ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

வாழை, செண்டுமல்லி, கத்திரி, மிளகாய்... 1.5 ஏக்கர்... ரூ. 2.20 லட்சம்; ஊடுபயிரில் உன்னத லாபம்!

தோட்டத்தில் இமானுவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
தோட்டத்தில் இமானுவேல்

மகசூல்

ஒரு குறிப்பிட்ட பரப்பில் பிரதான பயிரோடு மற்ற பயிர்களைக் கலந்து சாகுபடி செய்வதைத்தான் ஊடுபயிர் சாகுபடி என்கிறோம். இதைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு பல வகைகளிலும் கூடுதல் பயன் கிடைக்கிறது. பிரதான பயிரில் விளைச்சல் குறைந்தாலோ, விலை குறைந்து விட்டாலோ, மற்ற பயிர்கள் அந்த இழப்பை ஈடு செய்துவிடும். அதனால் நஷ்டம் தவிர்க்கப் படுகிறது. மேலும் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு... ஒரே பராமரிப்பில் பிற பயிர்களிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் பள்ளி ஆசிரியருமான இமானுவேல் ஒன்றரை ஏக்கரில் வாழை, அதில் ஊடுபயிராகச் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் ஆகியவற்றைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். 25.8.2020 தேதியிட்ட இதழில் ‘செம்மையான லாபம் தரும் செவந்தம்பட்டி நாட்டுக் கத்திரி’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் கத்திரி சாகுபடி குறித்த தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். தற்போது இவர் மேற்கொண்டிருக்கும் ஊடுபயிர் சாகுபடி குறித்து அறிந்துகொள்வதற்காக இவருடைய தோட்டத்துக்குச் சென்றோம்.

தோட்டத்தில் இமானுவேல்
தோட்டத்தில் இமானுவேல்

செண்டுமல்லி பூக்களின் மஞ்சள் நிறம், வாழை மற்றும் மிளகாயின் பச்சை நிறம், கத்திரியின் நீலநிறம் என இவருடைய தோட்டம் வண்ணமயமாகக் காட்சி அளித்து, நம் மனதைப் பரவசப்படுத்தியது. செண்டு மல்லி பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த இமானுவேல், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங் கினார்.

‘‘வாழைப் பயிர் செஞ்சோம்னா, பத்து மாசம் கழிச்சுதான் வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். உழவு, அடியுரம், வாழைக் கன்றுகள், களையெடுப்புக்குனு கிட்டத்தட்ட 70,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிட்டு, பத்து மாசம் வரைக்கும் எந்தவொரு வருமானமும் இல்லாம சும்மா இருக்க முடியாது. வாழைக்கன்றுகளை நடவு செய்றப்பவே, இதுக்கு இடையில ஊடுபயிரா... செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் மாதிரியான பயிர்களையும் பயிர் பண்ணிட்டோம்னா, அடுத்த ரெண்டு மாசத்துல இருந்தே தொடர்ச்சியா வருமானம் பார்க்க ஆரம்பிச்சிடலாம்.

வாழையில் ஊடுபயிர்கள்
வாழையில் ஊடுபயிர்கள்

இப்ப நான் ஒன்றரை ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சு, இதுல செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் பயிர் பண்ணியிருக்கேன். இந்த மூணு பயிர்கள்ல இருந்துமே இப்ப எனக்கு வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இந்தத் தடவை மட்டுமல்ல... நான் கடந்த 10 வருஷமாவே வாழையில ஊடுபயிர்கள் சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். இதனால் கூடுதல் வருமானம் கிடைக்குறதோடு மட்டுமல்லாம... களைகள் கட்டுப்படுத்தப்படுது, மண்ணுல ஈரப்பதம் தக்க வைக்கப்படுது, மண்ணு நல்லா வளமாகி, நுண்ணுயிர்களும் பெருக்கமடையுது’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈடுபாடு அதிகம். கல்லூரி படிப்பை முடிச்சிட்டு, தனியார் பள்ளியில ஆசிரியரா வேலை பார்துக்கிட்டு இருந்தாலும்கூட, மற்ற நேரங்கள்ல எங்க அப்பாகூட சேர்ந்து விவசாயத்தைக் கவனிச்சிக்குறேன். எங்களுக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. கடந்த மூணு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கோம். இந்த வருஷம் ஆடிப்பட்டத்துல ஒன்றரை ஏக்கர்ல வாழை சாகுபடி செஞ்சு, இதுல ஊடுபயிர்களா... செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் பயிர் பண்ணியிருக்கேன். வரப்பு ஓரத்துல தட்டைப்பயறு போட்டுருக்கேன்.

செண்டுமல்லி
செண்டுமல்லி

அசைவ பூச்சிகள் ஈர்க்கப்படுது

தட்டைப்பயறுல உருவாகுற சைவ பூச்சிகளைச் சாப்பிட அசைவ பூச்சிகள் வருது. செண்டுமல்லியோட மஞ்சள் நிறத்தால ஈர்க்கப்பட்டும் நிறைய பூச்சிகள் இங்க வருது. இதனால் தீமை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு... கத்திரி, மிளகாய், வாழைப் பயிர்கள் பாதுகாக்கப்படுது. குறிப்பா, செண்டுமல்லியால மிகப்பெரிய நன்மை என்னென்னு கேட்டீங்கனா, வாழையைப் பாதிக்கக்கூடிய நூற்புழுக்கள் முழுமையா கட்டுப்படுத்தப்படுது. இதை நான் கண்கூடா உணர்ந்துகிட்டு இருக்கேன். செண்டுமல்லி யோட வேர்களிலிருந்து வீசக்கூடிய துர்நாற்றம்தான் அதுக்குக் காரணம்’’ என்று சொன்னவர், இங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் இவற்றின் அமைப்பு முறை மற்றும் எண்ணிக் கைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்த ஒன்றரை ஏக்கர்ல மொத்தம் 1,500 பூவன் வாழை இருக்கு. வாழைக்கு வாழை 6 அடி இடைவெளி விட்டுருக்கேன். ரெண்டு வாழைகளுக்கு நடுவுல தனித்தனி வரிசையா கத்திரி, மிளகாய்னு நடவு செய்திருக்கேன். அதாவது, ரெண்டு வாழை வரிசைக்கு நடுவுல கத்திரி வரிசை. இதை 2.5 அடி இடைவெளியில நட்டிருக்கேன். இதேபோல அடுத்த வரிசை வாழைக்கு நடுவுல மிளகாய் வரிசை. இதையும் 2.5 அடி இடைவெளி விட்டு நட்டிருக்கேன். ஆக, இந்த ஒன்றரை ஏக்கர்ல மொத்தம் கத்திரி, மிளகாய் தலா 2,000 செடிகள் இருக்கு.

வாழையில் ஊடுபயிர்களாக கத்திரி, மிளகாய், செண்டுமல்லி நடுவதற்கான வரைபடம்
வாழையில் ஊடுபயிர்களாக கத்திரி, மிளகாய், செண்டுமல்லி நடுவதற்கான வரைபடம்

செண்டுமல்லிக்குத் தனி வரிசை கிடையாது

செண்டுமல்லியைத் தனி வரிசையா அமைக்கலை. ரெண்டு வாழைக்கு நடுவுல ஒரு செண்டுமல்லி வீதம் பயிர் பண்ணி யிருக்கேன். இதனால் ஒரு செண்டுமல்லி செடிக்கும் இன்னொரு செண்டுமல்லி செடிக்கும் இடையில 6 அடி இடைவெளி அமைஞ்சிருக்கு. இந்த ஒன்றரை ஏக்கர்ல மொத்தம் 1,500 செண்டுமல்லி செடிகள் இருக்கு.

இடுபொருள்கள்

இடுபொருள்களைப் பொறுத்தவரைக்கும் அடியுரமா நிறைய எரு கொடுத்துருக்கேன். மேலுரமா, ஜீவாமிர்தத்துல செறிவூட்டப்பட்ட எரு, பஞ்சகவ்யா, மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி, ஹியூமிக் திரவம் பயன் படுத்துறேன். வாழை, கத்திரி, மிளகாய், செண்டுமல்லி... இந்த நாலு பயிர்களுமே நல்லா செழிப்பா இருக்கு. தீமை செய்ற பூச்சிகளை அழிக்க, மஞ்சள் நிற, நீலநிற ஓட்டுப் பசை அட்டைகள் பயன்படுத்துறேன். நன்மை செய்யும் பூச்சிகளை உருவாக்கக்கூடிய ஒட்டுண்ணி அட்டைகளும் கட்டியிருக்கேன்.

கத்திரி
கத்திரி

இங்கவுள்ள எல்லாப் பயிர்களுமே கொஞ்சம்கூட பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம நல்லா ஆரோக்கியமா இருக்கு. நடவு செஞ்ச 60-ம் நாள்ல இருந்து செண்டு மல்லி, கத்திரி, மிளகாய் செடிகள்ல இருந்து மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு’’ என்று தெரிவித்தவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வருமானம்

செண்டுமல்லி


செண்டுமல்லியில தினமும் 30 கிலோ வீதம் பூக்கள் பறிச்சு விற்பனை பண்ணிகிட்டு இருக்கேன். திருக்காட்டுப்பள்ளி, திருமானூர்ல உள்ள பூக்கடைகளுக்கு நேரடியா விற்பனை பண்ணிகிட்டு இருக்கேன். சாதாரண நாள்கள்ல ஒரு கிலோவுக்கு 25 - 35 ரூபாய் விலை கிடைக்கும். விஷேச நாள்கள்ல 50 - 70 ரூபாய் விலை கிடைக்கும். விஷேச நாள்கள் வரப்போகுதுனா, 15 நாள்களுக்கு முன்னாடியில இருந்தே பூக்கள் பறிக்கிறதை நிறுத்திடுவேன். செடிகள்லயே பூக்களை இருப்பு வச்சிடுவேன். செண்டுமல்லியில ஒரு மிகப் பெரிய வசதி என்னன்னா, மற்ற பூக்கள் மாதிரி, இதை உடனடியா பறிக்கணும்னு அவசியம் கிடையாது. செடிகள்லயே 15 நாள்கள் வரைக்கும் இருப்பு வச்சிருந்தாலும் தரம் இழக்காது. அதை அப்படியே வச்சிருந்து விஷேச நாள்கள் அன்னிக்கு 400 கிலோ, 500 கிலோனு மொத்தமா பறிச்சு விற்பனை செய்வேன். பறிப்புக்கு வந்ததுல இருந்து அடுத்த மூணு மாசத்துக்கு மகசூல் கொடுக்கும். இங்க உள்ள 1,500 செடிகள்ல இருந்து குறைந்தபட்சம் 1,500 கிலோ பூக்கள் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வீதம் மொத்தம் 45,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

செண்டுமல்லி
செண்டுமல்லி

கத்திரி

வீரிய ரகத்தைச் சேர்ந்த வரிக்கத்திரி பயிர் பண்ணியிருக்கேன். கத்திரியும் இப்ப காய்ப்புல இருக்கு. தினமும் 30 - 50 கிலோ காய்கள் பறிக்கிறேன். 2 - 3 மாசங்களுக்கு மகசூல் கொடுக்கும். குறைந்தபட்சம் 2,000 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்குச் சராசரியா 20 ரூபாய் வீதம் விலை கிடைக் கும். கத்திரி மூலம் மொத்தம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மிளகாய்

பச்சைமிளகாய்களா பறிச்சு விற்பனை செய்றேன். மூணு நாளைக்கு ஒரு தடவை 40 - 50 கிலோ கிடைக்குது. 2 - 3 மாசங்களுக்கு மகசூல் கிடைக்கும். மொத்தமா கணக்குப் பார்த்தா, குறைந்தபட்சம் 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வீதம், மொத்தம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

தட்டைப்பயறில் வருமானம் பார்ப்பதில்லை

வரப்பு ஓரத்துல பயிர் பண்ணியிருக்குற தட்டைப்பயறு, நன்மை செய்யும் பூச்சிகளை ஈர்க்க பயன்படுது. மத்தபடி, இதுல வருமானம் பார்க்குற அளவுக்கு எல்லாம் மகசூல் கிடைக்காது.

ஐந்தே மாதத்தில் 1,15,000 ரூபாய்

கன்றுகள் நடவு செஞ்ச அடுத்த அஞ்சு மாசத்துக்குள்ள செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் மூலம் மொத்தம் 1,15,000 ரூபாய் வருமானம் பார்த்துடலாம். அதுக்குப் பிறகு, வாழை நல்லா உயரமா வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பிச்சிடுறதுனால, ஊடு பயிர்கள்ல விளைச்சல் இருக்காது. காய்ப்பு ஓஞ்ச பிறகு, குபேட்டா மூலம் உழவு ஓட்டி, இந்த மூணு வகையான செடிகளையும் மண்ணுக்கு உரமாக்கிடலாம். இது அருமையான உரம்.

அட்டவணை
அட்டவணை


வாழையில் 2,45,000 ரூபாய்

வாழையில 8-ம் மாசம் தார் விடத் தொடங்கி, 11-ம் மாசம் அறுவடைக்கு வர ஆரம்பிக்கும். 1,500 வாழைகள்ல இழப்புகள் போக, 1,400 தார்கள் விற்பனைக்குத் தேறி வரும். இதுல 1,200 தார்கள், நல்லா தரமானதா இருக்கும். ஒரு தாருக்குக் குறைந்தபட்சம் 200 ரூபாய் வீதம் மொத்தம் 2,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இரண்டாம் தரமா உள்ள 200 தார்களுக்கு, ஒரு தாருக்கு 100 ரூபாய் வீதம் விலை கிடைக்கும். இது மூலமா மொத்தம் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் வாழை சாகுபடி மூலம் 2,60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மொத்த வருமானம்

செண்டுமல்லி, கத்திரி, பச்சைமிளகாய், வாழை மூலம் மொத்தம் 3,75,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லாச் செலவுகளும் போக, 2,20,000 ரூபாய் லாபமா கிடைக்கும். இது எனக்கு நிறைவான வருமானம்” எனத் தெரிவித்தார்.


தொடர்புக்கு, இமானுவேல்,

செல்போன்: 94426 61880

இப்படித்தான் சாகுபடி!

ஒன்றரை ஏக்கரில் வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் சாகுபடி செய்ய இமானுவேல் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் அடியுரமாக 10 டன் எரு போட்டு, ரோட்டோவேட்டர் மூலம் புழுதி உழவு ஓட்டி, மண்ணை ஈரப்படுத்தும் அளவுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தில் ஏற்கெனவே சாகுபடி செய்திருந்த பயிர்களின் விதைகள் மற்றும் களைச் செடிகளின் விதைகள் அடுத்த 10 நாள்களில் முளைத்து வரும். அவை வேரோடு அழியும் வகையில் நன்கு ஆழமாக உழவு ஓட்டி, நிலத்தைத் தயார் செய்து கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.

விஷேச நாள்கள் வரப்போகுதுனா, 15 நாள்களுக்கு முன்னாடியில இருந்தே பூக்கள் பறிக்கிறதை நிறுத்திடுவேன். செடிகள்லயே பூக்களை இருப்பு வச்சிடுவேன். செண்டுமல்லியில ஒரு மிகப்பெரிய வசதி என்னென்னா, மற்ற பூக்கள் மாதிரி, இதை உடனடியா பறிக்கணும்னு அவசியம் கிடையாது.


விதைநேர்த்தி

வாழை சாகுபடியைப் பொறுத்தவரை குருடு நோயை எதிர்கொள்வது சவாலானது. இந்நோய் ஏற்பட்டால், வாழைக்கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுக் குன்றிவிடும். மற்ற விவசாயிகள் இதைக் கட்டுப்படுத்த, வீரியமான ரசாயன மருந்துகள் பயன்படுத்துகின்றனர். இயற்கை விவசாயத்தில் இதற்கு எளிதான தீர்வு உள்ளது. வரும் முன் காப்போம் நடவடிக்கையாக, சுண்ணாம்புக் கரைசலில் வாழைக் கன்றுகளை நனைத்து விதைநேர்த்தி நடவு செய்தால், குருடு நோய் ஏற்படாது. 20 லிட்டர் தண்ணீருக்கு 1 கிலோ வீதம் சுண்ணாம்பு கலந்து கரைசல் தயார் செய்யலாம்.

செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் கன்றுகளை... பஞ்சகவ்யா- உயிர் உரக் கரைசலில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 1 லிட்டர் வீதம் பஞ்சகவ்யா, டிரைக்கோ டெர்மா விரிடி திரவம் கலந்து கரைசல் தயார் செய்து... இதில் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் நாற்றுகளை நனைத்து எடுத்து, நடவு செய்ய வேண்டும்.

கத்திரிக்காய்கள், செண்டுமல்லிப் பூக்கள், மிளகாய் குவியல்
கத்திரிக்காய்கள், செண்டுமல்லிப் பூக்கள், மிளகாய் குவியல்

தலா 6 அடி இடைவெளியில் வாழைக் கன்றுகள் நடவு செய்ய வேண்டும். ஒரு வாழை வரிசைக்கும் இன்னொரு வாழை வரிசைக்கும் இடையே கத்திரி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நாற்றுக்கு நாற்று 2.5 அடி இடைவெளி விட வேண்டும். இதற்கு அடுத்துள்ள இரு வாழை வரிசைக்கு நடுவில் மிளகாய் நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். நாற்றுக்கு நாற்று 2.5 அடி இடைவெளி இருக்க வேண்டும். இதுபோல் அடுத்தடுத்து கத்திரி மற்றும் மிளகாய் வரிசைகள் மாறி மாறி இருக்க வேண்டும். இரண்டு வாழைகளுக்கு நடுவில் செண்டுமல்லி கன்று நடவு செய்ய வேண்டும். வரப்பு ஓரங்களில், தட்டைப்பயறு விதைக்க வேண்டும். 2 அடி இடைவெளியில் தலா 2 விதைகள் வீதம் ஊன்றலாம்.

அடுத்த 10 நாள்களில் நாற்றுகள் வேர் பிடித்து வளரத் தொடங்கும். 15-ம் நாள் களையெடுக்க வேண்டும். 18-ம் நாள் வாழையை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்ற நாற்றுகளுக்கு... ஒரு நாற்றுக்கு 200 கிராம் வீதம் செறிவூட்டப்பட்ட எரு இட வேண்டும். வாழைக்கு எரு கொடுத்தால், அது வேகமாக வளர்ச்சி அடைந்து அவற்றின் நிழல், ஊடுபயிர்களைப் பாதிக்கும். 20, 30, 40 ஆகிய நாள்களில் 15 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து, வாழை, செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களின் மீதும் தெளிக்க வேண்டும். 42-ம் நாள் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் ஒரு செடிக்கு தலா 400 கிராம் செறிவூட்டப்பட்ட எருவுடன் 25 கிராம் வேப்பம்புண்ணாக்கு கலந்து இட வேண்டும். 45-ம் நாள் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் செடிகள் பூ பூக்கத் தொடங்கும்.

பச்சை மிளகாய்
பச்சை மிளகாய்

45-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை 15 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி, தலா 200 மி.லி பஞ்சகவ்யா, மீன் அமிலம் கலந்து, செண்டுமல்லி, கத்திரி, மிளகாய், வாழை உள்ளிட்ட அனைத்துப் பயிர்கள் மீது தெளிப்புச் செய்ய வேண்டும். இதனால் பயிர்கள் நன்கு ஊக்கமாக வளர்வதோடு பூச்சி, நோய்த்தாக்குதல்களும் கட்டுப்படுத்தப்படும். 50-ம் நாள் வாழைக் கன்றுகள் சுற்றிலும் மண்ணை நன்கு கொத்தி விட வேண்டும். செண்டுமல்லி, கத்திரி, மிளகாய்ச் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். அவ்வப்போது களை எடுக்க வேண்டும். 60-ம் நாளிலிருந்து செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் செடிகளில் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும், அடுத்த 2-3 மாதங் களுக்கு மகசூல் கிடைக்கும். அதன் பிறகு உழவு ஓட்டி இந்தச் செடிகளை மண்ணுக்கு உரமாக்க வேண்டும். 5-ம் மாதம் வாழையைச் சுற்றிலும் உள்ள பக்க கன்றுகளை அப்புறப்படுத்திவிட்டு, ஒரு வாழைக்கு 5 கிலோ செறிவூட்டப்பட்ட எருவுடன் 250 கிராம் ஆட்டு எரு கலந்து இட வேண்டும். வாழையிலிருந்து 1 அடி தூரத்தில் இதை இட வேண்டும். இங்குதான் வேர்களின் நுனிப்பகுதி இருக்கும். 15 நாள்களுக்கு ஒரு முறை 15 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி, தலா 200 மி.லி பஞ்சகவ்யா, மீன் அமிலம் கலந்து வாழைகளின் மீது தெளிக்க வேண்டும்.

செண்டுமல்லியோட மஞ்சள் நிறத்தால ஈர்க்கப்பட்டும் நிறைய பூச்சிகள் இங்க வருது. இதனால் தீமை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு... கத்திரி, மிளகாய், வாழைப் பயிர்கள் பாதுகாக்கப்படுது.

ஹியூமிக் திரவம்

‘‘தஞ்சாவூர் தோட்டக்கலை துறை அலுவலர் சந்திரசேகர், என்னோட தோட்டத்தைப் பார்த்துட்டு, எனக்குச் சில உதவிகள் செஞ்சு ஊக்கப்படுத்தினார். 1 லிட்டர் ஹியூமிக் திரவம் இலவசமா கொடுத்தார். 10 நாள்களுக்கு ஒரு தடவை 15 லிட்டர் தண்ணிக்கு 20 மி.லி வீதம் கலந்து எல்லாப் பயிர்களுக்குமே தெளிச்சிக்கிட்டு இருக்கேன். பயிர்கள் நல்லா ஊக்கமா வளருது.

ஒட்டுண்ணி அட்டை

திருச்சி மத்திய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த அலுவலர் சிவராமகிருஷ்ணன், ஒட்டுண்ணி அட்டைகளை இலவசமா கொடுத்தார். கத்திரிச் செடிகள்ல காய்ப்பு வர ஆரம்பிச்ச பிறகு... 10 நாள்களுக்கு ஒரு தடவை 10 அட்டைகள் வீதம் கட்டிவிட்டுக்கிட்டு இருக்கேன். இந்த அட்டைகள்ல உள்ள முட்டைகள்ல இருந்து உருவாகுற நன்மை செய்யும் பூச்சிகள், காய்ப்புழுக்களையும், தீமை செய்யக்கூடிய மற்ற பூச்சிகளையும் அழிச்சிடுது’’ என்கிறார் இமானுவேல்.

செறிவூட்டப்பட்ட எரு

நிழல் பாங்கான இடத்தில்... 2 டன் எருவுடன் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து நன்கு கிளறிவிட்டு, ஈர சணல் சாக்கைப் போட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த 15 நாள்களில் செறிவூட்டப்பட்ட எரு தயாராகிவிடும்.