Published:Updated:

25 ஆண்டுகளுக்கு முன் சிவராத்திரி பிரசாதம்... ‘பஞ்சகவ்யா’வாக வளர்ந்த வரலாறு!

டாக்டர் நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நடராஜன்

கண்டுபிடிப்பு

25 ஆண்டுகளுக்கு முன் சிவராத்திரி பிரசாதம்... ‘பஞ்சகவ்யா’வாக வளர்ந்த வரலாறு!

கண்டுபிடிப்பு

Published:Updated:
டாக்டர் நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நடராஜன்

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த ‘பஞ்சகவ்யா சித்தர்’ என்றழைக்கப்படும் டாக்டர் நடராஜன். கொடுமுடி சிவன் கோயிலில் ஒரு சிவராத்திரியில்தான் இதற்கான விதை அவருக்குள் விழுந்திருக்கிறது. ‘ஐந்து விரல் மந்திரம்; அது, பஞ்சகவ்யாவின் தந்திரம்’ என்று ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரால் புகழப்படும் ‘பஞ்சகவ்யா’ உருவாக்கப்பட்டு, கடந்த மார்ச் 1-ம் தேதி சிவராத்திரியோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. பஞ்சகவ்யாவின் வரலாறு குறித்து, பல தகவல்களை டாக்டர் நடராஜன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு, கொடுமுடி பகுதியில 1980-கள்ல மருத்துவம் பார்த்துக் கிட்டு இருந்தேன். பல்வேறு பிரச்னைகள் காரணமா மனதொடிஞ்சு போறவங்க... வயலுக்கு அடிக்கற பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடிச்சு தற்கொலைக்கு முயற்சி பண்றது அடிக்கடி நடக்கும். அப்படி விஷம் குடிச்சவங்களை என்கிட்ட தூக்கிட்டு வருவாங்க. அதையெல்லாம் பார்த்துப் பார்த்துதான், ‘விவசாயத்துக்குப் பயன்படுத்தற இந்த விஷத்துக்கு மாற்றா ஏதாவது கண்டு பிடிச்சா என்ன?’னு தோணுச்சு. 1988-ம் வருஷம் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் வந்துச்சு. அது சம்பந்தமா, நிறைய படிச்சு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். 1998-ம் வருஷம் பெங்களூரு ‘டாடா இன்ஸ்டிடியூட்’டில் ஒரு வாரம் நடந்த, ‘சர்வதேச மூலிகைக் கருத்தரங் கம்’ நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். அங்க ஒரு புத்தகம் வாங்கினேன். அதுல இயற்கை விவசாயம் பற்றி நிறைய தகவல்கள் இருந்துச்சு.

டாக்டர் நடராஜன்
டாக்டர் நடராஜன்

நம்ம நம்மாழ்வார் போல் ஒருத்தர், பிரேசில் நாட்டுல சாணி, மாட்டு சிறுநீர், சர்க்கரைனு மூணையும் கலந்து, கரைச்சு அதை நாலு நாள்கள் வரைக்கும் ஊற வச்சு, அதைத் தண்ணியில கலந்து, திராட்சைச் செடிகளுக்கு தெளிச்ச அனுபவம் பற்றி தெரிஞ்சுகிட்டேன். திராட்சை நல்லா திரட்சியா வந்ததா தனது அனுபவத்தை சொல்லியிருந்தார். எனக்கு அது உந்துதலா இருந்துச்சு. இந்த நிலையில, 1998-ம் வருஷம் மார்ச் மாசம் ஆரம்பத்துல சிவராத்திரிக்காக கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு ரெண்டாம் ஜாம பூஜையில கலந்துகிட்டேன். பூஜை செஞ்ச ஐயர், சாணி கலந்த பிரசாதம் கொடுத்தார். பிறகு, கர்ப்பகிரகத்துக்கு வந்தப்ப, சடார்னு என் மூளைக்குள்ள ஒரு பொறி தட்டுச்சு. பிரேசில்ல ஒருத்தர், மாட்டுச் சாணி, சிறுநீரை வெச்சு வீரியமான இயற்கை ஊக்கி தயாரிக்கிறப்ப, இங்க கோயில்ல பிரசாதத்துக்கு சாணி கலந்து கொடுக்கிறப்ப, நாம அதுபோல தயாரிச்சா என்ன?னு தோணுச்சு. பூஜையெல்லாம் முடிஞ்சு வந்த ஐயர்கிட்ட, கோயில் பிரசாதத்தைப் பத்திக் கேட்டேன். ‘பால் 4 மடங்கு, தயிர் 3 மடங்கு, மாட்டு சிறுநீர்் 1 மடங்கு, நெய் 2 மடங்கு, பசுமாட்டு சாணி நெல்லிக்காய் அளவுல கலப்போம்’னு சொன்னார்.

மறுநாள் காலையில எழுந்து குளிச்சு முடிச்சுட்டு, ரூம்ல உட்கார்ந்து யோசிச்சேன். பேப்பர்ல எழுதி எழுதிப் பார்த்தேன். கடைசியில சாணி 5 கிலோ, கோமியம் 3 லிட்டர், பால் 2 லிட்டர், தயிர் 2 லிட்டர், நெய் 1 லிட்டர், நுண்ணுயிர்கள் பெருக நாட்டுச்சர்க்கரை 1 கிலோ கலக்கலாம்னு எழுதினேன். சாணியையும் நெய்யையும் மட்டும் பிசைஞ்சு, 3 நாள்கள் வெச்சுக்கிட்டேன். அந்த 3 நாள்ல நெய் முழுவதையும் சாணி சாப்பிட்டுடுச்சு. 3 நாள் கழிச்சு, மத்த பொருள் களையும் அதுல கலந்தேன். அதோட, 3 இளநீரை 2 நாள்கள் புளிக்க வெச்சு சேர்த் தேன். நல்லா பழுத்த ஒரு சீப்பு வாழைப் பழங்களை தோல் நீக்கிட்டு, சுளையை பிசைஞ்சு அதுல கலந்தேன். அதை 21 நாள்கள் வச்சுருந்தேன். நல்லா தயாரானதும், செடி, கொடி, பயிர்கள்ல தெளிச்சுப் பார்த்தேன். நல்ல மாற்றம் கிடைச்சுச்சு. அத்தனை வெள்ளாமையும் வழக்கத்தைவிட ‘பூரிப்பா’ வந்துச்சு.

டாக்டர் நடராஜன்
டாக்டர் நடராஜன்


ஆடு, மாடுகளுக்குக் கொடுத்தா, அதுங் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சதைக் கண்டுப்பிடிச்சேன். பலவகை நோய்களும் தீர்ந்துச்சு. எல்லா பயிர்களின் வளர்ச்சியும் விளைச்சலும் இதனால பலமடங்கு பெருகிச்சு. இதைக் கேள்விப்பட்டு, ரேடியோ, பத்திரிகை, டி.வியில என்னோட பேட்டியைத் தொடர்ந்து வெளியிட்டாங்க. சத்தியமங் கலத்துல சுந்தரராம ஐயர் தோட்டத்துல தங்கியிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருக்குத் தகவல் போய், உடனே என் தோட்டத்துக்கு வந்துட்டார். இதைப் பயன்படுத்திப் பார்த்த பிறகு, உற்சாகத்தில சின்ன குழந்தை மாதிரி துள்ளிக் குதிச்சுட்டார். ‘வெளிநாட்டுக்காரன் இந்தியாவுல, ரசாயன வார் நடத்துறான். அதை விரட்டக்கூடிய பேராயுதம் இந்த வளர்ச்சி ஊக்கி’னு என்னை கட்டித் தழுவிக்கிட்டார். உடனே, ‘ஐந்து விரல் மந்திரம், அது பஞ்சகவ்யாவின் தந்திரம்’னு சொன்னார்.

தொடர்ந்து, கிராமம் கிராமமாப் போய் மக்களை சந்திச்சு, இதைப் பரப்பினார். இன்னொரு பக்கம் பசுமை விகடன் கட்டுரைகள் இன்னும் ஆழமா இயற்கை ஆர்வலர்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்துச்சு. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல இருந்து வந்து, இதை வாங்கிட்டுப் போய் ஆய்வு பண்ணினாங்க. அதிகமா வாடை வர்றதை நம்மாழ்வார் குறைக்கச் சொன்னதால, ரொம்ப ஆய்வு பண்ணி வாடையில்லாம உருவாக்கினேன். அதுக்கு, ‘அமிர்த சஞ்சீவி’னு பேர் வச்சேன்.

எட்டு வருஷமா குழந்தை இல்லாத பிரச்னைக்காகத் தன் மனைவி சிகிச்சை எடுத்துக்கிட்டாலும், பஞ்சகவ்யா மருந்தைச் சாப்பிட்ட பிறகுதான் குழந்தை பிறந்ததா ‘நெல்’ ஜெயராமன் மேடையிலயே வெளிப்படையா சொன்னார். சிக்கிம் முதல்வர் பஞ்சகவ்யாவை அவங்க மாநிலத்துல பயன்படுத்த வைக்கிறார். தவிர, பல பல்கலைக்கழகங்கள்ல இது பாடமா இருக்கு. தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுக்க உள்ள இயற்கை விவசாயிகள் இதைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுறதாச் சொல்றாங்க. கடந்த 2002-ம் வருஷம் குஜராத் ‘ஐ.ஐ.எம்’ல இருக்க ‘ஹனிபீங்’கிற ‘நெட்வொர்க்’ சார்பாக எனக்கு, ‘சிருஷ்டி சன்மான்’ங்கிற விருதை கொடுத்தாங்க” என்றார் மகிழ்ச்சியாக.


தொடர்புக்கு,

டாக்டர் நடராஜன்,

செல்போன்: 94433 58379.

அற்புதமான பரிசு!

பஞ்சகவ்யா குறித்து மண்புழு விஞ்ஞானியும் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், ‘‘எங்கள் ஆராய்ச்சியில் பஞ்சகவ்யாவும் மண்புழு செறிவூட்டப்பட்ட நீரும் சேர்த்து பயிர்களுக்குத் தெளிக்கும்போது, நல்ல விளைச்சல் கிடைக்கிறது என்று கண்டுபிடித்துள்ளோம், தமிழ்நாட்டில் உருவான இந்த பஞ்சகவ்யா இன்று உலகின் பல நாடுகளில் உள்ள விவசாயிகளும் பயன்படுத்துகிறார்கள். இந்த அற்புதமான வளர்ச்சி ஊக்கியைக் கண்டுபிடித்து 25 ஆண்டுகள் ஆனதை அறிந்து மகிழ்கிறேன்; வாழ்த்துகிறேன்.’’

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் முனைவர் ஏ.சோமசுந்தரம், ‘‘பஞ்சகவ்யாவில்தான் நான் முனைவர் பட்ட ஆய்வு செய்தேன். பஞ்சகவ்யா பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் மாற்றம் விளைச்சல் குறித்து அறிவியல் முறையில் ஆய்வு செய்து வெளியிட்டோம். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா அற்புதமான பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism