Published:Updated:

அலங்கார மீன், தேனீ வளர்ப்பு, மாதம் ரூ.80,000

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேனீப் பெட்டிகளுடன் விஷ்ணு மனோகரன்
தேனீப் பெட்டிகளுடன் விஷ்ணு மனோகரன் ( நா.ராஜமுருகன் )

பண்ணைத்தொழில்

பிரீமியம் ஸ்டோரி

கிராமங்களை விட்டுப் பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர்களில் பலர், தற்போது தங்களது வேர்களான கிராமங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருக்கிறார் விஷ்ணு மனோகரன்.

எம்.எஸ்ஸி, பயோடெக்னாலஜி முடித்துவிட்டு, சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். ஒரு கட்டத்தில் அதைத் துறந்துவிட்டு, கடந்த 10 வருடங்களாகச் சொந்த ஊரில் இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கரூர் நகரத்தையொட்டி இருக்கும் செட்டிப்பாளையத்தில் இருக்கிறது அவரது பண்ணை. அங்கே மீன்களுக்கு உணவிட்டுக்கொண்டிருந்த விஷ்ணு மனோகரனைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றுப் பேசியவர்,

தேனீப் பெட்டிகளுடன் விஷ்ணு மனோகரன்
தேனீப் பெட்டிகளுடன் விஷ்ணு மனோகரன்

“எங்களுக்கு பூர்வீகத் தொழில் விவசாயம்தான். இருந்தாலும், எங்கப்பா என்னைப் படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்ப நினைச்சார். அமராவதி ஆற்றங்கரையில எங்க வீடு இருந்ததுனால, சின்ன வயசுல இருந்தே மீன் பிடிக்கிறது, தினமும் மீன்களைப் பார்க்குறதுனு பொழுது போகும். அதனால, சின்ன வயசுல இருந்தே மீன்கள் மேல ஓர் ஈடுபாடு. இந்த நிலையில, 2007-ம் வருஷம் எம்.எஸ்ஸி பயோடெக்னாலஜி முடிச்சுட்டு, சென்னையில் ஒரு கம்பெனியில ரெண்டு வருஷம் வேலைபார்த்தேன். பிறகு, 2009-ம் வருஷம், தனியார் மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். இருந்தாலும், என்னோட மனசு முழுக்க ஊரையே சுத்தி வந்துச்சு. அதனால, வேலைபார்த்துக்கிட்டே, 2009-ம் வருஷத்துல இருந்து, சாயப்பட்டறை தொட்டிகளை வாடகைக்குப் பிடிச்சு, ஊர் ஆளுங்களை வெச்சு அலங்கார மீன்களை வளர்க்க ஆரம்பிச்சேன்.

அலங்கார மீன் வளர்ப்பு

அதை, கரூர், கோவை, நாமக்கல், ஈரோடுனு கடைகள்ல விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷத்துல மீன் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிச்சது. பிறகு, சென்னை வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். கப்பி, மோலி, பிளாட்டி, கோல்டு ஃபிஷ் உள்ளிட்ட மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பதை முழுநேரமா பண்ண ஆரம்பிச்சேன்.

2011-ம் வருஷத்துல இருந்து நானே கரூர்ல அலங்கார மீன்கள் விற்பனைக் கடையை ஆரம்பிச்சு, மீன் குஞ்சுகளை விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். அதன்பிறகு, 2012-ம் வருஷம், இந்த இடத்தில 3 லட்சம் ரூபாய் முதலீடு போட்டு, 25 சிமென்ட் தொட்டிகளை அமைச்சேன். அதுல, 3 அடி ஆழம், 5 அடி நீளம், 5 அடி அகலம் உள்ள தொட்டிகள் 20 எண்ணிக்கையிலும்; 10 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள தொட்டிகள் 5 எண்ணிக்கையிலும் அமைச்சேன். வட்டத் தொட்டிகள், தாழி மாதிரியான தொட்டிகள்னு இன்னும் கூடுதலா தொட்டிகள அமைச்சேன். அதுல வெச்சு அலங்கார மீன்களை வளர்த்து, குஞ்சுகளைப் பெருக்கி விற்பனையை ஆரம்பிச்சேன்’’’ என்றவர் தேனீ வளர்ப்பைத் தொடங்கியதை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

மீன் வளர்ப்பு தொட்டிகள்
மீன் வளர்ப்பு தொட்டிகள்

தேனீ வளர்ப்பு

‘‘2013-ம் வருஷம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுச்சு. மீன் விற்பனை சுணங்க ஆரம்பிச்சது. உடனே, தேனீக்கள் வளர்க்கணும்ங்கிற ஆர்வம் வந்துச்சு. 25,000 ரூபாய் முதலீட்டுல, 10 தேனீப் பெட்டிகளை வாங்கிட்டு வந்து, தோட்டத்தில அங்கங்கே வெச்சேன். ஆனா, பெட்டிகள்ல இருந்த தேனீக்கள்ல பாதிக்கு மேல பறந்துபோயிடுச்சு. பிறகு, கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்துல நடத்துற தேனீ வளர்ப்பு பயிற்சிகள்ல கலந்துகிட்டேன். அதோடு, தேனீக்கள் சம்பந்தமான தகவல்களைத் தேடித் தேடி படிக்க ஆரம்பிச்சேன். இருந்தாலும், தேனீ வளர்ப்பு முழுமையான வெற்றியைத் தரல. தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். அதன்மூலமாக, தேனீ வளர்ப்பின் நுணுக்கங்களை கத்துக்க முடிஞ்சது. பிறகு, எல்லாப் பெட்டிகளிலும் தேனீக்கள் தங்க ஆரம்பிச்சுச்சு.

நான் தேன் உற்பத்தியைவிட, தேனீக்களை உற்பத்தி பண்ணி, தேனீப் பெட்டிகளாக விவசாயிகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். அடுத்து, கொசுத்தேனீக்களை வளர்க்க ஆரம்பிச்சேன். அதுவும், பலன் தர ஆரம்பிச்சது. தொடர்ந்து, கொம்புத்தேன், இத்தாலி தேனீக்களையும் வளர்த்து, உற்பத்தியைப் பெருக்கி, தேன் பெட்டிகளோடு சேர்த்து விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

இதுல, இத்தாலி தேனீக்கள் வளர்ப்பு மட்டும் கொஞ்சம் பிரச்னை கொடுத்துச்சு. அதனால, அதை மட்டும் இப்ப நிறுத்தி வெச்சிருக்கேன். தேனீக்களை உற்பத்தி பண்ணி, ராணித்தேனீயோட சேர்த்து கொடுக்க 3 மாசமாகிடும். இப்ப, 250 தேன் பெட்டிகள் என்னோட தோட்டத்துல இருக்கு. தேன் விற்பனையும் செய்றேன். அடுத்து, மலைத்தேனீ வளர்க்கிறதுக்கான வேலைகள பண்ணிக்கிட்டு இருக்கிறேன்” என்றவர், மீண்டும் அலங்கார மீன் வளர்ப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“2014 வரை அலங்கார மீன்களை உற்பத்தி பண்ணி, சொந்த கடை மூலமா மட்டும் விற்பனை பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனால், மீன் குஞ்சுகள் உற்பத்தி, தேனீக்கள் உற்பத்தி, கடை வியாபாரம்னு மூணையும் பார்த்துக்க சிரமமா இருந்துச்சு. அதனால, கடையை மூடிட்டேன். பழையபடி, கரூர், ஈரோடு, வெள்ளக்கோவில், நாமக்கல்னு அலங்கார மீன்கள் விற்பனை செய்ற கடைகளுக்கு மீன்களைக் கொடுக்க ஆரம்பிச்சேன். அலங்கார மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிச்சதும், 3 மாசம் வளர்த்து விற்பனை செய்வேன்.

10 வகையான அலங்கார மீன்களை உற்பத்தி பண்றேன். வளர்ப்பு நத்தையான கோல்டன் நெயில், ‘வாட்டர் பிளான்’டான பாக்ஸ்டெயில், வேலஸ்னேரியாவையும் வளர்க்க ஆரம்பிச்சேன். மீன்கள் வளர்ப்பு அதிகமானதால, 15 அடி அகலம், 20 அடி நீளம், 3 அடி ஆழத்துல 6 குளங்களை வெட்டினேன். அலங்கார மீன்களை ஒருபக்கம் விற்பனை செஞ்சுகிட்டே, உணவுக்குத் தேவையான மீன்களையும் 2 வருஷமா வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன்.

மீன் குஞ்சுகளை வாங்கி வளர்த்து, குறிப்பிட்ட காலத்துல அதை விவசாயிகளுக்கு விற்பனை செஞ்சுகிட்டு வர்றேன். கட்லா, ரோகு, மிர்கால், புல் கெண்டை, சில்வர் கார்ப், காமன் கார்ப், ஜிலேபி, பங்காசியஸ்னு சீஸனுக்குத் தகுந்த மாதிரி, 2 வாரக்குஞ்சு களாக வாங்கிட்டு வந்து, குளங்கள்ல வளர்ப்பேன். 2 மாசம் வளர்த்து, தேவைப் படுற விவசாயிகளுக்கு வளர்ப்புக்குக் கொடுக்கிறேன். அதைத் தவிர, உணவுக்கான மீன்களை நேரடியா விற்பனை செய்றதுக்காக, எங்க தோட்டத்தில இருக்குற கிணத்துல மீன் குஞ்சுகளையும், விரால் மீன் குஞ்சு களையும் விட்டு, வளர்த்துட்டு வர்றேன்’’ என்றவர், தனது விவசாய முறைகளையும் பகிர்ந்துகொண்டார்.

மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு

‘‘என்னோட 7.5 ஏக்கர் நிலத்தில 2 ஏக்கர் நிலத்தில் 4 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன். வருஷத்துக்கு ஒரு போகம் கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பானு செஞ்சிட்டு வர்றேன். இப்ப, ஒரு ஏக்கர் நிலத்துல கறுப்புக் கவுனியும், இன்னொரு ஏக்கர் நிலத்தில பாசுமதியும் இருக்கு. நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டித்தான் விற்பனை செய்றேன்.

இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி எல்லாத்தையும் என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் தயார் பண்ணிக் கொடுக்குறாரு.

நாமக்கல் கே.வி.கே, கரூர் கே.வி.கே, அரசு, தனியார் கல்லூரி, பள்ளி மாணவர்கள், விவசாயிகள்னு பலருக்கும் தேனீ வளர்ப்புப் பயிற்சி கொடுக்கிறேன். பக்கத்து தோட்டங்கள்ல அடிக்குற ரசாயன உரங்கள் எங்க தோட்டத்துக்குள்ள வராம தடுக்க, தோட்டத்தைச் சுற்றியும் உயிர்வேலி உருவாக்கிக்கிட்டு இருக்கிறேன். அதேபோல், அஞ்சரை ஏக்கர் நிலத்தில படிப்படியாக இயற்கை விவசாயம் செய்யப்போறேன். அதோட, நாட்டு நண்டுகளை வளர்க்குற எண்ணமும் இருக்கு’’ என்றவர் நிறைவாக,

“இது நல்ல தொழில்தான். ஆனா, ஆர்வமும் உழைப்பும் இருக்கணும். மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்புல எல்லாச் செலவும் போக மாசம் 80,000 ரூபாய் லாபம் கிடைக்குது. அப்புறம் பயிற்சிகள் கொடுக்கிறது மூலமாவும் வருமானம் பார்த்துக்கிட்டிருக்கேன்’’ என்றார் மகிழ்ச்சியாக.


தொடர்புக்கு,

விஷ்ணு மனோகரன்,

செல்போன்: 63807 02007

‘டாபினியா’ நுண்ணுயிரி

தேனீ, மீன் வளர்ப்பில் உள்ள பிரச்னைகள், நோய்கள் குறித்துப் பேசிய விஷ்ணு மனோகரன், “ராகி மாவு, மக்காச்சோள மாவு, அரிசி மாவு, சோயா மாவு, கருவாடு, முட்டைனு எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்துக் கலக்கி, களி மாதிரி கிண்டி, மீன்களுக்குக் கொடுக்குறோம்.

பண்ணையில்
பண்ணையில்


‘ஃபிளட்வார்ம்’ங்கிற கொசுப்புழுக்களை மீன்களுக்கு உணவா கொடுப்போம். அதேபோல, கண்ணுக்குத் தெரியாத ‘டாபினியா’ங்கிற நுண்ணுயிரியை மீன்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன். ஈஸ்ட் கலந்த தண்ணியைப் பச்சைக்கலரா இருக்குற பாசி பிடிச்ச தண்ணியில கலந்து கொடுத்தா போதும். டாபினியா அதைச் சாப்பிட்டு பலமடங்கு பல்கி பெரும். அதை, மீன் குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுப்போம். அதேபோல், தேனீக்களுக்குப் பெரும்பாலும் எந்த உணவையும் கொடுக்குறதில்லை. பூக்கள் அதிகமாக இருக்கும்போது, அதுங்களுக்கு உணவு பிரச்னை இருக்காது. தேனை நாங்க எடுத்துவிட்டாலோ, பூக்கள் குறையுற காலங்களிலோ தேனீக்களுக்குச் சர்க்கரை பாகுவை உணவாகக் கொடுக்கணும். மீன் வளர்ப்புக்கு, அடிக்கடி தண்ணியை மாத்தணும். மீன்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்ட அறிகுறிகள் தெரிஞ்சா, தண்ணியை மாத்திடணும். மீன்களுக்குப் பிராணவாயு குறைஞ்சா, மேலே வரும். அப்ப, மோட்டார் வெச்சு, ஆக்சிஜன் கொடுக்கணும். மத்தபடி, மீன்களுக்கு உயிர் உணவுகளை அதிகம் கொடுக்குறதால, வேறெந்த பிரச்னையும் வராது.

தேனீக்களைப் பொறுத்தவரைக்கும், பெட்டிக்குள்ள கட்டெறும்பு, செவ்வெறும்புகள் போகாம பாத்துக்கணும். அப்படிப் போச்சுன்னா, தேனீக்கள் பெட்டிகளை விட்டுப் போயிரும். அதைத் தடுக்க, நாங்களே பிரத்யேகமாக நீளமாகத் தேனீ பெட்டி ஸ்டாண்டு வடிவமைச்சிருக்கோம்.

தேனீப் பெட்டிக்குக் கீழே வேப்ப எண்ணெயை ஊத்தி வைக்க ஒரு குவளையை அமைச்சிருக்கிறோம். அதனால, எறும்புகள் வேப்ப எண்ணெயைத் தாண்டிப் போகாது. அதேபோல, மெழுகு அந்துப்பூச்சிகளால பிரச்னை வரும். மெழுகு அந்துப்பூச்சிங்க, தேன் பெட்டிக்குள்ள போய் முட்டைப் போட்டுடும். அந்த முட்டையில ‘லார்வா’ புழு உருவாகி, தேன் அடைகளைச் சாப்பிட்டுடும். அதனால, வாரத்துக்கு ஒருமுறை தேன் பெட்டிகள்ல இருக்க அடிப்பலகைகளைச் சுத்தப்படுத்திடணும்” என்றார்.

வருமானம்

மீன்கள்

“மாசம் 3,000 மீன் குஞ்சுகள் வரைக்கும் விற்பனை ஆகுது. அலங்கார மீன்களைக் ஒரு குஞ்சு 1 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்றேன். உணவு மீன் குஞ்சுகளை, ஒரு ரூபாய்ல இருந்து 3 ரூபாய் வரைக்கும் கொடுத்து வாங்குறேன். அதை வளர்த்து, 3 முதல் 8 ரூபாய் வரைக்கும் விற்பனை பண்றேன். அலங்கார மீன்கள், உணவு மீன்கள், வாட்டர் பிளான்ட், நத்தை விற்பனைமூலம், செலவுகள் போக மாசம் 25,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது.

தேனீக்கள்

மாசம் 30 முதல் 50 தேனீப் பெட்டிகள விற்பனை செய்ய முடியுது. ஒரு தேனீப்பெட்டியை 2,000 ரூபாய்க்கு விற்கிறோம். தேனீப் பெட்டியோடு ஸ்டாண்டும் சேர்த்துக் கொடுக்கிறோம். தேன் எடுக்க, கையுறை, முகக்கவசம், தேன் அறுவடை செய்யுற கருவி, புகை அடிப்பான்னு பலவற்றையும் விற்பனை செய்றோம். அந்த வகையில, தேன், பெட்டி, பொருள்கள் மூலமா மாசம் 1,00,000 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. அதுல 50,000 ரூபாய் செலவாகிடும். அதுபோக 50,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

அரிசி

அரிசி விற்பனை மூலமா எல்லாச் செலவும்போக, மாசம் 5,000 ரூபாய் வருமானம் வருது. மொத்தமா, மாசத்துக்கு 80,000 ரூபாய் லாபமா கிடைக்குது. ஆகக்கூடி ஆண்டுக்கு மீன்+தேன்+அரிசி மூலமா 9,60,000 லாபம். இதைத்தவிர பயிற்சி வருமானம் வேறு இருக்குது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு