Published:Updated:

8 ஏக்கர்... ரூ.8 லட்சம் லாபம்... நெல் வயலில் மீன் வளர்ப்பு!

பொன்னையா - பாக்கியலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
பொன்னையா - பாக்கியலெட்சுமி

தொழில்நுட்பம்

8 ஏக்கர்... ரூ.8 லட்சம் லாபம்... நெல் வயலில் மீன் வளர்ப்பு!

தொழில்நுட்பம்

Published:Updated:
பொன்னையா - பாக்கியலெட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
பொன்னையா - பாக்கியலெட்சுமி

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் அருகே சேந்தாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னையா. கடந்த இதழில் ‘பலன்கள் பலவற்றைக் கொடுக்கும் ‘பானி பைப்!’ கட்டுரையில் இடம் பெற்றவர்தான், இந்த பொன்னையா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக, வீட்டின் அருகே மீன் பண்ணை அமைத்தும், நெல் வயலில் மீன்களை வளர்த்தும், நல்ல லாபம் பார்த்து வருகிறார். ஒரு காலைப் பொழுதில் அவரின் மீன் பண்ணைக்குச் சென்றோம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்தது பண்ணை. தன் மனைவி பாக்கியலெட்சுமியுடன் சேர்ந்து மீன் குளத்தில், வலையைப் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார் பொன்னையா. அவருக்காகச் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். மீன்களைப் பிடித்துவிட்டு வந்தவர், நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத்தொடங்கினார்.

“நான் 12-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். சின்ன வயசுலயிருந்தே விவசாயத்து மேல ஈடுபாடு அதிகம். மம்பட்டியைத் தூக்கிக்கிட்டு அப்பாக்கூட விவசாய வேலைக்கு வந்திடுவேன். ரொம்ப வருஷமா, எங்க அப்பாதான் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாரு. நான் கொஞ்சம் தலையெடுத்ததும், 2004-ம் வருஷம் முழுப் பொறுப்பையும் என்கிட்ட ஒப்படைச்சிட்டாரு. ஆரம்பத்திலயிருந்து எங்களுக்கு நெல் விவசாயம்தான். அதே மாதிரி எங்க சித்தப்பா, பெரியப்பா, அவங்க பிள்ளைகள்னு கிராமத்துல இப்பவும் விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. பெரிய விவசாயக் குடும்பம் எங்களோடது.

மீன் பிடித்தலில்
மீன் பிடித்தலில்

எங்களுக்கு மொத்தம் 13 ஏக்கர் நிலமிருக்கு. வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை-45, 47-னு பல நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சு, வேளாண்மைத் துறைக்கு விதை நெல்லாகக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.

முழுசா நெல் விவசாயத்துல மட்டும் கவனம் செலுத்துக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல, 2008-ம் வருஷம் மீன் வளத்துறையின் நீர்வள, நிலவளத் திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 90 சதவிகித மானியத்தோடு மீன் குளம் அமைச்சுக் கொடுக்கிறதாகச் சொல்லி வந்தாங்க. அப்ப எனக்கு மீன் வளர்ப்பு பத்தி எதுவுமே தெரியாது. மொதல்ல, நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கிற நிலத்தைக் குட்டையாக வெட்ட விருப்பமில்ல. அதுக்கப்புறம்தான், நெல் விவசாயத்தோடு சேர்த்து, இதையும் கொஞ்சம் செஞ்சு பார்க்கலாம்னு அப்பா யோசனை சொன்னாரு. உடனே, அதிகாரிங்ககிட்ட ஆலோசனை கேட்டு மீன் குளத்தையும் அமைச்சிட்டேன்’’ என்றவர் மீன் வளர்ப்பு அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்.

மீன் பிடிக்கும் பணியில்
மீன் பிடிக்கும் பணியில்

‘‘10,000 சதுர அடியில குளம் வெட்டிக்கொடுத்து, 1,000 மீன் குஞ்சுகளையும், அதுக்குத் தேவையான தீவனங்களையும் அதிகாரிங்களே கொடுத்தாங்க. கூடவே பயிற்சியும் கொடுத்தாங்க. நானும் சுற்றுவட்டாரத்துல இருக்குற சில மீன் பண்ணைகளுக்கு நேரடியாகப் போயிட்டு வந்தேன். அந்த அனுபவங்களை எல்லாம் வச்சி, மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். தினமும் மீன் பள்ளத்தையே சுத்தி சுத்தி வருவேன். தினமும் 4-5 முறை தீவனம் கொடுத்துக்கிட்டே இருப்பேன். குஞ்சு விட்ட ஒரு மாசத்துலயே 200 கிராம் அளவுக்கு மீன்கள் வளர ஆரம்பிச்சிச்சு. ஒரு மாசத்துல இவ்வளவு எடையான்னு மீன்வளத்துறை அதிகாரிங்களே அசந்து போயிட்டாங்க. வெளி மாநிலங்கள்ல இருந்தும் அதிகாரிங்க வந்து பார்த்தாங்க. அடுத்த 4 மாசத்துலயே நல்ல மகசூலும் கிடைக்க ஆரம்பிச்சிச்சு. 1,000 மீன் குஞ்சுகளை விட்டதுல 850 கிலோ வரைக்கும் மகசூல் கிடைச்சது. 6 மாசத்துல எல்லாத்தையும் பிடிச்சி விற்பனை பண்ணிட்டேன்.

ரெண்டாவது தடவை, ஆர்வத்துல, கொஞ்சம் கூடுதலா குஞ்சு விடுவோமேன்னு 2,000 குஞ்சுகளை அந்தக் குட்டைக்குள்ள விட்டுட்டோம். கொஞ்ச நாள்லயே அரசு அதிகாரிங்களும், 1,000 குஞ்சுகளைக் கொண்டு வந்து கொடுத்திட்டாங்க. மொத்தமா 3,000 குஞ்சுகளை அதுல விட வேண்டிய நிலைமை. அவங்க கொடுத்த தீவனத்தோட, தவுடு, புண்ணாக்கு, சோளம்னு நானும் கூடுதலாகத் தீவனம் கொடுத்தேன். குஞ்சுகளோட அடர்த்தி அதிகமானதுனால மீன்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கல. மீன்கள் எல்லாம் மேல வந்து வாய் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. கொஞ்சம், கொஞ்சமா செத்து மடியவும் ஆரம்பிச்சிருச்சு. அதிகாரிகள்கிட்ட கேட்டப்ப, இருக்கிற குஞ்சுகள்ல பாதியை வேற இடத்துக்கு மாத்தி விடச் சொல்லி அறிவுரை கொடுத்திட்டுப் போயிட்டாங்க. அந்த நேரத்துல, மீன் குளத்துக்குப் பக்கத்துலயே அரை ஏக்கர்ல வெள்ளைப் பொன்னி நடவு செஞ்சிருந்தோம். நல்லா பயிர் வளர்ந்து, பால் பிடிக்குற தறுவாயில இருந்துச்சு. அந்த நேரம் புயல் காத்து, மழையில எல்லாம் சாய்ஞ்சு, வயல் முழுசும் தண்ணீர் பெருகிக் கிடந்துச்சு. உடனே எதைப் பத்தியும் யோசிக்கல. மீன் குஞ்சுகளை எடுத்து நெல் வயல்ல விட்டுட்டோம்.

மீன்குளம்
மீன்குளம்

‘வந்தா வருது, போனா போகுது’ன்னு சொல்லிதான், கிட்டத்தட்ட 1,000 குஞ்சுகளை நெல் வயல்ல மாத்தி விட்டோம். இடையில தண்ணீர் கொறஞ்சப்ப ரெண்டு முறை மட்டும் தண்ணீர் கொடுத்தோம். கரைங்க அகலமா இல்ல. மகசூல் சுத்தமா கிடைக்காதுன்னுதான் நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, அடுத்தடுத்த மாசத்துல சாய்ந்த பயிர்களின் தாள் ரொம்பவே குறைஞ்சிருச்சு. அப்புறம்தான் தெரியுது. முழுசையும் மீன்கள் தான் சாப்பிட்டு இருக்கு. 2009-ம் வருஷம் நான் நெனச்சுப் பார்க்காத மகசூல் கிடைச்சது. 1,000 குஞ்சுகள் விட்டதுல கிட்டத்தட்ட 750 கிலோ வரைக்கும் நெல்வயல்ல மட்டுமே மீன் மகசூல் கிடைச்சது. அதுவரைக்கும் மீன் வளர்க்கணும்னா 3 முதல் 5 அடி வரைக்கும் குளம் வெட்டணும். அவ்வளவு அடி தண்ணீர் தேக்கி வச்சிருந்தா தான் வளர்க்க முடியும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். இந்த முயற்சிக்கு அப்புறமாதான் ஒன்றரை அடி தண்ணீர் இருந்தாலே போதும், அதுவும் நடவு வயல்லயே வளர்க்கலாம்னு கத்துக்கிட்டேன். அந்த முறையிலயும் இப்போ 10 வருஷமா மீன் வளர்த்துக்கிட்டு இருக்கேன்’’ என்றவர், நெல் வயலில் வளர்ந்த மீன்களைப் பிடித்துக் காட்டினார்.

‘‘இப்போ நடவு வயல்ல, ஒரு போகம் மீன் வளர்ப்பு, ஒரு போகம் நெல் சாகுபடின்னு சுழற்சி முறையில செஞ்சிக்கிட்டு இருக்கேன். கரையை மட்டும் கொஞ்சம் உயரமாகவும், அகலமாகவும் அமைச்சிருக்கேன். 5 அடி ஆழத்துக்குப் பண்ணைக் குட்டை அமைச்சி, மீன் வளர்த்தா கண்டிப்பா நாம விவசாயம் செய்ய முடியாது. அதே நேரத்துல சாகுபடி முடிஞ்சு, தண்ணீரை மோட்டார் வச்சி இறைச்சி வெளியேற்றுறதுக்கும் படாத பாடுபடணும். செலவும் அதிகம். ஆனா, நெல் வயல்ல வளர்க்கும்போது, உடனே தண்ணீரை வடிச்சி விட்டுட்டு, மாற்றுப்பயிர் சாகுபடி செஞ்சுக்கலாம்.

பொன்னையா - பாக்கியலெட்சுமி
பொன்னையா - பாக்கியலெட்சுமி

வீட்டைச் சுற்றி இருக்கும் மொத்தமுள்ள 13 ஏக்கர்ல, 5 ஏக்கர் வீட்டுக்குத் தேவையான காய்கறி, மீன் தீவனத்துக்குத் தேவையான கம்பு, சோளம் சாகுபடி செய்றேன். தேவைப்படுகிற நேரத்தில நெல் சாகுபடியும் செய்றேன். மீதமிருக்கிற 8 ஏக்கர்லதான் மீன் வளர்ப்பு. இருக்கோம். இதுல ஒரு ஏக்கர் குஞ்சு வளர்க்குறதுக்கான நர்சரி வச்சிருக்கேன். வருஷம் முழுசும் குஞ்சு உற்பத்தி பண்றேன். 4 ஏக்கர்ல தனியா சுழற்சி முறையில நெல் பயிரோடு, மீன் வளர்ப்பு பண்றேன். 3 ஏக்கர்ல நெல் பயிர் இல்லாம வருஷம் முழுசும் மீன் கிடைக்கிற மாதிரி, அமைப்பை ஏற்படுத்தி வச்சிருக்கேன்.

2018-க்குப் பிறகு, மீன் நர்சரி பண்ணையை அமைச்சேன். தலா 20 சென்ட் அளவுல 5 குளங்கள அமைச்சிருக்கேன். மீன் குஞ்சுகளோட வளர்ச்சிக்கு ஏற்ப, பிரிச்சி வச்சிக்கிறதுக்கும். வலைபோட்டு மீன்களைப் பிடிப்பதற்கும் வசதியா இருக்குது. நர்சரிக்கு மட்டும் வழக்கத்தைவிடக் கொஞ்சம் ஆழம் தேவை. பறவைகள்கிட்ட இருந்து குஞ்சுகளைக் காப்பாத்தறது முக்கியம். குறைவான தீவனம் கொடுத்து, நர்சரியில் மட்டும் குஞ்சுகளை அடர்வா வச்சிருக்கேன்.

கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை, நாட்டுக்கெண்டைன்னு கெண்டை ரகங்கள் எல்லாம் எங்கிட்ட இருக்கு. நாம கொடுக்குற உணவு, எல்லா மட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமா கிடைக்கும். பொதுவா ஒரே வகையான மீனை வளர்க்காமல் எல்லா ரக மீன்களையும் வளர்க்குறதுதான் நல்லது. கட்லா மேற்பரப்பிலேயே வாழும். நீர் மேல்மட்டத்தில இருக்குற விலங்கின நுண்ணுயிர்கள், தாவரக் கழிவுகளைச் சாப்பிட்டு வாழும். கலங்கியிருக்குற நீரைச் சரிசெய்யக்கூடிய திறன் இதுக்கு உண்டு. அதே மாதிரி ரோகு நீரின் நடுப்பகுதியில இருக்குற தாவர நுண்ணுயிரிகள், மட்கிய பொருள்களைச் சாப்பிடும். மிர்கால் குளத்தின் கீழ்ப்பகுதியில இருக்கக் கழிவுகள், தாவரக் கழிவுகள், கீழே இருக்குற புழு பூச்சிகளைச் சாப்பிடும். புல் கெண்டை அதிகமா புற்களை விரும்பிச் சாப்பிடும். இப்படி வளர்க்கும்போது, முழுமையா கழிவுகள் தேங்க வாய்ப்பு குறையும். அடிக்கடி பச்சையமாக மாறாது’’ என்றவர், வருமானம்குறித்துப் பேசினார்.

நெல் வயலில் மீன் வளர்ப்பு
நெல் வயலில் மீன் வளர்ப்பு

“இப்போதைக்கு நர்சரியில வளர்க்கிற குஞ்சுகளை 5 நாள் குஞ்சாகவோ, 45 நாள் குஞ்சாகவோ விற்பனை செய்யுறதில்ல. குஞ்சுகளைப் பெருசாக்கி மீன்களாகத்தான் விற்பனை செய்றோம். 7 ஏக்கர்ல மீன் வளர்க்கறதுல 5,500 கிலோ கிடைக்கும். கிலோ 180 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். வீடு தேடி வந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிட்டுப் போறாங்க. வருஷம் முழுசும் விற்பனை செய்யுறது மூலமா வருஷத்துக்கு 9,90,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவுகள்னு பார்த்தால், தீவனம், மீன் பிடிக்கிறது மின்சாரச் செலவு 2,00,000 ரூபாய் ஆகும். மீதமுள்ள 7,90,000 லாபமா கிடைக்கும். தீவனச் செலவு அறவே இல்லை. காரணம், பாசியை சேகரிச்சி போட்டுடறேன்.

இப்போ, மீன் பிடிக்கிற ஆளுகளையும் குறைச்சிட்டோம். 100 கிலோவோ, 500 கிலோவோ இப்போ நானும் என்னோட மனைவி பாக்கியலெட்சுமியும்தான் பிடிச்சிக்கொடுக்கிறோம். என் மனைவி பி.காம் படிச்சிருக்காங்க. ஆனாலும், என்ன மாதிரி விவசாயத்துல ஈடுபாடு அதிகம்ங்கிறதால, எனக்கு ஒத்துழைப்பா இருக்காங்க. பெரிய ஆர்டர்னா மட்டும் ஆட்களை கூப்பிட்டுக்குவோம். மற்றபடி தினமும் மீன் பிடிக்கிறது நாங்கதான்.

மீன் பள்ளம் வச்சிருந்த நிலத்துல அத்தனை சத்துகளும் இருக்கும். உரம், பூச்சி மருந்துன்னு எதுவுமே அடிக்கிறதில்ல. ஆனா, விளைச்சல் ஓரளவு நல்லாவே இருக்கு. கடந்த முறை 4 ஏக்கர்ல வெள்ளைப் பொன்னி திருந்திய நெல் சாகுபடி மூலமா சாகுபடி செஞ்சதுல மொத்தமா 120 மூட்டைக் கிடைச்சது. 2 முறை கோனோவீடரை ஓட்டிவிட்டதோடு சரி. மொத்தமா நெல் கொள்முதல் நிலையத்தில் போட்டுட்டேன். நெல் சாகுபடி மூலமா 1,48,320 ரூபாய் கிடைச்சது. இதுல களை, அறுவடை, ஆட்கூலின்னு 48,320 ரூபாய் செலவானாலும் 1,00,000 ரூபாய் லாபமா கிடைச்சது’’ என்றவர்,

‘‘நாம கொடுக்குற பாசிகளோடு மீன்கள் அதுக்குத் தேவையான தாவர, விலங்கு நுண்ணுயிர்களையும் சாப்பிட்டு வாழும். தீவனச் செலவை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு லாபம் கிடைக்கும்” என்றொரு மதிப்புமிக்க யோசனையைச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பொன்னையா,

செல்போன்: 95663 58151.

மீன் வளர்ப்பு தொடர்பாக பொன்னையா சொல்லிய
தொழில்நுட்பம் பாடமாக இங்கே...

நடவு வயலில் உழவு ஓட்டி, பரம்படிக்க வேண்டும். அரை அடி வரை தண்ணீர் விட்டு, ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதம் பாசியைப் போட வேண்டும். 20 நாள்களில் பாசி ஒரு ஏக்கர் முழுவதும் பரவிவிடும். தொடர்ந்து, ஒன்றரை அடி வரைக்கும் தண்ணீரை நிரப்ப வேண்டும். நர்சரியில வளர்க்கும் 50 கிராம் விரலி குஞ்சுகளை அதில் விட வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில் 500 குஞ்சுகளாக நான்கு முறை விட வேண்டும். மொத்தம் 2,000 குஞ்சுகள். மொத்தமாக விடும்போது, இறப்புகள் அதிகரிக்கும். நீர்க் காகம், தண்ணீர் பாம்புகளால் கணிசமான குஞ்சுகள் இறந்துபோய் விடும். 120 நாளில் அரைகிலோ முதல் 1 கிலோ வரை மீன்கள் வளர்ந்து விடும். பாசியும் முழுதாகக் காலியாகிவிடும். பாசியைச் சாப்பிட்டு வளர்வதால், ஒரு விதமான பாசி வாடை வரும். பாசி காலியான பிறகு அடுத்த 20 நாள்களுக்கு மட்டும் கொஞ்சம் கருக்கா தவிடுடன், கோதுமை, சோளம் எனச் சில தீவனங்களைக் கொடுக்க வேண்டும். 6 மாதத்தில் ஒரு ஏக்கரிலிருந்து 1,000 கிலோ முதல் 1,500 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு டன் என்ற விகிதத்தில் ஈரச் சாணத்தைத் தண்ணீரில் தெளித்து விட வேண்டும். தொடர்ந்து, ஒன்றரை அடி ஆழத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக, தண்ணீர் கொடுக்க வேண்டும். கோடையில் வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுப்பது சரியாக இருக்கும்.

பொன்னையா - பாக்கியலெட்சுமி
பொன்னையா - பாக்கியலெட்சுமி

தீவனச் செலவைக் குறைத்த பாசி!

‘‘மீன் வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில்தான். ஆனாலும், அரசு சார்புல ஆரம்பத்துல தீவனம் கொடுத்தப்ப பெருசா தெரியல. நாம தனியா தீவனம் பண்ணி வளர்க்கிறப்ப, பெருசா லாபம் கிடைக்கலன்னுதான் சொல்லணும். மீன் விற்பனை செய்ற வருமானத்துல 40 சதவிகிதத்தைத் தீவனத்துக்காகச் செலவு செய்யணும். அதற்கப்புறம், மீன் பிடிக்கிற கூலி வேற இருக்கு. அதனாலதான் பலரும் மீன் வளர்ப்புக்கு வர தயங்குறாங்க. தீவனச் செலவை எப்படியாவது குறைக்க முழுசா நான் முயற்சி பண்ணிகிட்டிருந்தேன். இதுக்கிடையிலதான், ஒவ்வொரு வருஷமும் மீன் வளர்ப்பு சம்பந்தமா வெவ்வேறு மாநிலங்கள்ல பயிற்சி கொடுப்பாங்க. தமிழ் நாட்டுலயிருந்து பலரும் போவோம். 2012-ம் வருஷம், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரான்னு ஒவ்வொரு மாநிலமாக 10 நாள்கள் பயிற்சிக்குப் போயிருந்தேன். அந்தப் பயிற்சி வகுப்புகள் எனக்கு ரொம்பவே பயனுள்ளதா இருந்துச்சு. மீன்களுக்கு எத்தனை வகையான தீவனங்கள் இருக்கு. அதுக்கு வரும் நோய்கள், முக்கியமா எத்தனை ரக மீன்கள் இருக்குனு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடிஞ்சது.

அப்படி, வெளியூருக்கு மீன் வளர்ப்பு பயிற்சிக்குப் போயிருந்தப்ப, ‘பயோ டெக்’ மாணவர் ஒருத்தரும், தீவன பயிற்சியாளர் ஒருத்தரும் ரயில்ல நீண்ட நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதைக் கூர்ந்து கவனிச்ச நான், ‘மீனுக்கும், ஸ்பைரூலினாவுக்கு என்ன சம்பந்தம், இதுபத்தி பேசிக்கிறீங்களே’ன்னு கேட்டேன். அப்பத்தான் தீவன பயிற்சியாளர், ‘தீவனத்தை விட 90 சதவிகிதம் சுருள் பாசிகள்ல புரோட்டின் அதிகமா இருக்கும். இதைத் தீவனத்துல கலந்துக்கொடுத்தா நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனா, சுருள்பாசி வளர்க்கிறது அதிக செலவாகும்னு சொன்னாரு. அப்பத்தான் நான் கேட்டேன், ‘சுருள்பாசியில மட்டும்தான் சத்து இருக்கா, ஆண்டாண்டு காலமா எங்க குளம் கண்மாயில ஏராளமான பாசிகள் இருக்கே... அதுல எல்லாம் சத்துகள் இருக்காதா?’ன்னு கேட்டேன்.

‘பாசிகள்னாலே கட்டாயம் புரோட்டின் இருக்கும், ஆனா, வளர்ச்சி எப்படி இருக்கும்னு தெரியாது’ன்னு சொன்னாரு. நம்ம பகுதியிலதான் பாசிகள் மண்டி கிடக்குதே, அதனால சோதனை முயற்சியா அரை ஏக்கர்ல 1,000 குஞ்சுகள் விட்டுப் பாசி கொடுத்துப் பார்த்தேன். தீவனத்தை 3 மாசத்துக்கு அறவே குறைச்சிட்டேன். ஆனா, எதிர்பார்த்த மாதிரியே நல்ல மகசூல் கிடைச்சது. 4 மாசத்துல ஒரு கிலோவுல இருந்து 2 கிலோ வரைக்கும் மீன்களோட வளர்ச்சி இருந்துச்சு. இப்போதைக்கு கொடி பாசி, பால்பாசின்னு நம்ம நீர் நிலைகள்ல, நம்மைச் சுத்தியும் கிடைக்கக்கூடிய பாசிகளைத்தான் கொண்டு வந்து போடுறேன். கொஞ்சம் பாசி போட்டாலும், அடுத்த ரெண்டு வாரத்துல அரை ஏக்கர் முழுசும் படர்ந்துடும். இப்போ தீவனத்துக்கு நான் பெருசா செலவு செய்றதில்ல. தீவன செலவைச் முழுசா குறைச்சிட்டேன்’’ என்கிறார் பொன்னையா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism