Published:Updated:

‘மலர் சாகுபடி செஞ்சா, வருமானத்துக்கு அலைய வேண்டாம்!’ துவளவிடாத தோவாளை மலர் சந்தை!

தோவாளை மலர் சந்தையில்
பிரீமியம் ஸ்டோரி
தோவாளை மலர் சந்தையில்

சாகுபடி... சரக்கு... சந்தை... விற்பனைக்கு வழிகாட்டும் சந்தை

‘மலர் சாகுபடி செஞ்சா, வருமானத்துக்கு அலைய வேண்டாம்!’ துவளவிடாத தோவாளை மலர் சந்தை!

சாகுபடி... சரக்கு... சந்தை... விற்பனைக்கு வழிகாட்டும் சந்தை

Published:Updated:
தோவாளை மலர் சந்தையில்
பிரீமியம் ஸ்டோரி
தோவாளை மலர் சந்தையில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை நூற்றாண்டுகளைக் கடந்த பாரம்பர்யமான மலர்ச் சந்தையைக் கொண்ட ஊர். பூ கட்டும் தொழில்தான் பல குடும்பங்களையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. கலை அறிவியல், பொறியியல் பட்டப்படிப்பு படித்துவிட்டு, பூ கட்டும் இளைஞர்களை இங்கு சர்வசாதாரண மாகக் காண முடிகிறது.

தினமும் அதிகாலை நேரத்திலேயே சூடு பிடித்து விடுகிறது இந்த மலர் சந்தை. உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் பூக்கள் போக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் டன் கணக்கில் பூக்கள் வந்து இறங்குகின்றன. அதை வாங்க ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள்.

இங்கிருந்து மொத்த வியாபாரத்துக்குத் தமிழகத்தின் பல ஊர்களுக்கும், தென் கேரளம் முழுமைக்கும் பலவகை மலர்களும் விற்பனைக்காகச் செல்கின்றன. மல்லி, பிச்சி, முல்லை, ரோஜா, செண்டுமல்லி, வாடாமல்லி, சம்பங்கி, அரளி, மாசிப்பச்சை, துளசி, தாமரை, தாழம்பூ… எனப் பூக்களின் வாசத்தை மிஞ்சி, அவற்றின் விற்பனை சத்தமும் காலைப் பொழுதை இதமாக்குகிறது.

தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

சில்லறை விற்பனைக்குப் பூக்களை வாங்கியவர்கள் ஒரு பக்கம் இருந்து அவற்றைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பூமாலை, சரம், மல்லிகை நெருக்கிக் கட்டுதல், இடைவெளி விட்டுக் கட்டுதல் என வகை, வகையாய் பூ கட்டும் பணி பரபரக்கிறது. இவற்றை வியாபாரிகளிடம் கொடுத்துப் பூக்கட்டுக்கான கூலியைப் பெற்றுக்கொள் கிறார்கள். அதில் இளைஞர்களின் வேகம் சிலிர்க்க வைக்கிறது. இன்னொரு பக்கம் கேரளம் நோக்கிப் பயணிக்கப் பனை யோலைக் கொட்டானில் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன மலர்கள்.

தோவாளை மலர்ச் சந்தையின் பாரம்பர்யம் குறித்து மொத்தப் பூ வியாபாரியான முத்துகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைஞ்சு இருந்தப்ப, அரண்மனையின் தேவைக்காகவும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உட்பட பல கோயில்கள்ல பூஜை செய்யுறதுக்காகவும் பூ சாகுபடி செய்ய இடம் தேடியிருக்கார் மகாராஜா. அப்போ, தோவாளை கிராமம்தான் பூ சாகுபடிக்கு உகந்ததுனு கண்டுபிடிச்சு, இங்க இருந்த காலநிலையைக் கணக்கிட்டு பூ சாகுபடியை ஆரம்பிச்சுருக்காங்க.

தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மருங்கூர், ஆவரைக்குளம்னு தோவாளைக் குப் பக்கத்துல இருக்குற கிராமங்கள்லயும் பூ சாகுபடி பரவுச்சு. பூ சாகுபடி செய்ய விவசாயிகளை மட்டுமல்ல, இன்னிக்கு இந்த ஊர்ல இருக்குற அத்தனை பேரையும் ‘பூ’தான் வாழ வச்சிட்டு இருக்கு. மல்லி, பிச்சி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, ரோஜா, கேந்தி (செண்டுமல்லி), அரளின்னு ஏகப்பட்ட பூக்களுக்கு இந்த மண், சாகுபடிக்கு ஏத்ததா அமைஞ்சிருக்கு. சுத்துவட்டார கிராமங்கள்ல இருந்து தோவாளை சந்தைக்குத்தான் பூவை விற்பனைக்குக் கொண்டு வருவாங்க.

முத்துகிருஷ்ணன்
முத்துகிருஷ்ணன்

திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள்ல இருந்தெல்லாம் வரத்து இருக்கு. மல்லி அதிகமா மதுரையில இருந்துதான் வரும். இந்தச் சந்தைக்கு வார விடுமுறையே கிடையாது. தினமும் காலையில 5 மணிக்கு ஆரம்பிக்கும். 11 மணியோட வியாபாரம் முடிஞ்சுடும். அதுக்குப் பிறகு, இங்க ஒரு ஆளைப் பார்க்க முடியாது.

இந்தச் சந்தை, இந்த இடத்துக்கு வந்து 30 வருஷம் இருக்கும். இதுக்கு முன்பு, தோவாளை ஊருக்குள்ளதான் இருந்துச்சு. இந்தச் சந்தைக்கு நூற்றாண்டைக் கடந்த வரலாறு இருக்கு. திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்துலயெல்லாம் தோவாளையிலிருந்து நடந்தே பத்மநாபசுவாமி கோயிலுக்கு பூக்களைக் கொண்டு போயிருக்காங்க.

தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

தோவாளை பக்கத்துல இப்ப குடியிருப்பு பகுதிகளாக இருக்குற பண்ணவிளை, கமல் நகர் எல்லாமே முன்னாடி பூந்தோட்டங்களா இருந்ததுதான். விவசாய வேலைக்கு ஆள்கள் குறைஞ்சதுனால படிப்படியா உள்ளூர்ல மலர் சாகுபடி குறைஞ்சது. ஆனாலும், வெளியூர்ல இருந்து தட்டுப்பாடு இல்லாம பூக்கள் வர்றதுனால சந்தை கன ஜோரா ஓடிக்கிட்டு இருக்கு. எல்லா வகைப் பூவையும் இங்க வாங்கிடலாம். ‘தோவாளைக்குப் போனா பூவை அள்ளிக்கிட்டு வரலாம்’னு சொல்வாங்க.

தினமும் 15-ல இருந்து 20 டன் வரைக்கும் பூக்கள் வருது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாசங்கள்லயும், புரட்டாசி நவராத்திரி, கார்த்திகை ஐயப்ப சாமி சீஸன், ஓணம், முகூர்த்த நாள்கள், பண்டிகை காலங்கள்ல 50 டன் வரைக்கும் பூக்கள் வரும். தினமும் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரையிலும், விசேஷ காலங்கள்ல ஒன்றரை கோடி ரூபாய் வரைக்கும் விற்பனை நடக்குது.

தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

இந்தச் சந்தையில 75 கடைகள் இருக்கு. 120 மொத்த வியாபாரிங்க இருக்கோம். அவுங்களைச் சார்ந்து 500 தொழிலாளர்கள் நேரடியா வேலைவாய்ப்பு பெற்று பணி செய்றாங்க. கேரள மாநிலம் கொல்லம் வரைக்கும் இங்க இருந்துதான் பூக்கள் போகுது. அந்த வகையில் 50 டிரைவர்கள் வேலை வாய்ப்பு பெற்று இருக்காங்க” என்றார்.

முருகன்
முருகன்

தோவாளையைச் சேர்ந்த விவசாயி முருகனிடம் பேசினோம். “தோவாளை சுத்து வட்டாரப் பகுதிகள்ல சுமார் 500 ஏக்கர் பரப்பளவுல மலர் சாகுபடி நடக்குது. மல்லி, பிச்சி, துளசி, முல்லை, சம்பங்கி, கேந்தி, கோழிப்பூதான் அதிகமா சாகுபடி செய்யப்படுது. தினமும் பறிக்கிற பூக்களைக் காலையில 8 மணிக்குள்ள சந்தைக்குக் கொண்டு வந்திடுவோம். பூக்களை எடை போட்டவுடனே கையில காசை எண்ணிட லாம். விவசாயம் செய்யப் பணம் இல்லாட்டாலும், இங்க உள்ள வியாபாரிங்க நம்பிக்கையின் அடிப்படையில முன் பணம் தர்றாங்க. அந்தப் பணத்தை வச்சு விவசாயத் தைச் செஞ்சு, அந்த வியாபாரிகிட்டயே பூவைப் போட்டுக் கடன் தொகையில கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுடுவோம். மலர் சாகுபடி செஞ்சா வருமானத்துக்கு மலைய (கவலை) வேண்டாம்’னு சொல்லுவாங்க” என்றவர் கொய்மலர் சாகுபடி குறித்தும் சொன்னார்.

தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

“குமரி மாவட்டத்துல கொய்மலர் சாகுபடி நாளுக்குநாள் அதிகரிச்சுட்டு இருக்கு. ‘ஹெலிகோனியா’ என்ற அழகு பூவுல ‘ட்ராபிக்ஸ், வேகினேரியா (ரெட்), வேகினேரியா (மஞ்சள்), அங்குஸ்டா, தக்கோமி, கென்யா ரெட்’ என 50-க்கும் மேல ரகங்கள் இருக்கு. இதுல சில ரகம் தினசரி பூக்கும். சில ரகம் வாரம் ஒரு முறையும், சில ரகம் 6 மாசத்துக்கு ஒருமுறையும் பூ பூக்கும்.

ஒரே ரகத்தை நடவு செஞ்சா சந்தை வாய்ப்பு இருக்காது. அதே நேரத்தில பல ரகங்களையும் கலந்து நடவு செய்தா வருஷம் முழுசும் வருமானம் கிடைக்கும். வாழை விளையுற மண்ணுல இந்தப் பூக்கள் வளரும். வாழைக்கு ஊடுபயிராவும் சாகுபடி செய்ய லாம். வாழையைப் போலவே இதுலயும் பக்கக்கன்னுகளும் வர்றதுனால செடி வாங்குற செலவு ஒரு தடவை மட்டும்தான். தோட்டத் தேவைக்குப் போக உபரிச் செடிகளை விற்பனையும் செய்யலாம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.

- பெருகும்

பூ மாலைகள்
பூ மாலைகள்
தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

பூ அலங்காரத்துக்கு தேசிய விருது!

வழக்கமாக மாலை, சரம் எனப் பல வகையான பூ கட்டும் முறைகள் இருந்தாலும் ‘மாணிக்கமாலை’ கட்டுவதற்கு மவுசு அதிகம். மாணிக்க மாலை கைவினை கலையின் பட்டியலில் வருகிறது. பின்னுதல் முறையில் இந்த மாலை கட்டப்படும். மாணிக்கமாலையை நான்கு தலைமுறையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள முத்தும்பெருமாள் குடும்பத்தினர். முத்தும்பெருமாளின் தந்தை மாடசாமி, சிறந்த கைவினை கலைஞருக்கான ‘ஜனாதிபதி விருது’ பெற்றவர். முத்தும் பெருமாளின் மனைவி தமிழரசி மாணிக்கமாலை கட்டுவதில் ‘சிறந்த கைவினை கலைஞர்’ என மாநில அரசின் விருதைப் பெற்றவர். முத்தும்பெருமாளின் மகள் வனிதாஶ்ரீயிடம் பேசினோம்.

தோவாளை மலர் சந்தையில்
தோவாளை மலர் சந்தையில்

‘‘தோவாளை மாணிக்கமாலை கைவினைக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்புல ‘தோவாளை மாணிக்கமாலை’க்கு புவிசார் குறியீட்டுக்காக விண்ணப்பிச்சிருக்கோம். பொதுவாகவே, தோவாளையில் குடியேறுன யாருமே கஷ்டம்னு சொல்லமாட்டாங்க. ஏன்னா, எல்லாரையுமே இந்தப் பூ பிழைக்க வெச்சுடும். நாலு நாள் பக்கத்துல இருந்து பார்த்தாலே சாதாரணமா பூ கட்டுறதைக் கத்துக்கலாம். மாணிக்கமாலை கட்டுறதுக்கும் எங்க சங்கம் மூலமா பலருக்கும் பயிற்சி கொடுத்துருக்கோம். இதுக்கும் நிறைய தேவை இருக்கு” என்றார்.

பூ கட்டும் தொழில்
பூ கட்டும் தொழில்
வனிதாஶ்ரீ
வனிதாஶ்ரீ

வீட்டுக்கு வீடு
பூ கட்டும் தொழில்!

தோவாளை கிராமத்தின் வீதிகளில் நடை போட்டால் பூ வாசம் வீசுகிறது. வீட்டுக்கு வீடு பூ கட்டும் தொழில் நடக்கிறது. மொத்த வியாபாரிகளிடமிருந்து பூக்களை வாங்கும் பெண்கள், தங்கள் வீடுகளில் வைத்து அவற்றைக் கட்டுகிறார்கள். வியாபாரிகளே வந்து இதைப் பெற்றுக் கொள்கிறார்கள். தோவாளையின் தெக்கூர் பகுதியில்தான் முதலில் பூ கட்டும் தொழில் நடந்து வந்தது. தொடர்ந்து தோவாளை வடக்கூர், பக்கத்து கிராமங்களான செண்பக ராமன்புதூர், தாழக்குடி, மருங்கூர் என இந்தச் சுற்றுவட்டாரமே இப்போது பூ கட்டுகிறது. தோவாளையிலிருந்து தொடங்கிய இத்தொழில், இப்போது நாகர்கோவிலிலும் பல பெண்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

மாலைகள்
மாலைகள்
பூ கட்டும் தொழில்
பூ கட்டும் தொழில்

சரம் கட்டுதல், மல்லிகைப்பூ நெருக்கிக் கட்டுதலே அதிகம் நடந்து வந்த நிலையில், தற்போது பெண்களே பூமாலை கட்டும் அளவுக்குத் தொழிலில் முன்னேறிவிட்டார்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் வீட்டு வேலை செய்தது போக, மீதி நேரங்களில் பூ கட்டுவதன் மூலம் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 600 ரூபாய் வரை சம்பாதித்துவிடுகிறார்கள். பூ கட்டுதலுக்காகச் செலவிடும் நேரத்தைப் பொறுத்து, இவர்களுக்குக் கிடைக்கும் தொகையும் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism