Published:Updated:

இயற்கைக் களைக்கொல்லியை தயாரிப்பது எப்படி?

பார்த்தீனியம்
பிரீமியம் ஸ்டோரி
பார்த்தீனியம்

களை மேலாண்மை

இயற்கைக் களைக்கொல்லியை தயாரிப்பது எப்படி?

களை மேலாண்மை

Published:Updated:
பார்த்தீனியம்
பிரீமியம் ஸ்டோரி
பார்த்தீனியம்

விவசாயத்தில் களைகளின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்காகக் களைக் கொல்லியை வாங்கித் தெளித்துக் கட்டுப்படுத்துகிறார்கள் விவசாயிகள். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் ஏற்கெனவே மண்ணும், உற்பத்தி செய்யப்படும் பொருளும் நஞ்சாகி வருகிறது. இதோடு களைக் கொல்லி யையும் சேர்த்துவிட்டால் இப்போது இருப்பதை விட இன்னும் மோசமான நிலைக்கு மண் சென்றுவிடும். அதனால் இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்த விஞ்ஞானி மணிவேல் என்பவரிடம் பேசினோம்.

முனைவர் மணிவேல்
முனைவர் மணிவேல்


இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலைச் சேர்ந்த (ICAR), வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் (முன்பு புகையிலை ஆராய்ச்சி மையமாக இருந்தது) தலைவராக உள்ளார். களைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அவர் பேசியபோது, “‘கோரை வெளையுற இடத்துல கொள்ளு விதை’னு பழமொழியே இருக்கு. வயலில் கோரைப் புற்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் அந்த நிலத்தில் கொள்ளு விதைத்தால் இதை வெகுவாகக் குறைக்கலாம். அதேபோன்று பார்த்தீனியம் அதிகமாக வளரும் நிலத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கொள்ளு விதைத்து அறுவடை செய்துவிட்டு பயிர் செய்யுங்கள் களைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பார்த்தீனியம் மட்டுமல்ல, நிலத்தில் களை களின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் கொள்ளு சாகுபடி பெரும்பலனைத் தரும். இதை என் அனுபவத்தில் நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

‘கோரை வெளையுற இடத்துல கொள்ளு விதை’னு பழமொழியே இருக்கு. வயலில் கோரைப்புற்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் அந்த நிலத்தில் கொள்ளு விதைத்தால் இதை வெகுவாகக் குறைக்கலாம்.


பார்த்தீனியம் செடிகளை அழிக்கும்போது அவற்றைப் பூப்பதற்கு முன்பே அகற்றிவிட்டால் அவை திரும்பவும் வராது. கோடை உழவு களைகளைக் கட்டுப்படுத்தும் இன்னொரு யுக்தி. இன்னொன்று களைகளில் பார்த்தீனியம் இன்று விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. இவற்றை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்த சில வழிகள் இருக்கின்றன. இதுவும் விவசாயி ஒருவர் எனக்குச் சொல்லியது தான். அது என்னவென்றால்,

முதல் முறை

எருக்கம் இலை 2 கிலோவை எடுத்து அதை நன்றாக இடித்து அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த எருக்கன் இலையை 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, அரைக்கிலோ சுண்ணாம்புக் கல்லை (சுண்ணாம்பு பவுடர் அல்ல) அதனுடன் சேர்த்து ஊறவைக்க வேண்டும். பின்னர் 2 கிலோ கல் உப்பை தூளாக்கி அதனுடன் சேர்த்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். இந்தக் கரைசலை 9 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து பார்த்தீனியம் மற்றும் களைச்செடிகள் இரண்டின் மீதும் தெளிக்கலாம்.

பார்த்தீனியம்
பார்த்தீனியம்

இரண்டாம் முறை

மாட்டிலிருந்து சேகரிக்கப்பட்டு ஒன்றரை மாதமான 5 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் ஒன்றரை கிலோ கடுக்காய்த்தூளைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் 10 எலுமிச்சைப் பழங்களைப் பிழிய வேண்டும். இந்தக் கரைசலை 15 நாள்கள் நிழலில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளறிவிட்டு சாக்கு போட்டு மூடி வைக்க வேண்டும். இந்தக் கரைசலை 3 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற வீதம் கலந்து களைக்குத் தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது மற்ற பயிர்கள் மீது படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு முறைகளையும் விவசாயிகள் பயன்படுத்தினால் களைகளை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் இந்த முறையைப் பின்பற்றி அது சரியாக இருந்தால் மற்ற விவசாயிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் செயற்கைக் களைகொல்லிக்குப் பதிலாக இயற்கைக் களைக்கொல்லிகளும் இருக்கின்றன என்ற விஷயங்கள் பரவும்” என்றார்.

தொடர்புக்கு, முனைவர் மணிவேல், செல்போன்: 94295 43209

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism