Published:Updated:

மீண்டும், மீண்டும் பூச்சிகளே வெல்கின்றன!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! - 7

மீண்டும், மீண்டும் பூச்சிகளே வெல்கின்றன!

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! - 7

Published:Updated:
வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப் பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லும் தொடர் இது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

பூச்சிகளை இந்த உலகத்திலிருந்து முற்றாக அழிக்க முடியாது. அதைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்பதை விஞ்ஞான உலகம் அறிந்திருந்தாலும், இதை செய்தால், அழிக்கலாம், அதை செய்தால் அழிக்கலாம் என்ற பேராசையில் ஆய்வுகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

வயற்காட்டினைச் சுற்றி வரும்போது, மாமரத்தில் இரண்டு மாங்காய்களைப் பறித்து வந்து, இரண்டொரு நாளில் பழுத்தால் உண்ணலாம் என வீட்டில் வைத்திருப்பீர்கள். இல்லை, அணில் கடிக்கும் தறுவாயில் இருக்கும் நான்கைந்து கொய்யாக் காய்களைப் பறித்து வந்து, பழுக்கட்டும் என்று வைத்திருப்பீர்கள். சில நாள்களில் கனிந்து விட்டிருக்கும் அந்தப் பழங்களை உண்பதற்காக எடுக்கும்போதுதான் கவனிப்பீர்கள். ஒன்றிரண்டு இடங்களில் சற்றே அழுகிய நிலையில் இருக்கும். அந்த இடத்தைப் பிளந்து பார்த்தீர்களேயானால், கொசகொசவென வெண்ணிறப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும்.

பூசணி, பாகற்காய், வெள்ளரி, பீர்க்கங்காய், சுரைக்காய், தர்பூசணி பயிரிட்டிருப்பீர்கள். பிஞ்சு வைத்து, காய் வளர ஆரம்பித்திருக்கும். திடீரென ஒரு நாள், காயின் மேற்பகுதியில் எங்காவது ஓரிடத்தில் கொஞ்சமாகப் பழுப்புநிற திரவம் சுரந்து, பிசின்போலக் காய்ந்திருக்கும். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டீர்களேயானால், அடுத்த இரண்டு மூன்று நாள்களில் அதன் அளவு பெரிதாவதுடன், அந்த இடத்தைச் சுற்றி அழுக ஆரம்பித்திருக்கும். அதையும் பிரித்துப் பார்த்தால், கொசகொசவென வெண்ணிறப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். என்ன வகைப் புழுக்கள் இவை? எங்கிருந்து வந்தன? காய் அல்லது பழங்களில் அவை நுழைந்த துளை அல்லது உண்ட அடையாளத்தின் எச்சங்கள் எதுவுமில்லையே? இப்படி அடுக்கடுக்கான வினாக்கள் எழுவது இயல்பு. அந்தப் புழுக்கள்தான் பழப்பூச்சிகள்!

கீழ்த்திசை பழப்பூச்சி
கீழ்த்திசை பழப்பூச்சி

பழப்பூச்சிகள்

பழப்பூச்சிகள் விவசாயிகளுக்கு சிம்ம சொப்பனம். இருக்கும் இடம் தெரியாமல், இறுதிக்கட்டத்தில் மட்டுமே வெளிப்பட்டு, விளைச்சலை முழுமையாக நாசமாக்க வல்லவை. மா, கொய்யா, தர்பூசணி போன்ற பழங்களிலும், பூசணி வகைக் காய்கறிகளிலும் பழப்பூச்சிகளின் ஆதிக்கம் மிக அதிகம். பூச்சிக்கொல்லிகளே இல்லாமல், அவற்றைக் கவர்ந்து அழிக்கும் நுட்பங்களைப் பற்றியதே இந்தக் கட்டுரை. இந்த நுட்பங்களும் கூட ஒரு வகையில் இயற்கைக்கு எதிரானது என்பதுதான் உண்மை.

பழப்பூச்சிகளில் பிரதானமாக இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கீழ்த்திசை பழப்பூச்சி (Oriental Fruitfly); மற்றொன்று முலாம்பழப்பூச்சி (Melon fly). கீழ்த்திசை பழப்பூச்சி தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. 1990-ம் ஆண்டுவரை, தென்கிழக்கு ஆசியாவில் 5 நாடுகளில் மட்டுமே இது பிரதான தொல்லை தரும் பூச்சியாக இருந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது. இது இன்னும் அறிமுகம் ஆகாத நாடுகளில், கீழ்த்திசை பழப்பூச்சி, தடுத்து அழிக்கப்பட வேண்டிய உயிரினம் (Quarantine pest) என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நாடுகளில், தப்பித்தவறி இந்தப் பழப்பூச்சி கண்ணில் பட்டுவிட்டால், உடனே பதறி அடித்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் அதை முற்றாக அழிக்க (Eradicate) நடவடிக்கை எடுக்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில், கடந்த 50 ஆண்டுகளில் மிகச்சில சமயங்களில் இந்தக் கீழ்த்திசை பழப்பூச்சிகள் தட்டுப்பட, நான்கைந்து தடவை அவற்றைத் தடுத்து அழித்திருக்கின்றனர். இருப்பினும் ஹவாய் மற்றும் சில பசிபிக் தீவுக் கூட்டங்களிலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகளிலும் கீழ்த்திசை பழப்பூச்சி வெற்றிகரமாக நுழைந்து, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டது.

முலாம்பழப்பூச்சி

பழப்பூச்சி வகைகளிலேயே மிக அதிகமான பயிர்களைத் தாக்குவது இந்தக் கீழ்த்திசை பழப்பூச்சி மட்டுமே. சுமார் 450-க்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறி வகைகளைத் தாக்குகின்றது. அன்னாசி, அத்தி, அவகடோ, ஆப்பிள், இலந்தை, பப்பாளி, மாம்பழம், கொய்யா, பேரிக்காய் உள்ளிட்ட பழவகைகளையும், தக்காளி, குடமிளகாய், கத்திரி போன்ற காய்கறிகளையும் பிரதானமாகத் தாக்கும். இருப்பினும், பழங்களே இதற்கு மிகவும் பிடித்தவை. எனவே இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு வகையான பழங்கள் பல்வேறு பருவங்களிலும் குறைவின்றிக் கிடைப்பதால், அவற்றைக் காய்கறிகளில் மிக அரிதாகவே காண முடியும்.

பாகற்காயில் முட்டை இடும் முலாம்பழப்பூச்சி
பாகற்காயில் முட்டை இடும் முலாம்பழப்பூச்சி

கீழ்த்திசை பழப்பூச்சிக்கு அடுத்தபடியாக, இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முலாம்பழப்பூச்சி நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இதுவும் பெரும்பாலான கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், பசிபிக் தீவுக்கூட்டங்களிலும், ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான நாடுகளிலும் பரவியிருக்கின்றது. அமெரிக்காவில் இல்லை என்றாலும், அதன் ஆளுகைக்கு உட்பட்ட ஹவாய் தீவுகளில் பிரதான சேதம் விளைவிக்கும் பூச்சியாக இது விளங்குகின்றது. 125 வகையான காய்கறி மற்றும் பழவகைகளைத் தாக்கக்கூடியது என்றாலும் இதன் பிரதான தாக்குதல் பூசணிக் குடும்ப (Cucurbits) காய்கறி மற்றும் பழங்களே ஆகும். வெள்ளரி, பூசணி, சுரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றில் முலாம்பழப் பூச்சியின் தாக்குதலை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கக்கூடும்.

‘‘விவசாயிகள் தங்களின் அளவிலேயே செயல்படுத்தக்கூடிய வருமுன் காத்தல் முறைகளைத் தேடியபோதுதான், விஞ்ஞான உலகம் தடுப்புக் காகித உறைகளைக் கண்டுபிடித்தது.’’

பெண் பூச்சி 1,000 முட்டைகள் இடும்

பழப்பூச்சிகள் எப்படிப் பயிர்களுக்குள் வருகின்றன என்பதே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. வளர்ந்த அந்துப் பூச்சிகள், நமது வீடுகளில் காணப்படும் ஈக்களைவிடச் சற்றே பெரிதாகக் காணப்படும். ஆனால், அவை ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். பெண்பூச்சிகளின் அடிவயிற்றின் முடிவில், ஊசியின் நுனியைப்போலக் கூர்மையாகச் சற்று நீண்டிருக்கும். பிஞ்சுகள், காய்கள் மற்றும் ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் பழங்களின் மேற்தோலின் அடிப்புறத்தில் இந்த ஊசி போன்ற அடிவயிற்றுப் பகுதியை நுழைத்து முட்டையை வைக்கும். ஓரிடத்தில் 10 முதல் 50 முட்டைகளைக் குவியலாக வைக்கும். இப்படியாக, ஒரு பெண்பூச்சி தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் 1,000 முட்டைகளையாவது இடும். இந்த முட்டைகள் ஒன்று அல்லது இரண்டு நாளிலேயே பொரிந்து, புழுக்கள் வெளிவந்துவிடும். அப்படி வெளிவரும் புழுக்கள், காய்களின் அல்லது பழங்களின் உட்புறத்தில் உண்ண ஆரம்பித்துவிடும். அவை முட்டைகளாகக் காய்கள் அல்லது பழங்களின் மேற்தோலின் உள்ளே(அடிப்பகுதியில்) வைக்கப்பட்டு விடுவதால், நமக்கு அந்தக் காய்கள் அல்லது பழங்களில் எந்த மாற்றமும் தெரியாது. ஆனால் நாளாக நாளாகப் புழுக்கள் உண்டு வளர்ந்து வரும் வேளையில், காய்களும் பழங்களும் அழுகத் தொடங்கும். அந்த நிலையில்தான் நமக்குப் பழப்பூச்சிகளின் தாக்குதல் இருப்பதே தெரியவரும். ஆனால், அப்போது நிலைமை கையை மீறிப் போயிருக்கும். அந்த நிலையில் எவ்வளவு பூச்சிக்கொல்லி விஷத்தை தெளித்தாலும் அந்தக் காய்கறிகள் மற்றும் பழங்களின் சேதத்தை மீட்டெடுக்க முடியாது. மேற்கொண்டு தாக்குதல் பரவாமல் தடுக்கும்.

வெள்ளரியில் முட்டை இடும் முலாம்பழப்பூச்சி
வெள்ளரியில் முட்டை இடும் முலாம்பழப்பூச்சி

வருமுன் காத்தலே புத்திசாலித்தனம்

பொதுவாகப் புழு நிலையில் ஒன்றிரண்டு வாரங்களைக் கழிக்கும் பழப்பூச்சிகள், கூட்டுப்புழுவாக மாறும்போது காய்கள் அல்லது பழங்களிலிருந்து, மண்ணிற்குள் குதித்து மறைந்து கொள்ளும். அப்படி மண்ணில் கூட்டுப்புழுவாக ஒருவாரம் அல்லது 10 நாள்கள் வரை கழித்துவிட்டு, மண்ணிலிருந்து வளர்ந்த அந்துப் பூச்சிகளாக வெளிவரும். ஆக, நீங்கள் தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் மண்ணிற்குள் இருக்கும் இந்தக் கூட்டுப்புழுக்கள் அல்லது அந்துப் பூச்சிகளை ஒன்றுமே செய்யாது. ஆகவே, பழப்பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், வருமுன் காத்தலே புத்திசாலித்தனம்.

வருமுன் காப்பதற்காக விஞ்ஞானிகள் முதன்முதலாக ஓர் ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். சொல்லப்போனால், பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களில் முதன்முறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றே சொல்லலாம். ஆம், பழப்பூச்சிகளில் ‘குடும்பக்கட்டுப்பாடு’ முறையை அமல்படுத்த முன்னெடுப்புகள் தொடங்கின.

பூச்சிகளுக்குக் குடும்பக்கட்டுப்பாடு

‘பூச்சிகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடா?’ என்ற உங்கள் ஆச்சர்யம் புரிகின்றது. ‘இதெல்லாம் சாத்தியமா?’ என்ற உங்களின் ஐயமும் புரிகின்றது. ஆனால், அதை ஒருசில இடங்களில் நடைமுறைப்படுத்திக் காட்டினர்.

பாகற்காயில் முலாம்பழப்பூச்சியின் புழுக்கள் உட்புறமாக உண்ணும்போது வெளியில் ஏற்படும் மஞ்சள்நிற மாற்றம்
பாகற்காயில் முலாம்பழப்பூச்சியின் புழுக்கள் உட்புறமாக உண்ணும்போது வெளியில் ஏற்படும் மஞ்சள்நிற மாற்றம்
முலாம்பழப்பூச்சிகளின் சேதம் தெரியும் பாகற்காய்கள்
முலாம்பழப்பூச்சிகளின் சேதம் தெரியும் பாகற்காய்கள்

சரி, பூச்சிகளில் எப்படிக் குடும்பக்கட்டுப்பாடு செய்தனர் என்பதை முதலில் பார்ப்போம். ஆயிரக்கணக்கான பூச்சிகளை முதலில் ஆய்வகங்களில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். அவற்றில் ஆண் பூச்சிகளை மட்டும் தேர்வு செய்து, எக்ஸ்-கதிர்கள் (X-ray) அல்லது காமா கதிர்களை (Gamma rays) கொண்டு, அவற்றிற்கு மலட்டுத் தன்மையை உருவாக்க வேண்டும். பிறகு இந்த மலட்டு ஆண்பூச்சிகளை இயற்கையில் விட்டுவிட வேண்டும். இவற்றுடன் கலவி புரியும் பெண்பூச்சிகளால் கருவுற்ற முட்டைகளை வைக்க இயலாது. ஆகவே, அடுத்த தலைமுறை பூச்சிகள் உருவாவது தடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்பூச்சியும் நிறைய பெண்பூச்சிகளுடன் கலவி புரியும் என்பதால், அடுத்த தலைமுறையில் உருவாகும் சந்ததியை நிறையவே மட்டுப்படுத்த இயலும். கால்நடைகளுக்கு நோய்களைப் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்ட இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை, விவசாயத்தில் பழப்பூச்சிகளில்தான் முதலாவதாக முயற்சிக்கப்பட்டது. சர்வதேச அணுசக்திக் கழகமும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு பழப்பூச்சிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைப் பயன்படுத்தி, முலாம்பழப்பூச்சியை ஜப்பானின் ஒக்கினாவா தீவுக்கூட்டங்களில் இருந்தும், குயின்ஸ்லாந்து பழப்பூச்சியை மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்தும் முற்றாக ஒழித்துவிட்டனர். கீழ்த்திசை பழப்பூச்சியையும், கொய்யா பழப்பூச்சியையும் தாய்லாந்திலும், பிலிப்பைன்ஸிலும் பெருமளவில் குறைத்துள்ளனர்.

பீர்க்கங்காயில் முலாம்பழப்பூச்சியின்  தாக்குதல்
பீர்க்கங்காயில் முலாம்பழப்பூச்சியின் தாக்குதல்
பழப்பூச்சியின் புழுக்கள்
பழப்பூச்சியின் புழுக்கள்


‘அப்படியானால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் உள்ள பழப்பூச்சிகளை வேரறுத்திருக்கலாமே? அப்படி ஏன் செய்யவில்லை?’ என்ற வினாக்கள் உங்களுக்கு எழலாம். அப்படிச் செய்ய முடியாமல் போனதற்கு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றில், பிரதானமானவற்றை மட்டும் சொல்கிறேன். முதலில், நாம் அறிமுகப்படுத்த வேண்டிய இடத்தின் பரப்பளவினைப் பொறுத்து, குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்ட ஆண் பழப்பூச்சிகள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் அல்ல, கோடிக்கணக்கில் தேவைப்படும். அப்படி அறிமுகப்படுத்தப்படும் இடங்களில் ஏற்கெனவே இயற்கையாகக் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படாத ஆண் பழப்பூச்சிகளும் இருக்கும். அவற்றுடன் கலவி புரியும் பெண் பழப்பூச்சிகள் அடுத்த தலைமுறை சந்ததிகளை உருவாக்கவே செய்யும். எனவே இந்த இடங்களில் மீண்டும் மீண்டும் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட ஆண் பழப்பூச்சிகளை மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட விடுவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாகும் சந்ததிகளின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பூஜ்ய நிலையை எட்டும்.

பூசணியில் பழப்பூச்சியின் தாக்குதல்
பூசணியில் பழப்பூச்சியின் தாக்குதல்

அதிக செலவு பிடிக்கும் தொழில்நுட்பம்

இரண்டாவதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் மாவட்டங்கள் அல்லது மாநிலங்களிலிருந்து கூடப் பழப்பூச்சிகள் பறந்துவர இயலுமே? ஆம், பழப்பூச்சிகள் மிக எளிதாக 30 முதல் 50 கி.மீ தூரத்தை (நீரின் மேலேயே கூட) பறந்து கடக்க இயலும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால், நாம் ஒருபுறம் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட ஆண் பழப்பூச்சிகளை அறிமுகம் செய்துகொண்டே இருப்போம். மறுபுறம், வெவ்வேறு இடங்களிலிருந்து குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படாத ஆண் பழப்பூச்சிகள் இயற்கையாக வந்துகொண்டே இருக்கும். ஆக, பழப்பூச்சிகளின் தொல்லை தீர்வின்றி அனுமார் வால்போல நீண்டு கொண்டேதான் இருக்கும். எனவேதான், இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை ஒக்கினாவா போன்ற தீவுகளில் வெற்றியடைந்தது. மற்ற இடங்களில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவியது; ஆனால், ஒழிக்க இயலவில்லை. அதற்கு, மீண்டும் மீண்டும் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட ஆண் பழப்பூச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மிக அதிக செலவும் பிடிக்கும். எனவே பல்வேறு நாடுகளும் அவற்றைப் பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை. மேலும், பூச்சிகளை முற்றாக அழித்து ஒழிக்க முடியாது. ஆனால், அதை கட்டுப்படுத்த மட்டுமே மனிதனால் முடியும் என்பதுதான் உண்மை.

இந்நிலையில், விவசாயிகள் தங்களின் அளவிலேயே செயல்படுத்தக்கூடிய வருமுன் காத்தல் முறைகளைத் தேடியபோதுதான், விஞ்ஞான உலகம் தடுப்புக் காகித உறைகளைக் கண்டுபிடித்தது. இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பம் இது.

சீனிவாசன் ராமசாமி
சீனிவாசன் ராமசாமி

தடுப்புக் காகித உறைகள்

தைவான், கொரியா, சீனா, ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில், குறிப்பாக மா, கொய்யா, லிச்சி, தம்பரத்தம் (Star Fruit), சீமைப் பனிச்சை (Persimmon) போன்ற பழமரங்களில் தடுப்புக் காகித உறைகளைப் பயன்படுத்துவது மிகவும் பிரபலம். அந்தந்தப் பழவகைகளைப் பொறுத்து, பூத்து மகரந்தச்சேர்க்கை முடிந்த பின்னரோ, காய்ப்பிடித்து வளரும் பருவத்திலோ, அல்லது காய்கள் நடுத்தர அளவில் இருக்கும்போதோ, இந்தக் காகித உறைகளைக் கொண்டு ஒவ்வொரு காய் அல்லது பழத்தினையும் கட்டிவிட வேண்டும். இந்தத் தடுப்புக் காகித உறைகளில் ஒளிபுகும் பாரஃபின் உறை, நைலான் உறை, நீலவண்ண பிளாஸ்டிக் உறை, இரண்டடுக்கு உறை (உட்புறம் மஞ்சள் காகித உறையையும், வெளிப்புறம் பிளாஸ்டிக் உறையையும் கொண்டது ஒருவகை; உட்புறம் சாம்பல் நிற காகிதத்தாலும், வெளிப்புறம் பழுப்பு நிற காகிதத்தாலும் ஆனது மறுவகை), மற்றும் காகித உறை எனப் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இவை பழப்பூச்சிகளைத் தடுப்பது மட்டுமன்றி, பழங்களின் இனிப்புச் சுவையினைக் கூட்டுவது, அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்துவது, பழம் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்தில் இருப்பது எனப் பல்வேறு பயன்களைக் கொடுக்கின்றன. இருப்பினும் என்ன வகை உறையினைப் பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்துவது என்பதை எல்லாம் ஒவ்வொரு இடத்திலும் நிலவும் தட்பவெப்ப நிலையினைப் பொறுத்தும், அவ்விடத்தில் இருக்கும் பிரதான பழப்பூச்சி வகையினைப் பொறுத்தும் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.

தடுப்புக் காகித உறைகளால் சுற்றப்பட்ட கொய்யாப்பழங்கள்
தடுப்புக் காகித உறைகளால் சுற்றப்பட்ட கொய்யாப்பழங்கள்
தடுப்புக் காகித உறைகளால் சுற்றப்பட்ட மாங்காய்கள்
தடுப்புக் காகித உறைகளால் சுற்றப்பட்ட மாங்காய்கள்

பூச்சிகளின் சேதம் முற்றாகத் தவிர்ப்பு, உயர்தர விளைச்சல் மற்றும் அதிக லாபம் எனப் பல்வேறு பயன்கள் இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பிரச்னை ஆள் தேவை. உதாரணத்திற்கு, ஒரு மாமரத்தில் இருக்கும் அத்தனை காய்களையும் தனித்தனியாக உறைகளைக் கொண்டு கட்டிவிட வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படியானால், ஒரு தோப்பு முழுவதும் எத்தனை மரங்கள் இருக்கும்; அவை அனைத்திலும் இருக்கும் பழங்களை உறையிலிட எத்தனை ஆள்கள், எத்தனை நாள்கள் என்பதை எல்லாம் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இவ்வளவு நீளக் கட்டுரையின் முடிவில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். பூச்சிகளுக்கு எதிரான போரில் மனித இனத்தால் ஒருபோதும் வெல்ல முடியாது. பூச்சிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் பூச்சிக்கொல்லி விஷத்தை தெளித்து உணவுப்பொருள்களை நஞ்சாக்கி வருவதுதான் மிச்சம். இயற்கையுடன் இசைந்த தொழில்நுட்பங்கள் மட்டுமே பூச்சி மேலாண்மையில் வெற்றி பெற்றுள்ளன.

-வளரும்