Published:Updated:

"வருமானம் அவசியம்... வாழ்வியல், அதைவிட அவசியம்!" ஐ.டி பார்க் அருகே அசத்தும் தற்சார்பு பண்ணை!

பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர் ( Jerome )

பண்ணை

"வருமானம் அவசியம்... வாழ்வியல், அதைவிட அவசியம்!" ஐ.டி பார்க் அருகே அசத்தும் தற்சார்பு பண்ணை!

பண்ணை

Published:Updated:
பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர் ( Jerome )

"குடும்பம், வேலையைத் தாண்டி சுற்றுலா போறது, கோயில்களுக்குப் போறது, சினிமாவுக்குப் போறதுனு இருக்கோம். இதுதான் வாழ்க்கை முறைன்னு சொல்லிக்கிறோம். ஆனா, எங்களைப் பொறுத்தவரை விவசாயம் செய்றதும் ஒரு வாழ்வியல் முறை (LifeStyle)தான். விவசாயம் தொழில் மயமா மாறிட்டு வரும் இந்தக் காலத்துல, நம் வாழ்க்கையோட ஒரு பகுதியா விவசாயமும் இருக்கணும். அந்த வகையில குடும்பம், தொழிலோடு விவசாயத்தையும் இணைச்சு ஒரு பண்ணையை நடத்திக்கிட்டு வர்றோம்” மகிழ்ச்சியோடு சொல்கிறார் சென்னையை யடுத்த தாழம்பூரைச் சேர்ந்த ஷமி ஜேக்கப்.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, நிறைய பேர் விவசாய நிலம், வீடு, அலுவலகம் அனைத்தும் ஓரிடத்திலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம், வீடு, அலுவலகம் அனைத்தையும் ஒரே இடத்தில் இருக்கும்படி பண்ணையை வடிவமைத்திருக்கிறார்.

பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர்
பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர்

மழைநீரைச் சேமிக்க ஜல்லிக்கல் சாலை

செங்கல்பட்டு மாவட் டம், தாழம்பூரிலிருந்து சிறுசேரி ஐ.டி பார்க் செல்லும் வழியில் இருக்கிறது ஜேக்கப் கிளஸ்டர் பண்ணை. நுழைவாயிலிருந்து ஜல்லிக்கற்கள் போடப் பட்ட பாதையில் நடந்து பண்ணைக்குள் சென்றோம். “வழக்கமா தார் ரோடு இல்லைன்னா மண்சாலை இருக்கும். நீங்க ஜல்லிக்கற்களைக் கொட்டியிருக் கிறீங்களே” எனக் கேட்டோம். “பாதையில் பெய்யும் மழைநீர் நேரடியாகப் பூமிக்குள் இறங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று சொல்லி வரவேற்றவர் விளாம்பழம், ஆப்பிள் பழத் துண்டுகள் போட்ட குளிர்ந்த நீரைக் குடிக்கக் கொடுத்து உபசரித்த பிறகு, பேசத் தொடங்கினார்.

“நான் படிச்சதெல்லாம் சென்னைதான். பேஷன் டிசைன் முடிச்சதும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டேன். அமெரிக்கா, இந்தோனேசியா, நெதர்லாந்துனு பல நாடுகள்ல வேலை செஞ்சேன். கடைசியா நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வேலை செஞ்சேன். அப்போதான் இவங்க (மனைவி) பழக்கமானாங்க. பிறகு, திருமணமும் நடந்து ரெண்டு குழந்தைகளும் பிறந்தது. எவ்வளவுதான் நம் நாடு, வெளிநாடுனு சுத்தினாலும் எல்லா இடத்திலும் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம் இருக்கு. தேவைக்கு அதிகமா பொருள்களை உற்பத்தி செய்றோம். பிறகு, அதுவே சூழல் மாசுபாடாகப் பெருக்கெடுக்குது. அந்த நேரத்துலதான் விவசாயம் மேல எங்களுக்கு ஆர்வம் அதிகமாச்சு” என்றவரைத் தொடர்ந்து பேசினார் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான அவருடைய மனைவி சார்லெட் வான் குளோஸ்டர்.

பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர்
பண்ணையில் ஷமி ஜேக்கப்-சார்லெட் வான் குளோஸ்டர்
தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்

நம்பிக்கைக் கொடுத்த இந்திய விவசாயம்

“நெதர்லாந்தில் விவசாயம் செய்யலாம் என்று நிலத்தைத் தேடினோம். ஆனால், அங்கெல்லாம் சிறிய சிறிய பண்ணை களெல்லாம் அழிக்கப்பட்டு, பெரிய பண்ணைகளாக மாறிவிட்டன. 100 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் மக்காச்சோளம், கோதுமை, ஆப்பிள் என்று ஏதாவது ஒரு பயிர் மட்டுமே அங்கு விளையும். அது உற்பத்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அவ்வளவு பெரிய பண்ணை களுக்கு நம்முடைய பாரம்பர்ய விவசாய அறிவையோ, கற்ற இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களையோ பயன்படுத்திப் பார்ப்பது சிரமம். ஆனால், இந்தியாவில் சிறிய சிறிய பண்ணைகள் உயிர்ப்போடு இருப்பதை அறிய முடிந்தது. இங்கு விவசாயிகள் தங்களுடைய பாரம்பர்ய விவசாய அறிவை முழுமையாக இழக்க வில்லை. இங்கு விவசாயம் முழுமையாகத் தொழிற்மயமாக மாறவில்லை. அந்த வகையில் நமக்கேற்ற ஒரு வாழ்வியல் பண்ணையை இந்தியாவில் அமைக்க முடியும் என்று நம்பினோம். அந்த யோசனையின் விளைவு தான் இந்தப் பண்ணை” என்றவரைத் தொடர்ந்து பேசினார் ஜேக்கப்,

மாட்டுடன்
மாட்டுடன்
வாத்துகள்
வாத்துகள்

மின்வெட்டுன்னா என்னன்னே தெரியாது

“எங்கப்பா 80-கள்ல இங்க நிலத்த வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்திலயே இயற்கை விவசாயம் செய்யலாம்னு 90-களோட இறுதியில முடிவு செஞ்சோம். வெளிநாட்டுல இருந்து வர்ற ஒவ்வொரு முறையும், பண்ணையில ஒவ்வொரு வேலையைச் செஞ்சிட்டு போவோம். முதல்ல பண்ணையில மின்சார வசதியை ஏற்படுத்தினோம். அடுத்த முறை வந்தபோது கிணறு வெட்டினோம். அதற்கடுத்த முறை வந்தபோது தங்குறதுக்கு வீட்டைக் கட்டினோம். இப்படி வரும் போதெல்லாம் பண்ணைக்குத் தேவையான வேலையைச் செஞ்சோம். ஒரு நிலத்தைப் பார்க்கும்போதே அந்த நிலத்துல பயிர் வளர்வதற்கு என்ன செய்யணும்னு அந்த நிலமே சொல்லிடும். அப்படி இந்தப் பண்ணை யில ஒவ்வொரு விஷயமா செஞ்சிருக்கோம். தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்வது, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதுனு பயிற்சி வகுப்புகள நடத்துறோம். அதுக்கான அலுவல கத்தையும் பண்ணைக்குள்ளதான் அமைச் சிருக்கோம். பண்ணையில மின்சாரப் பிரச்னை வந்திடக் கூடாதுனு சோலார் மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகள உருவாக்கி இருக்கோம். அந்த மின்சாரத்தை தான் வீடு, அலுவலகத்துக்குப் பயன் படுத்துறோம். எங்க குழந்தைகளுக்கு மின்வெட்டுனா என்னான்னு தெரியாது. அதேமாதிரி கோடைக்காலத்திலயும் தண்ணீர் கிடைக்கணும்னு ஒரு குளம் வெட்டினோம். அது நிலத்தடி நீருக்கும் உதவியா இருக்குது. வாத்துகள் வளர்க்கிறதுக் கும் பயன்படுது” என்றவர், பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.

காய்கறிப் பண்ணை
காய்கறிப் பண்ணை


மண்டல விவசாயம்

“இது மொத்தம் 11 ஏக்கர். இதுல எனது பங்கு 2.25 ஏக்கர் இருக்குது. இந்த 2.25 ஏக்கர்லதான் 300 தென்னை மரங்கள், சமூக பண்ணை, காய்கறிப் பண்ணை, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்புனு எல்லா வேலைகளும் நடக்குது. இதோடு பயிற்சி வகுப்புகள் நடத்துறதுக்கு கூடம், வீடு, மாட்டுக் கொட்டகை இருக்கு. 14 நாட்டு மாடுகள், 25 நாட்டுக்கோழிகள், 25 வாத்துகள் இருக்கு. சமூக பண்ணைனு சொல்லப்படுற நிலங்களை வெளியாட்களுக்கு விவசாயம் கத்துக்க விட்டிருக்கோம். காய்கறிப் பண்ணை கள்ல 3 சென்ட் (அரை கிரவுண்டு) அளவுக்குத் தனித்தனியா மண்டலமா (Zone) பிரிச்சு விவசாயம் செய்றோம். இதுல தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வாழை, கீரை சாகுபடி செய்றோம்.

கீரைச் சாகுபடி
கீரைச் சாகுபடி


கிர், சாகிவால் ரக மாடுகள் 14 இருக்கு. எப்போதும் மாடுகள் கறவையில் இருக்கிற மாதிரி பராமரிச்சுட்டு வர்றோம். மாடுகள் மூலமா கிடைக்கிற சாணத்தை தொழுவுரமா மாத்தி பயிர்களுக்குப் பயன்படுத்துறோம். பண்ணையில கிடைக்கிற இலைதழைகள நிலத்துல போட்டு மட்க வெச்சு உரமாக் கிடுறோம். பூச்சித் தாக்குதலுக்கு மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர் எடுத்து பயிர்கள் மேல தெளிச்சு கட்டுப்படுத்துறோம். இதுக்கு கட்டுப்படலைன்னா 10 லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி வேப்ப எண்ணெய், 10 கிராம் காதி் சோப் கரைசல் கலந்து தெளிச்சு பூச்சிகள விரட்டுறோம். மகரந்தச் சேர்க்கைக்காக 5 தேனீப் பெட்டிகள வெச்சிருக்கிறோம்” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.

காய்கறிப் பண்ணை
காய்கறிப் பண்ணை

நாட்டுமாட்டுப் பால் மூலம் 7,30,000

“என்னைப் பொறுத்தவரை விவசாயத்துல லாபம் சம்பாதிக்கிறதுக்காக இதைச் செய்யல. இருந்தாலும் உத்தேசமா இதுக்கு ஒரு கணக்கு சொல்லணும்னா, ஒரு நாளைக்கு வீட்டுக்குப் பயன்படுத்தியதுபோது மாடுகள் மூலமா 20 லிட்டர் பால் என்ற கணக்குல நேரடி விற்பனை மூலமா 2,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வருஷத்துக்கு பால் மூலமா 7,30,000 ரூபாய் வருமானம். வீட்டுக்குப் பயன் படுத்தியது போகத் தேங்காய், காய்கறிகள் மூலமா வருஷத்துக்கு 1,40,000 ரூபாய் வருமானம். பண்ணையிலேயே இயற்கை அங்காடி இருக்கு. அதுமூலமா வித்திடுறோம். கோழிகள், வாத்து முட்டைகள் மூலமாக 60,000 ரூபாய்னு மொத்தம் 9,30,000 ரூபாய் வருமானம்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்
நாட்டுக் கோழிகள்
நாட்டுக் கோழிகள்

பண்ணையில் 6 பேர் வேலை செய்றாங்க, மாட்டுக்குத் தீவனம், போக்குவரத்து, இதரச் செலவுகள்னு வருஷத்துக்கு 12 லட்சம் ரூபாய் செலவு செய்றேன். இதுல 9,30,000 ரூபாய் வருமானம். அதுபோக 3,70,000 ரூபாய் கையிலிருந்து செலவு செய்றேன். கிட்டத்தட்ட 30 சதவிகிதம் செலவு செய்றேன். வீட்டுக்குப் பயன்படுத்துற பால், காய்கறிகள், நண்பர் களுக்குக் கொடுக்கிறதையும் சேர்த்தா இந்த 30 சதவிகிதம்கூட ஒரு விதத்துல வருமானம் தான். அப்படிப் பார்த்தால் இந்தப் பண்ணை மூலமா வர்ற வருமானம், பண்ணையை நடத்துறகுக்குச் சரியா இருக்கு. வருங்காலத்துல செலவைக் குறைச்சு, உற்பத்தியைப் பெருக்குனா கூடுதல் வருமானம் வரும்” என்றவர் நிறைவாக,

பயிற்சிக் கூடம்
பயிற்சிக் கூடம்


“எங்க வாழ்க்கை முறையை இயற்கையோடு இணைஞ்சதா வெச்சுக்கணும்னுதான் இதைச் செய்றோம். ஒரு நல்ல சூழல்ல இருந்துகிட்டே குடும்பத்தைப் பார்த்துக்க முடியுது, அலுவலக வேலையையும் செஞ்சுக்க முடியுது. இந்தப் பண்ணையைப் பார்க்கிறவங்க, ‘ஒரு பண்ணை யில இருக்க வேண்டிய அத்தனை அம்சங் களும் இங்க இருக்கு, பண்ணை வடிவமைப்பு சரியா இருக்கு’னு பாராட்டுறாங்க. இப்படி யொரு வாழ்வியல் பண்ணை இன்றைய காலகட்டத்துக்கு அனைவருக்கும் தேவை. அப்படி உருவாக்கி அதுல வாழுறோம்ங்கறதே எங்களுக்குச் சந்தோஷமா இருக்குது” என்று விடைகொடுத்தார்.


தொடர்புக்கு,

ஷமி ஜேக்கப்,
செல்போன்: 87541 40164

பேட்டரியில் இயங்கும் சைக்கிள்
பேட்டரியில் இயங்கும் சைக்கிள்

பேட்டரியில் இயங்கும் சைக்கிள்

பேட்டரியில் இயங்கும் சைக்கிளைப் பண்ணைக்குள் பயன்படுத்தி வருகிறார் ஜேக்கப். அதுபற்றிப் பேசியவர், “இது சென்னை ஐ.ஐ.டி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது. 1 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் 40 கி.மீ தூரத்துக்குப் பயணிக்கலாம். இந்தச் சைக்கிள்ல 100 கிலோ எடையுள்ள பொருள்களை எடுத்துக்கிட்டுப் போகலாம். ஒரு நெல் மூட்டையைப் பின்பக்கம் வெச்சு கொண்டு போகலாம். மிதிக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டு மாட்டுப் பாலை இதுல வெச்சு கொண்டு போய்த்தான் தாழம்பூர், நாவலூர் பகுதிகள்ல இருக்க வீடுகளுக்குக் கொடுக்கிறேன். பண்ணையைச் சுத்தி வர்றதுக்கும் இது உதவுது. இந்த சைக்கிள் சத்தம் எழுப்பாது. அதனால பண்ணையில் உள்ள பூச்சிகள், விலங்குகள், கோழிகள், மாடுகளுக்குத் தொந்தரவு இல்லை. இன்னொண்ணு சூழலுக்கும் இசைவா இருக்குது. இதோட விலை 35,000 ரூபாய். சென்னை பெருங்குடியில் இந்த சைக்கிள் நிறுவனம் இருக்குது. அங்கதான் நான் வாங்கினேன்” என்றார்.

காய்கறி விவசாயம்
காய்கறி விவசாயம்

3 சென்ட்... ரூ.2,500

நிலத்தை மண்டல வாரியாகப் பிரித்துக் காய்கறி விவசாயம் செய்து வருகிறார் ஜேக்கப். அதுகுறித்து பேசியவர், “பண்ணையில மாடுகள முடிந்தளவு காலாற நடந்து மேயுற மாதிரிதான் விடுறோம். காய்கறிச் சாகுபடி செய்றபோது, அதுல மாடுகள் நுழைஞ்சு சேதப்படுத்திடுது. அதேமாதிரி பன்றி, எலித் தொல்லைகளும் இருக்கு. இதுல இருந்து காப்பாத்துறகுக்கு 3 சென்ட் அளவுல (அரை கிரவுண்டு) மண்டல வாரியாகப் பிரிச்சு விவசாயம் செய்றோம். ஒவ்வொரு மண்டலத்தைச் சுத்தியும் கம்பிவேலி அல்லது உயிர்வேலி போட்டுடுறோம். ஒரு பயிரோட அறுவடை முடிஞ்சதும், அடுத்த பயிரை வைப்போம். இப்படி பயிர் செய்றதால, பூச்சித் தாக்குதல் எதுவுமில்லாம சாகுபடி செய்ய முடியுது. இதுக்கு சொட்டுநீர் அல்லது கால்வாய் பாசனத்தை அமைச்சிக்கலாம். இந்த முறையில ஒரு மண்டலத்திலிருந்து ஒரு போகத்துக்கு 100 - 120 கிலோ காய்கறி கிடைக்கும். ஒரு கிலோ சராசரியா 25 ரூபாய்க்கு வித்தால்கூட 100 கிலோவுக்கு 2,500 ரூபாய் கிடைக்கும். இந்த முறையில் வீட்டுத் தோட்டங்களைக்கூட அமைக்கலாம்” என்கிறார்.

சமூகப் பண்ணை
சமூகப் பண்ணை

விவசாயம் கற்கலாம்

“ஐ.டி கம்பெனிகள்ல இருக்கிறவங்க விவசாயம் கத்துக்க வர்றாங்க. இப்படி வர்றவங்களுக்கு வசதியா 3 அல்லது 6 சென்ட் அளவுல (அரை அல்லது ஒரு கிரவுண்டு நிலம்) விவசாயம் பழகுறதுக்கு நிலத்த கொடுக்கிறேன். இப்போ 3 பேர் அந்த முறையில விவசாயம் கத்துக்கிட்டு இருக்காங்க. நிலத்த சுத்தி கம்பி வேலி அமைச்சு கொடுத்திடுவோம். தண்ணி, தொழுவுரம் நாங்க கொடுத்திடுவோம். நடவு, களை, அறுவடை அவங்க பார்த்துக்கணும். 6 மாசம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவோம். வாரம் ரெண்டு நாள் கட்டாயம் வந்து விவசாயம் செய்யணும். தண்ணீர் மட்டும் நாங்க பாய்ச்சிவிடுவோம்” என்றார்.