Published:Updated:

இயற்கை வழி வேளாண்மை மிளகாய்க்குத் தேவை இருக்கு!

விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி

விற்பனைக்கு வழிகாட்டும் விருதுநகர் சந்தை!

இயற்கை வழி வேளாண்மை மிளகாய்க்குத் தேவை இருக்கு!

விற்பனைக்கு வழிகாட்டும் விருதுநகர் சந்தை!

Published:Updated:
விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி

மிழகத்தின் முக்கிய வணிக நகரான புகழ்பெற்ற விருதுநகரில் இயங்கி வந்த சந்தைகளைப் பற்றியும், அவற்றின் செயல் பாடுகள் பற்றியும், விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இதில், மிளகாய் வத்தல் விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.

விருதுநகரில் மிளகாய் வத்தல் மண்டி நடத்தி வரும் ஏ.வி.டி டிரேடர்ஸின் உரிமை யாளர் சண்முகவேலைச் சந்தித்துப் பேசினோம். “உணவுல சேர்க்கப்படுற மசாலா வின் மூலப்பொருளாகவும், சுவையூட்டி யாகவும் மிளகாய் பயன்படுது. இதில், ‘கேப்சைசின்’(Capsaicin) அதிகமா இருக்குற தால இதைச் சாப்பிடும்போது காரத் தன்மையை நம்மால உணர முடியுது. பச்சை நிறத்தில இருந்து சிவப்பு நிறத்துக்கு மாறி, காய்ஞ்சு மிளகாய் ‘வத்தல்’ ஆகுது. தென் மாவட்டங்கள்ல விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்ல பரவலாவும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள்ல குறிப்பிட்ட பகுதிகள்லயும் மிளகாய் சாகுபடி செய்யப்படுது. இறவை பாசனத்தைவிட மானாவாரி விவசாய நிலங்கள்லதான் அதிகமா சாகுபடி நடக்குது.

இறவை, மானாவாரியில ‘சாத்தூர் சம்பா’, ‘ராமநாதபுரம் குண்டு’, ‘விளாத்தி குளம் குண்டு’, ‘நம்பியூர் குண்டு’ ஆகிய நாட்டு ரகங்கள்தான் அதிகமா சாகுபடி செய்யப்பட்டுச்சு. அதுக்குப் பிறகு, கே-1, கே-2, பி.கே.எம்-1, பி.கே.எம்-2 ஆகிய வீரிய ரகங்களுக்கு விவசாயிங்க மாறினாங்க. இதுல, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கே-1, கே-2 ரகங்கள்தான் அதிகமா சாகுபடி செய்யப் பட்டுச்சு. இந்த ரெண்டு ரகங்கள்லயும் ‘கேப்சைசின்’ங்கிற காரத்தன்மை அதிகமா இருக்கு. இது தவிர, கடற்கரையோரப் பகுதிகள்ல பி.எல்.ஆர்-1 சாகுபடி செய்யப்படுது.

விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி
விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள்ல குண்டு மிளகாயும், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள்ல சம்பா மிளகாயும் பயிரிடப்படுது. மானாவாரி விவசாயிங்களோட முக்கியப் பணப்பயிரே மிளகாய்தான். ஒவ்வொரு வருஷமும் மார்ச் முதல் ஜூன் வரைக்கும் இந்த நாலு மாசத்துலதான் மிளகாய் வத்தல் வரத்து இருக்கும். 30 வருஷத்துக்கு முன்னயெல்லாம் தினமும் 3,000 முதல் 5,000 மூட்டை மிளகாய் வத்தல் வந்து இறங்குச்சு. தென் மாவட்டங்கள் மட்டுமல்லாம மற்ற மாவட்டங்கள்ல இருந்தும் வந்து இறங்குச்சு. விருதுநகர்ல இருந்து ‘கூட்ஸ்’ ரயில்ல மிளகாய் வத்தல் மூட்டைகளைப் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம். 1967-லயே விருதுநகர்ல மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்கத்தைத் தொடங்கிட்டோம்.

ஆரம்பக் காலத்துல மாட்டு வண்டிகள்ல அம்பாரமா ஏத்திக்கிட்டு வருவாங்க. மாரியம்மன் கோயில் பொட்டல்ல மூட்டை களை இறக்கிட்டு, துண்டு போட்டு விலை பேசுவாங்க. ஒரு பக்கம் வத்தல் மூட்டைகள், இன்னொரு பக்கம் மாட்டுவண்டிகள்னு இது வத்தல் சந்தையா, மாட்டுச்சந்தையான்னு திகைச்சுப் போகுற அளவுக்கு, வண்டிகள் வரிசைகட்டி நிற்கும். அதுக்குப் பிறகு பஸ், லாரிகள்ல மூட்டைகள் வர ஆரம்பிச்சது. மிளகாய் வத்தலின் நெடி வீசி அடுக்குத் தும்மல் வரும்கிறதுனால, வத்தல் ‘சீஸன்’ மாசங்கள்ல மண்டிப் பக்கம் யாரும் வர மாட்டாங்க. நெடிக்கு பயந்து நாலு தெரு சுத்திதான் போவாங்க. அப்படியே போனாலும் மூக்குல துணியைச் சுத்திக்கிட்டுதான் போவாங்க.

விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி
விருதுநகர் மிளகாய் வத்தல் மண்டி

‘சேட்டை பண்ணாம ஒழுங்கா சாப்புடு. இல்லேன்னா வத்தல் மண்டியில பிடிச்சுக் குடுத்துருவேன். வத்தலை கண்ணுல தேய்ச்சு விட்ருவாங்க’ன்னு சொல்லி, சின்ன குழந்தைகளைத் தாய்மார்கள் மிரட்டி வைப்பாங்க. வத்தலின் நீளம், நிறத்தை வச்சுதான் தரம் பிரிப்போம். மூட்டையில இருந்து ஒரு கை வத்தலை அள்ளிப் பார்த்தாலே பதம் தெரிஞ்சிடும். ஊரு பேரைக் கேட்டாலே, பதம் எப்படி இருக்கும்னு ஓரளவு யூகிச்சுக்கலாம். விவசாயிங்ககிட்ட இருந்து வாங்குற வத்தலை குடோன்ல இருப்பு வச்சு வெளியூர், வெளி மாநிலங்களுக்கு ஏத்திவிடுவோம். தரம் பிரிச்ச மிளகாய் வத்தலை அப்படியே ஏத்திவிடாம, வத்தல்ல காம்புகளைக் கிள்ளி, காம்பு நீக்கப்பட்ட வத்தல்னு தனியா ஒரு தரத்தை அறிமுகப்படுத்திய பெருமை விருதுநகர் வியாபாரிகளையே சேரும். இதுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர்ல நல்ல வரவேற்பு கிடைச்சது. காம்பு நீக்கப்பட்ட வத்தலுக்கு, ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரைக்கும் கூடுதலாக் கிடைச்சது.

நீக்கப்பட்ட காம்புகளையும் ஒரு கிலோ 20 ரூபாய்ல இருந்து 30 ரூபாய்க்கு உள்ளூர் விவசாயிங்ககிட்ட விற்பனை செஞ்சோம். இந்தக் காம்புகளைத் தென்னை, மா, கொய்யா உள்ளிட்ட பயிர்களுக்கு மூடாக்கா போடுவாங்க. சில சமயங்கள்ல தொழுவுரத்தோட சேர்த்து அடியுரமாவும் வைப்பாங்க. தரம்பிரிக்கும் போதும், காம்பு நீக்கும் போதும் கிடைக்கிற மிளகாய் விதையைச் சேகரிச்சு, அதையும் விற்பனை செஞ்சுடுவோம்.

விருதுநகர் சந்தையில மூட்டையை இறக்கி எடை மெஷின்ல ஏத்துன அடுத்த நிமிஷமே கையில பணத்தை எண்ணிடலாம்.

ஒரு கிலோ மிளகாய் வத்தலைப் பொடியாக்கிறதுக்குப் பதிலா, 500 கிராம் மிளகாய் வத்தலுடன், 250 கிராம் மிளகாய் விதையைச் சேர்த்து பொடியாக்கினாலே காரத்தோட அளவு சமமா கிடைக்கும். இந்த காரணத் துக்காக மிளகாய் விதைக்கு நல்ல கிராக்கி உண்டு. குடிசைத் தொழிலா மிளகாய் வத்தலைப் பொடியாக்கி பாக்கெட் போட்டு விற்பனை செய்யுறவங்க சீஸனுக்கு முன்னாலயே மிளகாய் விதைக்காக முன்பணம் கொடுத்துடுவாங்க.

எந்த ஊர்ல விளைஞ்ச மிளகாய்னாலும் வத்தலா மதிப்புக்கூட்டின பிறகு, விருதுநகர் சந்தைக்குத்தான் விற்பனைக்காகக் கொண்டு வருவாங்க. காரணம், மூட்டையை இறக்கி எடை மெஷின்ல ஏத்துன அடுத்த நிமிஷமே கையில பணத்தை எண்ணிடலாம். அது மட்டுமல்லாம ஒரு கிலோவுக்குக் குறைஞ்சது கூடுதலா 5 ரூபாயாவது கிடைக்கும். இதுக்காகவே 10 விவசாயிங்க ஒண்ணா சேர்ந்து டிராக்டர்ல மிளகாய் வத்தல் மூட்டைகளை ஏத்திக்கிட்டு இங்க தான் வருவாங்க.

தமிழ்நாட்டுல இருந்து ஆந்திரா மாநிலம் குண்டூருக்கு அனுப்பின காலமெல்லாம் உண்டு. ஆந்திராவுல மிளகாய் சாகுபடி பரப்பளவு அதிகமானதும் விலை நிர்ணயம் விருதுநகரை விட்டுப் போச்சு. ஆந்திராவுல என்ன விலைன்னு கேட்டுட்டுதான் இங்க விலை சொல்ல வேண்டியிருக்கு. காலப் போக்குல விருதுநகர் மாவட்டத்துல சாத்தூர், ராஜபாளையம், தூத்துக்குடி மாவட்டத்துல விளாத்திகுளம், ராமநாதபுரம் மாவட்டத்துல கமுதி, முதுகுளத்தூர், தென்காசி மாவட்டத்துல சங்கரன்கோவில் ஆகிய பகுதிகள்ல சின்னச் சின்ன மார்க்கெட்டுகள் வர ஆரம்பிச்ச உடனே வியாபாரி கள் அந்தந்தப் பகுதிகள்லயே விற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இருந் தாலும் விருதுநகர் சந்தைக் கான மவுசு இன்னும் குறையல” என்றார்.

விருதுநகர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பழனிக்குமாரிடம் பேசினோம். “20 வருஷத்துக்கு முன்னால யெல்லாம் தமிழ்நாட்டுல ஒரு ஏக்கருக்கு மானாவாரியிலயே 8 முதல் 10 குவிண்டால் வரைக்கும் மகசூல் கிடைச்சது. படிப்படியா குறைஞ்சு இப்போ 5 குவிண்டால் கிடைச்சாலே பெருசு. அதிக மகசூலுக்காக நாட்டுரக மிளகாயை விட்டுட்டு வீரிய ரக மிளகாயை சாகுபடி செய்ய ஆரம்பிச்சது தான் மகசூல் சரிவுக்குக் காரணம். அதுலயும் விதைகளைக்கூட வாங்காம, மிளகாய் வத்தல் மூட்டைகள்ல இருந்து உதிரும் விதைகளையே திரும்பவும் சாகுபடிக்காகப் பயன்படுத்தினா மகசூல் எப்படி இருக்கும். ரசாயன உரப் பயன்பாடும் மகசூல் குறைவுக்கு ஒரு காரணம். ஆனா, ஆந்திராவுல ஒரு ஏக்கருக்கு மானாவாரியாவே 15 முதல் 20 குவிண்டால் வரைக்கும் இப்பவும் மகசூல் கிடைச்சுகிட்டு இருக்குது.

 சண்முகவேல், பழனிக்குமார்
சண்முகவேல், பழனிக்குமார்

ஆந்திர மாநில அரசின் வேளாண்மைத்துறை சார்பில் மிளகாய் சாகுபடிக்காகப் புதிய ரகங்களைத் தொடர்ந்து அறிமுகப் படுத்திக்கிட்டே இருப்பதுதான் அங்க மிளகாய் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கிறதுக்குக் காரணம். ஆனா, நம்ம மாநில அரசு, தென்மாவட்ட விவசாயிகளோட முக்கியப் பணப் பயிரான மிளகாயில் புதிய ரகங்களை அறிமுகப் படுத்துறதுல பெரிய ஆர்வம் காட்டல. சமீபகாலமா ஆந்திராவுக்குப் போயி மிளகாய் விதையை வாங்கிட்டு வந்து விதைச்ச விவசாயிகளையும் பார்த்திருக்கேன்.

மானாவாரியா இருந்தாலும் சரி, இறவைப் பாசனமா இருந்தாலும் சரி ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாத மிளகாய் வத்தலைத்தான் வெளிநாடுகள்ல அதிகம் விரும்புறாங்க. சந்தை விலையை விடக் கூடுதலா 30 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. ஆனா, இயற்கை முறையில விளையவச்ச மிளகாய் வத்தல் வரத்து மிகக்குறைவுதான்.

வத்தல் வியாபாரிகள் சங்கத்துல மிளகாய் சாகுபடி செய்யுற விவசாயிகளை அழைச்சு, இயற்கை முறையில மிளகாய் சாகுபடி செய்யுறது குறித்து மூணு முறை விழிப்புணர்வுக்கூட்டம் நடத்தியிருக்கோம். பெரும் பாலான விவசாயிகள், மனசுல ரசாயன உரம் போடாம மகசூல் எடுக்க முடியாதுங்கிறதுல உறுதியா இருக்காங்க. ஆனா, சந்தையில் தேவை, கூடுதல் விலைங்கிறதைப் புரிஞ்சு கிட்டு இளம் விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி வர்றது ஆறுதலா இருக்குது.

மிளகாய் சாகுபடி செஞ்சுகிட்டு வந்த விவசாயிங்க, பருத்தி, மக்காசோளத்துக்கு மாறினதும், மிளகாய் சாகுபடி பரப்பு குறைய ஒரு காரணம். இப்போ சம்பா மிளகாய் வத்தல் ஒரு கிலோ 175 ரூபாய் முதல் 190 ரூபாய் வரையிலும், குண்டு மிளகாய் வத்தல் 200 முதல் 220 ரூபாய் வரைக்கும் விலை போகுது. இந்த ரெண்டு ரகத்தையும் இயற்கையில சாகுபடி செஞ்சா ஒரு கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலா விலை கிடைக்குது.

மிளகாய் வத்தலை பொடியா மட்டு மல்லாம மிளகாய் வத்தல் பேஸ்ட், மிளகாய் வத்தல் எண்ணெய், சாஸ் என மதிப்புக் கூட்டினால் சந்தையில அதிக தேவை இருக்கு” என்று சொல்லி முடித்தார்.

- பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism