பிரீமியம் ஸ்டோரி
‘ஆடு மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா’ எனச் சொல வடை சொல்வார்கள். அந்தள வுக்கு மழைக்காலத்தில் கால்நடை வளர்ப்போர் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அந்தச் சவால்களைச் சமாளிக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் பா.குமரவேல்.
பா.குமரவேல்
பா.குமரவேல்

“ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும். இந்தச் சமயங்களில் மழையில் நனைவதன் மூலமாகவும், குளிர்ந்த காற்று காரணமாகவும் கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்கத்துக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

மழைக்காலங்களில் கால்நடை களின் இருப்பிடங்களில் நீர் அதிகமாகத் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, கால்நடைகளை நல்ல கொட்டகைகளிலோ, கட்டடங்களிலோ வைத்துப் பராமரிக்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்தால் கால்நடைகளை மேட்டுப்பாங்கான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். குறிப்பாக, மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

கால்நடை
கால்நடை

இதுதவிர, கடற்கரையோர மாவட்டங்களில் பேரிடர் காலப் பல்நோக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தங்க வைக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த மையங்களில் 500 முதல் 1,000 விவசாயிகள் தங்க முடியும். கட்டடத்தைச் சுற்றிலும் உயரமான இடங்களில் கால்நடை களைக் கட்டும் வசதி இருக்கிறது.

வீடுகளில் ஆடு, மாடுகளைக் கட்டும் இடங்களில் சகதி இருந்தால் கால் குளம்புகளில் புண், அழுகல் நோய் ஏற்படலாம். எனவே, அங்கு செங்கல் அல்லது ஜல்லி கற்களைத் தரையில் அடுக்கிப் பராமரிக்க வேண்டும். தரையில் அதிக நீர் தேங்கினால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

கால்நடை
கால்நடை

மேய்ச்சல் நிலங்களில் நீர் தேங்குவதால் நத்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இந்த நீரை ஆடு, மாடுகள் பருகுவதால் நத்தைகளில் உள்ள தட்டைப் புழுக்கள் உள்ளே சென்று நங்கூரத் தட்டுப் புழு நோய் உருவாகலாம். இந்தப் புழுக்கள் கால்நடைகளின் ரத்தம் மற்றும் இதர சத்துகளை உறிஞ்சுவதால் ரத்தச்சோகை மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளா கின்றன. எனவே, மழைக்காலத்துக்கு முன்னரே கால்நடைகளுக்குக் குடற்புழு நீக்க மருந்து அளிப்பது மிக அவசியம். அத்துடன் கொட்டகையிலும், அதைச் சுற்றிலும் சுட்ட சுண்ணாம்புத் தூளைத் தெளிக்க வேண்டும்.

கால்நடை
கால்நடை

இருப்பு வைத்துள்ள அடர் தீவனங்கள், மக்காச்சோளம், அரிசித் தவிடு, கடலைப் பொக்கு, பிண்ணாக்கு போன்றவற்றை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவை நனைந்தால் பூஞ்சாண தாக்குதல் ஏற்படும். இதை உட்கொள்ளும் கால்நடைகளின் செயலும் பாதிக்கப்படும். வைக்கோலும் நனையாமல் பாதுகாக்க வேண்டும். கம்பு நேப்பியர், தீவனச் சோளம் ஆகியவற்றை நன்கு உலர வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தீவனம் அளிக்கும் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும் விளைநிலங்கள் மழைநீரால் பாதிக்கப் பட்டிருந்தால் கால்நடைகளுக்கு ஹைட்ரோ போனிக் பசுந்தீவனத்தை வழங்கலாம்.

‘‘மழைக்காலத்துக்கு முன்னரே கால்நடைகளுக்குக் குடற்புழு நீக்க மருந்து அளிப்பது மிக அவசியம். அத்துடன் கொட்டகையிலும், அதைச் சுற்றிலும் சுட்ட சுண்ணாம்புத் தூளைத் தெளிக்க வேண்டும்.’’

கன்றுகள் மற்றும் இளம் ஆட்டுக்குட்டி களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். கொட்டகையின் தரையில் வைக்கோலைப் பரப்பினால் வெதுவெதுப்பான சூழல் ஏற்படும். மேலும், கொட்டகையில் குண்டு பல்புகளை எரிய விடுவதன் மூலமும் இளம் கன்றுகளுக்கு வெப்பத்தை வழங்கலாம். கொட்டகையின் பக்கவாட்டில் குளிர்ந்த காற்று வீசாமலும் மழைச்சாரல் தெளிக்காமல் இருக்கக் காய்ந்த கோணிப்பைகள் மற்றும் பாலித்தீன் விரிப்புகளைக் கட்டி தடுப்பை ஏற்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் மாலை நேரங்களில் அதிகளவு ஈக்கள், கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகள் இருக்கும். இவை கால்நடைகளைத் தாக்கி அரிப்பையும், சில நேரங்களில் கொடிய நோய்களையும் உண்டாக்கும். எனவே, மாலை நேரங்களில் வேப்ப மரப் பட்டைகள்மூலம் புகைமூட்டம் உருவாக்கலாம். சாம்பிராணி புகையும் போடலாம். இதன் மூலம் கொசுக்களால் வரும் நீல நாக்கு நோய் மற்றும் இளம் புற்களை மேய்வதால் ஏற்படும் துள்ளுமாரி நோயைத் தடுக்கலாம்.

கால்நடை
கால்நடை

மழைக்காலங்களில் கோழிகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. கோழிகளுக்குக் காய்ச்சி ஆற வைத்த நீரைக் கொடுக்க வேண்டும். குடிநீரில் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புக் கலவையைக் கலந்து கொடுக்க வேண்டும். பிண்ணாக்கு, தவிடு மற்றும் உடைந்த மக்காச்சோளம் ஆகியவற்றை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி வழங்க வேண்டும். நாட்டுக்கோழிகளை இந்தத் தருணத்தில் அதிகம் மேயவிடாமல் கொட்டகைகளில் அடைத்து வளர்க்கலாம். 20 கோழிகளுக்கு ஒரு தீவனத் தொட்டி என்ற அளவில் தீவனம் வழங்க வேண்டும்.

நோய்த்தடுப்பு முறைகள்!

மழைக்காலங்களில் கால்நடைகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதனால் உற்பத்தி குறைவதோடு, பொருளாதாரப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆடு களைப் பொறுத்தமட்டில் மழைக்காலத்தில் மேய்ச்சல் தரையில் அல்லது நிலங்களில் புதிதாக முளைத்திருக்கும் புற்களை மேயும்போது, உடலில் புகும் நச்சுயிரிகள் துள்ளுமாரி நோயை உருவாக்கும். பொதுவாகக் கோமாரி நோய் இந்தக் காலகட்டத்தில் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

எனவே, கொடிய நோய்களிலிருந்து பாது காக்கப் பருவமழை தொடங்கும் முன்னரே கோமாரி நோய், தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும். காலில் ஏற்படும் புண்களுக்கு ‘பொட்டாசியம் பெர்மாங்கனேட்’ கரைசலைக் கொண்டு குளம்பைச் சுத்தம் செய்ய வேண்டும். தவிர, கற்பூர எண்ணெய் கொண்டும் புண்களில் இருக்கும் இளம் புழுக்களை அகற்றலாம். பிறகு, புண் இருக்கும் இடங்களில் வேப்ப எண்ணெய் அல்லது களிம்பு மருந்துகளைக் கொண்டு 4 முதல் 5 நாள்களுக்கு இருமுறை தடவுவதன் மூலம் புண்களைக் குணப்படுத்தலாம்.

அதிக மழை, புயல் காரணமாகச் சில கால்நடைகள் இறக்க நேரிடும். அவற்றை ஆழமாகக் குழி எடுத்துக் கல் உப்பு, பிளீச்சிங் பவுடர் போன்றவற்றைக் குழிகள் உள்ளேயும் அதைச் சுற்றிலும் தெளித்துப் புதைக்க வேண்டும். இதனால் மற்ற கால்நடைகளுக்கு நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கலாம். கால்நடைகளுக்குத் தகுந்த காப்பீடு செய்வதன் மூலம் இத்தகைய தருணங்களில் காப்பீட்டுத் தொகை பெற வாய்ப்புள்ளது. எனவே, மழைக் காலங்களில் கொட்டகைப் பராமரிப்பு, தீவன மேலாண்மை, மேய்ச்சல் பராமரிப்பு மற்றும் தகுந்த நோய்த்தடுப்பு முறைகளை மேற்கொள் வதன் மூலம் உற்பத்தி குறைபாடு மற்றும் பொருளாதார இழப்பிலிருந்தும் கால்நடை களைப் பாதுகாக்கலாம்” என்று ஆலோசனை வழங்கினார்.

தொடர்புக்கு, முனைவர் குமரவேல், செல்போன்: 98401 13681

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு