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆரணி நகரம் பட்டுப் புடவைக்கு மட்டுமல்ல, அரிசிக்கும் புகழ் பெற்றது. ஆரணி, களம்பூர் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் அதிகமான அரிசி ஆலைகள் செயல்படு கின்றன. மூன்று தலைமுறைகளாக இயங்கும் பழைமையான அரிசி ஆலைகளும்... கடந்த கால் நூற்றாண்டாகச் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலைகளும் அரிசி உற்பத்தியில் சிறந்து விளங்குவதோடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் கோலோச்சுகின்றன. வேளாண் குடி மக்களாலும் இவர்களைச் சார்ந்திருக்கும் அரிசி ஆலைகளாலும் ஆரணி, பொருளா தாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. ‘பட்டு நகரம்’ என்ற பெயருக்கு நிகராக ‘அரிசி நகரம்’ என்றும் உலகப் புகழ் பெற்றிருக்கிறது ஆரணி.

ஆரணி அரிசி ஆலை
ஆரணி அரிசி ஆலை


ஆரணி, களம்பூர் அரிசிக்கு அப்படி என்னதான் சிறப்பு? அரிசி ஆலைகள் பெருகியவதற்கான காரணம்தான் என்ன? இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய, ஆரணி தாலுகா அரிசி ஆலைகள் சங்கத்தலைவர் முருகன் என்கிற வடிவேல், ‘‘ஆரணியிலயும் இதுக்குப் பக்கத்துல இருக்குற களம்பூர்லயும் ஆரம்பகாலங்கள்ல இந்தப் பகுதி விவசாயிங்க, வெள்ளைப் பொன்னி ரக நெல்லுதான் அதிகமா பயிர் செஞ்சுகிட்டு இருந்தாங்க. அப்ப அது இந்த மண்ணுக்கான அடையாளமாவே பார்க்கப்பட்டுச்சு. அந்த அரிசியோட சுவை தனித்துவமா இருக்கும். அது ‘ஆரணி வெள்ளைப் பொன்னி அரிசி’ங்கற பேர்லயும் ‘களம்பூர் அரிசி’ங்கற பேர்லயும் அழைக்கப்பட்டுச்சு.

ஆலையில் நெல் மூட்டைகள்
ஆலையில் நெல் மூட்டைகள்

வடமாவட்டங்கள்ல வசிக்குற மக்கள் களம்பூர் அரிசியை ரொம்பவே விரும்பி வாங்குவாங்க. குறிப்பா, அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள்னு பலரும் களம்பூர் அரிசியோட வாடிக்கையாளர்கள். ஆற்காடு கிச்சலிச் சம்பாவும் இங்கு அதிக அளவுல உற்பத்தி செய்யப்பட்டுச்சு. இது மாதிரியான காரணங்களால இந்தப் பகுதி அரிசிக்கு தமிழ்நாட்டுல பெரும்பாலான மாவட்டங் கள்ல நல்ல வரவேற்பு இருந்துச்சு. இதனால, காலப்போக்குல இந்தப் பகுதியில அரிசி ஆலைங்க அதிக எண்ணிக்கையில பெருக ஆரம்பிச்சது. நெல்லுக்கான தேவை பல மடங்கு அதிகரிச்சது. ஆனா, அந்தளவுக்கு இங்க உற்பத்தி இல்லாததால ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்ல இருந்து அதிக அளவுல நெல் கொள் முதல் செய்ய ஆரம்பிச்சாங்க.

ஆலையில் அரிசி அரைக்கும் பணி
ஆலையில் அரிசி அரைக்கும் பணி

நவீன அரிசி ஆலையில தினம் தோறும் 400 முதல் 500 மூட்டை நெல் அரவை செய்யப்படுது. இங்க உற்பத்தி செய்யப்படுற தரமான வெள்ளைப் பொன்னி அரிசிக்குத்தான் மவுசு அதிகம். பொன்னிக்கு அடுத்தபடியா டீலக்ஸ், பி.பி.டி, கர்நாடகா சோனா, ஆர்.என்.ஆர் இட்லி குண்டு ரக அரிசிக்கும் நல்ல வரவேற்பு இருக்கு’’ எனத் தெரிவித்தார்.

முருகன், ஏ.எஸ்.குமார்
முருகன், ஏ.எஸ்.குமார்

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.குமார், ‘‘சமீபகாலமா, இங்க அரவை செய்யப்படுற பெரும் பாலான நெல் ரகங்கள் ஆந்திரா, கர்நாடகாவுல இருந்துதான் வாங்கப்படுது. அதுக்கு அடுத்ததா தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகள்ல இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுது. முதல்ல நெல்லை ஊறல்ல போட்டு, வேக வச்சு அதுக்குப் பிறகு, காய வைச்சு அரைப்போம்.

அரிசி மூட்டைகள்
அரிசி மூட்டைகள்

பாலிஷ் அதிகமானால் தரம் குறையும்

ஓரளவுக்கு மிதமாதான் பாலிஷ் போடுவோம். அதிகமா பாலிஷ் போட்டா தரமும் சுவையும் குறைஞ்சிடும். மூணு மாசத்துலேயே அரிசியில வண்டு வந்துடும். அப்படியிருந்தா இருப்பு வைக்க முடியாம மண்டிகள்லயிருந்து அரிசியைத் திருப்பி அனுப்பிடுவாங்க. எங்க ஊர் அரிசியில அந்த மாதிரியான பிரச்னைங்க இல்லாததால, ஆறேழு மாசம்கூட இருப்பு வச்சிருந்து விற்பனை செய்றாங்க. அரிசியில இருந்து நீக்கம் செஞ்ச கருப்பரிசி, நொய், நைஸ் தவிடு என பல விதங்கள்லயும் அரிசி ஆலைகளுக்கு வருமானம் கிடைக்குது. நெல்லுல இருந்து கிடைக்குற எந்த ஒரு பொருளும் வீணாகாது.

அரிசி பேக்கிங் செய்யும் பணி
அரிசி பேக்கிங் செய்யும் பணி

இப்படி இருந்தால்தான் மக்கள் வாங்குவார்கள்

அரிசி வெள்ளையாவும் மென்மையாவும், சீக்கிரத்துல தண்ணி விடாமலும் இருந்தாதான் வாடிக்கையாளர்கள் வாங்குவாங்க. வெள்ளைப் பொன்னி 25 கிலோ மூட்டை(1 சிப்பம்) 1,200 ரூபாய் முதல் 1,250 ரூபாய் வரை மார்க்கெட்டுல கிடைக்குது. பி.பி.டி ரக அரிசி 1,000 ரூபாய், ஆர்.என்.ஆர் ரக அரிசி 900 - 950 ரூபாய். இட்லி குண்டு அரிசி 700 - 750 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுது.

எடை போடுதல்
எடை போடுதல்

இங்கவுள்ள நவீன அரிசி ஆலைகள்ல வேலைபார்க்கக்கூடிய பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில வருகைப் பதிவு நடக்குது. அந்த அளவுக்கு ஆரணி நவீனம் அடைஞ்சிகிட்டு இருக்கு. இங்க செயல்படக் கூடிய எல்லா அரிசி ஆலைகளுமே மாசத்துல 20-லிருந்து 25 நாள்கள்தான் இயக்கத்துல இருக்கும். மற்ற நாள்கள்ல இயந்திரப் பராமரிப்பு மாதிரியான காரணங்களால அரவை நடக்காது. நெல் கொண்டுவரக் கூடிய விவசாயிகளுக்கு அரிசி ஆலை உரிமையாளருங்க அதுக்கான பணத்தை உடனடியா கொடுத்துடுவோம். அப்படிக் கொடுத்தாதான் அடுத்த முறை அதே ஆலைக்கு நெல்லு கொண்டு வருவாங்க’’ என சொல்லி முடித்தார்.

தரணிவேந்தன்
தரணிவேந்தன்

நேரடி விற்பனை... விவசாயிகளுக்கு பலன்!

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு அதிக எண்ணிக்கை யில் அரிசி ஆலைகள் செயல்படுவதால் விவசாயிகளுக்கு என்ன பயன்? என்பது பற்றி ஆரணியைச் சேர்ந்த விவசாயி தரணிவேந்தன், ‘‘விவசாயிக உற்பத்தி செய்யக்கூடிய நெல்லை, வியாபாரிகள், இடைத்தரகர்கள் இல்லாம, நேரடியாவே அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்ய முடியுது. மத்த பகுதி விவசாயிங்க மாதிரி, நாங்க நெல் கொள்முதல் நிலையங்கள்ல காத்திருக்க வேண்டியதில்லை. கமிஷனும் கொடுக்க வேண்டியதில்லை. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை... இந்த மூணு மாவட்ட விவசாயிகளுமே நெல்லை இங்கவுள்ள அரிசி ஆலைகளுக்குக் கொண்டு வந்து நேரடியா வித்துட்டுப் போறாங்க’’ எனத் தெரிவித்தார்.

சுபாஷ்
சுபாஷ்


தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவர் சுபாஷிடம் பேசினோம். “மூன்றுபோகம் நெல் விளையக்கூடியது இந்த மாவட்டம். ஆதார விலை போதுமானதாக இல்லை. எந்த விதத்திலும் விவசாயிகள் லாபமடைவதில்லை. 25 கிலோ அரிசி மூட்டையைக் குறைந்தபட்சம் 750 ரூபாய்க்குத்தான் விற்பனை செய்கிறார்கள். எனவே, அதிக லாபமடையும் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லுக்கான கொள்முதல் விலையை கூட்டித்தரலாம். அரசாங்கமும் வட தமிழக விவசாயிகளின் நெல்லை வாங்குவதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்” என்றார்.

தேர்தல் பணம்!

தேர்தல் சமயங்களில் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது ஆரணி யின் நெல் மற்றும் அரிசி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும். அரிசி ஆலைகளுக்கு நெல்லை விற்பனை செய்துவிட்டு 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் அரிசி கொள்முதல் செய்யும் மண்டி உரிமையாளர்களிடமிருந்தும் காவல்துறையினர் பணத்தைப் பறிமுதல் செய்துவிடுகிறார்கள். அந்த அச்சத்தின் காரணமாக, நெல், அரிசி வர்த்தகம் முற்றிலும் முடங்கிவிடுவதாக இப்பகுதி விவசாயிகளும் அரிசி ஆலை உரிமையாளர்களும் ஆதங்கப்படுகிறார்கள்.

வெளிமாநில
கட்டுப்பாடு நீக்கம்!


‘‘1992-ம் ஆண்டு வெளி மாநிலங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் ‘லெவி’ என்ற பெயரில் கட்டுப்பாடு இருந்தபோது அரிசி உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். அந்தச் சமயத்தில் இங்கு 50 - 60 அரிசி ஆலைகள்தான் இயங்கின. ஒவ்வோர் ஆலையிலும் நாளொன்றுக்கு 50 முதல் 75 மூட்டை வரை மட்டுமே நெல் அரவை செய்யப் பட்டது. அப்போதைய உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜி.விஸ்வநாதன் (வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர்), கட்டுப்பாடுகளை நீக்கி அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார்’’ என நினைவுகூர்கிறார்கள் அரிசி ஆலை உரிமையாளர்கள்.