Published:Updated:

எலுமிச்சைக்குத் தனிச்சந்தை... லெமன் சிட்டி புளியங்குடி!

புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
பிரீமியம் ஸ்டோரி
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்

சந்தை

எலுமிச்சைக்குத் தனிச்சந்தை... லெமன் சிட்டி புளியங்குடி!

சந்தை

Published:Updated:
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
பிரீமியம் ஸ்டோரி
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்

தென்காசி மாவட்டம், புளியங்குடி, சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, புளியங்குடியில் எலுமிச்சை உற்பத்தியும் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில், கரும்பு, நெல் சாகுபடி நடந்தாலும், தினசரி வருமானம் தரும் எலுமிச்சையைப் பணப்பயிராகக் கருதுகிறார்கள் விவசாயிகள். தஞ்சாவூருக்கு நெல் என்றால், புளியங் குடிக்கு எலுமிச்சை என்கிற அளவுக்குத் தமிழகத்தில் எலுமிச்சை உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடத்தில் இருக்கிறது புளியங்குடி. அதனால் இதற்கு எலுமிச்சை நகரம் (லெமன்சிட்டி) என்ற பெயரும் உண்டு.

எலுமிச்சை விற்பனைக்காகவே இங்கு ஒரு சந்தை நடைபெற்று வருகிறது. அந்தச் சந்தையைப் பார்த்து வருவதற்காகச் சென்றோம். சைக்கிள், பைக், தள்ளுவண்டி, வேன் என மூட்டை மூட்டை யாக எலுமிச்சைகளை ஏற்றிக்கொண்டு `வழி... வழி... சார் வழி...’ எனக் குரல் கொடுத்துக்கொண்டே சந்தைக்குள் நுழைகிறார்கள் எலுமிச்சை விவசாயிகள். நாமும் உள்ளே நுழைந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் எலுமிச்சை ஏலம் முனைப்பாக நடந்துகொண்டிருந்தது.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்

புளியங்குடி எலுமிச்சை சந்தையின் செயலாளர் திருமலைச்சாமியைச் சந்தித்தோம். 30 வருஷத்துக்கு முன்னாடி எல்லாரோட வீட்டுலயும் தோட்டத்துலயும் எலுமிச்சை காய்ச்சது. வீடு வீடாப் போயி, எலுமிச்சை இருக்கான்னு கேட்டு அங்கேயே பேரம் பேசி மூட்டையில போட்டு, வியாபாரிகள் வெளியூர்களுக்குக் கொண்டு போயி விற்பாங்க. இதனால குறிப்பிட்ட சில விவசாயிகளிடம் மட்டும் ‘ரெகுலரா’ பழம் வாங்கினதுனால, அவங்களுக்கு நல்ல விலையும், மத்தவங்களுக்குக் குறைந்த விலையும் கிடைச்சுகிட்டு இருந்துச்சு. இந்தக் காலகட்டத்துலதான்... புளியங்குடி ‘மெயின் பஜார்’ல எலுமிச்சைக்காகச் சந்தை அமைக்கலாம்னு விவசாயிகள், வியாபாரிகள்கிட்ட சொன்னாங்க. அதை ஏத்துகிட்ட வியாபாரிகள் 1982-ம் வருஷம் சின்ன அளவுல கூரைக் கொட்டகைப் போட்டு ஏலத்தை நடத்துனாங்க. நாளடைவுல 10 கடைகள் கொண்ட கட்டடமா விரிவுபடுத்தப்பட்டது.

எலுமிச்சை வியாபாரிகள் ஒண்ணு சேர்ந்து இந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். 6 வருஷமா இங்க சந்தை இயங்கிட்டு வருது. இப்போ மொத்தம் 26 பெரிய கமிஷன் மண்டிங்க இருக்கு. நல்ல பருமன், நிறம் கொண்ட பழத்தை முதல் ரகமாகவும், நடுத்தரப் பருமன் கொண்ட பழத்தை இரண்டாவது ரகமாகவும், தோலில் பொட்டு (புள்ளி) போட்டபழம், அடிபட்ட பழம் இதையெல்லாம் ‘லாட்டு’னு மூணாவது ரகமாகவும் பிரிச்சு ஏலம் போடுறோம். விவசாயிங்களே பறிச்ச பழங்களை மூணு ரகமாகப் பிரிச்சுக் கொண்டு வந்துடுவாங்க.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்

வரவேற்பைப் பெற்ற புளியங்குடி எலுமிச்சை

இந்தச் சந்தையைப் பொறுத்தவரை திறந்த வெளி ஏலம்தான். மார்க்கெட்டுக்கு மூட்டை யில கொண்டு வரப்படும் எலுமிச்சைகளைக் கோணிச்சாக்கு விரிச்சு கீழே தட்டிவிடுவோம், தட்டிய காய்களைப் பரசிவிட்டு (கிளறிவிட்டு) ஏலம் விடுவோம். மற்ற ஊர் பழங்களைவிட புளியங்குடி எலுமிச்சைக்கு நல்ல கிராக்கி உண்டு. காரணம், மற்ற பழங்களைவிட அளவில் பெரியது, பிழிந்தால் சாறு அதிகமா வரும். ‘சிட்ரிக்’ அமிலத்தின் அளவும் அதிகம். பழத்தின் நீர்மைத் தன்மை குறைய 10 நாளாவது ஆகும். இதனால மூட்டையிலப் போட்டு பழுதில்லாம இல்லாம அனுப்புறதுக்கும் ஏற்றதாக இருக்குது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் இங்கிருந்து எலுமிச்சை போகுது. புளியங்குடி எலுமிச்சையை விற்பனையில் பிரபலப்படுத்தியதுல கேரளாவுக்குதான் பெரிய பங்கு இருக்கு. கேரளா வரைக்கும் லாரியிலும் திருவனந்தபுரத்திலிருந்து விமானம்மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுது.

எலுமிச்சை சந்தையில்
எலுமிச்சை சந்தையில்

எண்ணிக்கையிலிருந்து எடைக்கு...

தமிழகத்திலேயே எலுமிச்சைக்குன்னு தனி சந்தை உள்ள இடம் புளியங்குடி மட்டும்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தவிர, மத்த நாள்ல சந்தை உண்டு. காலையில 10 மணிக்கு ஆரம்பிக்குற ஏலம், மதியம் 2 மணிவரைக்கும் நடக்கும். ‘சீஸன்’ நாள்கள்ல மாலை 4 மணி வரைக்கும்கூட ஏலம் நடக்கும். ஒவ்வொரு வருஷமும் ஜனவரி முதல் ஜூன் வரை சீஸன் காலம். இதுல மார்ச் முதல் ஜூன் வரைக்கும் தான் சீஸன் உச்சத்துல இருக்கும். இந்த நாள்ல எலுமிச்சையோட விலையும் உச்சத்துல இருக்கும். ஆயிரம், ரெண்டாயிரம், ஐயாயிரம்னு பழங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து விற்பனை செஞ்சோம். இப்போ நாலு வருசமா கிலோவுல ஏலம் விடுறோம். முதல் தரம் ஒரு கிலோவுல 12 முதல் 15 பழங்கள் பிடிக்கும். ரெண்டாவது தரம், 30 முதல் 35 பழங்கள் பிடிக்கும். லாட்டுக்கு எண்ணிக்கை கிடையாது. `கூறு’ (சிறிய குவியல்) வச்சு நோக்கம் போல விற்போம்.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்

சாதாரண நாள்ல தினமும் 20 டன் பழம் வரத்து இருக்குதுன்னா, சீஸன்ல 4 மடங்கு வரும். சாதாரண நாள்ல தினமும் 20 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனையாகும். சீஸன் காலங்கள்ல 40 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனையாகும். ஒரு கிலோ பழத்தோட விலை, 35 ரூபாய்க்குக் கீழக் குறைஞ்சதே இல்ல. இதுவரைக்கும் அதிகபட்சமா ஒரு கிலோ 150 ரூபாய் வரைக்கும் விற்பனை யாயிருந்துச்சு. ஆனா, இந்த வருஷம் ஒரு கிலோ 210 ரூபாய் வரைக்கும் விற்பனையாயிருக்கு. வழக்கமா அக்டோபர், நவம்பர் மாசங்கள்ல எலுமிச்சை மரத்துல பூப்பூக்கும். அந்த மாசங்கள்ல இந்த வருஷம் அதிகப்படியா மழை பெய்ஞ்சதுனால பூக்கள் அதிகமா உதிர்ந்துடுச்சு. இதனாலதான் காய்கள் வரத்து குறைஞ்சுடுச்சு. இதுதான் இந்த வருஷ விலையேற்றத்துக்குக் காரணம்’’ என்றவர், ஊறுகாய் காய்கள் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்

ஊறுகாய்க்குப் பயன்படுத்தப்படும் `லாட்டு’

‘‘லாட்டு’ பழங்களை ஊறுகாய் போடுறதுக் காக வாங்கிட்டுப் போறாங்க. லாட்டுப் பழங்களை வாங்குறதுக்காகவே குடிசைத் தொழிலா ஊறுகாய் போட்டு விற்பனை செய்யுறவங்க 50 பேருக்கு மேல தினமும் வருவாங்க. இங்க இருக்குற எல்லா மண்டி யிலயும் போயி `லாட்டு இருக்காய்யா’ன்னு கேட்பாங்க. எலுமிச்சை விற்குற விலைவாசி யில முதல் தரமான பழம் வாங்கிப் போட்டா, யாரும் ஊறுகாய் வாங்கிச் சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு ஊறுகாய் விலை கூடிடும். லாட்டு பழத்துலயும் நல்ல பழமாத்தான் தேர்வு செஞ்சு ஊறுகாய்க்குப் பயன் படுத்துவாங்க.

வைகாசி, ஆனி, ஆடி மாசங்கள்ல லாட்டுப் பழம் வரத்து அதிகமா இருக்கும். அந்த மாசங்கள்ல அடிக்கிற காத்துல மரங்கள்ல கொப்புகள் ஒண்ணுக்கொண்ணு உரசி, முள் குத்தி பழம் கீழே விழும். வெயில்பட்டு வெதும்பிய பழங்களும் அதிகமா வரும்.

புளியங்குடி எலுமிச்சை சந்தையில்
புளியங்குடி எலுமிச்சை சந்தையில்


திறந்தவெளி ஏலம்... உடனடி பணம்

சந்தையில எலுமிச்சையை விற்பனை செய்ய வந்திருந்த புளியங்குடி அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்த எலுமிச்சை விவசாயி மாரியப்பனிடம் பேசினோம். ‘‘13 வருஷமா இயற்கை முறையில 5 ஏக்கர்ல எலுமிச்சை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். பழம் பறிச்ச பிறகு, நானே மூணு ரகமாப் பிரிச்சுக் கொண்டு வந்துடுவேன். யாரு எந்த மண்டி யிலனாலும் ஏலத்துல கலந்துக்கலாம். ஏலத்துல விலை பேசி முடிச்சதும் கையில பணத்தை எண்ணிடலாம். தினசரி வருமானம், உடனடி பணம், திறந்தவெளி ஏலம்ங்கிறதுனால விவசாயி, வியாபாரி ரெண்டு பேருக்குமே ஏமாற்றம் இல்ல. செவ்வாய், வெள்ளி, முகூர்த்த நாள், விசேஷ நாள், திருவிழா நாள்ல நல்ல விலை கிடைக்கும்.

தை, பங்குனி, சித்திரை, ஆடி மாசங்கள்ல கோயில் திருவிழாக்கள் தொடர்ச்சியா நடக்கும். அந்த மாசங்கள்ல வேண்டுதலுக்காக எலுமிச்சை மாலை போடுறதுக்குன்னு பழம் வாங்க வெளி மாவட்டங்கள்ல இருந்தெல்லாம் ஆளுங்க வருவாங்க. தேவை அதிகமா இருக்குறதுனாலதான் எலுமிச்சையை ‘தங்கப்பழம்’னு சொல்லுறோம். இயற்கை முறையில விளைஞ்ச பழம்கிறதுனால சந்தையில தனி விலையெல்லாம் கிடையாது. ஆனா, ஏலம் போடும்போது ‘மாரியப்பனோட ஆர்கானிக் லெமன்’ன்னு சொல்லி ஏலம் விடுவாங்க. அந்தப் பேரு மட்டும்தான். ஆனா, என்னோட தோட்டத்துக்கு நேரடியா வர்ற வியாபாரிங்க ஒரு கிலோவுக்குக் கூடுதலா மூணு ரூபாய் வரைக்கும் தருவாங்க” என்றார் மகிழ்ச்சியுடன்.

-பெருகும்

திருமலைச்சாமி, அந்தோணிசாமி
திருமலைச்சாமி, அந்தோணிசாமி

விவசாயிகள் விரும்பும் எலுமிச்சை!

புளியங்குடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி அந்தோணிசாமியிடம் பேசினோம். “புளியங்குடி எலுமிச்சைக்குத் தமிழகம் மட்டுமல்லாம வெளி மாநிலங்கள்லயும் நல்ல வரவேற்பு இருக்கு. இதைச் சுற்றியுள்ள பகுதிகள்ல இருக்கச் செம்மண் வளமும், தட்பவெப்பச் சூழலும்தான் எலுமிச்சை சாகுபடிக்கு ஏத்ததாக இருக்கு. தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள்ல 25,000 ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடி நடந்துகிட்டு வந்தாலும், புளிங்குடியில மட்டும் சுமார் 10,000 ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடி நடக்குது. அதிக பராமரிப்பு இல்லாதது, அதிக தண்ணீர்த் தேவை இல்லாதது, ஓரளவு வறட்சியையும் தாங்கி வளர்றதுனால எலுமிச்சை சாகுபடியை விவசாயிங்க விரும்புறாங்க.

ரசாயன முறை விவசாயத்தைவிட இயற்கை முறை விவசாயத்துல எலுமிச்சை மரத்தோட ஆயுசும் அதிகம். காய்க்கிற பழங்களோட எண்ணிக்கையும் அதிகம். ‘புடிச்சாலும் புளியங்கொம்பாப் பிடிக்கணும்’னு கிராமங்கள்ல சொல்லுற மாதிரி, ‘வித்தாலும் புளியங்குடிச் சந்தையில எலுமிச்சைய விற்கணும்யா’ன்னு எங்கள் பகுதியில சொல்லுவாங்க. பழத்துக்கேற்ற நியாயமான விலை இங்க கிடைக்கும்கிறதுதான் அதோட அர்த்தம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism