Published:Updated:

75 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.30,000 வருமானம்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு!

நாட்டுக்கோழி வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழி வளர்ப்பு

கால்நடை

75 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.30,000 வருமானம்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு!

கால்நடை

Published:Updated:
நாட்டுக்கோழி வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழி வளர்ப்பு

ன்றைக்குக் கிராமம் முதல் பெருநகரங்கள் வரை, மொட்டை மாடிகளில் தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் காய்கறிகளை விளைய வைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தற்போது, சிலர் மொட்டை மாடியில் கோழி வளர்ப்பையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் மாடியில் கோழி வளர்த்து வருகிறார். ஒரு காலைப் பொழுதில் கோழிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

“மீஞ்சூர் பக்கம் ஒரு கிராமத்துல இருந்தோம். அங்க ஆடு, மாடு கோழிகள்னு எல்லாமே வளர்த்தோம். 10 வருஷத்துக்கு முன்னால சென்னை, அம்பத்தூருக்கு குடி வந்துட்டோம். அப்ப நான் ஒரு தனியார் நிறுவனத்துல வேலையில இருந்தேன். அதனால வெளியில போற வாய்ப்புகள் அதிகமா இல்ல. சென்னைக்கு வந்ததுக்கு அப்புறமா, இறைச்சி வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டி இருந்தது. பணம் அதிகமாக் கொடுத்தாக்கூட ஒரு தரமான இறைச்சு கிடைக்கிறதில்ல. அதனால நாமளே கோழி வளர்த்தா என்னனு தோணிச்சு. அந்தச் சமயத்துல கும்மிடிப்பூண்டி பக்கத்துல இருக்குற லோகுங்குற நண்பர் நாட்டுக்கோழி வளர்த்து வருமானம் பார்த்துக்கிட்டிருந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தால நாமளும் நாட்டுக்கோழி வளர்க்க ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.

கோழிகளுடன் வெங்கடேஷ்
கோழிகளுடன் வெங்கடேஷ்

‘நகரத்துக்குள்ள கோழி வளர்க்குறது ரொம்பக் கஷ்டம். மாடியில வளர்த்தா வெப்பம் அதிகமா இருக்கும்’னு பலரும் பல யோசனைகளை முன்வச்சாங்க. இதுக்காகப் பலரோட ஆலோசனைகளைக் கேட்டேன். அவங்க மொட்டைமாடியில ஷீட் போட்டு, அதுமேல தென்னங் கீற்றுகளைப் போட்டால் வெப்பம் குறையும். எல்லாச் சூழ்நிலையிலும் கோழிகளை வளர்க்கலாம்னு சொன்னாங்க. இதுபோக மாதவரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துல ஒருநாள் பயிற்சி எடுத்துகிட்டேன். அதுக்கு பிறகு, 2014-ம் வருஷத்துல ஆரம்பிச்சு, இப்போ வரைக்கும் வளர்க்கிறேன். முதல்ல 25 கோழிகளை வச்சுக்கிட்டு கீற்றுக் கொட்டகை முறையிலதான் ஆரம்பிச்சேன். நல்லா பண்ண முடியும்ங்குற நம்பிக்கை வந்தபிறகு, கம்பியில ஷெட் அமைச்சு பெரிய அளவுல மாத்தினேன். முதல்ல கிடைச்ச முட்டைகளை என்னோட தேவைக்குப் போக நண்பர்களுக்குக் கொடுத்தேன். அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க, முட்டைகளை விலைக்குக் கேட்டாங்க. அதுக்கு பிறகுதான் இதைத் தொழிலா மாத்தினேன். இப்ப, அதுவே நிலையான வருமானத்தைக் கொடுத்திட்டிருக்கு.

கோழிகள்
கோழிகள்

550 சதுர அடி பரப்பளவுள்ள இடத்துல தான் கோழிகளை வளர்க்கிறோம். ராத்திரி மட்டும் கூண்டுல அடைக்கிறோம். கடக்நாத், சிறுவிடைக் கோழிகள், கைராலினு பல வகைக் கோழிகளோடு 70 முயல்களும் என்கிட்ட இருந்தது. ஆனா ஏதாவது ஒரு கோழி வகையை மட்டும் வளர்க்கலாம்னு தோணிச்சு. அதனால 75 கைராலி வகைத் தாய்க்கோழிகளை மட்டும் இப்போ வளர்த்துகிட்டு இருக்கேன். கூடவே கொஞ்சம் புறாக்களையும் வளர்க்குறேன். கோழிகள் வெளியே எங்கேயும் போகாது. மொட்டை மாடியில கழிவு நீர் தங்காம பார்த்துக்கிறேன். கோழிக்கழிவுகள் செடிகளுக்கு உரமாகுது’’ என்றவர் கோழிகளுக்கான பராமரிப்பு முறைகள் குறித்துப் பேசினார்.

மாடியில்
மாடியில்

நோய் எதிர்ப்பு சக்தி

கொடுக்கும் மூலிகைகள்


‘‘கோழிகளுக்குக் கீழாநெல்லி, குப்பை மேனி, சின்ன வெங்காயம், ஆடாதொடை, தூதுவளை, கற்பூரவள்ளினு தலா 100 கிராம் எடுத்துக் கலந்துக்குவேன். அதை வாரம் ரெண்டு தடவை தண்ணியிலும், வாரம் ஒரு தடவை தீவனத்திலும் கலந்துவிடுவேன். இதனால கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்துடும். அதனால பனி, மழைக்காலங்கள்ல கோழிகள்ல நோய்த்தாக்கத்தைக் குறைக்கலாம். இப்போ கோடைக் காலம்ங்குறதால வெயில்தாக்கத்தைக் குறைக்க, பண்ணையின் மேற்கூரையோட உள்பக்கம் தென்னை கீற்றுகளை அமைச்சிருக்கேன். மேற்கூரைக்கு மேலே கம்பி வலை அமைச்சிருக்கேன். அதுல கொடி வகை காய்கறிகளை ஏத்திவிடப் போறேன். அதன்மூலமா வருமானமும் கிடைக்கும். அதோட கொட்டகைக்குக் குளிர்ச்சியும் குறையும்.

புறாக்கள்
புறாக்கள்

காசு இல்லாமல் கிடைக்கும்

காய்கறிக் கழிவுகள்


காலையிலும் மாலையிலும் தீவனம் வைக்கிறது, தண்ணீர் கொடுக்குறது, பண்ணை சுத்தம் செய்றதுனு தலா ஒரு மணிநேரம் கோழிகளைப் பராமரிக்கிறேன். காலையில கோழித்தீவனமும், மாலையில் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்குறேன். நான் முட்டை கொடுக்குற கடைகள்ல இருந்து காய்கறிக் கழிவுகளை எடுத்துக்குறேன். அவங்க அதுக்கு பணம் கேக்குறது இல்ல. அதனால அந்தச் செலவு எனக்கு மிச்சமாகுது.

போன ஊரடங்கு நேரத்துல 300 கோழிகளுக்கு மேல வச்சு வளர்த்துகிட்டு இருந்தேன். அப்போ அதிகமா விற்பனையும் செஞ்சேன். அப்பவே 200 கோழிகளுக்கு மேல விற்பனை ஆகிடுச்சு. இப்போ மிச்சம் இருக்குறது 75 தாய்க்கோழிகளும், 15 சேவல் களும்தான். இது, அதிக முட்டையிடும் கோழி இனம். வருஷத்துக்கு 200 முதல் 250 முட்டைகள் இடும். முட்டைக்கு ஏற்றக் கோழிங்குறதாலதான் கைராலி ரகத்தைத் தேர்வு செஞ்சேன். ஒரு நாளைக்கு 50 முட்டைகள் எடுக்குறேன்.

‘‘இப்போ கோடைக் காலம்ங்குறதால வெயில்தாக்கத்தைக் குறைக்க, பண்ணையின் மேற்கூரையோட உள்பக்கம் தென்னை கீற்றுகளை அமைச்சிருக்கேன்.’’
கிளிகள்
கிளிகள்

கோழிகள் இடற முட்டைகளை உணவுக்காக விற்பனை செய்ற முட்டைகள், பொரிக்க வெச்சு கோழிகளா வளர்க் கறதுக்கான முட்டைகள்னு பிரிச்சுக்குறேன். அதேபோலக் கோழிக்குஞ்சுகளாகவும் பொரிக்க வெச்சு விற்பனை செய்வேன். தாய்க்கோழிகளா விற்பனை செய்றது இல்ல. ஏன்னா ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு 2 ரூபாய் செலவுனு வெச்சா, 6 மாசத்துல (180 நாள்கள்) 360 ரூபாய் செலவாகிடும். அதுபோக அடுத்த முட்டைக்கு, தாய்க் கோழிகள் வளர்த்து 6 மாசம் காத்திருக்கணும். இப்போ ஒவ்வொரு மாசமும், உணவுக்காக 500 முட்டைகள், குஞ்சு பொரிக்க 600 முட்டைகள், ஒரு மாத குஞ்சுகளா 200 குஞ்சுகள்னு விற்பனை செய்துகிட்டு இருக்கேன். பெரும்பாலும் மூலிகை உணவுகளைத்தான் கொடுக்குறோம். அதனால, தடுப்பூசி போடுற தேவையும் ஏற்படாம, கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஆரோக்கியமா வளருது” என்றவர் வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கோழிக் குஞ்சுகள்
கோழிக் குஞ்சுகள்

மாதம் ரூ.30,000 வருமானம்

‘‘உணவுக்கான முட்டை 12 ரூபாய், குஞ்சு பொரிக்கறதுக்கான முட்டை 20 ரூபாய், ஒரு மாத கோழிக்குஞ்சு 60 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில உணவுக்கான 500 முட்டைகள் மூலமா 6,000 ரூபாய், குஞ்சுபொரிக்கறதுக்கான 600 முட்டைகள் மூலமா 12,000 ரூபாய், கோழிக்குஞ்சுகள் 200 மூலமா 12,000 ரூபாய்னு மொத்தம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. கோழிகளுக்கான பராமரிப்புச் செலவு, தீவனம்னு மாசத்துக்கு 5,000 ரூபாய் செலவுபோக, 25,000 ரூபாய் கையில நிக்கும். விற்பனை கொஞ்சம் மந்தமா போனாலும் மாதம் 20,000 ரூபாய் நிச்சயமா கையில நிக்கும்” என்றவர் நிறைவாக,

குஞ்சு பொரித்தல்
குஞ்சு பொரித்தல்

‘‘புதுசா மொட்டை மாடியில கோழி வளர்க்கணும்னு நினைக்குறவங்க. 20,000 ரூபாய் செலவுல சின்னதா ஆரம்பிச்சு அதுல வெற்றி அடைஞ்சா மட்டும்தான் அடுத்த கட்டத்துக்குப் போகணும். இல்லைனா முழுசா கத்துகிட்டு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திகிட்டு ஆரம்பிக்கணும். 2 சேவல், 10 கோழிகள் இருந்தாப் போதும். அது மூலமா முட்டை எடுத்துக் குஞ்சு உற்பத்தி பண்ணி விற்பனை செஞ்சு சம்பாதிக்கலாம். இதுக்கு அதிகமான இட வசதிகூடத் தேவையில்லை. வீட்டு மொட்டைமாடியில் கூட வளர்க்க முடியும். எல்லாக் கோழிகளும் ஒரே நேரத்துல முட்டை வெக்காது. ஒண்ணு முட்டை வைக்கும்போது இன்னொண்ணு அடையில இருக்கும். இன்னொண்ணு குஞ்சுகளோட இருக்கும். அதனால, சுழற்சி முறையில மாசா மாசம் நமக்குக் குஞ்சுகள் கிடைச்சுகிட்டே இருக்கும்” என்றபடி விடைகொடுத்தார்.


தொடர்புக்கு,

வெங்கடேஷ்,

செல்போன்: 72002 82144.