Published:Updated:

இயற்கை வேளாண்மை வளர இதுவும் முக்கியம்! நம்மாழ்வார் பயிற்றுநர் பயிற்சி கற்றுத் தந்த பாடம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

"அருமை, அற்புதம்’’ என்று என்னைப் பாராட்டியவாறே... ‘‘உங்களுக்கு மார்கன் ஃப்ரீமேனை (Morgan Freeman) முன்பே தெரியுமா?’’ என்று அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) பேராசிரியர், ஆளுமை குறித்த ஆன்லைன் வகுப்பில் கேட்டார் அந்தப் பேராசிரியர்.

இப்படி இவர் பாராட்டும் அளவுக்கு நான் பெரிதாக எதையும் சொல்லிவிடவில்லை. குரல் கம்பீரமாக இருக்க, ஒவ்வொரு நாட்டிலும் பின்பற்றப்படும் பழக்க, வழக்கங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ளச் சொன்னார் அந்தப் பேராசிரியர்.

உடனே, நான் சங்கு ஊதுவதுபோல ‘‘ஊ... ஊ... ஊ... ஆ... ஆ... ஆ...’’ என்று சங்கு ஊதுவதுபோல ஊதியும், வாயைப் பிளந்தும் சத்தம் எழுப்பினேன். இதற்காகத்தான் அந்தப் பேராசிரியர் வாய்மணக்கப் பாராட்டி தள்ளினார். மார்கன் பற்றியும் கேள்வி எழுப்பினார்.

ஆளுமை சம்பந்தமான பயிற்சியில் கம்பீரமான குரல்வளத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆளுமை மேம்படக் குரல்வளமும் அவசியம் என அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்துள்ளார்கள்.

ஆனால், பேராசிரியர் குறிப்பிட்ட மார்கன் யார் என்பது அந்த நிமிடத்துக்கு முன்பு வரை எனக்குத் தெரியது. வகுப்பு முடிந்தபிறகு, இணையத்தில் தேடிப்பார்த்தேன். அமெரிக்கர்கள் விரும்பும் சிறந்த குரல்வளம் கொண்ட நடிகர்தான் மார்கன். கம்பீரமான குரலில் (Deep Voice) பேசுவதில் வல்லவர். ஹாலிவுட் படங்களில் கடவுள் கதாபாத்திரங்களுக்கு இவர்தான் குரல் கொடுத்து வருகிறார். நம் ஊரில் ஜி.பி.எஸ் கருவிகளில் பெண் குரல் ஒலிப்பதுபோல, அமெரிக்காவில் மார்கன் ஃப்ரீமேன் குரல்தான் ஒலித்துக்கொண்டுள்ளது. குறிப்பாகப் பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகம்... என்று இவரைப் பற்றிப் பல கட்டுரைகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவர் குரல்வளத்துக்காக செய்துவரும் பயிற்சியினைத்தான் அப்போது நானும் செய்து காட்டியிருக்கிறேன் என்று பிறகுதான் தெரிந்தது.

சரி, ‘‘இது உங்களுக்கு எப்படித் தெரியும்’’ என்றுதானே கேட்கிறீர்கள்?

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

எல்லாப்புகழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கும் பசுமை விகடனுக்கும்தான் சேரும். 2008-ம் ஆண்டுப் பசுமை விகடன் மூலம் நம்மாழ்வார் தலைமையில் ‘இயற்கை வேளாண்மை பயிற்றுநர் பயிற்சி வகுப்பு’ பல மாவட்டங்களில் நடத்தினோம். இன்று இயற்கை வேளாண்மை பற்றி, அரசும் பல்கலைக்கழகங்களும் பேசுவதற்கு, அந்தப் பயிற்சி வகுப்புகள் அடிப்படைக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பயிற்றுநர் பயிற்சியில் கலந்து கொண்டவர்களே, இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டும் முன்னோடி இயற்கை விவசாயிகளாக வளர்ந்து நிற்கிறார்கள். அப்படித்தான், புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டியிலிருக்கும் கொழிஞ்சி பண்ணையில் பயிற்றுநர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியில் இயற்கை விவசாயம் மட்டும் சொல்லிக் கொடுக்கமாட்டார், நினைவாற்றலை வளர்ப்பது, குழுவாகப் பணியாற்றுவது, தகவல் தொடர்பு... எனப் பல பயிற்சிகளும் இடம்பெறும். அப்படித்தான், பயிற்றுநர்களாக இருப்பவர்கள் நன்றாகப் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

‘‘நம்ம அண்ணன் இளங்கோவன், நல்ல பேச்சாளர். நிறைய படிக்கச் சொல்வார். என்னைப்போலச் சிறு வயது பையன்களுக்குப் பேசவும் பயிற்சிக் கொடுப்பார். இரண்டு கையும் சங்குபோல வைத்துக்கொண்டு ஊதச் சொல்வார். வாயை திறந்து, திறந்து மூடச் சொல்வார். நம்மாழ்வார் குரல் நல்லா இருக்கிறதும், நான் பேசுவதை நான்கு பேர் காதுகொடுத்துக் கேட்கிறதுக்கும், அண்ணன் கொடுத்த பயிற்சிதான் அடிப்படைக் காரணம்’’ என்று பயிற்சியின்போது சொன்ன நம்மாழ்வார், சங்குபோல ஊதியும் காண்பித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செய்து காட்டியபோது, கூட்டத்தில் ஒருவனாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். இப்படி அமெரிக்கா பேராசிரியர் பாராட்டும் அளவுக்கு அதில் விஷயம் உள்ளதை அறிந்தபோது, ஆச்சர்யமாக இருந்தது.

சென்னையில் உள்ள பிரபல காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் குமரேசனை சமீபத்தில் சந்தித்தபோது, குரல்வளம் தொடர்பாக அமெரிக்கப் பேராசிரியர் பாராட்டியதையும், முன்பு நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்ததையும் பகிர்ந்தேன். தன் மருத்துவமனையில் குரல் சிகிச்சை அளிக்கும் அறைக்கு அழைத்துச் சென்றவர், அங்கிருந்த பெரிய சங்கை எடுத்துக் காட்டினார்.

டாக்டர் குமரேசன்
டாக்டர் குமரேசன்

‘‘அந்த காலத்தில் ஒலிப்பெருக்கி கருவிகள் கிடையாது. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் சத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். அதற்குப் பயிற்சி அளிக்கப் பல ஆண்டுகளாகச் சங்கு பயன்பாட்டிலிருந்துள்ளது. சங்கு என்பது ஒலி கொடுக்கும் பொருள் மட்டுமல்ல; குரலைச் செம்மைப்படுத்தும் கருவியும் கூட. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக இருந்த போது, தாமிரபரணி ஆற்றில் சங்கு மண்டபத்தைப் பார்த்து எனக்கு வியப்பு ஏற்பட்டது.

தாமிரபரணி ஆற்றின் நடுவே பல சங்கு கல் மண்டபங்கள் இருந்துள்ளன. அதன் பயன் அறியாமல், அதை பராமரிக்காமல் இழந்துவிட்டோம். இன்று பெயருக்கு ஒரு சங்கு கல் மண்டபமே இருக்கிறது. மூன்று பக்கமும் திறந்த வெளியும், தண்ணீர் வரும் எதிர்த்திசையில் மட்டும் கல் வைத்து அடைக்கப்பட்டு இருக்கும். அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோல் தோற்றம் அளிக்கும். அதனாலேயே இதற்குச் சங்கு கல் மண்டபம் எனப் பெயர் வந்தது. ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுத் தண்ணீர் மட்டம் உயரும்போது, அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால் வெள்ளத்தின் அழுத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்தச் சங்கு சப்தம் எழுப்பும். இது சுற்றுவட்டார மக்களுக்கான எச்சரிக்கை.

சங்கு மண்டபம்
சங்கு மண்டபம்

இதனைக் குறிப்பால் உணர்ந்து ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் உயரமான இடங்களுக்குச் சென்று விடுவார்கள். அதேபோல் தண்ணீர் மிக அதிகமானால் இந்தச் சங்கு அமைப்பையே மூழ்கடித்து விடும். இது உச்சபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் தண்ணீர் கொஞ்சம் வடிந்ததும் மீண்டும் சத்தம் கேட்கும். அந்தச் சத்தம் தண்ணீர் குறைய குறைய குறையும். இதன் பலன் இன்றைய தலைமுறைக்குத் தெரியவே இல்லை. ஆயிரம் சொன்னாலும் நம் தமிழர்களின் பாரம்பர்ய அறிவை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இருக்கும் இந்த மண்டபம் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றது’’ என்றவர், மருத்துமனைக்குள் இருக்கும் பயிற்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்.

சில இளைஞர்கள் சத்தமாகக் குரல் கொடுத்தபடி இருந்தார்கள். ‘‘தன் குரல் பெண்குரல் போல உள்ளது என்று சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் வெளி உலகத்துக்கு வராமல் முடங்கிப் போய்விடுகிறார்கள். இப்படி மகரக் கட்டு உடையாமல் பெண் குரலில் பேசுபவர்களின் குரலை, அறுவை சிகிச்சை இல்லாமல், கம்பீரமான ஆண் குரலாக மாற்றி வருகிறேன். இதற்குச் சங்கு ஊதுவதுதான் முதல் பயிற்சி’’ என்றவர், நடிகர் சிவாஜி கணேசன் சிம்மக்குரலில் பேசுவதற்கு என்ன பயிற்சி செய்தார், இந்தி நடிகர் அமிதாப்பச்சனை தான் சந்தித்தபோது என்ன சொன்னார், சொல்வன்மையுடன் சிறந்த பேச்சாளராக என்ன செய்ய வேண்டும்.... என்பதைப்பற்றியெல்லாம் மணிக்கணக்கில் அரிய, அற்புதமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் டாக்டர் குமரசேன். வாய்ப்புக் கிடைக்கும்போது, அதையும் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை வேகமாகப் பரவப் பேச்சும், எழுத்தும்தான் அடிப்படையாக இருந்தது வருகிறது. எந்த ஓர் இயக்கமும் வெற்றி பெற பேச்சுதான் அடிப்படை கருவியாக இருந்து வருகிறது என்கின்றன பல ஆய்வுகள்.

‘‘மனிதக் கண்டுபிடிப்புகளில் முதன்மையானதும் மனிதனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும் பேச்சுதான்’’ என்று ‘சேப்பியன்ஸ்’ (Sapiens) நூலில் பல்வேறு எடுத்துக்காட்டுக்களுடன் சொல்கிறார் யுவால் நோவா ஹராரி. அறிவுஜீவிகளால் கொண்டாடப்பட்டும் இந்தப் புத்தகம், உலகளவில் அதிகம் விற்பனையான நூல் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

கலியமூர்த்தி
கலியமூர்த்தி

பேச்சுதான் உலகை ஆள்கிறது என்பதற்கு இன்றைய யூடியூப் சேனல்களே நல்ல உதாரணம். எனக்கு தெரிந்த சில மூத்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அரிய தகவல்களை பேசி வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதை சில நூறு பேர்களுக்கு மேல் பார்ப்பதில்லை. அதேசமயம், எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்ற நுணுக்கம் தெரிந்தவர்கள், நம் எல்லோருக்கும் தெரிந்த தகவல்களையே நேர்த்தியாக பேசி, பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுவருவதையும் பார்க்க முடிகிறது.

முறுக்கு மீசை வைத்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் இனிக்க, இனிக்கத் தமிழ் பேசுவதை அடிக்கடி வாட்ஸ் அப்பிலும் யூடியூப்பிலும் பார்த்திருப்போம். அவர் பெயர் அ.கலியமூர்த்தி. தமிழர்கள் உள்ள நாடுகளுக்குப் பறந்து, பறந்து சென்று உரையாற்றி வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் இவரின் பேச்சைக் கேட்கக் காத்துக்கிடக்கிறார்கள். இவர் பேச்சை உற்றுக் கவனித்தால், நம்மாழ்வார் பேச்சு சாயல் தெரியும்.

‘‘என் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலிருக்கும் பூதலூர். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். சிறு வயதில் இவர் மேடையில் பேசுவதை மெய்மறந்து கேட்டுள்ளேன். திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியத்தை மக்களும் புரியும்படி எளிமையாகப் பேசுவார். இவர்தான் பேச்சுக்கலையில் எனக்கு முன்னோடி. பின்னாளில் திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏ(தி.மு.க) பதவியிலும் கூட இருந்தார். என் உரை உலகம் புகழ விதைப்போட்டவர்’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். இந்த இளங்கோவன் வேறு யாருமல்ல, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் அண்ணன்தான்.